Showing posts with label வாழ்க்கை. Show all posts
Showing posts with label வாழ்க்கை. Show all posts

Monday, February 14, 2011

வாழ்க்கை ஏதுக்கடா?

வாழ்க்கை ஏதுக்கடா?

1

நல்லதை நினைக்காமல் - உனக்கு
      நாசமும் ஏதுக்கடா? - மனிதா
அல்லதை மறுக்காமல் - உனக்கு
      ஆசையும் ஏதுக்கடா?

2 அன்பினை வழங்காமல் - உனக்கு
     அண்டமும் ஏதுக்கடா? - மனிதா
அறத்தினை ஒழுகாமல் - உனக்கு
     ஆக்கங்கள் ஏதுக்கடா?

3 பண்பினை வளர்க்காமல் - உனக்கு
     பாசங்கள் ஏதுக்கடா? - மனிதா
பகைமை களையாமல் - உனக்கு
     படிப்பினை ஏதுக்கடா?

4 நேர்மை நில்லாமல் - உனக்கு
     நெஞ்சம் ஏதுக்கடா? - மனிதா
கூர்மை இல்லாமல் - உனக்கு
     குழப்பம் ஏதுக்கடா?

5 தாய்மை போற்றாமல் - உனக்கு
     தாயகம் ஏதுக்கடா? - மனிதா
வாய்மை காக்காமல் - உனக்கு
     வாய்ப்பும் ஏதுக்கடா?

6 பாதியில் பெண்ணின்றேல் - உனக்கு
     பயணம் ஏதுக்கடா? - மனிதா
நீதியில் கண்ணின்றேல் - உனக்கு
     ஞானம் ஏதுக்கடா?

7 களவுகள் எளிதாயின் - உனக்கு
      காவலன் ஏதுக்கடா? - மனிதா
இலவசம் வலிதாயின் - உனக்கு
      யாதுமே ஏதுக்கடா?

8 கடமையும் இலதாயின் - உனக்கு
      கவலை ஏதுக்கடா? - மனிதா
குடிசையும் இலதாயின் - உனக்கு
      குடும்பம் ஏதுக்கடா?

9 சாதிகள் ஏதுக்கடா? - உனக்கு
      சண்டைகள் ஏதுக்கடா? - மனிதா
சமரசம் காணாமல் - உனக்கு
      சமயங்கள் ஏதுக்கடா?

10 பேதங்கள் ஏதுக்கடா? - உனக்கு
      பேதமை ஏதுக்கடா? - மனிதா
வாதங்கள் ஏதுக்கடா? - உனக்கு
      வன்மங்கள் ஏதுக்கடா?

11 மோதல்கள் ஏதுக்கடா? - உனக்கு
      மோகங்கள் ஏதுக்கடா? - மனிதா
காதலே இல்லாமல் - உனக்கு
      காமம் ஏதுக்கடா?

12 சோதனை செய்யாமல் - உனக்கு
      சோகங்கள் ஏதுக்கடா? - மனிதா
சாதனை இல்லாமல் - உனக்கு
      சரித்திரம் ஏதுக்கடா?

13 வல்லினம் ஏதுக்கடா? - உனக்கு
      மெல்லினம் ஏதுக்கடா? - மனிதா
இடையினம் நாடாமல் - உனக்கு
      இன்பம் ஏதுக்கடா?

14 வம்புகள் ஏதுக்கடா? - உனக்கு
      வன்முறை ஏதுக்கடா? - மனிதா
இன்பத்தை நாடாமல் - உனக்கு
      துன்பங்கள் ஏதுக்கடா?

15 மதவெறி ஏதுக்கடா? - உனக்கு
      மொழிவெறி ஏதுக்கடா? - மனிதா
இனவெறி ஏதுக்கடா? - உனக்கு
      பணவெறி ஏதுக்கடா?

16 ஆதியை அறியாமல் - உனக்கு
      ஆன்மா ஏதுக்கடா? - மனிதா
சோதியைக் காணாமல் - உனக்கு
      சுயமும் ஏதுக்கடா?

17 தேடலும் இல்லாமல் - உனக்கு
      தெய்வம் ஏதுக்கடா? - மனிதா
தேம்பலும் நில்லாமல் - உனக்கு
      தேசம் ஏதுக்கடா?

18 தீமைகள் விலகாமல் - உனக்கு
      தேர்ச்சியும் ஏதுக்கடா? - மனிதா
தீட்டுகள் அகலாமல் - உனக்கு
      தேசியம் ஏதுக்கடா?

19 பொருளே அறியாமல் - உனக்கு
      போதனை ஏதுக்கடா? - மனிதா
இருளே அகலமால் - உனக்கு
      இதயம் ஏதுக்கடா?

20 பொன்னகை ஏதுக்கடா? - உனக்கு
      பொய்மை ஏதுக்கடா? - மனிதா
புன்னகை புரியாமல் - உனக்கு
      புதுமையும் ஏதுக்கடா?

21 எளிமை கொள்ளாமல் - உனக்கு
      ஏளனம் ஏதுக்கடா? - மனிதா
ஏழ்மை கொல்லாமல் - உனக்கு
      ஏற்றம் ஏதுக்கடா?

22 அச்சம் ஏதுக்கடா? - உனக்கு
      ஆண்மை ஏதுக்கடா? - மனிதா
பிச்சைப் பொருளாலே - உனக்கு
      பிழைப்பும் ஏதுக்கடா?

23 உழைப்பே இல்லாமல் - உனக்கு
      உணவும் ஏதுக்கடா? - மனிதா
பிழைப்பே இல்லாமல் - உனக்கு
      பேச்சும் ஏதுக்கடா?

24 புனிதம் ஏதுக்கடா? - உனக்கு
      புத்தியும் ஏதுக்கடா? - மனிதா
மனிதம் மதிக்காமல் - உனக்கு
      மாண்பும் ஏதுக்கடா?

25 மயக்கம் ஏதுக்கடா? - உனக்கு
      மவுனம் ஏதுக்கடா? - மனிதா
தயக்கம் ஏதுக்கடா - உனக்கு
      தைரியம் ஏதுக்கடா?

26 உயிரினை மதிக்காமல் - உனக்கு
      உணர்வுகள் ஏதுக்கடா? - மனிதா
உரிமையை மதிக்காமல் - உனக்கு
      விடுதலை* ஏதுக்கடா?
* சுதந்திரம்

27 பெருமையை துதிக்காமல் - உனக்கு
      பிறப்பும் ஏதுக்கடா? - மனிதா
உறவினை மதிக்காமல் - உனக்கு
      சிறப்பும் ஏதுக்கடா?

28 பிரிவுகள் ஏதுக்கடா? - உனக்கு
      பிளவுகள் ஏதுக்கடா? - மனிதா
விருப்புகள் குறையாமல் - உனக்கு
      வெறுப்புகள் ஏதுக்கடா?

29 சிறகுகள் இல்லாமல் - உனக்கு
      சிறைகள் ஏதுக்கடா? - மனிதா
வரையறை இல்லாமல் - உனக்கு
      வேட்கை ஏதுக்கடா?

30 உதவிகள் செய்யாமல் - உனக்கு
      உடலும் ஏதுக்கடா? - மனிதா
உயர்வினை அடையாமல் - உனக்கு
      உளமும் ஏதுக்கடா?

31 சீர்மை படையாமல் - உனக்குச்
      சிந்தனை ஏதுக்கடா? - மனிதா
மூர்க்கம் உடையாமல் - உனக்கு
      வந்தனை ஏதுக்கடா?

32 மேன்மை அடையாமல் - உனக்கு
      மெத்தனம் ஏதுக்கடா? - மனிதா
மேதமை அடையாமல் - உனக்கு
      தத்துவம் ஏதுக்கடா?

33 கேண்மை பிடிக்காமல் - உனக்கு
     கேள்வி ஏதுக்கடா? - மனிதா
கீழ்மை தடுக்காமல் - உனக்கு
     கேளிக்கை ஏதுக்கடா?

34 ஆட்டம் ஏதுக்கடா? - உனக்கு
      அகந்தை ஏதுக்கடா? - மனிதா
பாட்டம் ஏதுக்கடா? - உனக்கு
      பற்றும் ஏதுக்கடா?

35 வாக்கே தெளியாமல் - உனக்கு
      வாட்டம் ஏதுக்கடா? - மனிதா
வஞ்சகம் ஒழியாமல் - உனக்கு
      ஓட்டும் ஏதுக்கடா?

36 ஆக்கம் புரியாமல் - உனக்கு
      ஆத்திரம் ஏதுக்கடா? - மனிதா
நோக்கே தெரியாமல் - உனக்கு
      வாழ்க்கை ஏதுக்கடா?

***