| வாழ்க்கை ஏதுக்கடா? | |
|---|---|
| 1 | நல்லதை நினைக்காமல் - உனக்கு |
| 2 | அன்பினை வழங்காமல் - உனக்கு அண்டமும் ஏதுக்கடா? - மனிதா அறத்தினை ஒழுகாமல் - உனக்கு ஆக்கங்கள் ஏதுக்கடா?
|
| 3 | பண்பினை வளர்க்காமல் - உனக்கு பாசங்கள் ஏதுக்கடா? - மனிதா பகைமை களையாமல் - உனக்கு படிப்பினை ஏதுக்கடா?
|
| 4 | நேர்மை நில்லாமல் - உனக்கு நெஞ்சம் ஏதுக்கடா? - மனிதா கூர்மை இல்லாமல் - உனக்கு குழப்பம் ஏதுக்கடா?
|
| 5 | தாய்மை போற்றாமல் - உனக்கு தாயகம் ஏதுக்கடா? - மனிதா வாய்மை காக்காமல் - உனக்கு வாய்ப்பும் ஏதுக்கடா?
|
| 6 | பாதியில் பெண்ணின்றேல் - உனக்கு பயணம் ஏதுக்கடா? - மனிதா நீதியில் கண்ணின்றேல் - உனக்கு ஞானம் ஏதுக்கடா?
|
| 7 | களவுகள் எளிதாயின் - உனக்கு காவலன் ஏதுக்கடா? - மனிதா இலவசம் வலிதாயின் - உனக்கு யாதுமே ஏதுக்கடா?
|
| 8 | கடமையும் இலதாயின் - உனக்கு கவலை ஏதுக்கடா? - மனிதா குடிசையும் இலதாயின் - உனக்கு குடும்பம் ஏதுக்கடா?
|
| 9 | சாதிகள் ஏதுக்கடா? - உனக்கு சண்டைகள் ஏதுக்கடா? - மனிதா சமரசம் காணாமல் - உனக்கு சமயங்கள் ஏதுக்கடா?
|
| 10 | பேதங்கள் ஏதுக்கடா? - உனக்கு பேதமை ஏதுக்கடா? - மனிதா வாதங்கள் ஏதுக்கடா? - உனக்கு வன்மங்கள் ஏதுக்கடா?
|
| 11 | மோதல்கள் ஏதுக்கடா? - உனக்கு மோகங்கள் ஏதுக்கடா? - மனிதா காதலே இல்லாமல் - உனக்கு காமம் ஏதுக்கடா?
|
| 12 | சோதனை செய்யாமல் - உனக்கு சோகங்கள் ஏதுக்கடா? - மனிதா சாதனை இல்லாமல் - உனக்கு சரித்திரம் ஏதுக்கடா?
|
| 13 | வல்லினம் ஏதுக்கடா? - உனக்கு மெல்லினம் ஏதுக்கடா? - மனிதா இடையினம் நாடாமல் - உனக்கு இன்பம் ஏதுக்கடா?
|
| 14 | வம்புகள் ஏதுக்கடா? - உனக்கு வன்முறை ஏதுக்கடா? - மனிதா இன்பத்தை நாடாமல் - உனக்கு துன்பங்கள் ஏதுக்கடா?
|
| 15 | மதவெறி ஏதுக்கடா? - உனக்கு மொழிவெறி ஏதுக்கடா? - மனிதா இனவெறி ஏதுக்கடா? - உனக்கு பணவெறி ஏதுக்கடா?
|
| 16 | ஆதியை அறியாமல் - உனக்கு ஆன்மா ஏதுக்கடா? - மனிதா சோதியைக் காணாமல் - உனக்கு சுயமும் ஏதுக்கடா?
|
| 17 | தேடலும் இல்லாமல் - உனக்கு தெய்வம் ஏதுக்கடா? - மனிதா தேம்பலும் நில்லாமல் - உனக்கு தேசம் ஏதுக்கடா?
|
| 18 | தீமைகள் விலகாமல் - உனக்கு தேர்ச்சியும் ஏதுக்கடா? - மனிதா தீட்டுகள் அகலாமல் - உனக்கு தேசியம் ஏதுக்கடா?
|
| 19 | பொருளே அறியாமல் - உனக்கு போதனை ஏதுக்கடா? - மனிதா இருளே அகலமால் - உனக்கு இதயம் ஏதுக்கடா?
|
| 20 | பொன்னகை ஏதுக்கடா? - உனக்கு பொய்மை ஏதுக்கடா? - மனிதா புன்னகை புரியாமல் - உனக்கு புதுமையும் ஏதுக்கடா?
|
| 21 | எளிமை கொள்ளாமல் - உனக்கு ஏளனம் ஏதுக்கடா? - மனிதா ஏழ்மை கொல்லாமல் - உனக்கு ஏற்றம் ஏதுக்கடா?
|
| 22 | அச்சம் ஏதுக்கடா? - உனக்கு ஆண்மை ஏதுக்கடா? - மனிதா பிச்சைப் பொருளாலே - உனக்கு பிழைப்பும் ஏதுக்கடா?
|
| 23 | உழைப்பே இல்லாமல் - உனக்கு உணவும் ஏதுக்கடா? - மனிதா பிழைப்பே இல்லாமல் - உனக்கு பேச்சும் ஏதுக்கடா?
|
| 24 | புனிதம் ஏதுக்கடா? - உனக்கு புத்தியும் ஏதுக்கடா? - மனிதா மனிதம் மதிக்காமல் - உனக்கு மாண்பும் ஏதுக்கடா?
|
| 25 | மயக்கம் ஏதுக்கடா? - உனக்கு மவுனம் ஏதுக்கடா? - மனிதா தயக்கம் ஏதுக்கடா - உனக்கு தைரியம் ஏதுக்கடா?
|
| 26 | உயிரினை மதிக்காமல் - உனக்கு உணர்வுகள் ஏதுக்கடா? - மனிதா உரிமையை மதிக்காமல் - உனக்கு விடுதலை* ஏதுக்கடா? * சுதந்திரம்
|
| 27 | பெருமையை துதிக்காமல் - உனக்கு பிறப்பும் ஏதுக்கடா? - மனிதா உறவினை மதிக்காமல் - உனக்கு சிறப்பும் ஏதுக்கடா?
|
| 28 | பிரிவுகள் ஏதுக்கடா? - உனக்கு பிளவுகள் ஏதுக்கடா? - மனிதா விருப்புகள் குறையாமல் - உனக்கு வெறுப்புகள் ஏதுக்கடா?
|
| 29 | சிறகுகள் இல்லாமல் - உனக்கு சிறைகள் ஏதுக்கடா? - மனிதா வரையறை இல்லாமல் - உனக்கு வேட்கை ஏதுக்கடா?
|
| 30 | உதவிகள் செய்யாமல் - உனக்கு உடலும் ஏதுக்கடா? - மனிதா உயர்வினை அடையாமல் - உனக்கு உளமும் ஏதுக்கடா?
|
| 31 | சீர்மை படையாமல் - உனக்குச் சிந்தனை ஏதுக்கடா? - மனிதா மூர்க்கம் உடையாமல் - உனக்கு வந்தனை ஏதுக்கடா?
|
| 32 | மேன்மை அடையாமல் - உனக்கு மெத்தனம் ஏதுக்கடா? - மனிதா மேதமை அடையாமல் - உனக்கு தத்துவம் ஏதுக்கடா?
|
| 33 | கேண்மை பிடிக்காமல் - உனக்கு கேள்வி ஏதுக்கடா? - மனிதா கீழ்மை தடுக்காமல் - உனக்கு கேளிக்கை ஏதுக்கடா?
|
| 34 | ஆட்டம் ஏதுக்கடா? - உனக்கு அகந்தை ஏதுக்கடா? - மனிதா பாட்டம் ஏதுக்கடா? - உனக்கு பற்றும் ஏதுக்கடா?
|
| 35 | வாக்கே தெளியாமல் - உனக்கு வாட்டம் ஏதுக்கடா? - மனிதா வஞ்சகம் ஒழியாமல் - உனக்கு ஓட்டும் ஏதுக்கடா?
|
| 36 | ஆக்கம் புரியாமல் - உனக்கு ஆத்திரம் ஏதுக்கடா? - மனிதா நோக்கே தெரியாமல் - உனக்கு வாழ்க்கை ஏதுக்கடா? |
| *** | |
Monday, February 14, 2011
வாழ்க்கை ஏதுக்கடா?
Monday, December 20, 2010
தமிழர் உலகம்!
| தமிழர் உலகம்! |
| கிளைகளில் கூடு கட்டினால் வேரிலே தீ; கிளையில் இலை துளிர்த்தால் வேரிலே வென்னீர் கிளைகளிலும் பல வேளைகளில் இலைகள் உதிரும் வெட்கத்தைத் தொலைத்த வேர்களில் சாதனை மவுனம் மகரந்தச் சேர்கைக்காக அலைகிறது மன்மத அம்புகள் நகல்களின் புதுப்பிப்பில் நக்கலாய் நோபல் கனவுகள் உறக்க உல்லாசத்தில் விழிக்க மறுக்கும் மாக்கள் எச்சில் சுகத்தில் குரைக்கும் சில்லறை ஜால்ராக்கள் சுரண்டலின் மிச்சத்தில் எலும்பாய் சோம்பல் சாலைகள் சுய முன்னேற்றங்கள் இடைத் தரகர் பேரத்தில் இலவச முதலீட்டில் கொழித்துச் செழிக்கிறது கொள்ளை மறக்காமல் தமிழுக்கும் அவ்வப்போது இலஞ்ச அர்ச்சனை இணையமா? உலகமா? இசையா. இணையா இதயங்கள் போட்டியால் அல்ல பொறாமையால் புகையும் எரிச்சல்கள் திருட்டையும் ரசிக்கும் மாந்தரின் இளித்தவாய் வேடிக்கை நண்டுக் குணத்தால் என்றுமே நொண்டும் குதிரை சண்டிமாடாய் தனித்தீவாய் முன்னேற மறுக்கும் சமூகம் அறிவிலிகள் தேசத்தில் என்றும் அறிவாளிகள் சிறுபான்மை வீரியம் கொண்ட வித்துகள் மாத்திரம் காற்றில் நம்பிக்கை ”யாதும் ஊரே யாவரும் கேளிர்”! வசந்தம் என்பதும் சுழற்சியில் நிச்சயிக்கப்பட்ட விதியே! |
| *** |
Thursday, October 28, 2010
குலம்!
| குலம்! | ||||||||||||||||||||
| எனது சில எண்ணங்களைக் குறள்களாக, ஐயன் திருவள்ளுவரின் திருக்குறளின் நீட்சியாக ”குறள் ++” என்னும் அடைப்பின் கீழ் கொண்டுவர நினைக்கிறேன். இஃது கைப்பேசி2 என்பதும் போலும் இன்னொரு முயற்சி. உங்களின் கருத்துக்கள் எனது எண்ணங்களைச் செழுமைப் படுத்தலாம். பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.
| ||||||||||||||||||||
|
| ||||||||||||||||||||
| குறள் : | ||||||||||||||||||||
| ||||||||||||||||||||
|
| ||||||||||||||||||||
| விளக்கவுரை: | ||||||||||||||||||||
| 1. பிறப்பொக்கும் இயற்கை பெறுங்குடிப் பேணுவதேன் பொருளுரை: குலப்பேதம் மறைந்து அழியக் குடிமக்கட்கு ஒரே வழி, அதனை அதன் அடிப்படை மூலத்திலேயே விலக்கி வைத்தலும் மேலும் முழுவதுமாக மறந்து விட்டு விடுதலும் தான். பொருளுரை: சமூதாயத்தின் சீர்கேடான, குடிமக்களின் இழுக்கான சாதிப் பிரிவு என்பது, சாதிக்கான ஒதுக்கல் எனும் சலுகைத் திட்டம் என்கின்ற பிடிப்பு மிக்க தொடர்ச்சி இருக்கும் வரையிலும் எவ்வாறு சாகும்? பொருளுரை: தகுதிகளை உடைய தக்கவரைச் சேரும் தலைமைகளால் நல்லது விளையும். தரப்படும் சலுகைகள் என்பவை பொருள் மிகுந்தவரைச் சாரின் அதனால் விளையும் அதன் உண்மைப் பயன் துயரமே. (மிடி = துன்பம்). இன்னொரு வகையில்; தகுதியுடைய தக்காரைச் சேரும் சலுகையால தலைமை நலம் தரும், அதுவே பொருள் மிக்காரைச் சாரின் துயரத்தையே தரும் எனவும் பொருள் கொள்ளலாம். (தரும் என்பதைத் நலம் தரும் எனவும்; தரும் சலுகை எனவும் பொதுவாக்கிக் கொள்ளலாம்.) | ||||||||||||||||||||
|
| ||||||||||||||||||||
| *** |
Tuesday, October 19, 2010
கைபேசி (பகுதி: 2)
| கைபேசி! (பகுதி: 2) | ||||||||||||||||||||
| கைபேசிக் கவிதையின் நீட்சியாக, குறள் வகையில் சில கருத்துக்களைச் சொல்ல விளைந்தேன். உண்மையில் முன்னர் எழுதிய குறளைத் திருத்தவே முயன்றேன். அஃது ஒரு அத்தியாயமாகவே நீண்டு விட்டது. கைபேசி நாகரீகத்தை நெறிப்படுத்தக் குறளால்தான் முடியுமோ? நீங்களே சொல்லுங்களேன்.
| ||||||||||||||||||||
|
| ||||||||||||||||||||
| குறள் : | ||||||||||||||||||||
| ||||||||||||||||||||
|
| ||||||||||||||||||||
| விளக்கவுரை: | ||||||||||||||||||||
| 1: நோக்கக் குழையா நுண்ணலைக் கைப்பேசி கேட்கக் குழையுந் தரும். நோக்கக் குழையா நுண் அலைக் கைப்பேசி கேட்கக் குழையும் தரும். பொருளுரை: நோக்கினாலும் குழைந்து இளகா நுண்ணலைக் கைபேசி, ஒலி கேட்கக் குழைவினைத் தரும். அதாவது நம் மனதை இளகச் செய்யும். மேலும் நாம் ஒலிப்பதைக் கேட்கத் தன் காதினைத் தரும் என்றும் பொருள் படும். (குழை - காது) 2: காணாது மறையும் கைபேசி கண்டாலும் நாணாது நன்றே நகும். காணாது மறையும் கைபேசி; கண்டாலும் நாணாது நன்றே நகும். பொருளுரை: எங்கோ தொலைந்து காணாது போகும் கைபேசி கண்ணுக்கு மீண்டும் கிட்டினாலும் நாணாதே நன்றாகத் தன் இயல்போடு ஒலிக்கும். உம் எனும் உகாரத்தால் கண்டாலும் காணாவிட்டாலும் அதாவது எப்போதுமே நாணாது நன்றாக நகும் என்பதும் பொருளாகும். கண்ணில் காணாது மறைந்து விட்டாலும் அஃது எழுப்பும் ஒலியால் அதன் இருப்பிடத்தைக் காணலாம் என்பது உட்பொருள். 3: இயைந்தே கைபேசி இயம்பினும் நெடண்மை முயங்கிச் சிதைக்கும் செவி. இயைந்தே கைபேசி இயம்பினும், நெடு அண்மை முயங்கிச் சிதைக்கும் செவி. பொருளுரை: எத்தனை தான் ஒப்பும்படியான இனிய மொழியினைக் கொடுப்பினும் கைபேசியைக் காதிற்கு அண்மையில் நெடு நேரம் கொண்டு கேட்டால், அஃது முயன்று விரைவில் செவியின் செயல்பாட்டைச் சிதைத்துவிடும். எனவே காது கெட்டுவிடும் ஆதலின் குறைவான பயன் பாட்டிற்கு மட்டும் கைப்பேசியைப் பயன படுத்துதல் நல்லது என்பது பொருள். 4: இம்மியே இயக்கினும் இணைக் கைப்பேசி விம்மியே பயக்குந் துயர். இம்மியே இயக்கினும், இணைக் கைப்பேசி விம்மியே பயக்கும் துயர். பொருளுரை: [வாகனத்தை அல்லது வேறு ஒன்றை இயக்கிக் கொண்டிருக்கையில்] இம்மி அளவு நேரமே எனினும் இணையாக இயக்கும் கைபேசி, [கவனத்தைச் சிதற வைப்பதால் பயன் படுத்துவருக்கு மாத்திரம் அன்றி அஃது அனைவருக்கும் இன்னலை] பெருந் துன்பத்தை நல்கி விடும். ஆதலின் வேறொன்றை இயக்கும் சமயத்தில் கைபேசியையும் கூடவே இணையாகப் பயன் படுத்துதல்; ஏன் முயற்சித்தலே கூடத் தவறு என்பது ஈண்டு பெறத் தக்கது. 5: தெவிட்டு மொலி தெறின் கைப்பேசி செவிட்டு வழிக்கே செயும். தெவிட்டு மொலி தெறின், கைப்பேசி செவிட்டு வழிக்கே செயும். பொருளுரை: துள்ளும் கைபேசி ஒலியை தெவிட்டும் அளவிற்கு அதிகமாகக் கொள்ளுதல் நிச்சயம் செவிட்டுக்கே வழி செய்து உடல் நலத்தையும், உள நலத்தையும் பாதித்து விடும். ஆதலின் உயரிய ஒலியளவைத் தவிர்த்து மென்மையாகவும் குறைவாகவும் கொள்ளுதல் நலம் என்பதாம். அளவிற்கு மீறிய அமிர்தமும் விடம்தானே? பொருளுரை: சந்தையை, சந்தைப் படுத்தும் கூப்பாட்டை; விளம்பரத்தை, அறைகூவலை கைபேசியின் கண் கிடைக்கும் வாய்ப்புக்களிலெல்லாம் முன்னோக்கிப் பரப்புதல் பயனர் நிந்தையையே பதிலாக விளைவிக்கும். பயனாளிகளுக்குக் கைபேசி வழி சந்தைப் படுத்துதல் உண்மையில் எரிச்சலூட்டும் அணுகுமுறை. | ||||||||||||||||||||
|
| ||||||||||||||||||||
| *** |
Monday, October 11, 2010
மரண சாசனம்...
| மரண சாசனம்... |
| கவிதைப் பின்புலம்: |
| 'இன்பம் 50’ கவிதையில் “இறுதியில் |
| *** |
| மரணம் என்றெனும் தெரியா நிலையே மனிதரின் நிலையா வாழ்வினை உரைக்கும்; மரணம் என்னும் மாறா இறுதியை மனதொடு உணர்ந்தால் மானுடம் சிறக்கும்; தெரியும் தேடலில் கருணையும் நிறையும்; தெளிந்த உளத்திடை தெய்வமும் உறையும்; புரிதலின் விளைவால் வெறுப்புகள் ஒழியும்; புத்தியில் பேதங்கள் தயக்கங்கள் அழியும்; 1 பற்றுகள் மறையும்; பக்குவம் விளையும்; பதவிச் சுகத்தின் பாசம் அழியும்; சுற்றம் சொந்தம் பந்தம் விலகும்; சோகம் மோகம் யாவும் அகலும்; அற்ற குளத்து ஆம்பலைப் போலும் அன்புடை வாழ்வே நெஞ்சிடை நிலவும்; உற்ற தெய்வத்து உள்ளொளி நாடி உடலும் உளமும் நலத்தொடு உலவும்; 2 பக்தியும் மலரும்; பண்புகள் புலரும்; பருவ நாடக மயக்கம் தெளியும்; சக்தியும் தெரியும்; சகலமும் புரியும்; சாந்த நிலைதனில் சலனமும் விலகும்; அச்சம் மரணம் துச்சம் ஆகும்; அழுகை, துயரம் யாவும் தொலையும்; முக்தி என்னும் முதன்மை இலக்கில் முனையும் வாழ்வில் மேன்மையே நல்கும்; 3 பிறந்ததும் அழுதோம்; பேதை நெஞ்சில்; இறப்போம் என்பதை எண்ணி நினைந்தா? பிறப்பின் நோக்கம் இறப்போ என்று பிள்ளை மனத்தால் அறிந்தா? உணர்ந்தா? பிறப்பின் முடிவே இறப்பே என்றால் பெற்றயிவ் வாழ்வும் எதற்கே என்றா? இறப்பினை நோக்கி வளர்வதா என்றா? இருப்பின் கணங்கள் குறையுதே என்றா? 4 பிறந்ததும் அழுதால் பெற்றவர் இன்பம்; இறந்ததும் அழுதால் இருப்பவர் துன்பம்; பிறந்ததும் அழுதோம்; பசிக்கா? ருசிக்கா? இருந்தும் அழுதோம்; குறையா? பிழையா? இறந்ததும் அழுதோம் இழப்பா? பிழைப்பா? இரக்கம் கருணை எதற்கும் அழுதோம்.; துறந்ததும் அழுதோம்; தொலைந்ததில் அழுதோம்; துரோகம் ரோகம் அனைத்திலும் அழுதோம்; 5 வரவுகள் இழந்து வருந்தும் துயரில் வாழ்வில் நழுவும் வளமையில்; வலியில் உறவுகள் மறைவில் உணர்ச்சிப் பிரிவில் உயர்வில் தாழ்வில் ஊமை நட்பில் குறைகள் அறிந்து குமையும் பொழுதில் குன்றிய பெருமையில்; குறையும் அருமையில் மறைவில் மனதுள் மயங்கியே அழுதோம்; மனித வாழ்வில் வேறென்ன கண்டோம்? 6 கண்டவை எல்லாம் மறையும் இன்பம்; கருத்திடைக் கனன்ற மாயப் பிம்பம்; உண்டவை உடுத்தவை உடலொடு முயன்றவை வென்றவை சென்றவை விரிந்தவை புரிந்தவை மண்டல மண்ணிடை மலர்ந்தவை நிகழ்ந்தவை மானில மேதினில் வளர்த்தவை சிலிர்த்தவை அண்டிக் களித்தவை அனைத்தும் அகத்தே ஐயம் திரிபிலாச் சிற்றின்பச் சருக்கம்! 7 சலனச் சிறையில் சருக்கும் நினைவில் சருகாய் அருகும் அகவை முதிர்வில் நலத்து நலிவில் நடையின் தளர்வில் நல்லவை அல்லவை அறியும் நிலையில் உலகியல் நடப்பினை ஒதுக்கும் பொழுதில் உளத்தே இறப்பை உணரும் நொடியில் மலங்களைத் துறந்து மயங்கும் தருணம் மரணம் வருகையில் வருந்துதல் முறையோ? 8 மறையும் போழ்தும் அழியாத் துடிப்பா? மரணப் பிடியிலும் மறையாப் பிடிப்பா? இறைவன் அழைப்பை மறுக்கும் நடிப்பா? இருப்பைப் பெருக்க மறுகும் படிப்பா? பிறந்தன இறக்கும்; தோன்றின மறையும்; பிழையாச் சுழற்சியில் எதுதான் நிலைக்கும்? அறிந்தன அனைத்தும் அழிதலே உண்மை; அழுதால் மட்டும் வாழ்வா பிழைக்கும்? 9 ஆடிய ஆட்டம் போதும் என்றே ஆண்டவன் அழைக்கும் வேளை அன்றோ? தேடலில் உயிரும் தேர்ந்த நிலையில் திரும்பா இறுதிப் பயணம் அன்றோ? படைத்தோன் வகுத்த விதிப்படி முடியும் பயிலா நாடக இறுதித் தருணம்; கடவுளின் மடியில் மீளாத் துயிலாம்; கரும்பாய் இனிக்கும் மரணம் அஃதே; 10 உடலும் உயிரும் உறவறு நேரம் உதறாப் பற்றால் பயன் என்ன? விடுதலை உற்று ஏகும் போதும் வேதனை கொள்வதில் நலம் என்ன? நடப்பவை யாவும் நலமென நினைந்தால் நாளும் மனதிடைச் சுகம் தானே! கடப்பவை எல்லாம் கடமையே என்றால் கருத்திலும் வருத்தம் இலை தானே! 11 உடலை உயிரும் களையும் நொடியில் உணர்வு மறைதல் என்ன நிபந்தனையா? உலகை விட்டுப் பிரிவது என்பது உயிருக்கு வருகிற உயர் தண்டனையா? மறையும் இறுதித் துளியினில் கூட இறையைத் தொழுதால் பலன் தானே; பிறப்பும் இறப்பும் இல்லா முக்தி பெறுவோம் என்றால் சுகம் தானே? 12 ஒருமுறை தானே வருகிற மரணம் உளத்தால் நொந்து மடிவதும் ஏன்? ஒவ்வொரு நாளும் மரண பயத்தால் உள்ளே வருந்தித் துடிப்பதும் ஏன்? இறக்கும் நொடியும் இன்பம் என்றே இருந்து விட்டாலே குறை என்ன? இரணமே இல்லா மரணம் அல்லால் இறுதியில் பேரின்பம் வேறு என்ன? 13 தரணியில் இயற்கை மரணம் என்பது தானாய் வருகிற இறுதி ஒன்றே; தருமம் கருமம் என்பது எல்லாம் தவமாய் வாழ்ந்து முடிந்த பின்னே; மறுமைச் சுழற்சி வெல்லும் முக்தி மண்ணில் முழுதும் வாழ்ந்த பின்னே; மரணம் என்பதும் இன்பம் தானே மனதுள் தெரியும் உறுதி முன்னே!!! 14 கூட்டினைக் குருவி துறந்திடுங் காலை கூறிடும் வாய்பை இழப்ப தினாலே நாட்டிடை கிடந்து நாறா மெய்யை பாடையில் இட்டுப் பயணம் சுமக்கும் கூட்டினும் பெருக்கினும் வருகிற நாலை கூடிக் களித்த கூட்டம் முதலாய் காட்டிடை எரிக்கும் மானுடம் வரைக்கும் கழல்வோம் இன்றே கடைசி நன்றி!!! 15 நன்றி! நன்றி! நன்றி! |
| *** |
Monday, October 4, 2010
எதுவும் எதுவுமாகலாம்...
| எதுவும் எதுவுமாகலாம்... |
| தெய்வங்கள் மனிதராகலாம்: அவதாரங்கள் மனிதரும் தெய்வமாகலாம்: புத்தன் ஏசு காந்தி நடிகனும் தெய்வமாகலாம்: எம்.கே.டி. எம்.ஜி.ஆர் என்.டி.ஆர். என்ன செய்வது சில நேரங்களில் சில அவதாரங்கள்... நடிகரும் ஆகலாம்: டி.ஆர். சாம் ஆண்டர்சன். :) |
| *** |
Monday, September 27, 2010
சங்கு கொண்டே இங்கு ஊதுவோமே...
| சங்கு கொண்டே இங்கு ஊதுவோமே... |
| |
| கவிதைப் பின்புலம்: |
| |
| ஆர்குட் தமிழ் குடும்பத்தில் திரு.சசி கலா என்பவர் “முதல்வன் - கருணாநிதி” என்ற கீழ்க்கண்ட கவிதையை பதிவு செய்திருந்தார். அதற்கு எதிர்வினையாக இயற்றியது இது. அவரது கவிதை: ஆயிரம் பேரொளி அபிநயம் !! - பட்டினத்தார் நன்றி: எழுதத் தூண்டிய திரு.சசி கலா அவர்களுக்கும், ஆர்குட் தமிழ் குழுமத்திற்கும் |
| |
| *** |
| |
| தங்கத் தமிழ் மன்னவனை தரணி போற்றும் மும்முடியை தஞ்சையிலே கோயில் செய்த சிங்கமந்த ராஜ ராஜனை மங்கு புகழ் செய்ய மானிலத்தில் யாரும் உண்டோ? ஆயிரம் ஆண்டு கண்டால் யாருந்தான் விழா எடுப்பார்! பொங்கு தமிழ் மக்களிடம் பொய் வேடம் போட்டாலும் அந்த அந்த வேளையிலே அரசாங்கம் விழா எடுக்கும்! எங்கும் நடப்பது தான் இதிலென்ன பெருஞ் சிறப்பு? எந்த அரசாய் இருந்தாலும் இந்த விழா எடுக்காதா? சிங்களம் வென்று நின்ற செந்தமிழர் நம் மண்டலம் இன்று கண்ணீரைச் சிந்த இறையாண்மை பேசி விட்டு தம்புகழ் தேடி நின்றால் மங்களம் தான் பாடோமா? பங்கம் இங்குச் செய்தாரை சங்கு கொண்டே ஊதோமா? வாயுரை வாழ்த்த வந்த வள்ளலார் கவிமார் எல்லாம் தாயினை வாழ்த்தி நிற்பார் தமிழினை வாழ்த்தி நிற்பார் ஆவுடை கோயில் கண்ட அரசனை வாழ்த்தி நிற்பார் நாவுடைக் கயவர் தானே நச்சினைப் பேணி நிற்பார்!!! ஆயிரம் ஆண்டு கண்டது ஆவுடையார் கோயில் ஐயா பாயிரம் யாருக்கு இங்கே? பஜனைகள் யாருக்கு இங்கே? தாயகம் வாழ வைத்த தஞ்சை மன்னன் எங்கே? நோயிலும் தற்புகழ் தேடும் தன்னல நெஞ்சம் எங்கே? ஆயிரமாம் வருட விழா ஆனந்தமாய்ப் பங்கு கொள்ள வாய்த்ததே வாய்ப்பு என்று வணங்குதல் பணிவின் மாண்பு! வாய்ப்பிலே வந்ததற்கு எல்லாம் வாழ்த்துரை தேடித் தேடி பாயினைப் பிராண்டி நின்றால் பாடாரோ கடைசிச் சங்கு? ஆருரார் இசைச் சங்கமமாய் ஆடல் வல்லானுக்கும் இங்கே ஆயிரம் நாட்டியக் கலைஞர் ஆடியமை வாழ்த்தவே வேண்டும்! சாதனை செய்த புதல்வி சத்தியமாய் பத்மா இங்கே! ஆவன செய்தல் வேண்டும் அவருக்கும் கல்லில் எழுத்து! தேவனைப் பாடிப் பாடிப் திசையெலாம் இறை முழக்கம் பாவனை காட்டிக் காட்டிப் பாவையர் செய்த நடனம் சாவதே இல்லை தமிழில் சங்கங்கள் என்றுமே உண்டு ஆவுடையான் அருளே எங்கும் அருந்தமிழருக்கு நிற்க என்றும்! ஆலயச் சங்கமம் என்றும் அருளினை வளர்த்தல் வேண்டும் ஆணவம் அழிந்து ஒழிந்து அடக்கந்தான் மலர வேண்டும் மானுடம் பெருகி நின்று மனிதர்கள் சிறக்க வேண்டும் தானெனும் அகந்தை அழியச் சங்கொலியே முழங்க வேண்டும்!!! |
| *** |
Friday, September 24, 2010
உயர்வுள்ளல்...
| உயர்வுள்ளல்... |
| |
| கவிதைப் பின்புலம்: |
| |
| மூலிகை பெட்ரோல் புகழ் ராமர் பிள்ளை, இந்த முறை கடல் நீரை பெட்ரோலாக்கி காட்டப் போவதாக சவால் விட்டுள்ளார். அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியன்று சென்னையில் 1 லட்சம் லிட்டர் கடல் நீரை எரிபொருளாக்கிக் காட்டப் போவதாகவும் அவர் கூறியுள்ளார். உண்மையில் கடல் நீரால் பெட்ரோல் செய்து காட்டி விட்டால் மாபெரும் மேதை என ஒத்துக் கொண்டு நாமும் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம் தானே. என்ன சொல்கிறீர்கள்?. நன்றிகள்: http://narumugai.com/?p=13088 |
| |
| *** |
| |
| கடல் நீரில் குடி நீர் கண்டு விட்டது உலகம்;.. கடல் நீரில் எரி பொருளா? கதையா? நிஜமா? இராமர் பிள்ளை நம்பிக்கை இராமரா? கொறிக்கும் அணிலா? பொறுத்திருந்து பார்ப்போம்? வெற்றி பெற்றுவிட்டால்... தமிழகத்தில் ஒவ்வொரு நகர ஊருக்கும் தினம் தினம் விமானச் சேவை ஓட்டலாம் தான்.... வண்டி மாடுகளுக்கு கண்டிப்பாய் விடுதலை... இழுப்பு உழவென பெட்ரோலிலே விவசாயம்... சென்னைத் துறைமுகமே எண்ணைத் துறைமுகமாய்... அமெரிக்கர்களுக்கு தமிழகத்தில் அளிப்போம் வேலைவாய்ப்பு... இந்தியன் விசாவிலை அயல்நாடுகளில் அதிகரிப்பு! கருநாடகா காவேரி கூவத்திலே கூட்டணி!!! அடடா அடடா கற்பனைக்கேது எல்லை? உள்ளுவதெல்லாம் உயர் உள்ளல் வேறல்ல! நடப்பவை எல்லாம் நல்லதாக நடக்கட்டும்!! நல்லதே நடக்கட்டும்! ஆல் தி பெஸ்ட் இராமர் பிள்ளை! |
| |
| *** |
சரியான மூக்குடைப்பு?
| சரியான மூக்குடைப்பு? |
| |
| கவிதைப் பின்புலம்: |
| |
| இன்றையச் செய்தி: மகாபலிபுரத்தில் மாமல்லன் சிலை உடைப்பு மகாபலிபுரம்: மகாபலிபுரத்தில் மாமல்லன் சிலை உடைக்கப்பட்டதைக் கண்டித்து எம்எல்ஏ தலைமையில் பாமககவினர் போராட்டம் நடத்தினர். திருக்கழுக்குன்றத்தில் பஸ்கள் மீது கல்வீச்சும் நடந்தது. மகாபலிபுரம் பைபாஸ் ரோட்டில் மாமல்லன் சிலை உள்ளது. இந்த சிலையை யாரோ உடைத்துள்ளனர். மேலும் வன்னியர் சங்க கல்வெட்டு மற்றும் பாமக கொடிக் கம்பத்தையும் சேதப்படுத்தியுள்ளனர். இதையடுத்து இன்று காலை செங்கல்பட்டு எம்.எல்.ஏ. திருக்கச்சூர் ஆறுமுகம் தலைமையில் பாமகவினர் மகாபலிபுரத்தில் குவிந்தனர். ஆர்ப்பாட்டம் நடத்திய அவர்கள் பின்னர் மறியலிலும் ஈடுபட்டனர். சிலையை உடைத்தவர்களை கைது செய்யக் கோரி கோஷமிட்டனர். இந்தப் போராட்டத்தால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியதால் போலீசார் குவிக்கப்பட்டனர். சிலை உடைப்பைக் கண்டித்து திருக்கழுக்குன்றத்தில் 2 பஸ்கள் கல்வீசி உடைக்கப்பட்டன. இதையடுத்து அங்கு கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. http://thatstamil.oneindia.in/news/2010/09/22/mamallan-statue-damaged-mahabalipuram.html |
| |
| *** |
| |
| சிலை உடைப்பைக் கண்டித்து பேருந்து உடைப்பா? பேருந்து உடைப்பைக் கண்டித்து எதை உடைக்கலாம்? உடைப்போர் மண்டைகளையா? கைகளையா? முதுகெலும்பையா? உடைக்க வேண்டிய வருணமும், ஜாதியும், மதமும் உடைபட்ட சிலைகளின் இடை வெளிகளிலும் கூட எகத்தாளமாய்த்தான் இன்னமும் கை கொட்டிச் சிரிக்கிறது!!! உணர்வற்ற உள்ளங்களினால் உடைபட்டுக் கிடக்கிறது உலகம்.... மமதையுற்ற நெஞ்சுக்களில் மங்கிக் கிடக்கிறது ஒளி... உண்மையான விடிவு எற்றைக்கு எம் மனிதர்காள்? |
| |
| *** |