இயற்கை ஒவ்வா; அறிவு பொருந்தா;
இணைவரு மனிதரும் இணங்காச் செயலால்
பழித்தவை கழித்தவை ஒளித்துச் சுகித்து
உதவா வழியினில் உருப்படாது ஏகி
உணர்வும் நலனும் இலாதாது ஆகி
இதமிலா விதண்டா வாதமும் பேசி........................1
காலம் பொருளைப் பாழென வாக்கி
கற்றவர் மற்றவர் உற்றவர் கரித்து
யாரும் போகா ஊரினைத் தேடி
தீதை ரசித்து; திகட்டலை ருசித்து
சிந்தனை குழம்பி; சோம்பரில் உழம்பி
ஒழுக்கம் கெடுத்து; உபத்திரம் கொடுத்து..............2
சுயநலம் பேணி; சொல்லினைப் புரட்டி;
தெய்வம் இகழ்ந்து; தீதினைப் புகழ்ந்து
அல்லவை எல்லாம் நல்லெனக் கூறி
அறிவு மழுங்கி; ஆணவம் பெருக்கி
அரை குறை அறிவை ஆனந்தித்து
அறிந்தன பகர அறிவிலி தேடி................................3
கலைகளைப் பழித்து; சிலைகளை அழித்து
அழகினைச் சிதைத்து; அழுக்கினை ரசித்து
கயமை உகந்து நிதியம் தேடி
சூட்சியில் ஆளும் மாட்சிமை காட்டி
விடியா இரவு; பொருந்தா உறவு;
இதயம் கறுத்து; சுதந்திரம் வெறுத்து......................4
கற்பைத் துப்பி; எச்சிலை நக்கி
தாயைத் தமிழைத் தரணியைத் தாழ்த்தி
கருமிப் பொருமி இலாவணி பாடி
தரித்திர விளக்கில் சரித்திரம் படித்து
குற்றப் பரம்பரைத் தொட்டுத் துலங்க
சாத்திரம் மருவி சூத்திரம் எழுதி..............................5
ஆத்திரம் மூத்திரம் அனைத்திலும் உழண்டு
அறிவும் அகமும் அறவே கழண்டு
சோத்துத் துருத்தியாய் நாற்றப் பிண்டமாய்
பகலில் இருளைத் தேடும் முண்டமாய்
வந்து விழுந்த சில்லறை கொண்டு
வருகிற சில்லறை மனிதரில் மருண்டு....................6
உருண்டு திரண்டு உள்ளம் பிரண்டு
உற்றவர் மற்றவர் கண்டு மிரண்டு
நெஞ்சம் புலம்பி, நெடுவழி நோக்கி
பொய்யும் புரட்டும் மொய்யென வைத்து
கைத்தடி ஏந்திக் கைத்தலம் பற்ற
வைதவர் நொய்தவர் வல்லமை கொள்ள...............7
விடலை இளைஞரின் வெற்றி வெறுத்து
வஞ்சப் புகழ்ச்சியில் நொந்து படுத்து
ஆப்பிடைக் குரங்காய் அரங்கம் பிதற்றி
காப்போம் பொருளெனக் கதறித் துடித்து
திரண்ட திரவியம் புரட்டிச் சுருட்டி
தேறிய வரையில் இலாபம் பார்த்து........................8
சுடலைப் பயத்தில் சுருண்டு படுத்து
சோகித்துச் சுகித்து சொந்தங்கள் சபித்து
கண்டவை கேட்டவை அனைத்தும் வெறுத்து
காண்பவை எல்லாம் கரித்து முடித்து
தீதையும் சூதையும் போதனை செய்து
தீராப் பிளவினை நெஞ்சினில் தேக்கி.........................9
மூத்த குடியை முத்தமிழ் மரபை;
அள்ளக் குறையா ஐம்பெரும் காவியம்
சொல்லும் அழகை; கன்னற் தமிழை;
கண்ணகி மாதவி கற்பின் திறத்தை
வள்ளுவச் சிறப்பை கம்பனின் அழகை
பண்டு சொன்ன பாரதி தீரத்தை.............................10
இன்னற் செய்து; இழிவு படுத்தி;
அரைகுறைப் பொதுமை நிறைவுறப் பேசி
கோணற் புத்தியில் கொள்கை வடித்து
நெஞ்சம் இருண்டு நீர்மேல் எழுத்தாய்
நேர்மை நில்லா பேதமை உரைத்து
கருமை நாடகம் மேலுறக் களித்து..........................11
ஒழுக்கிய நீரினில் மீன்வலை வீசி
ஒழுகிடும் வாழ்வினை உயர்வெனப் பேசி
இழவினைச் சுகிக்கும் இழிவுறு பிறப்பாய்
கழுகாய்ப் பருந்தாய் பிணத்தினை உவந்தே
புழுத்த நரகலைப் புசித்துக் கொழுக்கும்
விலங்காய் வாழ்வை விளங்கிடும் பிறப்பே!..........12
***
Friday, November 20, 2009
Thursday, November 19, 2009
அன்பை அறிவோம்!
அன்பை அறிவோம்! |
|
வலியவரும் எளியவர்முன் மண்டியிடும் மந்திரமும் வீழ்த்தவரும் வேங்கையரும் தாழ்ந்துவிடும் தந்திரமும் அறிவுடை மேதையரும் அண்டிவரும் விந்தையதும் இன்பமுற இன்னுயிர்கள் ஈண்டுதமை நாடுவதும் அன்புநெறி மாந்தர்பெரு வாழ்வுநிலை கூடுவதும் அன்புதரு இன்பநிலை! இயற்கையது ஐயமிலை! யாவரையும் அன்புநிறை ஆதரவில் பேணிவரின் கோபமும் அற்றுவிடும் குறைகளும் இற்றுவிடும் பைத்தியம் தெளிவாகும் பார்வைகள் விரிவாகும் கல்லும் கரைந்துவிடும் காளையும் மடிதுயிலும் நல்லவழிச் சாலைதேடி அல்லவையும் ஓடிவரும் முள்ளும் மலராகும் முடிநாரும் மணமாகும்! மண்ணில் பிறக்கையில் யாவரும் கேடில்லை; அன்பைப் பெருக்கிவிடின் யாவதும் கேடில்லை; அன்பே இறையாகும் அறிவோம் நலமாகும்! இன்பமும் துன்பமும் அன்பின் விளைச்சலே உள்ளம் சுரக்கும் உணர்வுக் கரைசலே அன்பேநம் அறிவும்; அனைத்தும் அஃதே! |
|
*** |
Subscribe to:
Posts (Atom)