கைபேசி! (பகுதி: 1) |
புதுக்கவிதை: |
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் அவள் அப்பனும் நோக்கினான் அட அனைவருந்தான் நோக்கினர் ”பெரிதாய்” ஒன்றுமில்லை... நோக்கியாக் கடை ஷோக்கேசில் புத்தம் புதுவரவு புதியவகைப் புதுவடிவு கையடக்கக் கவர்ச்சி நோக்கியாக் கைபேசி!!!
|
|
எண் சீர் விருத்தம்: |
நோக்கரிய நோக்காய் நுணுக்கரிய நுண்ணுர்வாய் நோக்கியரே நோக்கினரே நோக்கா நோக்கியாம் நோக்கியா அங்காடிக் நோக்கப் பேழையிலே நோக்கக் கவர்ச்சியாம் நோகாத வளர்ச்சியாம் போக்கும் வரவும் போற்றிடுந் தெளிவாம் நேர்த்தியாம் தோற்றமாம் நெடுங்காலத் தேற்றமாம் நோக்கும் வாக்கும் நுவலும்புலச் சித்திரமாம் நோக்கியாப் புதுவரவாம்; நுண்பதுமைக் கைப்பேசி!!!
|
|
இன்னிசை வெண்பா: |
நோக்கியாப் புதுவரத் துக்கருவி நோக்கின் வாக்கில் வல்லொலி திரையில் தெள்ளொளி தாக்கும் மென்கிருமிக் காப்பு; தகதகத்து நோக்கக் கவர்ச்சிக் கைப்பேசி யுமஃதே!
|
|
அகவல்: |
கையகப் படுத்திய வையகச் சுருக்கம்; காதினுள் அடங்கும் காதலின் நெருக்கம்; வானொலி பொழியும் தேனொலி இன்பம்; வண்ணொளி மொழியும் கண்ணொளி பிம்பம்; வரம்புகள் இல்லா வானலைப் பிணையம்; நரம்புகள் இல்லா நனவலை இணையம்; தகுதியைக் கூட்டும் கௌரவத் துண்டு; தரத்தினைக் காட்டும் யௌவனப் பெண்டு; பணியோ இலையோ பதவிசுப் பேழை; பணிவோ நிலையோ உணரா ஏழை; பொய்யோ மெய்யோ புலம்பிடும் கருவி; புரிந்தால் இசையாய் உருகிடும் அருவி; அவசர கால அடிப்படை மருந்து; அடிக்கடி படைக்கும் அழையா விருந்து; உறவுகள் பெருக்கும் உணர்விலாச் செல்லம்; உயிரினைச் சொடுக்கும் உரைதனில் வெல்லம்; அரற்றும் மொழிக்கே கட்டண எச்சம்; அனைத்து வரத்தும் இலவச மிச்சம்; அறிந்தவர் தெரிந்தவர் கூப்பிடு தூரம்; அழைப்பும் மறுப்பும் கூடுதல் பேரம்; தொலைவைச் சுருக்கிய ஓயாத் தொல்லை; செலவைப் பெருக்கிடும் மாளாக் கிள்ளை; தனிமை கெடுக்கும் தடங்கல் வில்லை; தவறியும் பிழைக்கும் வளர்ப்புப் பிள்ளை; உரையினைப் பரிமாறும் இடைமுகத் தகடு; உளங்களை இடம்மாற்றும் மறைமுகச் சுவடு; தடைகளைத் தாண்டிடும் படையெறி அம்பு; கடமைகள் வேண்டிடும் கைப்பொறி வம்பு; இருப்பினை இழக்கா இயந்திர உலவி; இரக்கைகள் இல்லா இராட்சதக் குருவி; கணத்திடை கடத்தும் காற்றலைப் பூவை; கடமையைத் துலக்கும் எந்திரப் பாவை; குறுகியத் தகவலின் விரைவியத் தூது; கொஞ்சிடும் சேவையில் விஞ்சுவது யாது? நன்மைகள் சேர்க்கும் நாவலந் தீவு; நம்பிக்கை காக்கும் நயம்படு மாது; தரவினைப் பேணும் குறுந்திரள் உருட்டி; வர-வினை செல-வினை வைகுந் திரட்டி; நினைவினைத் தூண்டும் குறிப்புரை ஊட்டி; நனவினைப் பகரும் ஆண்டுநாட் காட்டி; சலிப்பினைத் தெரியாச் சமர்த்துக் குட்டி; சஞ்சலம் அறியாச் சந்தனக் கட்டி; தற்புகழ் தேடா ஊழியப் பிறவி; தன்லயந் தவறா தனிபெருந் துறவி;; நினைவகச் சுமையைக் குறைக்கும் நட்பு; நெருங்கிய அண்மையில் துடிக்கும் உயிர்ப்பு; வையகம் இங்கே வாழ்கிற வரைக்கும் மெய்யுறை அங்கமே இக்கை யலைபேசி! இதயத்து நெருக்கம் மார்பக வலியாம்; காதொடு பெருக்கம்; கபாலப் புற்றாம்; காந்தக் களத்திடைக் கனன்றிடும் வாழ்வே; கவனம் வைத்திடில் வருமோ தாழ்வே? அறிவொடு நுகர்வின் அனைத்தும் நலமே; அளவினை மிஞ்சின் அமிர்தமும் விடமே!!!
|
|
*** |
Friday, October 1, 2010
கைபேசி! (பகுதி: 1)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment