Sunday, October 24, 2010

தமிழ் மொழி!

தமிழ் மொழி!

எடுப்பு:
தமிழே! தமிழே! தமிழே! - இந்தத்
      தரணியின் உயரிய தவத்திரு மொழியே!
அருளே! தமிழே! அமுதே! - இந்த
      அவனியின் இருளறும் அருட்பெரு மொளியே!

தொடுப்பு:
தமிழே! தமிழே! தமிழே! - இந்த
      தரையினில் கடலெனத் தவழ்ந்திடும் எழிலே!
வளமே! கதிரே! தமிழே! - இந்த
      வையகத் தொளிரும் வரம்பிலாப் பொருளே!
                                                                                    (தமிழே...)

நடப்பு:
1. இறை மொழி:
பரமனின் பனிமொழி தமிழே! - அந்தக்
      குருபரன் அருளிய உறுமொழி தமிழே!
அரனுரைத் திருமொழி தமிழே! - அழகு
      அறுமுக இளையனின் அருள்மொழி தமிழே!
திரிபுரை உரைமொழி தமிழே! - தெய்வக்
      கரிமுக முதல்வனின் கனியுரை தமிழே!
திருமறை உறைமொழி தமிழே! - செல்வத்
      தரணியின் நிறைமொழி முதன்மொழி தமிழே!
                                                                                    (தமிழே...)

2. மறை மொழி:
அமரனின் திருமுறை தமிழே! - ஆன்ற
      அறிவுடை முனிகளின் மனமொழி தமிழே!
குமரனின் குருமொழி தமிழே! - அவன்
      குறிப்பிடும் பரம்பொருள் ஓமொலி தமிழே!
’வாசிவாசி’ என்னுவது தமிழே! - சிவ
      வாக்கிய மறைமொழி உன்னுவது தமிழே!
ஆதிசிவம் ஆனபொருள் தமிழே! - கூடி
      ’அன்பே சிவம்’ ஆகும்பொருள் தமிழே!
                                                                                    (தமிழே...)

3. நிறை மொழி:
அருமறை உரைவதும் தமிழே! - அதில்
      உறைபெறு திருமுறை வழிமொழி தமிழே!
கருவுடைத் திருமொழி தமிழே! - எங்கும்
      கருத்தொடு உயிரென விரிந்ததும் தமிழே!
உருவுடை உணர்வும் தமிழே! - உலகில்
      உருமாறிப் பலவாகி உதித்ததும் தமிழே!
திருவுடைத் திரவியம் தமிழே! - நல்
      திருவிடக் குலத்துயர் முதலதும் தமிழே!
                                                                                    (தமிழே...)

4. நிலை மொழி:
முச்சங்கம் யாத்ததும் தமிழே! - மூல
      முதல்வனும் முருகனும் காப்பதும் தமிழே!
முச்சுவை வார்த்ததும் தமிழே! - முதல்
      மூவேந்தர் கூத்தாடிக் காத்ததும் தமிழே!
முப்பாலைத் ஆர்த்ததும் தமிழே! - புவி
      மூத்தகுடி சாற்றிவரும் மூத்தமொழி தமிழே!
தப்பாமல் வாழ்வதும் தமிழே! - இந்தத்
      தரணியில் இளமை எப்போதும் தமிழே!
                                                                                    (தமிழே...)

5. மூல மொழி:
அகத்தியோன் வகுத்தவகை தமிழே! - நல்
      அகத்தையும் புறத்தையும் தொகுத்ததும் தமிழே!
சிலம்புமொழி செப்புவதும் தமிழே! - செங்
      காப்பியத்துள் தொன்மைதனைச் சாற்றுவதும் தமிழே!
மூதுரையுங் கூறுமொழி தமிழே! - திரு
      மூலனுரை மூவாயிரம் முகிழ்த்ததும் தமிழே!
ஞானியரின் போதமொழி தமிழே! - அவர்
      நாதவொலி வேதமொழி என்பதுவும் தமிழே!
                                                                                    (தமிழே...)

6. கலை மொழி
சித்தர்களின் சிந்தைமொழி தமிழே! - அவர்
      சிந்தைவழி செய்தபணி செப்புமொழி தமிழே!
கவிஞர்களின் சந்தமொழி தமிழே! - அவர்
      கலைபொழிய நெஞ்சுருகி சிந்துமொழி தமிழே!
இசைவேளர் மரபுமொழி தமிழே! - அவர்
      இசையோடு பண்பாட வந்தமொழி தமிழே!
கலைவாணர் பேசுமொழி தமிழே! - அவர்
      கலையாடிக் கவிபாடிக் கொஞ்சுமொழி தமிழே!
                                                                                    (தமிழே...)

7. வண் மொழி
பழையதும் நிலையதும் தமிழே! - பண்டு
      வளமையும் எளிமையும் வலிமையும் தமிழே!
அழகியல் நளினமும் தமிழே! - என்றும்
      இளமையில் செழுமையில் விளைவதும் தமிழே!
இலக்கியத் தரமெனில் தமிழே! - மொழி
      இனிமையும் திறமையும் ஆழமும் தமிழே!
கலையதன் மேன்மை தமிழே! - நற்
      கவிப்பொருள் செறிவும் நிறைவும் தமிழே!
                                                                                    (தமிழே...)

8. இயல் மொழி:
இயற்கையின் முதன்மொழி தமிழே! - என்றும்
      இயலிசை நாடகம் என்பதும் தமிழே!
நயத்துரை கனிமொழி தமிழே! - என்றும்
      நலத்தொடு களிப்பினை நல்குதும் தமிழே!
வையத்து எழில்மொழி தமிழே! - என்றும்
      வனப்பொடு வளத்தினை வழங்குதும் தமிழே!
உயர்வொடு திகழ்வதும் தமிழே! - என்றும்
      உதிரத்தில் உணர்வினில் உய்வதும் தமிழே!
                                                                                    (தமிழே...)

9. சுவை மொழி:
எல்லை இல்லாதது தமிழே! - எங்கும்
      ஏகியே பரவிடும் இன்பமும் தமிழே!
இல்லை என்னாதது தமிழே! - எங்கும்
      இயங்கிடும் நிலையிலும் ஏற்றமும் தமிழே!
சொல்லில் சிறந்தது தமிழே! - எங்கும்
      சுயத்தொடு நயப்பதும் சுவைப்பதும் தமிழே!
வல்லமை நிறைந்தது தமிழே! - சட்ட
      வரைமுறைத் தெளிவையும் வகுத்திடும் தமிழே!
                                                                                    (தமிழே...)

10. தண் மொழி:
வண்மையும் மென்மையும் தமிழே! - நல்
      வண்ணமும் பண்ணும் முழக்கிடும் தமிழே!
திண்மையும் தெளிவும் தமிழே! - நல்
      கண்ணியம் புண்ணியம் துலக்கிடும் தமிழே!
அண்மையும் தண்மையும் தமிழே! - நல்
      உண்மையும் அன்பையும் புகல்வதும் தமிழே!
பண்பையும் பகிர்வதும் தமிழே! - நல்
      நுண்கலை நுட்பம் நுவல்வதும் தமிழே!
                                                                                    (தமிழே...)

11. பொன் மொழி:
கடலினை முனைந்ததும் தமிழே! - முதலில்
      கடலொடு முகிழ்த்ததும் முகிழ்ந்ததும் தமிழே!
கடலினைக் கடைந்ததும் தமிழே! - முதலில்
      கடலினைக் கடந்து களித்ததும் தமிழே!
நலத்தினை வளர்த்ததும் தமிழே! - முதலில்
      நன்னெறி ஒழுக்கம் நவின்றதும் தமிழே!
அகத்தினில் செழித்ததும் தமிழே! - முதலில்
      அறநெறிப் பொதுமறை அளித்ததும் தமிழே!
                                                                                    (தமிழே...)

12. நன் மொழி:
பொறுப்புரை பொழிவதும் தமிழே! - முதல்
      புரிதலை அறிதலைப் படைத்ததும் தமிழே!
நறுக்குரை நயமெனில் தமிழே! - முதல்
      நல்லவை அல்லவை நயத்ததும் தமிழே!
முறுக்குரை மொழிவதும் தமிழே! - முதல்
      மொழியெனத் தடத்தினைப் பதித்ததும் தமிழே!
சிறப்புரை ’முத்தெனில்’ தமிழே! - முதல்
      சிந்தனைச் சொத்தெனில் சிறப்பதும் தமிழே!
                                                                                    (தமிழே...)

முடிப்பு:
தமிழே! தமிழே! தமிழே! - இந்தத்
      தரணியின் முதன் மொழி தமிழே!
அருளே! தமிழே! அமுதே! - இந்த
      அவனியின் முதல் நிலை அழகே!
தமிழே! தமிழே! தமிழே! - இங்கு
      உயிரும் மெய்யாய் உறைந்திடும் தாயே!
தமிழே! தமிழே! தமிழே! - இங்கு
      உளத்துள் உணர்வாய் நிறைந்ததும் நீயே!

***

10 comments:

  1. நான் தமிழ் மொழியைப் பேசுபவன் :-)

    ReplyDelete
  2. தமிழ் போலவே மிக மிக அழகா இருக்கு!
    வாழ்க தமிழ் மேலும் மேலும் வளர்க எங்கள் தமிழ்!

    ReplyDelete
  3. @சாம்ராஜ்ய ப்ரியன்
    ///நான் தமிழ் மொழியைப் பேசுபவன் :-)
    வாழ்க வளமுடன்!!! :)

    ReplyDelete
  4. @V. Rajalakshmi
    நன்றி.

    வளர்க நலமுடன். :)

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் நண்பரே தமிழ் நன்றாக உள்ளது உங்கள் கவிதையில் .

    ReplyDelete
  6. @cholaprimenet

    நன்றி நண்பரே.

    ReplyDelete
  7. Tons of Tons of Tons of Tons of Tons of Tons of Tons of Tons of Tons of Tons of Tons of
    Tons of Tons of Tons nano titanium by babyliss pro of Tons of Tons of Tons of Tons of Tons of Tons of Tons of Tons of Tons titanium athletics of Tons 바카라 사이트 검증 of ceramic vs titanium curling iron Tons of Tons of Tons of Tons of Tons of Tons titanium mens wedding band of Tons of Tons

    ReplyDelete