Friday, October 1, 2010

அண்ணல் மகாத்மா நினைவஞ்சலி...

குறிப்பு:
மகாத்மாவின் சீடர்கள் லால் பகதூர் சாஸ்திரி அவர்களுக்கும், கர்ம வீரர் காமாராஜ் அவர்களுக்கும் கூட இன்று நினைவு நாள்.

லால் பகதூர் சாஸ்திரி அவர்களுக்கும் பிறந்த நாள். தமிழகம் கண்ட கர்ம வீரர் காமராஜருக்கு மறைந்த நாள்.

மகாத்மாவுடன் இரண்டறக் கலந்த இந்த நல்ல ஆத்மாக்களையும் இன்றைய நன்னாளில் நினைவு கூறுவதுடன் வாழ்த்துவோம்.

நன்றி.

அண்ணல் மகாத்மா நினைவஞ்சலி...

தந்தையா, தாத்தாவா, அண்ணலா, ஆத்மாவா?
      தனிமனிதச் சுதந்திரத்தின் மனமெனும் அங்கமா?
அத்தனையும் ஒன்றான அற்புத மானுடம்
      அகிம்சையே காட்டிய ஆற்றலின் மகிமை
மொத்த அகிலத்தின் முதன்மேன்மைச் சிந்தனை
      முயற்சிக்கே பரிணமித்த முழுமையின் எளிமை
இத்தனை பெருமையும் இலங்கிடும் இமயமே
      இந்தியத் தந்தையெம் காந்தி மகாத்மா!

சத்தியமே சோதித்த சோதனைச் சத்தியம்
      சமத்துவம் நடாத்திய சமதரும உத்தமம்
கத்தியும் ரத்தமும் காணாத போர்க்களம்
      கருணையும் உரிமையும் வற்றாத நிலைக்களம்
பித்தமும் போக்கிடும் அறிவில் நிறைகுடம்
      பெண்மையைப் போற்றிடும் அன்பின் உறைவிடம்
இத்தனை பெருமையும் இலங்கிடும் இமயமே
      இந்தியத் தந்தையெம் காந்தி மகாத்மா!

சுத்தமும் சுகமும் அகமும் புறமுமாம்
      சுதந்திரம் என்பதே பிறரையே மதிப்பதாம்
எத்தனை புகழிலும் வழுவாத ஒழுக்கமாம்
      எண்ணம் யாவிலும் நேர்வழி யோகமாம்
புத்தனைப் போலவே வாழ்ந்ததும் உதாரணம்
      புரிந்துகொள்ள ஏதுவாய்ப் புனிதமான மானுடம்
இத்தனை பெருமையும் இலங்கிடும் இமயமே
      இந்தியத் தந்தையெம் காந்தி மகாத்மா!

சித்தராய் வாழ்விலே இயற்கையின் வைத்தியம்
      சிந்தனை செயலிலே நேர்மையில் பைத்தியம்
உத்தமராய் உண்ணலில்; ஊட்டலில் அகிம்சையாம்
      உலகமதம் யாவையும் ஒன்றுகண்ட ஞானியாம்
சத்தியமாய்ச் சுயநலத்தைக் காணாநல் யோகியாம்
      சக்தியொடு நல்லறத்தைக் காத்தமா மானுடம்
இத்தனை பெருமையும் இலங்கிடும் இமயமே
      இந்தியத் தந்தையெம் காந்தி மகாத்மா!

அகிலத்திற்கே அருமைப் புதல்வனை; அண்ணல்காந்தியை;
      அன்னைபாரதம் அளித்தபெரும் பொன்நாள்; இன்னாள்;
சகிப்பையும் அன்பையும் சமதருமச் சிந்தனையும்
      சமுதாயம் நினைவுகொள்ளும் சத்தியத் திருநாள்
அண்ணல்தம் பிறந்தநாள் ஆனந்த நினைவுநாள்
      ஆன்மச் சோதனைக்கு ஆண்டில்வரும் நன்நாள்
அன்புடையோர் மேன்மைக்கு அடிவைக்கும் பெருநாள்
      அறம்போற்றும் அறிவுடையோர் கொண்டாடும் திருநாள்!

      அண்ணலே வாழி!!! எமது அன்பு நெஞ்சமே வாழி!!!

***

No comments:

Post a Comment