Monday, September 27, 2010

சங்கு கொண்டே இங்கு ஊதுவோமே...

சங்கு கொண்டே இங்கு ஊதுவோமே...


கவிதைப் பின்புலம்:

ஆர்குட் தமிழ் குடும்பத்தில் திரு.சசி கலா என்பவர் “முதல்வன் - கருணாநிதி” என்ற கீழ்க்கண்ட கவிதையை பதிவு செய்திருந்தார். அதற்கு
எதிர்வினையாக இயற்றியது இது.

அவரது கவிதை:

ஆயிரம் பேரொளி அபிநயம் !!
அரும்தமிழ் காவலன் கண்டான்.!
'தஞ்சை பெருங்கோவில்" ஆயிரம் ஆண்டு காப்பியம் ஆனது !!!
காவியம் ஆனது! கவிகள் உள்ளவரை "கலைஞர்" உண்டு!!
இல்லை! இல்லை !! தமிழ் உள்ளவரை "தலைமகன்' உண்டு!
அகிலம் புகழ "ஆயுள் முதல்வன்" வாழ்வான் !!வாழ்வான் !!
எங்கள் "முதல்வன்" என்றும் வாழ்க!!
நடக்கும் நாயகன் நலமுடன் வாழ்க!!
முத்தான மு. க. சத்தான காவியம்!!
மக்கள் மனதில் நீங்கா ஓவியம்!!
ஆயிரம் தலைமுறை வாழ்த்தும்!!! வணங்கும் !!
கருணாநிதி!! இல்லை இல்லை !! " கருணா நதி !!
கங்கை என வற்றாது....அவன் புகழே!!


முச்சங்காய் இக்கவிதை மூன்று பகுதிகளாக இங்கே பரிணமித்ததன் காரணம்:

முதற்சங்கம் அமுதூட்டும்; மொய்க்குழலார் ஆசை
நடுச்சங்கம் நல்விலங்கு பூட்டும்; கடைச்சங்கம்
ஆம்போ ததுஊதும்; அம்மட்டோ? இம்மட்டோ?
நாம்பூமி வாழ்ந்த நலம்!

- பட்டினத்தார்

நன்றி: எழுதத் தூண்டிய திரு.சசி கலா அவர்களுக்கும், ஆர்குட் தமிழ் குழுமத்திற்கும்
http://www.orkut.co.in/Main#CommMsgs?cmm=8383044&tid=5521034039879975108


***


தங்கத் தமிழ் மன்னவனை
     தரணி போற்றும் மும்முடியை
தஞ்சையிலே கோயில் செய்த
     சிங்கமந்த ராஜ ராஜனை
மங்கு புகழ் செய்ய
     மானிலத்தில் யாரும் உண்டோ?
ஆயிரம் ஆண்டு கண்டால்
      யாருந்தான் விழா எடுப்பார்!

பொங்கு தமிழ் மக்களிடம்
     பொய் வேடம் போட்டாலும்
அந்த அந்த வேளையிலே
     அரசாங்கம் விழா எடுக்கும்!
எங்கும் நடப்பது தான்
      இதிலென்ன பெருஞ் சிறப்பு?
எந்த அரசாய் இருந்தாலும்
      இந்த விழா எடுக்காதா?

சிங்களம் வென்று நின்ற
     செந்தமிழர் நம் மண்டலம்
இன்று கண்ணீரைச் சிந்த
     இறையாண்மை பேசி விட்டு
தம்புகழ் தேடி நின்றால்
     மங்களம் தான் பாடோமா?
பங்கம் இங்குச் செய்தாரை
      சங்கு கொண்டே ஊதோமா?


வாயுரை வாழ்த்த வந்த
      வள்ளலார் கவிமார் எல்லாம்
தாயினை வாழ்த்தி நிற்பார்
      தமிழினை வாழ்த்தி நிற்பார்
ஆவுடை கோயில் கண்ட
      அரசனை வாழ்த்தி நிற்பார்
நாவுடைக் கயவர் தானே
      நச்சினைப் பேணி நிற்பார்!!!

ஆயிரம் ஆண்டு கண்டது
      ஆவுடையார் கோயில் ஐயா
பாயிரம் யாருக்கு இங்கே?
      பஜனைகள் யாருக்கு இங்கே?
தாயகம் வாழ வைத்த
      தஞ்சை மன்னன் எங்கே?
நோயிலும் தற்புகழ் தேடும்
      தன்னல நெஞ்சம் எங்கே?

ஆயிரமாம் வருட விழா
      ஆனந்தமாய்ப் பங்கு கொள்ள
வாய்த்ததே வாய்ப்பு என்று
      வணங்குதல் பணிவின் மாண்பு!
வாய்ப்பிலே வந்ததற்கு எல்லாம்
      வாழ்த்துரை தேடித் தேடி
பாயினைப் பிராண்டி நின்றால்
      பாடாரோ கடைசிச் சங்கு?


ஆருரார் இசைச் சங்கமமாய்
      ஆடல் வல்லானுக்கும் இங்கே
ஆயிரம் நாட்டியக் கலைஞர்
      ஆடியமை வாழ்த்தவே வேண்டும்!
சாதனை செய்த புதல்வி
      சத்தியமாய் பத்மா இங்கே!
ஆவன செய்தல் வேண்டும்
      அவருக்கும் கல்லில் எழுத்து!

தேவனைப் பாடிப் பாடிப்
      திசையெலாம் இறை முழக்கம்
பாவனை காட்டிக் காட்டிப்
      பாவையர் செய்த நடனம்
சாவதே இல்லை தமிழில்
      சங்கங்கள் என்றுமே உண்டு
ஆவுடையான் அருளே எங்கும்
      அருந்தமிழருக்கு நிற்க என்றும்!

ஆலயச் சங்கமம் என்றும்
      அருளினை வளர்த்தல் வேண்டும்
ஆணவம் அழிந்து ஒழிந்து
      அடக்கந்தான் மலர வேண்டும்
மானுடம் பெருகி நின்று
      மனிதர்கள் சிறக்க வேண்டும்
தானெனும் அகந்தை அழியச்
      சங்கொலியே முழங்க வேண்டும்!!!

***

Friday, September 24, 2010

உயர்வுள்ளல்...

உயர்வுள்ளல்...


கவிதைப் பின்புலம்:

மூலிகை பெட்ரோல் புகழ் ராமர் பிள்ளை, இந்த முறை கடல் நீரை பெட்ரோலாக்கி காட்டப் போவதாக சவால் விட்டுள்ளார். அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியன்று சென்னையில் 1 லட்சம் லிட்டர் கடல் நீரை எரிபொருளாக்கிக் காட்டப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

உண்மையில் கடல் நீரால் பெட்ரோல் செய்து காட்டி விட்டால் மாபெரும் மேதை என ஒத்துக் கொண்டு நாமும் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம் தானே. என்ன சொல்கிறீர்கள்?
.

நன்றிகள்: http://narumugai.com/?p=13088

***


கடல் நீரில் குடி நீர்
கண்டு விட்டது உலகம்;..
கடல் நீரில் எரி பொருளா?
கதையா? நிஜமா?
இராமர் பிள்ளை
நம்பிக்கை இராமரா?
கொறிக்கும் அணிலா?
பொறுத்திருந்து பார்ப்போம்?

வெற்றி பெற்றுவிட்டால்...
தமிழகத்தில் ஒவ்வொரு
நகர ஊருக்கும்
தினம் தினம்
விமானச் சேவை
ஓட்டலாம் தான்....

வண்டி மாடுகளுக்கு
கண்டிப்பாய் விடுதலை...
இழுப்பு உழவென
பெட்ரோலிலே விவசாயம்...
சென்னைத் துறைமுகமே
எண்ணைத் துறைமுகமாய்...

அமெரிக்கர்களுக்கு தமிழகத்தில்
அளிப்போம் வேலைவாய்ப்பு...
இந்தியன் விசாவிலை
அயல்நாடுகளில் அதிகரிப்பு!
கருநாடகா காவேரி
கூவத்திலே கூட்டணி!!!
அடடா அடடா
கற்பனைக்கேது எல்லை?

உள்ளுவதெல்லாம் உயர்
உள்ளல் வேறல்ல!
நடப்பவை எல்லாம்
நல்லதாக நடக்கட்டும்!!
நல்லதே நடக்கட்டும்!
ஆல் தி பெஸ்ட்
இராமர் பிள்ளை!

***

சரியான மூக்குடைப்பு?

சரியான மூக்குடைப்பு?


கவிதைப் பின்புலம்:

இன்றையச் செய்தி: மகாபலிபுரத்தில் மாமல்லன் சிலை உடைப்பு
மகாபலிபுரம்: மகாபலிபுரத்தில் மாமல்லன் சிலை உடைக்கப்பட்டதைக் கண்டித்து எம்எல்ஏ தலைமையில் பாமககவினர் போராட்டம் நடத்தினர். திருக்கழுக்குன்றத்தில் பஸ்கள் மீது கல்வீச்சும் நடந்தது. மகாபலிபுரம் பைபாஸ் ரோட்டில் மாமல்லன் சிலை உள்ளது. இந்த சிலையை யாரோ உடைத்துள்ளனர்.
மேலும் வன்னியர் சங்க கல்வெட்டு மற்றும் பாமக கொடிக் கம்பத்தையும் சேதப்படுத்தியுள்ளனர்.
இதையடுத்து இன்று காலை செங்கல்பட்டு எம்.எல்.ஏ. திருக்கச்சூர் ஆறுமுகம் தலைமையில் பாமகவினர் மகாபலிபுரத்தில் குவிந்தனர்.
ஆர்ப்பாட்டம் நடத்திய அவர்கள் பின்னர் மறியலிலும் ஈடுபட்டனர். சிலையை உடைத்தவர்களை கைது செய்யக் கோரி கோஷமிட்டனர்.
இந்தப் போராட்டத்தால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியதால் போலீசார் குவிக்கப்பட்டனர்.
சிலை உடைப்பைக் கண்டித்து திருக்கழுக்குன்றத்தில் 2 பஸ்கள் கல்வீசி உடைக்கப்பட்டன. இதையடுத்து அங்கு கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

http://thatstamil.oneindia.in/news/2010/09/22/mamallan-statue-damaged-mahabalipuram.html

***


சிலை உடைப்பைக் கண்டித்து பேருந்து உடைப்பா?
பேருந்து உடைப்பைக் கண்டித்து எதை உடைக்கலாம்?
உடைப்போர் மண்டைகளையா? கைகளையா? முதுகெலும்பையா?
உடைக்க வேண்டிய வருணமும், ஜாதியும், மதமும்
உடைபட்ட சிலைகளின் இடை வெளிகளிலும் கூட
எகத்தாளமாய்த்தான் இன்னமும் கை கொட்டிச் சிரிக்கிறது!!!
உணர்வற்ற உள்ளங்களினால் உடைபட்டுக் கிடக்கிறது உலகம்....
மமதையுற்ற நெஞ்சுக்களில் மங்கிக் கிடக்கிறது ஒளி...
உண்மையான விடிவு எற்றைக்கு எம் மனிதர்காள்?

***

Saturday, September 11, 2010

மாகவி பாரதி நினைவஞ்சலி

மாகவி பாரதி நினைவஞ்சலி

கவிதைப் பின்புலம்:

மகாகவிக்கு இன்று நினைவு நாள். இதற்கு இன்று ஆர்குட் தமிழ் குடும்பம் என்னும் குழுவில் வெளிவந்த 1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் "என் கணவர்" என்ற தலைப்பில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரையின் ஒரு பகுதி:

ஊருக்குப் பெருமை என் வாழ்வு. வையகத்தார் கொண்டாட வாழவேண்டும் என்ற என் கனவு ஓரளவு பலித்ததென்னவோ உண்மைதான். இன்று என் கணவரின் புகழ் விண்முட்டிச் செல்கிறது. இன்று மகாகவியின் மனைவியாகப் போற்றப்படும் நான் அன்று பைத்தியக்காரன் மனைவியென்று பலராலும் ஏசப்பட்டேன்... விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம். உலகத்தோடொட்டி வாழ வகை அறியாத கணவருடன் அமர வாழ்வு வாழ்ந்தேன் என்றால் உங்களுக்குச் சிரிப்பாகத்தான் இருக்கும். யாருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் வாய்க்கலாம். ஆனால் கவிஞன் மனைவியாயிருப்பது கஷ்டம்.

கவிஞர்கள் போக்கே ஒரு தனி. உண்பதிலும் உறங்குவதிலும் கூட சாதாரண மனிதரைப்போல் அவர்கள் இருப்பதில்லை. கற்பனைச் சிறகு விரித்துக் கவிதை வானில் வட்டமிடும் பறவை, பூலோகத்திலே இருண்ட வீட்டிலே மனைவிக்கும் மற்றவருக்கும் சம்பாத்தியம் செய்துபோட்டு, சாதாரண வாழ்க்கை வாழ முடியுமா?
வறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை; ஆனால் வயிற்றுக்குணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டி வருகிறது. காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவேயின்றிக் காலம் கழித்தானேயானால், என்ன செய்ய முடியும்?

கவிஞன் விசித்திரமான தன்மை நிறைந்தவன்; அவனுக்கு எதுவும் பெரிதில்லை. ஆனால் கவலை நிறைந்த வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்று எந்தப் பெண்தான் நினைக்க முடியும்? சிறு வயதில் ஆசாபாசங்களும் அபிலாஷைகளும் ஒவ்வொரு பெண்ணின் மனத்திலும் நிறைந்திருப்பது இயற்கைதானே? சுகமாக வாழுவதற்கு சொர்க்கலோகம் சென்றால்தான் முடியும் என்ற நிலை கவிஞன் மனைவிக்கு ஏற்பட்டு விடுகிறது. அந்த நாளிளிருந்த சத்திமுத்தப் புலவரின் மனைவியிடமிருந்து இன்று என்வரை சுகவாழ்வு ஒரே விதமாகத்தான் அமைந்திருக்கிறது. ஏகாந்தத்தில் அமர்ந்துவிட்டால் முனிவரும்கூட அவரிடம் பிச்சைதான் வாங்கவேண்டும். ஆனால் மனைத் தலைவியாகிய நான் அவ்வாறு நிஷ்டையிடமிருக்க முடியுமா?

செல்லம்மாள் பாரதியின் உரையினை அங்கு வழங்கியமைக்கு மிக்க நன்றி. நடைமுறை வாழ்க்கையில் அவர் கூற்றின் ஒவ்வொரு வார்த்தையும் மாற்ற முடியாத உண்மையென்பதால் மிகவும் வலிக்கிறது. இருப்பினும் இவையெல்லாம் மாகவியை உண்டாக்கவே ஏற்பட்ட இயற்கையின் விதியெனக் கொள்வோம்.

இதைப் படித்தவுடனே என்னிடம் ஏற்பட்ட உணர்வையே, செல்லம்மாவிற்குப் பதிலாய், பாரதிக்கு அஞ்சலியாக இங்கே சமர்ப்பிக்கின்றேன்.

திருமதி. செல்லம்மாள் பாரதியின் உரையினை ஆர்குட் தமிழ்க் குடும்பம் குழுமத்தில் பதிப்பித்த திரு. சிவா ரஞ்சன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

மாகவி பாரதி நினைவஞ்சலி

மா கவியாய்ப் பிறந்திடவே
     மாதவம் செய்திடல் வேண்டுமம்மா...
மாண்பொடு வாழ்வினைக் கவிபடைக்க
     மனைவியும் பிள்ளையும் வேண்டுமம்மா...
இல்லறம் என்பதை அறியாதே
     ஏட்டிலே கவிதை தேறாதே!
ஊழ்வினை என்பது வலிதானோ
     உலகம் புகழும் இன்னாளும்?

நடைமுறைச் சந்தையில் உழல்வதற்கே
     நல்லதோர் கணவரும் வேண்டுமென்றால்....
தலைமுறை தாண்டி நிற்பதற்கோர்
     தன்னிலை மறத்தல் நியாயமம்மா!
அற்புதக் கவிதைகள் பிறந்திடவே
     அடிமைத் தளைகள் எரிந்திடவே
அக்கினிக் குஞ்சொன்று பிறந்ததம்மா
     அனைத்தையும் தாண்டி நிறைந்ததம்மா!

இல்லாளின் இல்லாமை அறியாதே
     இடர்படும் இல்லாருக்கு அழுததம்மா...
நல்லதோர் வீணையாய் நலத்துடனே
     நாளும் புழுதியில் உழன்றதம்மா...
புத்தியில் சுடரென உய்வதற்க்கே
     பித்தனைப் போலவும் திகழ்ந்ததம்மா...
எத்தனை கோடி இன்பமென்றே
     இலக்கிய உலகினில் மிதந்ததம்மா....

செல்லம்மாள் நின்றன் துணையாலே
     சிந்தனை வெளிதனில் பறந்ததம்மா
கண்ணம்மா என்றொரு கனவுலகில்
     கவிதை கொஞ்சிக் களித்ததம்மா...
அன்னைத் தமிழின் அருள்முன்னே
     ஆசை, அபிலாசை சரியாமோ?
செல்வம் என்பது பொருளாமோ?
     இன்பம் என்பது இருளாமோ?

பசியிலும் கவிதை தந்தானே....
     பழையன கழித்து நின்றானே...
பொய்யினைச் சாடி உடைத்தானே...
     புதியன தேடிப் படைத்தானே...
செந்தமிழ் நாடெனக் கண்டானே...
     தேன்சுவைப் பாடலைச் சொன்னானே....
வானகம் ஏகி மறைந்தாலும்...
     வையகம் போற்றிட நின்றானே....

பாரதி என்றும் வாழுகின்றான்...
     பாரினில் ஒளியாய் வாழுகின்றான்...
தமிழர் நெஞ்சில் வாழுகின்றான்...
     தாரணி எங்கும் வாழுகின்றான்...
அன்புத் தமிழால் வாழுகின்றான்....
     அழியாப் புகழால் வாழுகின்றான்....
இன்பச் சுவையாய் வாழுகின்றான்...
     இசையாய்ப் பொருளாய் வாழுகின்றான்...!

வாழட்டும் பாரதி என்றென்றும் ...
     வளரட்டும் அவன்புகழ் எங்கெங்கும்!!!!

***