Monday, October 11, 2010

மரண சாசனம்...

மரண சாசனம்...

கவிதைப் பின்புலம்:
'இன்பம் 50’ கவிதையில்

“இறுதியில்
இரணமே இல்லாத மரணமே இன்பம்;
உறுதியாய்
மரணம் ஒன்றே மாறாப் பேரின்பம்;”


என்று முடித்திருந்தேன். இதற்கு கீழ்க்கண்ட பின்னூட்டங்கள் வந்தன:

நண்பர் krshi:
மரணம் ஒன்றே மாறாப் பேரின்பம்;???????????????
மரித்தபிறகு என்னவென்று அறிய முடியா ஒரு நிலை,
அது இன்பம் எப்படியாகும்? உறுதியில்லா வாய்மொழி!


எனது பதில்:
@krshi
அதாவது முதல் வரி, ரணமே இல்லாத மரணமே இன்பம்; ஆதலினால் இரண்டாவது அல்லது இறுதி வரி: அத்தகைய மரணத்தால் வரும் இறுதி இன்பமே மாறாப் பேரின்பம். ஏன்
என்றால் அதுவே இறுதி என்பதால் மாறாது என்பதில் உறுதி! வேறொன்றும் இல்லை. இப்போது உறுதியான மொழி என்று நம்புவீர்கள் தானே! நன்றி.

மேலும்
தோழி V.Rajalakshmi:
மன்னிக்கவும்!நண்பரே ! மீண்டும் ஏற்றுகொள்ள முடியவில்லை, இரணமே இல்லாத மரணம் இன்பம் ! உண்மை! இது ஒருவிதத்தில் சரி! [*ஒருவிதம் மட்டும்*]

நீங்கள் முடிவில் கூறியுள்ள "மரணம் ஒன்றே மாறப் பேரின்பம்" என சொல்லி இருக்கீங்க,
இதுதான் நான் குறிப்பிட்டது! உறுதி இல்லாத வாய்மொழி இது,இன்பம்,துன்பம் என்பது ஒரு உணர்வுதானே!இன்பம் என்பது மனிதர்கள் விரும்புவது,ரசிப்பது அப்படி இருக்க
மரணத்தை இன்பத்துடன் சேர்ப்பது புரியாத புதிர்! கடவுள் நமக்கு கொடுத்த உயிரை இல்லாமல் செய்வது எப்படி இன்பமாகும்?
மரணம் என்பது இறுதி, மாறாத உறுதி! ஒற்றுகொள்கிறேன்!அனால் அதை உணர மரித்த மனிதனுக்கு [அறிய]வாய்ப்பில்லையே!
எனக்கு அத்தனை உள்ளறிவு இல்லை அதனால் இந்த குழப்பம் [மீண்டும் மன்னிக்கவும்]

என்று பதிந்திருக்கிறார்.

இவர்களுக்காக இந்தக் கவிதையால் பதில் சொல்ல முனைந்திருக்கிறேன். கேள்வி கேட்டவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. உங்களது கேள்விகளால் இக்கவிதைக்கு உந்தப்பட்டேன் அதற்காக மீண்டும் நன்றி.

தேவைப்படின் வாதங்கள் தொடரட்டும்; வரவேற்கிறேன். முடிந்தவரை விளக்குகிறேன். நன்றி.

***

மரணம் என்றெனும் தெரியா நிலையே
     மனிதரின் நிலையா வாழ்வினை உரைக்கும்;
மரணம் என்னும் மாறா இறுதியை
     மனதொடு உணர்ந்தால் மானுடம் சிறக்கும்;
தெரியும் தேடலில் கருணையும் நிறையும்;
     தெளிந்த உளத்திடை தெய்வமும் உறையும்;
புரிதலின் விளைவால் வெறுப்புகள் ஒழியும்;
     புத்தியில் பேதங்கள் தயக்கங்கள் அழியும்;
1

பற்றுகள் மறையும்; பக்குவம் விளையும்;
     பதவிச் சுகத்தின் பாசம் அழியும்;
சுற்றம் சொந்தம் பந்தம் விலகும்;
     சோகம் மோகம் யாவும் அகலும்;
அற்ற குளத்து ஆம்பலைப் போலும்
     அன்புடை வாழ்வே நெஞ்சிடை நிலவும்;
உற்ற தெய்வத்து உள்ளொளி நாடி
     உடலும் உளமும் நலத்தொடு உலவும்;
2

பக்தியும் மலரும்; பண்புகள் புலரும்;
     பருவ நாடக மயக்கம் தெளியும்;
சக்தியும் தெரியும்; சகலமும் புரியும்;
     சாந்த நிலைதனில் சலனமும் விலகும்;
அச்சம் மரணம் துச்சம் ஆகும்;
     அழுகை, துயரம் யாவும் தொலையும்;
முக்தி என்னும் முதன்மை இலக்கில்
     முனையும் வாழ்வில் மேன்மையே நல்கும்;
3

பிறந்ததும் அழுதோம்; பேதை நெஞ்சில்;
     இறப்போம் என்பதை எண்ணி நினைந்தா?
பிறப்பின் நோக்கம் இறப்போ என்று
     பிள்ளை மனத்தால் அறிந்தா? உணர்ந்தா?
பிறப்பின் முடிவே இறப்பே என்றால்
     பெற்றயிவ் வாழ்வும் எதற்கே என்றா?
இறப்பினை நோக்கி வளர்வதா என்றா?
     இருப்பின் கணங்கள் குறையுதே என்றா?
4

பிறந்ததும் அழுதால் பெற்றவர் இன்பம்;
     இறந்ததும் அழுதால் இருப்பவர் துன்பம்;
பிறந்ததும் அழுதோம்; பசிக்கா? ருசிக்கா?
     இருந்தும் அழுதோம்; குறையா? பிழையா?
இறந்ததும் அழுதோம் இழப்பா? பிழைப்பா?
     இரக்கம் கருணை எதற்கும் அழுதோம்.;
துறந்ததும் அழுதோம்; தொலைந்ததில் அழுதோம்;
     துரோகம் ரோகம் அனைத்திலும் அழுதோம்;
5

வரவுகள் இழந்து வருந்தும் துயரில்
     வாழ்வில் நழுவும் வளமையில்; வலியில்
உறவுகள் மறைவில் உணர்ச்சிப் பிரிவில்
     உயர்வில் தாழ்வில் ஊமை நட்பில்
குறைகள் அறிந்து குமையும் பொழுதில்
     குன்றிய பெருமையில்; குறையும் அருமையில்
மறைவில் மனதுள் மயங்கியே அழுதோம்;
     மனித வாழ்வில் வேறென்ன கண்டோம்?
6

கண்டவை எல்லாம் மறையும் இன்பம்;
     கருத்திடைக் கனன்ற மாயப் பிம்பம்;
உண்டவை உடுத்தவை உடலொடு முயன்றவை
     வென்றவை சென்றவை விரிந்தவை புரிந்தவை
மண்டல மண்ணிடை மலர்ந்தவை நிகழ்ந்தவை
     மானில மேதினில் வளர்த்தவை சிலிர்த்தவை
அண்டிக் களித்தவை அனைத்தும் அகத்தே
     ஐயம் திரிபிலாச் சிற்றின்பச் சருக்கம்!
7

சலனச் சிறையில் சருக்கும் நினைவில்
     சருகாய் அருகும் அகவை முதிர்வில்
நலத்து நலிவில் நடையின் தளர்வில்
      நல்லவை அல்லவை அறியும் நிலையில்
உலகியல் நடப்பினை ஒதுக்கும் பொழுதில்
     உளத்தே இறப்பை உணரும் நொடியில்
மலங்களைத் துறந்து மயங்கும் தருணம்
     மரணம் வருகையில் வருந்துதல் முறையோ?
8

மறையும் போழ்தும் அழியாத் துடிப்பா?
     மரணப் பிடியிலும் மறையாப் பிடிப்பா?
இறைவன் அழைப்பை மறுக்கும் நடிப்பா?
     இருப்பைப் பெருக்க மறுகும் படிப்பா?
பிறந்தன இறக்கும்; தோன்றின மறையும்;
     பிழையாச் சுழற்சியில் எதுதான் நிலைக்கும்?
அறிந்தன அனைத்தும் அழிதலே உண்மை;
     அழுதால் மட்டும் வாழ்வா பிழைக்கும்?
9

ஆடிய ஆட்டம் போதும் என்றே
     ஆண்டவன் அழைக்கும் வேளை அன்றோ?
தேடலில் உயிரும் தேர்ந்த நிலையில்
     திரும்பா இறுதிப் பயணம் அன்றோ?
படைத்தோன் வகுத்த விதிப்படி முடியும்
     பயிலா நாடக இறுதித் தருணம்;
கடவுளின் மடியில் மீளாத் துயிலாம்;
     கரும்பாய் இனிக்கும் மரணம் அஃதே;
10

உடலும் உயிரும் உறவறு நேரம்
     உதறாப் பற்றால் பயன் என்ன?
விடுதலை உற்று ஏகும் போதும்
     வேதனை கொள்வதில் நலம் என்ன?
நடப்பவை யாவும் நலமென நினைந்தால்
     நாளும் மனதிடைச் சுகம் தானே!
கடப்பவை எல்லாம் கடமையே என்றால்
     கருத்திலும் வருத்தம் இலை தானே!
11

உடலை உயிரும் களையும் நொடியில்
     உணர்வு மறைதல் என்ன நிபந்தனையா?
உலகை விட்டுப் பிரிவது என்பது
     உயிருக்கு வருகிற உயர் தண்டனையா?
மறையும் இறுதித் துளியினில் கூட
     இறையைத் தொழுதால் பலன் தானே;
பிறப்பும் இறப்பும் இல்லா முக்தி
     பெறுவோம் என்றால் சுகம் தானே?
12

ஒருமுறை தானே வருகிற மரணம்
     உளத்தால் நொந்து மடிவதும் ஏன்?
ஒவ்வொரு நாளும் மரண பயத்தால்
     உள்ளே வருந்தித் துடிப்பதும் ஏன்?
இறக்கும் நொடியும் இன்பம் என்றே
     இருந்து விட்டாலே குறை என்ன?
இரணமே இல்லா மரணம் அல்லால்
     இறுதியில் பேரின்பம் வேறு என்ன?
13

தரணியில் இயற்கை மரணம் என்பது
     தானாய் வருகிற இறுதி ஒன்றே;
தருமம் கருமம் என்பது எல்லாம்
     தவமாய் வாழ்ந்து முடிந்த பின்னே;
மறுமைச் சுழற்சி வெல்லும் முக்தி
     மண்ணில் முழுதும் வாழ்ந்த பின்னே;
மரணம் என்பதும் இன்பம் தானே
     மனதுள் தெரியும் உறுதி முன்னே!!!
14

கூட்டினைக் குருவி துறந்திடுங் காலை
     கூறிடும் வாய்பை இழப்ப தினாலே
நாட்டிடை கிடந்து நாறா மெய்யை
     பாடையில் இட்டுப் பயணம் சுமக்கும்
கூட்டினும் பெருக்கினும் வருகிற நாலை
     கூடிக் களித்த கூட்டம் முதலாய்
காட்டிடை எரிக்கும் மானுடம் வரைக்கும்
     கழல்வோம் இன்றே கடைசி நன்றி!!!
15

நன்றி! நன்றி! நன்றி!

***

6 comments:

 1. பிறந்ததும் அழுதோம்; பேதை நெஞ்சில்;
  இறப்போம் என்பதை எண்ணி நினைந்தா?
  பிறப்பின் நோக்கம் இறப்போ என்று
  பிள்ளை மனத்தால் அறிந்தா? உணர்ந்தா?
  பிறப்பின் முடிவே இறப்பே என்றால்
  பெற்றயிவ் வாழ்வும் எதற்கே என்றா?
  இறப்பினை நோக்கி வளர்வதா என்றா?
  இருப்பின் கணங்கள் குறையுதே என்றா?

  மிகவும் ரசித்த வரிகள் ....
  சுந்தர தமிழில் நன்றாக விளையாடி இருக்கீங்க ...
  முற்றும் துறந்த ஒரு துறவி பேசுவது போல....
  இதை படிப்பவர்கள் மரணத்தின் உண்மை அறிந்தும் அறியாதவர் போலதானே நடப்பார்கள் [மன்னிக்கவும்]
  இக்காலத்தில் இந்தமாதிரியான புரிதல் அவசியம் பின்பற்றுபவர் மிக மிக சிலரே !

  ReplyDelete
 2. @V. Rajalakshmi
  உங்களின் கருத்தை வரவேற்கிறேன். முதலில் உங்களின் வருகைக்கும் ரசிப்பிற்கும் நன்றி.

  நிலையாமைத் தத்துவம் என்பது துறவிகளுக்கு மாத்திரமானது அல்ல. அதைப் பற்றிப் புரிதல் ஏற்பட்டால் மனிதருக்கு அதனால் நன்மைகளே என்பதுதான் இங்கு சொல்ல முயற்சித்தேன். சிலருக்கு இப்புரிதல் ஓய்வு கிட்டும்போதும், தோல்வியிலும், துக்கத்திலும், உடல் நலிவின் போதும், மரணத்தைக் காணுறும் போதும் தோன்றி மறையும். ஆனால் அது நிச்சயம் அவர்களின் உள்ளுணர்வைத் தொட்டுச் செல்லும். நல்ல மாட்டிற்கு ஒரு சூடு போதுமே.

  நன்றி.

  ReplyDelete
 3. மரணம் என்பது இயல்பான ஒன்று.
  நாம் அனைவரும் அதற்க்கு கொடுக்கும்
  முக்கியத்துவமே அது நம் எல்லோரையும்
  பயமுறுத்தும் உணர்வாகிவிட்டது.
  மேலும் மரணத்தை தொடர்ந்து செய்யும் ஆர்பாட்டங்களும் சடங்குகளும்
  அதை சார்ந்த நினைவுகளும்
  அதன் அச்சத்தை அதிகபடுத்திவிட்டன
  மரணம் என்பது நம்முடைய உயிர்
  பயன்படாத ஒரு கூட்டை விட்டு
  வேறு கூட்டிற்கு பயணம் செய்யும் நிகழ்வு அவ்வளவுதான்
  அதை உணர்ந்தவர்கள் மரணத்தை பற்றி கவலைபடமாட்டார்கள் என்பதை
  பல சித்தர்களும் மகான்களும்
  நம்மிடையே வாழ்ந்து
  நிரூபித்துள்ளனர்.

  ReplyDelete
 4. உறங்குவது போலும் சாக்காடு
  உறங்கி விழிப்பது போலும் பிறப்பு

  ReplyDelete
 5. try my blog containing my tamil poems (I call them so) and give your valuable feedbacks friends.

  ReplyDelete
 6. the link for my blog is www.kavidhai-pudhidhu.blogspot.in.

  ReplyDelete