Saturday, February 13, 2010

ஆதலினால் வேலை செய்வீர்...

கவிதைப் பின்புலம்:
நான் எதற்காக உழைக்க வேண்டும்!!!
இன்றைய தமிழகம்

ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம்
ஒருவர் கேட்டார் எதற்காக இத்தனை கஷ்டப்படுகிறாய்?
நான் கேட்டேன் கஷ்டப்படாமல் எப்படி வாழ்க்கையை ஓட்ட முடியும்?
அவர் சிரித்தபடி சொன்னார் என்னைப்பார்.
1ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டுவிட்டு உறங்கிடுவேன்.
உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடிடுவேன்
உயர்சிகிச்சை பெற்றிடுவேன் ராஜமரியாதையுடன்!!!
உழைக்காமல் எப்படியப்பா இத்தனையும் முடியும்?
முதலாமவர் கேட்டார் நான் யார் தெரியுமா?
தமிழ்நாட்டுக் குடிமகன்
என் நாட்டில் உணவுக்கு அரிசி 1 ரூபாய்
சமைப்பதற்கு கேஸும் அடுப்பும் இலவசம்.
பொழுது போக்க வண்னத்தொலைக்காட்சி பெட்டி மின்சாரத்துடன் இலவசம்
குடும்பத்துடன் உயிர்காக்கும் உயர் சிகிச்சையும் இலவசம்
எதற்காக உழைக்க வேண்டும்?
நான் கேட்டேன் உன் எதிர்கால சந்ததியின் நிலை என்ன?
பலமாக சிரித்தபடி உரைத்தார்..
மனைவி பிள்ளை பெற்றால் ரூபாய் 5000 இலவசம் சிகிச்சையுடன்,
குழந்தைக்கு சத்துணவு இலவசம் பாலர் பள்ளியில்,
படிப்பு சீருடையுடன், மதிய உணவும் இலவசம் முட்டையுடன்,
பாடப்புத்தகம் இலவசம், படிப்பும் இலவசம்,
பள்ளி செல்ல பஸ் பாசும் இலவசம்
தேவையென்றால் சைக்கிளும் இலவசம்
பெண் பருவமடைந்தால் திருமண உதவித்தொகை 25000 இலவசம்
1 பவுன் தாலியுடன் திருமண செலவும் இலவசம்
தேவையென்றால் மாப்பிள்ளையுடன் பேப்பரில் விளம்பரமும் இலவசம்.
மகள் பிள்ளை பெற்றால் அதே கதை தொடரும் அவள் வாழ்க்கையிலும்...
நான் எதற்காக உழைக்க வேண்டும்!!!

இதை இன்றைய தமிழகம் என்ற தலைப்பில் பதிவிட்டவர்... சச்சிதானந்தன் முருகேசன் அவருக்கு நன்றிகள்..

இதைஓர்குட் தமிழ் குழுமத்தில் பதித்த ஷேர் மார்கெட்டிற்கு நன்றிகள்.

ஆதலினால் வேலை செய்வீர்...


இலவசமாம் இலவசம்; இங்கே
      எல்லாமா சும்மா இலவசம்?
வண்டி ஒண்ணு வெச்சிருந்தா
      பெட்ரோல் போட வேணாமா?
மாமுகிட்டே மாட்டிக் கிட்டா
      மாமூல் கட்ட வேணாமா?
மாலை நேரம் வந்துச்சுண்ணா
      டாஸ்மார்க் போக வேணாமா?

நெஞ்சம்நெறய இழுத்துச் சுவைக்க
      சிகரெட் பீடி வேணாமா?
மஞ்சத்திலே கொஞ்சி மகிழ
      மல்லியப் பூ வேணாமா?
சிரிச்சுப் பேசிப் பொஞ்சாதிக்கு
      அல்வாக் கொடுக்க வேணாமா?
சிவந்து நிண்ணு தூள்கெளப்ப
      கொழுந்து வெத்திலை வேணாமா?

வாய் நெறையும் வெத்திலைக்கு
      சுண்ணாம்பு தான் வேணாமா?
பாலும் தேனும் ஓடினாலும்
      குடிக்கத் தண்ணி வேணாமா?
அரிசிவாங்கி ஒலைய வைக்க
      ஒத்த ரூபா வேணாமா?
பருப்புஎண்ணை மளிகை யின்னு
      பல சரக்கு வேணாமா?

ஊத்திக் கொள்ளத் தயிருமோரு
      ஊறுகா தான் வேணாமா?
வாயுறைக்கத் தொட்டுக் கொள்ள
      காய்கறி தான் வேணாமா?
வேட்டிசட்டை துணி துவைக்க;
      வளர்ந்துவிட்டா முடி செரைக்க;
சீப்புசோப்பு பவுடர் வாங்க;
      காசு பணம் வேணாமா?

பள்ளியிலே பிள்ளை சேர
      சீட்டு ’வாங்க’ வேணாமா?
கல்லூரி வந்து விட்டா
      சீட்டு என்ன சும்மாவா?
படிக்காமல் தேர்ச்சிப் பெற
      பணம் இல்லாமல் ஆகுமா?
பட்டம் ஒண்ணு வாங்கிப்புட்டா
      பட்டது எல்லாம் தீருமா?

படிச்சுருந்தா வேலை மட்டும்
      பறந்து வந்து சேருமா?
கஷ்டப் பட்டுப் படிச்சாலும்
      காசு இல்லாம முடியுமா?
கவெர்மெண்டு வேலை யத்தான்
      ஓசி “வாங்க” முடியுமா?
கடவுளையே கும்பிட் டாலும்
      காசு இல்லாமல் ஆகுமா?

கட்டணம் தான் இல்லாமலே
      பயணம் போக முடியுமா?
காசில்லாமல் போனில் பேசி
      ’ஹலோ’ சொல்ல முடியுமா?
அவசரமா ஒண்ணுக்குப் போக
      அட இலவசமா முடியுமா?
ஆத்திரம் அவசர முன்னா
      அரசாங்கந் தான் கொடுக்குமா?

இலவச வைத்தியந் தான்
      நெசமாச் சும்மாக் கெடைக்குமா?
கட்டையில போனாலும் இங்கே
      காசு இல்லாமால் ஆகுமா?
உத்தரவு இருப்ப தெல்லாம்
      நடை முறையில் ஆகுமா?
ஓட்டு இல்லாதப் பொணத்துக்கு
      உதவ நிதியம் சேருமா?

உயிர்போன உடலை இங்கே
      கண்ணீர் தான் எரிக்குமா?
ஒப்பாரி அழுகை பார்த்து
      உலகம் வந்து பொதைக்குமா?
ஒத்தரூவா வாய்க் கரிசி
      செத்துப் போகப் போதுமா?
செத்துப் போன சான்றிதழ்
      செலவு இல்லாமல் கிட்டுமா?

இலவசத் திட்ட முண்ணா
      தானாச் சும்மா விளையுதா?
இரவல் வாங்கி அரசாங்கம்
      எடுத்துப் பொரட்டித் திரட்டுதா?
வங்கியிலே கடனை வாங்கி
      வட்டி கட்டிக் கொடுக்குதா?
வரிப் பணத்தைக் கூட்டிக்கூட்டி
      குடி மகனைப் படுத்துதா?

மக்களாட்சி நடக்கு துண்ணா
      யாரு வூட்டுத் துட்டுங்கோ?
மக்கள்கிட்டேப் பணம் புடுங்கி
      இலஞ்சம் எனும் பிட்டுங்கோ?
மந்திரிகள் இதுக்கு எதுக்கு?
      பஞ்சா யத்துப் பண்ணவா?
சந்திலேயும் சிந்து பாடிப்
      பங்கு வாங்கித் துண்ணவா?

தேர்தலுக்கு முன்னால் தந்தால்
      ”சொந்தப் பணம்” கையூட்டு
தேர்தலுக்குப் பின்னால் வந்தால்
      ”மக்கள் பணம்” கைநீட்டு
வாக்குறுதி இலஞ்சம் இல்லை
      தேர்தல் ஆணையம் முழிக்குது
வாக்கை ‘வாங்கி’ ஜெயிச்சகட்சி
      பகற் கொள்ளையில் கொழிக்குது!

சட்டத்துலே ஓட்டை யிண்ணு
      முட்டாள் கூடச் சொல்லுவான்
சட்டப்படித் தப்பு இல்லேண்ணா
      அறிஞன் கூடத் திருடுவான்
கொள்ளையிலே பங்கு தந்தா
      கூச்சல் போட யாருங்கோ?
ங்கொப்புரானே சத்தியமா இது
      ஜன நாயக நாடுங்கோ!

மந்திரிமார் வீடு எல்லாம்
      மார்பிளில் தான் இருக்கோணும்
மந்திரியின் மக்கள் எல்லாம்
      வெளி நாட்டில் படிக்கோணும்
சிங்கப்பூர் மாப் பிள்ளையின்னு
      சீர் செனத்தி கொடுக்கோணும்
செல்லமகள் கனி மொழிக்குப்
      பெரும் பதவி வாங்கோணும்

பேரன் பேரில் இன்னுமோர்
      புதிய சானல் துவங்கோணும்
பேத்திக்கும் பதவி வாங்கிப்
      பெருங் கொள்ளை அடிக்கோணும்
தேர்தலுன்னு வந்து விட்டால்
      உறையில் போட்டுக் கொடுக்கோணும்
தேர்தலும் முடிந்து விட்டால்
      தொகுதிப் படையல் வைக்கோணும்

ஆதலினால் வேலை செய்வீர்;
      இந்த அரசாங்கமும் பொழைக்கணும்
மானிடரே உழைப்பீர் நீவிர்;
      நாமும் இங்கே செழிக்கணும்
நாடுனக்குச் செய்யாதது என்ன?
      நன்றி கொண்டு பார்க்கணும்
நல்லபிள்ளை போல நீங்கள்
      நாங்கள் வாழவே உழைக்கணும் !!!

***

ஜெயகாந்தன்...!

ஜெயகாந்தன்...!


அண்மைச் செய்திகள்:
http://vimarisanam.wordpress.com/2009/09/16/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D/
http://www.expressbuzz.com/edition/story.aspx?Title=%u2018Kanimozhi%2c+literary+heir+of+MK%u2019&artid=xy19vXS4sgE%3d&SectionID=lifojHIWDUU%3d&MainSectionID=lifojHIWDUU%3d&SEO=&SectionName=rSY%7c6QYp3kQ%3d/

ஜெயகாந்தன் தர்மம் ஒருவகையென்றால் நமது தர்மத்தை நாம் நிறுத்தலாமா?

ஜெயகாந்தன்...!

மனித நேயம் பேசும்
முரட்டுக் காகிதப் பூ...

அன்புடன் விசாரிக்கும்
மனிதர்களையும்
”எழுத்தாளன் என்ன
வாசகனின் வேலைக்காரனா?”
என அலட்டல் பேசி
வருத்தும் போலி...
மேதாவி...

சமஸ்கிருதத்தையும்
சஹஹிருதயரையும்
கொடிப்பிடித்து
தமிழைப் புறம் தள்ளிப்
பின்னர்
தமிழைத் தவிர
வேறு அறியேன்...
நான் தமிழ்த் துரோகி அல்ல...
என்று
அடிக்கடி அடிசறுக்கி
ஆட்டம் இழக்காத
மத யானை...

’தமிழர்கள் நாய்களைப் போல்
தங்களைத் தாங்களே
நக்கிக் கொள்ளும் இயல்புடையோர்’
எனப் பேசும் அறிவு ஜீவி!
ஆணவத்தையும் அறிவையும்
பின்னங் கால்களுக்கு மத்தியில்
சுருட்டிக் கொண்டு
மறக்காமல்
ஞான பீடத்துக்கும்;
ரொட்டித் துண்டுக்கும்
ஆட்சிக் கும்பலுக்கு
வாலாட்டிக் கால் நக்கும்
நன்றியுள்ள அன்பு ஜீவன்...

எதார்த்தத்தை உண்மையை
நோக்கி இழுக்கத்
தெரிந்த எழுத்திற்கு
நடைமுறையில் நிஜத்தோடு
திகழத் தெரியாத
பித்துக்குளி...

இடுக்குகளில் இன்பம் கண்டு
உடுக்கை இழக்கும் ஏமாளி...
சிங்கமெனத் தன்னைத் தானே
அசிங்கப் படுத்திக் கொள்ளும்
குழப்பக் கோமாளி...

கஞ்சாவில் சுகப்பட்டு
கற்பனை வற்றி
நிறுத்திய எழுத்திற்கு
’வள்ளுவர் 1330க்கு மேல்
ஏன் எழுதவில்லை’ என
யாராவது கேட்டீர்களா?
எனக் குதர்க்கம் பேசும்
ஞான பீடம்...

புனைவுகளில் தொனிக்கும்
இணக்கம்
நனவுகளில்
உரைகளில்
மறந்து
வித்தியாசங்களே
மேதமை எனக்
காட்டும்
வித்தியாச மானுடம்.

நேற்றைய உழைப்பில்
இற்றைக்கும் எற்றைக்கும்
வாழ வேண்டிய
எழுத்து...

தமிழ் ஆத்தாவுக்குக் கஞ்சி
ஊத்தியதாய் எண்ணாத
பணிவு; அடக்கம்.

வாழ்விலும் எழுத்திலும்
எளிமையில்
இன்பம் காணத்
தெரிந்த
உள்ளத்தில் குழந்தை!

மொத்தத்தில்
கவியரசு சொன்ன
தமிழின் முடிசூடா
எற்றைக்கும் இளைக்காத
குழப்பத் திலகம்...
வாழட்டும் பல்லாண்டு!

அவரது
செயல்களின்
எதிர் திசையில் தான்
சரியானவர்கள் அதிகம்
இருந்திருக்கிறார்கள்.

நாளா வட்டத்தில் தான்
அவருக்கு
நியாயங்கள் புரியும்
காலம் கடந்த
காந்தீயம் போல...

இப்போது
கனிமொழிக்குக்
கனிமொழி...
திருவள்ளுவர் வரிசையிலாம்...
ஞானபீடத்தின்
யானை சைஸ்
அல்வா...

வாழ்க அவர் தமிழ்த் தொண்டு!

***

அவமான பூஷணம்...

அவமான பூஷணம்...


பத்ம பூஷணம்
இளம்புயலுக்கு ஓகே

இசை ஞானிக்கும்...
ஓகேதான்...

மெல்லிசை மன்னருக்கு
இல்லியாமா?

ஓ அவரு...
ஜெயராமனுக்கு வாய்ப்புக்
கொடுக்காதவரா...
எம்.ஜி.ஆர். ஆளா?
மலையாளியா?

தெலுங்கனாய்
பிறக்காதது அவரது
குற்றம்தான்...

மூத்த தமிழே
இன்னும் எத்தனை
அவமானங்களை
சுமக்க இருக்கிறாய்?

அடுத்த முறை
மறக்காமல்
டிஆருக்கு ஒண்ணு
கொடுத்திருங்க! [:)]
இல்லேன்னா
அம்மாடி ஏ ஆத்தாடி...
இந்திக்குப் போயிரும்
ஆமா!

(நெசமாலும் கொடுத்தாலும் கொடுத்திரப் போறானுவ...)


***

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு - 2010

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு - 2010 # 1


நெருங்கிக் கொண்டிருக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கான கவிதைகள், கட்டுரைகள் உலா, அந்தாதி, பிரபந்தம், பரணி, கலம்பகம் என என்னென்ன வகை உண்டோ அத்தனை வகைகளிலும் தமிழ்ப் புகழ் பாட வாரீர்.

புதுக்கவிதைகளுக்கும் வரவேற்புண்டு.

முக்கிய நோக்கம் “தமிழுக்கு”ப் புகழ் சேர்ப்பது.

நன்றி.

வேடிக்கைக்கு இப்போது நேரம் இல்லை!!!!

சேதுத் திட்டமா?
காவிரியா? பெரியாறா?
ஒகேனக் கல்லா? குடி நீரா?
காஞ்சிக் கொலை வழக்கா?
சுப்பிரமணிய ஸ்வாமி
முட்டை அடியா?
சட்ட வல்லுனர் காவலர் பிரச்சினையா?
பவர் கட்டா? வேலை வாய்ப்பா?

என்ன சொல்லுகிறீர்கள்?
முத்துக்கே இன்னும்
சொத்துச் சேர்க்க வில்லை;
கனிமொழி இன்னும்
மந்திரி ஆகவில்லை;
ஸ்டாலின் இன்னும்
முழு முதல்
அமைச்சர் ஆகவில்லை;
தமிழகம் இன்னும்
அதிகாரப் பூர்வமாகப்
பிளக்கப் படவில்லை;
அழகிரி செந்தமிழ் நாட்டிலும்
தமிழரசன் கொங்கு நாட்டிலும்
இன்னும்
அரசு அதிபதிகள்
ஆகவில்லை;
உதய நிதிக்கு இன்னும்
வெற்றிப் படம் இல்லை;
தயாநிதி அழகிரிக்கு
தனிச் சானல் இன்னும் இல்லை;

நடிகர்கள் பாராட்டு விழாவும்
உலகத் தமிழ் செம்மொழி மாநாடும்
எலக்‌ஷனும் வேறு
நெருங்கிக் கொண்டிருக்கின்றன...
வேடிக்கைக்கு இப்போது
நேரம் இல்லை...

”பாரத ரத்னா” போஸ்துமஸ் ஆனால்
கூடப்
பரவாயில்லை;
பட்டாப் போட்டு
வைத்து விடலாம்;
நோபலையாவது
எழவு
சாகித்தியத்தையாவது
சீக்கிரம்
கொடுத்துத் தொலையுங்கள்

உலகத் தமிழ் மாநாடு
நெருங்கிக் கொண்டிருக்கிறது
சத்தியமாய்
வேடிக்கைக்கு இப்போது
நேரமே இல்லை...

***


நோபல் டெண்டர். (தமிழக அரசு...)

நோபல் பரிசு
என்ன விலையென்று
சொல்லித் தொலையுங்கள்...

“நான் என்றால் உதடுகள் ஒட்டாது
நாம் என்றால் உதடுகள் ஒட்டும்”
“தமிழ் என்றால் மூன்றெழுத்து;
அண்ணா என்றால் மூன்றெழுத்து;
‘ஆப்பு’ என்றால் மூன்றெழுத்து”
கண்டு பிடிப்பிற்கும்; கருத்திற்கும்

சல்லுசு விலையில்
சாவதற்குள்
சரித்திரம் படைக்க

தமிழ் நாட்டை
அடகு வைத்தாவது
”வாங்கி”க் கொடுக்க
தமிழக அரசு
காத்திருக்கிறது!

திறந்த நிலையிலோ
மூடிய நிலையிலோ
டெண்டர்கள்
வரவேற்கப் படுகின்றன...

***

பரிசு வாங்கலியோ பரிசு...

இந்த வாரக்
குமுதம் விகடன்
கல்கண்டு வாங்கியாச்சா?

அப்புறம் இந்த வருட
பத்மஸ்ரீ, பத்மபூஷண்?
இன்னும் இல்லையா?

அதிகார அகதிகளுக்கு
ஜால்ரா சந்ததி செலுத்தி ஆயிற்றா?
அறிவாலய அறிவிலிக்கு
ஆரத்தி எடுத்தாயிற்றா?
மறக்காமல் திருஷ்டி முறித்தீர்களா?

கவிதையில் பெருசுக்குக்
கால் துடைத்தால்
கவிப்பேரரசு வாங்கலாம்!

முப்பது நாளில் பத்மஸ்ரீ
அன்றில்
அறுபது நாளில் பதமபூஷண்
எப்படி என்று
புத்தகம் எழுதினால் ஒரு வேளை
பாரத் ரத்னா கூட “வாங்கலாம்”!

உலகத் தமிழ் மாநாடு வருகிறது...
உச்சவரம்பில்லாது
உச்ச ஸ்தாயியில்
ராஜ கம்பீரத்தோடு
பொய்ப் புகழாரம் சூட்டி
வெஞ்சாமரம் வீசுங்கள்...

இன்னும் ஏதாவது
எழவுப் பட்டங்களும்
பண முடிச்சுப்
பொட்டலங்களும் பரிசில்களும்
இலவசங்களோடு
ரேஷன் கார்டுக்கு
வழங்கப் படலாம்...

முத்தமிழே என்று மொழிந்து விட்டு
மறக்காமல் எச்சில்
முகத்தைத் துடைத்துக்
கொண்டு
வரிசையில் காத்திருங்கள்...
வெட்கமா?... மானமா?
கிலோ என்ன விலைங்கோ?

***