Saturday, February 13, 2010

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு - 2010

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு - 2010 # 1


நெருங்கிக் கொண்டிருக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கான கவிதைகள், கட்டுரைகள் உலா, அந்தாதி, பிரபந்தம், பரணி, கலம்பகம் என என்னென்ன வகை உண்டோ அத்தனை வகைகளிலும் தமிழ்ப் புகழ் பாட வாரீர்.

புதுக்கவிதைகளுக்கும் வரவேற்புண்டு.

முக்கிய நோக்கம் “தமிழுக்கு”ப் புகழ் சேர்ப்பது.

நன்றி.

வேடிக்கைக்கு இப்போது நேரம் இல்லை!!!!

சேதுத் திட்டமா?
காவிரியா? பெரியாறா?
ஒகேனக் கல்லா? குடி நீரா?
காஞ்சிக் கொலை வழக்கா?
சுப்பிரமணிய ஸ்வாமி
முட்டை அடியா?
சட்ட வல்லுனர் காவலர் பிரச்சினையா?
பவர் கட்டா? வேலை வாய்ப்பா?

என்ன சொல்லுகிறீர்கள்?
முத்துக்கே இன்னும்
சொத்துச் சேர்க்க வில்லை;
கனிமொழி இன்னும்
மந்திரி ஆகவில்லை;
ஸ்டாலின் இன்னும்
முழு முதல்
அமைச்சர் ஆகவில்லை;
தமிழகம் இன்னும்
அதிகாரப் பூர்வமாகப்
பிளக்கப் படவில்லை;
அழகிரி செந்தமிழ் நாட்டிலும்
தமிழரசன் கொங்கு நாட்டிலும்
இன்னும்
அரசு அதிபதிகள்
ஆகவில்லை;
உதய நிதிக்கு இன்னும்
வெற்றிப் படம் இல்லை;
தயாநிதி அழகிரிக்கு
தனிச் சானல் இன்னும் இல்லை;

நடிகர்கள் பாராட்டு விழாவும்
உலகத் தமிழ் செம்மொழி மாநாடும்
எலக்‌ஷனும் வேறு
நெருங்கிக் கொண்டிருக்கின்றன...
வேடிக்கைக்கு இப்போது
நேரம் இல்லை...

”பாரத ரத்னா” போஸ்துமஸ் ஆனால்
கூடப்
பரவாயில்லை;
பட்டாப் போட்டு
வைத்து விடலாம்;
நோபலையாவது
எழவு
சாகித்தியத்தையாவது
சீக்கிரம்
கொடுத்துத் தொலையுங்கள்

உலகத் தமிழ் மாநாடு
நெருங்கிக் கொண்டிருக்கிறது
சத்தியமாய்
வேடிக்கைக்கு இப்போது
நேரமே இல்லை...

***


நோபல் டெண்டர். (தமிழக அரசு...)

நோபல் பரிசு
என்ன விலையென்று
சொல்லித் தொலையுங்கள்...

“நான் என்றால் உதடுகள் ஒட்டாது
நாம் என்றால் உதடுகள் ஒட்டும்”
“தமிழ் என்றால் மூன்றெழுத்து;
அண்ணா என்றால் மூன்றெழுத்து;
‘ஆப்பு’ என்றால் மூன்றெழுத்து”
கண்டு பிடிப்பிற்கும்; கருத்திற்கும்

சல்லுசு விலையில்
சாவதற்குள்
சரித்திரம் படைக்க

தமிழ் நாட்டை
அடகு வைத்தாவது
”வாங்கி”க் கொடுக்க
தமிழக அரசு
காத்திருக்கிறது!

திறந்த நிலையிலோ
மூடிய நிலையிலோ
டெண்டர்கள்
வரவேற்கப் படுகின்றன...

***

பரிசு வாங்கலியோ பரிசு...

இந்த வாரக்
குமுதம் விகடன்
கல்கண்டு வாங்கியாச்சா?

அப்புறம் இந்த வருட
பத்மஸ்ரீ, பத்மபூஷண்?
இன்னும் இல்லையா?

அதிகார அகதிகளுக்கு
ஜால்ரா சந்ததி செலுத்தி ஆயிற்றா?
அறிவாலய அறிவிலிக்கு
ஆரத்தி எடுத்தாயிற்றா?
மறக்காமல் திருஷ்டி முறித்தீர்களா?

கவிதையில் பெருசுக்குக்
கால் துடைத்தால்
கவிப்பேரரசு வாங்கலாம்!

முப்பது நாளில் பத்மஸ்ரீ
அன்றில்
அறுபது நாளில் பதமபூஷண்
எப்படி என்று
புத்தகம் எழுதினால் ஒரு வேளை
பாரத் ரத்னா கூட “வாங்கலாம்”!

உலகத் தமிழ் மாநாடு வருகிறது...
உச்சவரம்பில்லாது
உச்ச ஸ்தாயியில்
ராஜ கம்பீரத்தோடு
பொய்ப் புகழாரம் சூட்டி
வெஞ்சாமரம் வீசுங்கள்...

இன்னும் ஏதாவது
எழவுப் பட்டங்களும்
பண முடிச்சுப்
பொட்டலங்களும் பரிசில்களும்
இலவசங்களோடு
ரேஷன் கார்டுக்கு
வழங்கப் படலாம்...

முத்தமிழே என்று மொழிந்து விட்டு
மறக்காமல் எச்சில்
முகத்தைத் துடைத்துக்
கொண்டு
வரிசையில் காத்திருங்கள்...
வெட்கமா?... மானமா?
கிலோ என்ன விலைங்கோ?

***

No comments:

Post a Comment