ஜெர்மானிய லீப்ஸ்டர் ப்ளாக் விருது
|
| மூலம் எங்கிருந்தோ ஆரம்பிக்கப்பட்டு, இளம் வலைப் பதிவர்களுக்கு வழங்கப்படும் ‘லீப்ஸ்டர்’ எனப்படும் இந்த ஜெர்மானிய விருதினைப் பெற்ற சக பதிவுலகத் தோழி அகிலா (சின்ன சின்ன சிதறல்கள்: http://vannathuli.blogspot.in) அவர்கள், அதனை மேலும் ஐவருக்குப் பரிசளித்துச் சிறப்பித்திருக்கிறார்கள். அதில் நமது ‘தமிழ்க் கவிதைகள்’ பக்கமும் ஒன்று என்பதில் மிக்க மகிழ்ச்சி. எனவே தோழி அகிலா அவர்களுக்கு முதற்கண் பரிசில் பெற்றமைக்குப் பாராட்டுக்களும் அதனை நமக்குப் பகிர்ந்தளித்தமைக்கு நன்றிகளும் உரித்தாகுக. இந்த விருதினை மேலும் ஐவருக்கு அதாவது 200 உறுப்பினர்களுக்குக் குறைவாக உள்ள வலைப்பூக்களுக்கு வழங்க வேண்டுமென்பது விருதின் விதி. ஆதலின் அதன் படியேயும், நமக்குக் கிட்டிய சுழல் பரிசினைப் பிறரோடு பகிர்வதில் உண்மையிலேயே மகிழ்ச்சி கொண்டும், கீழ்க்கண்ட வலைப்பதிவு நண்பர்களுக்கு வழங்கி மகிழ்கின்றேன். அவர்கள் ஒவ்வொருவரும் இவ் விருதின் விதிக்கு ஏற்ப மேலும் ஐந்து இளம் பதிவர்களுக்கு வழங்கிச் சிறப்பிக்கக் கேட்டுக் கொள்கிறேன். விருதினைப் பெறும் நண்பர்கள் மற்றும் அவர்களின் வலைப்பக்கங்கள்: ஜீவி அவர்களின்: பூ வனம் http://jeeveesblog.blogspot.in சந்துரு அவர்களின்: சந்துருவின் வலைப்பூ http://chandroosblog.blogspot.in raajalakshmi அவர்களின்: ரசனைகள் பலவிதம் http://see-think-write.blogspot.in dinesh ram அவர்களின்: இது தமிழ் http://www.ithutamil.com/ கரூர் கிறுக்கன் அவர்களின்: கரூர் கிறுக்கன் http://karurkirukkan.blogspot.in/ நன்றி. - உத்தமபுத்திரா. |
***
|
Monday, February 27, 2012
ஜெர்மானிய லீப்ஸ்டர் ப்ளாக் விருது (LIEBSTER BLOG AWARD)
Labels:
Liebster Award,
அங்கீகாரம்,
லீப்ஸ்டர் விருது
Tuesday, June 7, 2011
அன்னையர் அந்தாதி (பகுதி: 3)
|
அன்னையர் அந்தாதி
(பகுதி: 3)
|
|---|
|
2. திருமகள் அந்தாதி
|
|
இறை வணக்கம்:
மாதவன் மனத்திரு மங்கையேநின தருளன்றி யாதவம் வளமீயும் பூதலத்தே? - ஆதலுமாயுன் திருவடிக்கே சரணானோம் திருமகளே எமக்கென்றும் பெருநிதியப் பொருளாய்ப் பொழி. |
| அந்தாதிக் கட்டளை: செங்கமல அலர்மேல் செவ்விதழ் நறுமலராய் செங்கண் மாலரங்கச் செம்மனத் திருமடந்தாய் பிங்கலக் கைமாற்றில் பெருஞ்சிகை நெடியோன் சங்கமத் தாய்வைத்த செல்வத்திரு உறுபொருளே! உலகியலாய் உலகப்பருப் பொருண்மை உடைமையுமாய் கலவியலால் காதற்காமம் களிக்குமுயர் நனியுணர்வாய் நலமிகுக்கும் சம்பத்துமாய் நற்கதிதருஞ் சந்ததியுமாய் இலக்காயுறு நல்வரத்தாய் இலங்குமின்பத் திருமகளே! |
|
அந்தாதி:
1. அலர்மேல் மங்கையே அழகுநல் புவிமகள்!
செங்கமல(ச்)
செழுமலரில் சீர்மல்கி
வாசஞ்செய் செம்பொருட் தங்கமலர் தாரணியாய் தாயுமாய் தாரகையாய் தாமரைக்கண் அங்கமுடை அம்போதி அத்தனவன் அகமலராய் அமர்ந்தேகி அங்கையில் அகமிளகி பெரும்பேறு அருள்நல்கும் அலர்மேலே! (தாரணி = நிலமகள்; தாரகை = நட்சத்திரம்; அம்போதி = கடல்; அத்தன் = தந்தை, உயர்ந்தோன்; அங்கை = உள்ளங்கை) 2. அலைமகள் நங்கையே அன்னைத் திருமகள்! அலர்மேல் அமர்அருள் அலைமகள் அன்னையாய் அகிலத்து மலர்மேல் எலாம்வள நலம்பொலி நாயாகியாய் வையத்து நிலம்பால் வைதேகியாய் பைந்தமிழ் பாச்சூடியாய் நித்திலத்து சிலம்பால் சிந்தாமணி நகையேநின் திருவாய்ச் செவ்விதழே! (பொலி = பொலிகின்ற; நித்திலம் = முத்து; சிலம்பு = ஒலி, எதிரொலி)
3. ஆழியிலே வந்துதித்த அற்புதமே அலைமகள்!
செவ்விதழ் சேயிழையாய் பாலாழி திரளமுதச் செல்வியுனை செவ்வியத் தனபதிபால் கடனாகித் திருமணித்த செவ்வாயன் அவ்விதமே காத்துநின்றே காலமெலாங் கழிப்பதுவோ அக்கடன்? நவ்விநினது நாரணன்பால் நற்கருணை நவில்வாயே நறுமலரே! (சேயிழை = அழகான அணிகளுடைய பெண்; பாலாழி = பால் ஆழி, செவ்விய = சிறந்த, உயர்ந்த, முறையான, நேர்மையான; தனபதி = குபேரன், செவ்வாயன் = திருமால், நவ்வி = பெண்மான், அழகு, மான்குட்டி; நவில் = சொல், செய், மிகு, கருது, எண்ணு;)
4. ஆவினம் பால்சொரிய அமுதமாகுந் தலைமகள்!
நறுமலராய் ஐம்பூதத்து பருப்பொருள் ஐம்பொறி நடைக்கூட மறுமலராய் அந்தரங்கக் கருப்பொருள் அகப்பை மனமடலாய் உறுமலராய் ஐயிந்திரிய தன்மாத்திரை ஐவுடம்பு உடனுறைச் செறுமலராய் ஏழ்தாது பிரபஞ்சவளர் பதிநாடிச் செங்கண்ணே! (ஐம்பூதம் = பஞ்சபூதம் = நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்; ஐம்பொறி = மெய், வாய், கண், மூக்கு, செவி; அகப்பை = அகமாகிய பை = அகப்பசுமை, அகக் கொள்கலன் ; நடைக்கூடம் = உடல்; மனமடல் = மனக்கலம்; ஐயிந்திரியம் = பஞ்சகர்மேந்திரியங்கள் = வாய், கை, கால், மலவாய்(குதம்), கருவாய் (சொல்லல், நடத்தல், ஏற்றல், கொடுத்தல், விடுதல்); தன்மாத்திரை = சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்; ஐங்கோசம் = ஐவுடம்புகள் = பஞ்சகோசங்கள் = உணவுடம்பு/பருவுடம்பு, காற்றுடம்பு, மனவுடம்பு, அறிவுடம்பு, இன்ப உடம்பு (அன்னமய, பிராணமய, மனோமய, விஞ்ஞானமய, ஆனந்தமய கோசங்கள்); ஏழ்தாது = இரசம், இரத்தம், மாமிசம், மேதஸ், மச்சை, வெண்ணீர். (உதிரம்./குருதி, ஊன், கொழுப்பு, எலும்பு, மூளை, இன்பச் சுரப்பு); பதிநாடி = தசநாடி = உடலில் உயிர்க்காற்று இயங்கும் பத்து நாடிகள்; செங்கண் = அக்னி கண்கள்;)
5. இலக்குமித் தாயேநல் இதயத்திரு பெருமகள்!
செங்கண் இயற்கை செயற்கை மாயையாய் செழுமதியாய் எங்கண் அஞ்ஞான அகத்துணர் இன்பதுன்ப பிரமையாய் அங்கண் விளையும் அறிவொளி விளக்கத்து அகிலமாய் வங்கண் யாங்கிலும் இலங்கும் இலக்குமி மாலரங்கமே! (வங்கு = வளை, துவாரம், குகை)
6. இலங்கிடும் யாதிலும் இன்பநிலை தருமகள்!
மாலரங்கச் சீதனமே! மண்ணகத்து மாற்றா மாற்றமாய் பாலரங்கத் தயிர்மோர் வெண்ணை நறுநெய் பாங்குறை வாலரங்கப் பருவவிதி வளமுடை மாற்றாய் வளர்நிறை சாலரங்கப் பெருநிதியச் சாதனமாய் செழிக்குஞ் செம்மனமே! (பாங்குறை = பாங்கிலுறை; வால் = தூய்மை, உயர்வு; சால் = நிறைவு, ஏற்றம்)
7. ஈட்டமாய் வளநலத்தை ஈண்டுதரும் நிறைமகள்!
செம்மனத் துறமொடு செழுநல் இலக்கொடு செய்வினை எம்மனங் கருத்தொடு இயங்குமோ ஆங்கண் இலங்கியும் கம்மனத் திறத்தொடு நற்கருமம் ஆற்றுமக் கடமையவர் தம்மனத் திருவாய் வருவாய் தருவாய் திருமடந்தே! (கம் = செயல், பணி, தொழில்; வருவாய் = வரத்து; மடந்தை = பெண்)
8. ஈன்றவற்கே யாங்கனமும் மீண்டுவரும் மறைமகள்!
திருமடந்தாய் அரவாதே அறிவாழ்வார் ஆழ்ந்தமனத் திருவிடத்துக் கருமடந்தாய் கரவாதே கருமவினை ஆன்றவர்பால் கருணைவளம் தருமடந்தாய் இரவாதே இருந்தாலும் இரங்கிநலம் தந்தவர்பால் பெருமடந்தாய் குறையாதே பன்மடங்கில் ஈந்தருளும் பிங்கலனே! (அரவு = ஓசை; கரவு = மறை, பொய், வஞ்சனை; இரவு = யாசித்தல்; இரங்கு = இரக்கப்படு, கருணைகொள்; பின் கலனே = பின்புலப் பாத்திரமே)
9. உலகத்தின் திருவாகி
உள்ளமதில் உறைமகள்!
பிங்கலக் கருணையே! பொருளன்றி பெருநிலத்தே பயனில்லையால் நங்கலப் பொருளிலாரை இல்லாரும் ஈந்தாருமே நயந்திலார்போல் மங்கலப் பொருளுயிரை மாய்க்காதே நம்பிக்கை மனவளத்தால் கங்கனங் கொண்டிலங்கி உலகூட்டிப் பரிமாறும் கைமாறே! (பிங்கலன் = குபேரன்; பெருநிலம் = பூமி, நங்கலம் = நன் கலம்; இல்லாரும் = மனையவரும்; ஈந்தாரும் = பெற்றவரும்; கங்கு = தணல், நெருப்பு; கனம் = உறுதி; பரிமாறும் = பரிமாற்றமாகும்; கைமாறு = பரிவர்த்தனை, நன்றி)
10. உணர்வாகி மலராகி உயர்வாகும் இறைமகள்!
கைமாற்றில் அறனீட்டம் கைவளமாய் நிலைநலக் களமீயும் வைமாற்றில் அதனீட்டங் கைத்துதவப் பெருக்காகி வளமீயும் மைமாற்றில் அதனாட்டம் வைத்தவுறு நஞ்சாகும் நலந்தேயும் பைமாற்றில் பலனீட்டம் கைமாற்றும் பஞ்சமும் பெருஞ்சிகையே! (கைமாற்றில் = பொருள் மாற்றில், கைவளம் = செழிப்பு; நன்றியில்; வைமாற்றில் = இடுநிலையில், வைப்பில்; கைத்து = செல்வம்; மைமாற்றில் = (உதவா) வண்ணம் மாற்றிவிடில்; நைத்த = இற்று, வருத்தி; பை = பசுமை, இளமை; கைமாற்று = கடன்; பஞ்சம் = வறட்சி; சிகை = கடனுக்கான வட்டி)
11. ஊனாகித் தேனாகி ஊஞ்சலாடும் நறுமகள்!
பெருஞ்சிகை(ப்) பெய்வளையே! பெருநிதியம் பெறுனர்பால் பெரும்பலந் தருஞ்சிகை அகநெய்வார் தகைப்பேணி முனைவர்பால் தனமளக்கும் அருஞ்சிகை அளவறிந்து செயலாக்கும் அனைவர்பால் அமுதளிக்கும் நெருஞ்சிகை நெய்வாச நறுமதிநின் நெஞ்சின்பால் நெடியோனே! (பெருஞ்சிகை = நீள் தலைமுடி; பெய்வளை = பெண்; தருஞ்சிகை = தரும் தீக்கொழுந்து; நெய்வார் = நெய்தல், வார்த்தல், வளர்த்தல்; தகை = திரண்டு, அணுகி ; பேணு = போற்று, கவனி, ஆதரி, பராமரி, மதி; அருஞ்சிகை = அரிதாய் மிஞ்சியதை; நெருஞ்சிகை = நெருக்கமான முடி, நெருங்கிய பந்தம், நெருக்கமான பிணைப்பு; நறுமதி = இனிய மதி; நெடியோன் = நெடி நின்ற மால்; நெடி = காலம் நீட்டி)
12. ஊழ்வினைப் பொருளாகி ஊடலாகும் உறுமகள்!
நெடியோன் பெருமால் நெடுநல் அணங்காய் நின்மலர் மடிமேல் இருத்தியும் வறுமையில் உழலவும் உன்பதம் படியோர் வருந்தாமற் பல்வளம் கொழுகவும் பொருந்தாத் துடியிடை பொருந்தலும் அவரவர் தொல்வினைச் சங்கமமே! (அணங்கு = தெய்வப்பெண்; துடி= விரைவு, கணம், காலநுட்பம்; இடை = இடையில், நேரம்; துடியிடை = நொடிப்போழ்தில் ; தொல்வினை = பழவினை; சங்கமம் = கலத்தல்)
13. எளிமையும் வலிமையென எழுச்சிதருந் தாயவள்!
சங்கமத் திரட்டும் தாபரமும் நங்கையிற் சார்மையும் வெங்கம் கையறவு களையுங் கொடைதரு வினைக்கே பொங்கும் வல்நிதியம் நற்பணியும் எளிமையும் புரிவர்பால் தங்கமுதப் பெருநிதியே தளைக்கும் புண்ணியத் தாய்வைத்தே! (சங்கமம் = அசையும் சொத்து; தாபரம் = நிலைப்பேறு, அசையாச் சொத்து; நங்கையிற் = நற் கையில்; சார்மையும் = சார்தலும்; வெங்கம் = மிகுந்த வறுமை; கையறவு = வருந்திச் செயலற்ற நிலை, ஏழ்மை; புண்ணியத் தாய்வைத்தே = புண்ணியத்தால் வைத்தே (வைப்பு நிதியாய்), புண்ணியத் தாய் வைற்றிலே, புண்ணியக் காரணத்திற்காகவே;)
14. எதிர்பாரா யோகமாகி இன்பந்தரும் மாயவள்!
தாய்வைத்த பெருநிதியம் தரணிவாழ் நல்வாய்ப்பும் தன்னுள்ளக மாய்வைத்த மாயையும் தேவையும் மிகுதேடலும் மனநிறைவுக் காய்வைத்த எதிர்பாராநல் யோகமும் ஞானமும் கைவளமும் சேய்வைத்த பேரின்பமும் இசைவாகும் நற்பெருஞ் செல்வத்திருவே! (சாய் = கிடத்திவைத்த, நிரூபி, மிகுதியாகக் கொடு, புகழ், நிறம்; கைவளம் = கைவண்ணம், கைராசி, கைப்பொருள்; சேய் = பெருமை, தலைவன்; இசைவு = வசதி, சௌகரியம், வாய்ப்புநலம்;)
15. ஏழ்மை இல்லாமை நீக்கிவிடும் நல்லவள்!
செல்வத்திரு நற்செழுமை அல்லலறு மிகுவின்பம் சேர்ந்திலங்கி இல்லத்திரு இன்மையும் இகழ்ச்சியும் அகற்றும்நல் இயல்பாயின் அல்லல்தரு மதிமயக்கும் அழுக்காறும் அகந்தையும் அதன்விளை மெல்லத்தரு பேராசையும் மறுமைக்கே வித்தாகும் உறுபொருளே! (மறுமை = மறுபிறவி)
16. ஏக்கத்தை இகவாழ்வில் போக்கிவிடும் வல்லவள்!
உறுபொருளே! கற்றார்க்கும் உற்றார்க்கும் மற்றார்க்கும் உய்வுதரும் நறுபொருளே! வையகத்தின் வளத்தையும் வைப்பார்க்கு நலத்தையும் இறுபொருளே! பகுத்தறிவாய் அனைத்திலும் பற்றகற்றும் இறுதிக்கும் வறுபொருளே! உளத்தாசை ஒறுத்தார்க்கே வயமாகும் உலகியலே! (உற்றார் = சிறப்படைந்தோர்; உய்வு = நற்கதி; வைப்பு = வைப்புநிதியம்; வறுபொருள் = வதக்கும், துன்புறுத்தும்; ஒறுத்தல் = அழித்தல்; வயம் = வசம், ஆளுமை, வலிமை, வெற்றி; உலகியல் = உலகநீதி )
17. ஐம்புலனும் துய்த்துணரும் இன்பதுன்ப நலமவள்!
உலகியலாய் ஐம்புலமும் அகப்புறமும் இன்பதுன்பம் உய்த்துணரும் நிலவியலாய் தேவையிறும் பகர்பொருளும் நேசந்தரும் நுகர்பொருளும் அலகியலாய் இலக்கதிலும் அடைதலிலும் அனுபவமாய் அன்றிலறும் விலகியலாய் பெருஞ்சுனைக் களஞ்சியமாய் விளங்குநல் உலகப்பருவே! (அகப்புறமும் = அகமும் புறமும்; நிலவு = வழங்கு, நடப்பு; நேசம் = ஆர்வம், ஆசை; அலகு = அளவுக் கூறு, அடிவிதி; அன்றிலறும் = அன்றில் அறும்; விலகு = ஒதுங்கு, அகலு, நீங்கு; விலகியல் = பற்றற்றவியல்; பரு= உருண்டு திரண்டிரு; திண்ணியது;)
18. ஐசுவரியம் தனமாகும் அனைத்தான வளமவள்!
உலகப்பருப் பொருளாய் பொய்மெய் மாயத்திலும் உணர்விலும் கலகத்திருக் காதலிலும் காமநிறைக் களிப்பிலும் கலப்பிலும் நிலவசத்திரு வனப்பிலும் செல்வநலச் செழிப்பிலும் நேசத்திலும் புலவசத்திரு பற்றலிலும் அற்றலிலும் பொழிந்திடும் பொருண்மையே! (பொய்மெய் = பொய்யும் மெய்யுமான, பொய்யான உடலிலும்; நிலவசத்திரு = நிலத்தின் வசத்திலிருக்கும்; புலவசத்திரு = புலன் வசத்திலிருக்கும்; )
19. ஒன்றிய இலக்குமாகி வெற்றிதரும் இனியவள்!
பொருண்மை ஒருங்கடை இலக்கால் வெல்மடி போற்றலும் அருண்மை வினையிடை திண்மை துணிவொடு ஆற்றலும் மருண்மை தூக்கொடு இருண்மை போக்கலும் மாற்றுமை வெருண்மை நீக்கலும் அன்னை வீரலக்குமி உடைமையே! (பொருண்மை = கருத்துப்பொருள், பருப்பொருள் தன்மை; ஒருங்கடை = ஒருங்கி அடையும் அடைதல்; வெல்மடி = வெற்றி மடியில் அமர்த்துதல்; அருண்மை = கருணை, ஆன்மீகக் கொடை, வழங்குதல், சொல்லுதல், கனிவு; மருண்மை = மயக்கம், கலக்கம், மிரட்சி, வெருவு, வியப்படை; தூக்கொடு = அப்புறப்படுத்தலோடு; மாற்றுமை = மாறுபாடு, அன்னியம்; வெருண்மை = அஞ்சல், மிரளல், கலங்கல்; )
20. ஒருமை
பலவாக்கிப் பெற்றுத்தருங் கனியவள்!
உடைமையுமாய் உயிரெழும் ஈட்டமுமாய் வளம்பொழிவல் ஊட்டமுமாய் நடைமையுமாய் நல்வினை நாட்டமுமாய் நலந்தழைக்கும் நோட்டமுமாய் படைமையுமாய் மாற்றத்தொடர் ஓட்டமுமாய் பருவகால ஆட்டமுமாய் கடைமையுமாய் பெருக்குநல் கூட்டமுமாய் கடைத்தேற்றுவாய் கலவியலாலே! (ஈட்டம் = ஈட்டுதல், சம்பாதித்தல்; நடைமை = நடத்தை; நாட்டம் = விருப்பம்; நோட்டம் = மதிப்பிடுதல்; படைமை = படைத்தல்; ஆட்டமுமாய் = பருவகால (விளை) ஆடல்களாய்; கடைமை = மத்தால் சுழட்டுதல், கடைதல், மிகுதியாக்குதல், சொரிதல், தொடருதல்; கூட்டமுமாய் = கூட்டுதலுமாய், கூடலுமாய், கடைத்தேற்று = ஈடேற்று)
21. ஓயாத அலையாகி ஆசைதரும் அலைமகள்!
கலவியலால் களிப்பாகிக் கசிந்துருகிக் கருவுயிராய்க் கனிவதுமாய் உலவியலால் மூவாசைக் கடலலைப் பெருமுகிலாய் உவப்பதுமாய் நிலவியலால் மும்மலத்து மும்மையுறு காரணியாய் நெஞ்சகத்துக் குலவியலால் சொட்டுமது போகரசங் கொட்டுங்கவி காதற்காமமே! (கலவியல் = கலத்தல், இணைதல், கூடுதல்; உலவியல் = மகிழ்ச்சிநடை, வழங்குநடை; மூவாசை = மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை; உவப்பு = விருப்பு, மகிழ்ச்சி; நிலவியல் = வழக்கியல், நடப்பியல், நிலைத்தலால், விளங்கலில்; மும்மலம் = ஆணவம், கன்மம், மாயைக் கட்டுகள்; மும்மை = உம்மை, இம்மை, மறுமை ஆகிய மூவகை நிலைப்பேறு; குலவியல் = குலவு இயல், குலவு = நெருங்கி உறவாடு, சிறப்படை; சொட்டுமது = சொட்டும் அது; போகம் = இன்பம், செல்வம், விளைச்சல்; ரசம் = சாறு, சுவை, மெய்ப்பாட்டுணர்வு; கவி = விரிந்து பரவு, கருத்தூன்று;)
22. ஓராதே நிலையாகி உய்விக்குந் தலைமகள்!
காதற்காமம் கடைந்தேறக் கருணைவளம் களைநுதலும் காமதேனாய் மாதர்காமம் மடைமாறும் மனையறமும் மயக்கமறும் மங்கலமுமாய் நோதற்காமம் நல்குரவின் இடர்களைந்து நோன்மைநிறை நிலைப்பேறாய் கோதற்காமம் கொழிவிளைக் கோதனத்துக் கொடைவழிக் களிக்குமுயரே! (ஓராதே = ஆராயாதே, கருதாதே, நினையாதே; காமம் = விருப்பம், ஆசை; மாதர் = பெண்கள், காதல், அழகு; களைநுதல் = களை + நுதல், களை = பொலிவு, கலகலப்பு, நுதல் = தலை, கூறு, தோற்றுவி; காமதேனு = கேட்டவற்றை நல்கும் தேவலோகப் பசு; மடை = மதகு, கண்மாய், நீரணை; மங்கலம் = சுபம்; நோதல் = நோவுதல்; நோவு = வலி, நோய், பிணி, வியாதி; நல்குரவு = வறுமை, கோது = நீவு, வருடு, தடவு, உவகை, களிப்பு; நோன்மை = தவம், பொறுமை, வலிமை, மேன்மை; கொழிவிளை = கொழியும் விளைச்சலால்; கோதனம் = பசுச்செல்வம், ராஜவளம்;)
23. ஔவிய மருளுமாகி அலையவிடும் பெருமகள்!
களிக்குமுயர் பேரின்பத்து ஊற்றருவிப் பெட்டகமாய் கையிருப்பாய் அளிக்குமுயர் வாருதியில் பசுமனத்துப் பகப்பண்பாய் அன்பளிப்பாய் தளிக்குமுயர் தன்னலத்து அகவிருளைத் தாண்டிப்பின் திருவிளக்காய் நளிக்குமுயர் நல்மனத்து நற்பேறாய் நலமளிக்கும் நனியுணர்வே! (ஔவியம் = பொறாமை, அழுக்காறு; மருள் = மனக்குழப்பம், கலக்கம், மனத்தடுமாற்றம்; கையிருப்பு = தன்வசத்து இருப்பது; வாருதி = பொங்கி ஒழுகலில்; பசுமனம் = சாதுமனம், இனியமனம், நிலைத்தமனம்; பகப்பண்பு = ஆறு பண்புகள் = புகழ், செல்வம், ஞானம், வீரம், திரு, உறுதி; தளி = துளி, கோயில், இடம், மேகம்; தாண்டு = குதித்தாடு, தாவு, விஞ்சு, மேம்படு; நளி = அடர்ந்திரு, செறிவாகு, விரிந்திரு, படர்ந்திரு, ஒத்திரு; உயர்வு, பெருமை, பரப்பு; நனி = மிகுதியாக, அதிகமாக;)
24. ஆக்கும் பொருளுமாகி
உலவவிடுந் திருமகள்!
நனியுணர்வாய் கருமவினைக் கருவறையாய் நன்நிலைமை நல்வாய்ப்புக் கனியுணர்வாய் கவனம்நிறை வினையறமாய் செய்வினைக் களப்பொலிவுத் தனியுணர்வாய் திருந்துவினை விழுமியமாய் தகைசால் திரவியத்திரு நுனியுணர்வாய் நாற்பொருள் நுண்ணுணரும் நற்பேறாய் நலமிகுக்குமே! (நனி = மிகுதியாக, அதிகமாக; கருமவினை = செய்வினை; நன்நிலைமை = வீடுபேறு; களம் = இடம்; விழுமியம் = சிறந்த, உயர்வான; திருவினை = நல்வினை, புனிதவினை; திருந்து = சீர்படு, செம்மையாகு; திரவியம் = செல்வம், சொத்து; தகை = பொருத்தம், உயர்வு, அழகு, இயல்பு, பொலிவு; சால் = ,மிகு, நிறைவு, பெருமை, முற்றுப்பெறு ; நுனி = கூர், முனை, உச்சம்; நுண் = நுணுக்கமான, நுட்பமான, மிகச்சிறியதான, கூரிய; நாற்பொருள் = அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கும்; நற்பேறு = அதிட்டம், பாக்கியம்; )
25. காடாகி
மலையாகிக் கடலாகும் பொழிலவள்!
நலமிகுக்கும் இயற்கை நிலமாகி மலையாகி நாடாகி வலமிகுக்கும் ஊற்றாகி ஆற்றாகி கடலாகி வானாகி தலமிகுக்கும் மழையாகி தளிராகி வளமாகி தனமாகி சலமிகுக்கும் சங்கமத்து வித்தாய் சான்றாகும் சம்பத்துமே! (வலம் = வலிமை, வெற்றி ; தலம் = இடம், உலகம், வீடு ; சலம் = இயக்கம், சுழற்சி; சங்கமத்து = தாவரம், நிலம், நிலத்துயிர்; சம்பத்து = பொருள் வளம், வாழ்க்கை நலம்; )
26. காயாகிக் கனியாகிக் களிப்பாகும் எழிலவள்!
சம்பத்துமாய் மனைவாசல் நிலபுலத்து நன்மக்களுந் தனவளமாய் தம்பத்துமாய் மந்தைநிறை சமூகத்தாய் வாழ்வியல் சந்தையுமாய் பிம்பத்துமாய் வணிகவியல் பொருளியல் பெருகுநிலைப் பங்குமதாய் நம்பத்துமாய் இலங்குவழி நாணயமாய் விளங்குமெழில் நற்கதியே! (சம்பத்து = வாழ்க்கை நலம்; தம்பம் = பற்றுகோடு, ஆதரவு; பிம்பம் = உருவம், படிமம், எதிர் வடிவம், பிரதிபலிக்கும்; பெருகுநிலை = வளர்நிலை; நம்பத்து = நம்பகத்து, நம்பிக்கைக்குரிய; நாணயம் = செலாவணி, உலோகப் பணம், வாய்மை; நற்கதி = வீடுபேறு, பேரின்பம்;)
27. சக்கரச் சுழற்சியாய் சதுராடுஞ் சேயவள்!
நற்கதிதருஞ் செழுபயன் இகக்காரணி முன்வினை நற்பலனும் முற்பதிதரும் சுழல்விளை முற்றாஅவா மயல்வித்து மறுமையும் கற்பகந்தருங் கொழுநலங் கருதியாங்கு கைவண்ணங் கிட்டுதலும் சிற்சுகமருள் நிலைத்தலும் ஊழ்வினை செய்தவமே சந்ததியுமே! (நற்கதி = வீடுபேறு, பேரின்பம்; இகக்காரணி = இக வாழ்விற்க்கான காரணம்; முற் = பழம்; பதி = மனத்தில் நிலைத்த, ஊன்றிய, முற்றா = முடியாத; அவா = ஆசை; மயல் = மாயை, வெறி, வேட்கை; வித்து = விதை; சுழல் = சுழற்சி; விளை = விளைக்கும்; மறுமை = மறுமைப் பிறவி; கற்பகம் = கற்பகத் தரு = விரும்பியதைத் தரும் மரம்; கொழுநலம் = கொழுத்த நலம்; நலம் = சுகம்; கருதியாங்கு = நினைத்த வண்ணம்; கைவண்ணம் = கைத்திறன், நேர்த்தி; கிட்டுதல் = கிடைத்தல், நெருங்குதல், அடைதல்; சிற்சுகம் = ஆன்ம இன்பம்; ஊழ்வினை = பழவினை; செய்தவமே = புனிதமே, தவப்பயனே, நற்செயலே; சந்ததியுமே = வமிசம், பரம்பரை, தலைமுறை, வழித்தோன்றல்;)
28. சகமாகி
மாற்றாகிச் சகலமாகும் மாயவள்!
சந்ததியுமாய் பந்தமுமாய் சமமாகுஞ் சொந்தமுமாய் சம்பத்தாய் வந்ததுமாய் வருவதுமாய் மாற்றுமாய் மாற்றாநல் வரம்பிலாச் சிந்தையுமாய் நல்லறமாய் சீர்மைமிகு சௌபாக்கியத் தாயுமாய் எந்தையுமாய் இருக்கிறாய் மாயமுமாய் இலக்குமியே இலக்காயே! (சீர்மை = பெருமை, சிறப்பு; சௌபாக்கியம் = வளமும் செழிப்புக் கொண்ட நிலை)
29. தொடராகி மறுமைதனைத் துலக்குந் தூயவள்!
இலக்காயுறு உளப்பொருளாய் இயங்குநல் தூண்டலுமாய் இலங்கியும் கலக்காயுறு அகத்திருளாய் உழற்றுமதி கல்லாமையால் கிடப்பாயும் துலக்காயுறு துய்ப்பொருளாய் விளங்கிவல் பேராசையால் தொடராயும் நலக்காயுறு மறுமையாய்மீள் நன்னிலத்தில் தொழிற்படும் நல்வரத்தே! (உறு = உறுதியாக, மிகுதியாக; கலக்கம் = குழப்பம்; உழற்றுமதி = உழற்றும் அதி; கல்லாமை = கற்காமை, அறியாமை; துலக்கம் = தெளிவு, பொலிவு, ஒளிர்வு, பிரகாசம்; நலக்காய் = நலத்துக்காய்; மீள் = மீண்டும்; நன்னிலம் = நல் நிலம்; தொழிற்படும் = செயல்படும்; வரத்து = வருகை, வரும்படி; )
30. தொழிலாகி வறுமையினை விலக்குந் தாயவள்!
நல்வரத்தாய் நடைமுறை நடுவறத்து நல்வித்தாய் நாயகியாய் பல்வரத்தாய் பணிமுறை பண்பறத்து பணிவித்தாய் பார்கவியாய் நில்வரத்தாய் நேர்மறை நல்லறத்து நினைவித்தாய் நிம்மதியாய் இல்வரத்தாய் வாழ்வகை உயர்வித்து இருதயத்தாய் இலங்குமின்பமே! (நடுவறம் = நடுநிலைமை; பார்கவி = இலக்குமி; நில்வரத்து = நின்றிலங்கும் வரத்தாய்; இல்வரத்து = இல்லற வரத்தாய்; வாழ்வகை = வாழும்வகை;)
31. நண்ணிய வகையெலாம் நலந்தரும் புவிமகள்!
இலங்குமின்பத் திருமதியாய் எண்ணியவை எண்ணியாங்கு இயல்பவளாய் நிலங்குமின்பத் திருநிறையாய் நண்ணுவர்க்கே நலந்தரும் நிறைகுடமாய் விலங்குமின்பத் தவநெறியாய் பற்றறுக்கும் வினைவாணருக்கு மாத்திரமாய் துலங்குமின்பத் திருப்பொருளாய் முத்திநலத் துணைநல்கும் திருமகளே! (திருமதி = மனைவி, திரு மதி = மதிப்பிற்குரிய அறிவாய்; இயல் = நிகழ், தங்கு; திருநிறை = இலக்குமி நற்பார்வையாய்; நண்ணு = அணுகு; விலங்கு = விலகு, நீங்கு; வினைவாணர் = வினை மேன்மையர், சிறந்தவர்;) 32. நுண்ணிய யோகமுயர் வீடுந்தருந் திருமகள்! திருமகளே! எண்மகளாய் மாயமும் மயக்கமும் தெளிவிக்கும் பெருமகளே! பொன்மகளாய் யோகமும் பெருநெறியும் பொலிவிக்கும் கருமகளே! செம்மகளாய் கருவிலுந் திருவாய்க் குபேரவருளைத் தருமகளே! எம்மகத்தே யாண்டுமே தகைத்திருவே செங்கமலமே! (எண்மகள் = அஷ்ட இலக்குமி; யோகம் = நற்பேறு, நற்சேர்க்கை, கூடல்; பெருநெறி = முக்தி; முத்தி = வீடுபேறு, மோட்சம்; பொலிவிக்கும் = சிறப்பிக்கும்; செம்மகள் = இலக்குமி; குபேரவருள் = குபேரசம்பத்து, பெருஞ்செல்வம்; கருமகளே = கருப்பொருளே; யாண்டுமே = எப்பொழுதுமே, எவ்விடத்துமே; தகைத்திரு = திரண்டிரு, இயைந்திரு, இயல்பாயிரு, உண்மையாயிரு; செழுத்திருமே = செழுத்து இருப்பாயே; செங்கமலமே = செந்தாமரையே;) |
|
* திருமகள் அந்தாதி முற்றும் *
|
| திருமகள் அகவல்: (தலைப்புக் கவிதை) |
|
அலர்மேல் மங்கையே அழகுநல் புவிமகள்! அலைமகள் நங்கையே அன்னைத் திருமகள்! ஆழியிலே வந்துதித்த அற்புதமே அலைமகள்! ஆவினம் பால்சொரிய அமுதமாகுந் தலைமகள்! இலக்குமித் தாயேநல் இதயத்திரு பெருமகள்! இலங்கிடும் யாதிலும் இன்பநிலை தருமகள்! ஈட்டமாய் வளநலத்தை ஈண்டுதரும் நிறைமகள்! ஈன்றவற்கே யாங்கனமும் மீண்டுவரும் மறைமகள்! உலகத்தின் திருவாகி உள்ளமதில் உறைமகள்! உணர்வாகி மலராகி உயர்வாகும் இறைமகள்! ஊனாகித் தேனாகி ஊஞ்சலாடும் நறுமகள்! ஊழ்வினைப் பொருளாகி ஊடலாகும் உறுமகள்! எளிமையும் வலிமையென எழுச்சிதருந் தாயவள்! எதிர்பாரா யோகமாகி இன்பந்தரும் மாயவள்! ஏழ்மை இல்லாமை நீக்கிவிடும் நல்லவள்! ஏக்கத்தை இகவாழ்வில் போக்கிவிடும் வல்லவள்! ஐம்புலனும் துய்த்துணரும் இன்பதுன்ப நலமவள்! ஐசுவரியம் தனமாகும் அனைத்தான வளமவள்! ஒன்றிய இலக்குமாகி வெற்றிதரும் இனியவள்! ஒருமை பலவாக்கிப் பெற்றுத்தருங் கனியவள்! ஓயாத அலையாகி ஆசைதரும் அலைமகள்! ஓராதே நிலையாகி உய்விக்குந் தலைமகள்! ஔவிய மருளுமாகி அலையவிடும் பெருமகள்! ஆக்கும் பொருளுமாகி உலவவிடுந் திருமகள்! காடாகி மலையாகிக் கடலாகும் பொழிலவள்! காயாகிக் கனியாகிக் களிப்பாகும் எழிலவள்! சக்கரச் சுழற்சியாய் சதுராடுஞ் சேயவள்! சகமாகி மாற்றாகிச் சகலமாகும் மாயவள்! தொடராகி மறுமைதனைத் துலக்குந் தூயவள்! தொழிலாகி வறுமையினை விலக்குந் தாயவள்! நண்ணிய வகையெலாம் நலந்தரும் புவிமகள்! நுண்ணிய யோகமுயர் வீடுந்தருந் திருமகள்! திருமகள் போற்றி போற்றி போற்றியே! |
|
*** திருமகள் அகவல் முற்றும் ***
|
|
***
|
Tuesday, May 17, 2011
அன்னையர் அந்தாதி (பகுதி: 2)
|
அன்னையர் அந்தாதி
(பகுதி: 2)
|
|---|
|
1. கலைமகள்
அந்தாதி
|
|
இறை வணக்கம்:
கருத்துட் கனன்ற கலைமகட் பொருண்மை அருட்பா நிறைத்த அந்தாதியால் - உரைக்க வயப்படு வாணிநீயே வனப்புடை வாக்காய் நயத்தொடு நல்குவாய் நயந்து. |
| அந்தாதிக் கட்டளை: காயத்துரு வடிவமுமாய் கண்மலரும் வண்ணமுமாய் நேயர்செவி மடுக்குமொலி நெஞ்சுருகும் பண்ணமுதாய் தூயவெண் தாமரைக்கண் துலங்குமெழில் நான்முகியாய் தாயறிவாய் பேதித்துத் தரங்காட்டும் நறுமுகையே! முகவெழிலும் முறுவலிதழும் முத்தென்னும் பல்லொளியில் அகவிருள்தம் முனைவரிடம் அகல்வித்தும் எழுத்துவித்தும் பகுத்துணரும் மதிநலனாய் பருப்பொருளின் உருப்பொருளாய் தொகுத்துணர விதித்தருளும் தொகைஞானக் கலைவாணியே! |
|
அந்தாதி:
1. அன்பினழகு வடிவமே அன்னைக் கலைமகள்!
காயத்துரு வாகிவெண் கமலாசனத்(து) அமர்மலர்க் கருணையாய் ஆயகலை அகிலத்து அருளிடும் அன்னையாய் அயனகத்து நாயகியாய் வீணைதரும் நாதமுடன் விளம்பிமிகு நல்லிசை வாயமுதாய் ஞானமெழில் வள்ளலாய் வழங்குநல் வடிவமுமே!
2. அறிவுநெறித் தெய்வமே அமுதஞானத் தலைமகள்!
வடிவமுமாய் வளமைசொல் வனப்புமாய் வளர்நிலை வரம்பிலியாய் விடியலுமாய் வித்தைதரும் போதகியாய் விதிவகுக்கும் வேதகியாய் படிகநிறமாய் பனிமலராய் பதம்மிகுத்த பைந்தமிழ்ப் பாவையாய் கடிமலராய் மனமலரில் கருதுபொருட் கமழ்ந்திடுங் கண்மலரே! (கடிமலர் = நறுமலர்)
3. ஆயகலை அனைத்தையும் அருளும்வாணி
அம்மையள்!
கண்மலரும் எண்ணமுமாய் கருப்பொருளின் வண்ணமுமாய் கனிமொழித் திண்ணமுமாய் திசையெங்குந் திறல்பவளோ? தெளிர்பவளோ? தண்மதியால் பண்புவளர்ப் பைங்கிளியோ? பால்பிரிக்கும் அன்னமோ பயில்நடையில்? வண்ணமயில் தோகையோ? வல்லெழிலாய்நீ விளையாடும் வண்ணமுமே! (திறல் = பிரகாசித்தல், ஒளிர்தல், தெளிர் = ஒலித்தல், செழித்தல்)
4. ஆடல்பாடல் ஆனந்தம் அறிநிலையின்
செம்மையள்!
வண்ணமுமாய் இன்பமுமாய் வானிலொளி நடம்புரியும் வான்கொடியாய் விண்ணகமாய் தத்துவமாய் வெளிச்சந்தரு விளக்கமுமாய் வித்தைமிகும் மண்ணகமாய் பிண்டமுமாய் வியங்குகோள் அண்டமுமாய் மனவெழிலாய் நுண்மதியால் பண்மிகுத்து நுகர்பொருளாய் பரிணமிக்கும் நேயர்செவியே! (வான்கொடி = மின்னல்)
5. இயலிசை நாடகமாய் இனிமையாகும் நயத்தினள்!
நேயர்செவி விருந்தாய் நெஞ்சிளக்கி மருந்ததுவாய் நினைவறமாய் நயனமொழி பொழியுமதி நடனமெனும் கலையருவி நதிமழையாய் இயம்புவழி தேன்மொழி யாலிசைக்கும் நல்லறமாய் ஏந்திழையாள் முயங்குமது நரம்புவழி முகக்குமிசை வருடுமழை மடுக்குமொலியே! (மடு = அருந்து, ஊட்டு, பொய்கை, சுனை)
6. இன்பதுன்பம்
யாதிலும் இயல்புமாகும் வயத்தினள்!
மடுக்குமொலி இசைமிகுத்து வையத்துயிர் இன்பதுன்பம் வாழ்ந்துயர முடுக்குவித்து நிலத்துமிசை முனைந்தேற அனல்புனல் வான்படராய் எடுத்தியம்பி இயன்றவுயிர் முயன்றவரை முக்திநலம் இயல்பவளை நெடும்புகழ் நிறைதரும் நித்திலத்தை நினைந்திருக்க நெஞ்சுருகுமே! (படர் = காற்று; நித்திலம் = முத்து)
7. ஈகைகருணை உள்ளமதில் ஈண்டுதருந் தாயவள்!
நெஞ்சுருகும் ஏழையர்க்கும் நினைவறமும் ஏழிசையும் நிலைநிறுத்தும் வஞ்சமிலா நெஞ்சினர்பால் வாஞ்சையுடன் கல்விஞானம் வரமளிக்கும் கொஞ்சுமொழி ஏடேந்துங் கோலமயில் செங்கரத்துக் கலைவாணிநின் பஞ்சணைய பதமலர்த்தாள் பணிந்துருகப் பரிமளிக்கும் பண்ணமுதே!
8. ஈரமுள்ள நெஞ்சினுள் என்றுமேயிளச் சேயவள்!
பண்ணமுதாய் புதுமைகளைப் படைப்பிக்கும் பொன்னமுதப் பூங்குழலி; எண்ணமதில் செழுங்கலையும் ஏற்றநலமும் முழுமையும் இயலுங்கிளி; கண்ணியத்து நெஞ்சகத்தே கருமவினை திறமுயர்த்துங் கலைக்கிழத்தி; துண்ணியகச் சுடர்பெருக்கி துறையெலாம் அறிவுநல்குந் தூயவளே! (கிழத்தி = தலைவி; துண்ணி = விரைந்து)
9. உதயமதியம் இரவுயென உலகினில் இலங்குவள்!
தூயவெண் சங்கத்துத் தொடரொலியாய் ஓங்காரஞ் சங்கமித்து நாயகியாய் இரவுபகல் நாளுருளக் கனவும்நனவு நடப்புமாகி மாயப்பிறப் பிடரால் துயருழலும் வாழ்வை மானுடத்தை சாயத்தால் சதுராடிச் சீராக்குஞ் சதுர்மகள் தாமரையே! (சாயத்தால் = வண்ணத்தால்; சதுர் = சாமர்தியம், வலிமை, திறன்; சதுராடி = சாமர்தியமாக)
10. உயர்வுதாழ்வு நிலையென உணர்வினில் துலங்குவள்!
தாமரைக்கண் அகத்தேவுயர் தமியளாய் தாயாய் தாரமாய் தோமத்தில் சோதரியாய் தோழியாய் சேயாய் தரணிவுயிர் வாமத்தில் வகையறிவு வடிவுநிற இயலுறழ்ந்து மாற்றகலத் தூமதியால் சோதித்து போதித்து சாதித்தன்பு துலங்குமெழிலே! (தமியள் = தனியள்; தோமம் = தொகுதி, திரள், சூழல்; வாமம் = அழகு, இயலுறழ்ந்து = இயல் உறழ்ந்து = இயல்பு மாறி )
11. ஊழியையுங் காலத்தையும் உருவகிக்குந் தலைமகள்!
துலங்குமெழில் காரணியாய் தூயன்புத் தாரணியாய் துன்பநிலை கலங்குமனம் தெளிந்தறிய அறம்பொருள் இன்பம்வீடாய் கலைநெறி இலங்குமயில்; இதந்தருநல் கடையவருங் கடைந்தேற இனிமைநிறை நலங்குவித்து நடைவிளம்பி தெளிஞானத் துணைநல்கும் நான்முகியே! 12. ஊக்கத்தையும் ஆக்கத்தையும் நிருவகிக்குங் கலைமகள்! நான்முகியாய் நல்லறத்து வாழ்வளிக்கும் அருங்கலையே; நானிலத்து வான்முகிலாய் இடபிங்கலை மையநிலை பிரணவாணவ ஒடுங்கலை ஊன்பொதிக்கு உறுத்தியும் நடுங்கலை தடங்கலை ஒறுங்கலையாய் தேன்மதிக்குத் தேவையெனுந் திகட்டொணாத் தேறுங்கலை தாயறிவே!
13. எழிலொழுங்கு நேர்மையில்
இலங்கிடும் இனியவள்!
தாயறிவாய் ஒருமனத் திருகண் முக்குணச் சதுர்மறை நாயகியாய் ஐம்பொறி அறுசுவை ஏழிசை நல்லறச் சேயகமாய் எண்திசை நவரசப் பற்றாகித் தீதெனும் பேயகலப் பிணியகலப் பேணுவித்து வாலறிவாய் பேதித்தவளே!
14. எண்ணம்நினைவு வாய்மையில்
துலங்கிடுங் கனியவள்!
பேதித்து வகையாகி பிணக்கொழி ஞானவருட் பொருளாகி வாதித்து இயல்விதி போதித்து வாய்மை உணர்வித்து சோதித்து மெய்நீதி ஓதுவித்து சுழற்சிதன் சூட்சுமமும் சாதித்து சலித்து சகலகலை சமைக்கிறாய் தரங்காட்டியே! (பிணக்கொழி = பிணக்கு ஒழி)
15. ஏற்றமிறக்கம் பண்ணென எழுச்சிநல்கும்
பாமகள்!
தரங்காட்டும் அருங்கலைத் துலாக்கோலாய் தரணிமிசைத் தையலாய் உரங்காட்டும் உள்ளறிவாய் உணர்வாய் உதயமிக்கும் உத்தமியாய் சிரங்காட்டும் சிந்தனைத் தெளிவுமாய் நற்கலை தீக்கலையாய் நரங்காட்டும் செய்வினைக் காரணியாய் நலங்காட்டும் நறுமுகையே! (நரங்காட்டும் = நரங்குகள் ஆட்டும்; நரம் = மனிதப் பிறவி; செய்வினை = நல்வினை, தீவினை)
16. ஏற்றுவாக்கில் பண்பென
இசைமிகுக்கும் நாமகள்!
நறுமுகையே நயக்கும் நலவுறுதி; நளினவழி நேர்மறை குறுநகையே பயக்கும் கோலயிசை; நடுநிலை குளிர்மதி பொறுமையே செயக்கும் பெருமை; இன்சொல் பொருந்து மறுமொழியே இயக்கும் வாக்கும் முயக்கும் முகவெழிலே! (நயக்கும் = போற்றும்; பயக்கும் = உண்டாக்கும்; செயக்கும் = வெற்றிதரும்; இயக்கும் = செலுத்தும்; முயக்கும் = சேர்க்கும்)
17. ஐயம்விளக்கம் உபாயம் அனைத்தையுங் கொடுப்பவள்!
முகவெழிலும் எழில்நடையும் முழுவயிர உடற்பொலிவும் முழுமதியின் தகவொளியும் இளங்கதிரின் தகுவெயிலும் இளஞ்சுவடில் தருபொருளும் அகவெழிலும் அறப்பொருளாய் அனுபவத்து விழுப்பொருளாய் அறிவுநிலை முகத்தெரியும் முதற்றறிவாய் மூதறிவாய்ப் பரிமளிக்கும் முறுவலிதழே! (முகத்தெரியும் = முகத்து எரியும்)
18. அச்சந்துக்கம் அபாயம் அனைத்தையுங் கெடுப்பவள்!
முறுவலிதழும் மோகமும் முத்தமும் காமமும் முனைந்தேறி செறுபகையும் போகமும் செற்றறுக்கும் யோகமும் சேர்ந்தேகி உறுபசியும் ஓவாப்பிணியும் உதறுஞ்சுக அறிஞானம் உணர்ந்தாகி வறுமையும் வல்வினையுங் களையுங்கலை வாக்காகும் முத்தென்னே! (செறுபகை = சினக்கும்பகை, அடக்கும்பகை; செற்றறுக்கும் = செறிவறுக்கும், அழுந்தலறுக்கும்)
19. ஒப்பனை
கற்பனை உருவுமாகும் எழிலவள்!
முத்தென்னும் கற்பனை சிற்பமாய் சித்திரமாய் மொழியியலாய் சித்தென்னும் அகம்நாடி செயல்வித்தாய் ஒழுங்கியல் சொத்துமாய் அத்தென்னும் அலகில்லா அடிவிதியாய் அகிலத்து அருள்ஞானப் பித்தென்னும் பேரருளில் பிணைந்தாடும் பரம்பொருட் பல்லொளியே! ( அகம்நாடி = அகம் நாடி; நாடியருள் = “நாடி” அருள்; அத்தென்னும் = எல்லையென்னும்; பல்லொளி = பலவிதவொளி)
20. ஒப்புமை பேதமாகி ஒயிலுமாகுங் கலையவள்!
பல்லொளியில் ஒன்றாய்மிகு பொருளாய் பரவசப் பிரிவொப்பாய் வல்லெழிலில் இலைதளிரில் மலரிதழில் இயல்புதரு வடிவழகில் நல்லறத்தில் செஞ்சொல் நனிமொழியில் கனிந்துருகி நுவலுதலில் அல்பகலென்? அகற்றுவாய் அரற்றும் அறியாமை அகவிருளையே!
21. ஓவியம் காவியம் உறைந்திடும் நுண்ணியள்!
அகவிருள்தம் அகல்விக்கும் அறிவொளி அருள்விக்கும் அன்னையாய் தகவல்மொழி தளைத்துவளர் தரணிவசம் தகைத்துயருஞ் சாத்திரமாய் அகரமுதலும் விளங்கலை அன்னார்க்கும் விளங்குகலை அனுபவமாய் முகவருளாய் விழுமியத்தால் அன்னாய் விளக்கிடுவாய் முனைவரிடமே!
22. ஓதலில் வாதுவில் ஒளிர்ந்திடும் திண்ணியள்!
முனைவரிடம் ஊக்கமும் ஆக்கமும் உரங்கூட்டும் வளர்மதியால் சினைபெருகும் எழிலின்பச் சிந்தனையின் வளங்கூட்டி செய்தொழிலால் வினையகலும் நன்னெறியும் வழிமுறையும் தகைக்கும் விளக்கமதாய் அனைவருளும் இருளகற்றும் அகத்துறை ஆன்மவொளி அகல்வித்தே! (அகல் = விளக்கு; வித்து = விதை)
23. ஔடதம் விடமுமாய் யாதுமாகுங் கன்னியள்!
அகல்வித்தும் அருள்வித்தும் அகவழுக்கைத் தெளிவித்தும் ஔடதமாய் நுகர்வித்தும் நுண்கலையைப் பகர்வித்தும் நுழைபுலத்தை நேர்மறையாய் புகல்வித்தும் உணர்வித்தும் புணர்வித்தும் உண்ணுவித்தும் புன்மைதனை இகல்வித்தும் கல்வித்தாய் இலங்குகிறாய் எண்ணுவித்தும் எழுத்துவித்தே! (நுழைபுலம் = நுட்பறிவு, கூரறிவு)
24. அன்னம் அமுதமாய் ஆர்த்திடும் அன்னையள்!
எழுத்துவித்தும் உறங்குவித்தும் நச்சினார்க்கு இனியவளாய் இரங்குவித்தும் வழுத்துவித்தும் பரம்பொருளை மெச்சினார்க்கு வணக்குவித்தும் வழங்குவித்தும் செழுத்துவித்தும் செம்பொருளால் செயல்வித்தும் சேகரத்துவளர் செழுஞானம் பழுத்துவித்தும் சூத்திரமாய் பண்பாடாய் பரிணமிப்பாய் பகுத்துணரவே!
25. கல்விகேள்வி ஞானந்தரும் கலைவாணி வேணியள்!
பகுத்துணரும் அறிவுதரும் பண்புநலம் மிகுத்துவரப் பற்றறுக்கும் தகுத்துணரும் முக்குற்றைத் தகர்த்தெறிய தானதருமம் தாமந்தரும் நகுத்துணரும் நல்லறிவால் நாணயத்தால் நாநயத்தால் நயம்பயக்கும் வகுத்துணரும் யாக்கையும் வளர்ந்தேகும் வாழ்கலை மதிநலனே! (தகுத்துணரும் = தகுந்து உணரும்; முக்குற்றம் = காமம், வெகுளி, மயக்கம்; தானம் = ஆற்றல்; தருமம் = நியாயம்; தாமம் = வீடுபேறு; யாக்கை = உடல்)
26. கருத்திலொளி யோகந்தரும் வண்ணமயில் மேனியள்!
மதிநலனாய் மூவாசை மும்மலமழிய முக்திதரும் மருங்கினில் கதியருளாய் யோகத்துயில் யாகந்தரும் மோனமுயர் கருத்ததனில் நதிவழிவாய் அருவியலாய் ஞாலந்தரும் அறிவொளி ஞானப்பிழிவாய் பதியறிவாய் பாரதியாய் பரம்பொருளாய் பதமாகும் பருப்பொருளே! (மூவாசை = மண், பெண், பொன், மும்மலம் = ஆணவம், கன்மம், மாயை, மருங்கில் = எல்லையில், குலம், செல்வத்தில்; அருவியலாய் = அருவி இயலாய், அருவி = உருவமற்றது; பதம் = இயைபு, இசைவு, கூர்மை, நிலை, தரம்; பருப்பொருள் = புலனறிவுப் பொருள்)
27. சங்கடங் களையுமதிச் சகலகலா வல்லியள்!
பருப்பொருளின் பரணிமிகும் படைப்பருளால் படருந்துயர் பற்றறுத்து கருப்பொருளின் திரள்பொருளை கூர்மதியால் சீர்செய்து கவனமீர் திருப்பொருளாய் திருவமுதத்து திடப்பொருளாய் திரட்டியாய் திருவுளத்து விருப்பொருளாய் எண்ணெண் கலைப்பொருளாய் விளங்கும் உருப்பொருளே! (பரணி = வெற்றி)
28. சத்தியத்
துள்பொதிந்து சாதிக்கும் மெல்லியள்!
உருப்பொருளாய் நல்லறத்தால் உள்ளுணர்வில் மெய்யுணர்வை உய்த்துணர பருப்பொருளாய் விரியுமுடல் பண்கூட்டிப் பக்குவமாகிப்பின் பராபரமறிய கருப்பொருளாய் இருத்திமனங் கைகூட்டி நல்வினையைக் கைக்கொள்ள தரும்பொருளாய் முக்திஞானந் தழைக்குஞ் சித்தியாகுவாய் தொகுத்துணரவே!
29. நறுமணத்துள் நாதத்துள் நடனமிடுந் தேவியள்!
தொகுத்துணர வையத்துயிர் துகளெலாம் அன்புநிறைச் செம்பொருளாய் செகுத்துணர மதிநலத்துள் செறிவாகும், நிலையாமைத் தன்மையுமாய் பகுத்துணர பொழிஞாலம் பரிணமிக்கும் மெய்ஞானப் பாங்குமதுவாய் வகுத்துணர நிலைவாழ்வு மன்னுபுகழ் ஒன்றென்றே விதித்தருளுமே! (செகு = எட்டு; பொழி = நிறை; பாங்கு = அழகு, நலம்; மன்னு = நிலைத்த, நீடித்த) 30. நல்மனத்துள் நளினத்துள் நலந்தரும் மாதவள்! விதித்தருளும் நறுங்கலையும் வழிமுறையும் வினையறமும் விழுப்பொருளும் கதித்தருளும் மொழிவளமும் கல்வியறிவும் உளநலமும் கருதுபொருளும் மதித்தருளும் அறக்குருபரரும் ஐம்பூதங்களும் மறுக்கடவுளரும் உன்னகத்தில் துதித்தருளும் படிக்களித்துத் திறமனைத்தும் வலிந்தளிக்கும் தொகைஞானமே! (கதி = விரை, மிகு, அறி, நிலை, நெறி; )
31. மலரிதழில் இலைதளிரில் மணங்கமழுங் கலையவள்!
தொகைஞானக் கலைமாதே கண்ணகத்தே தெளிஞானம் துலக்கியபின் பகையேது? புகையேது? பாவந்தரும் வினையேது? பற்றுமகன்றின் நகைநாண வகையேது? கையறு வதையுமேது? நள்ளிருளுமேயேது? குகையெனும் அகமாடத்துட் குலையா அறிவொளிக் கலைவாணியே!
(புகை = சினம், அகம் = மனம்; மாடம் = உட்குழிவு;)
32. மனமலரில் கவிதையென மடல்விரிக்குங் கலைமகள்!
கலைவாணியே! களங்கமிலா மனமலரில் களிமிகுத்துக் கவிநிறைக்குங் கலைஞானமே! உளங்குவித்துக் கரங்குவிப்பார் நலங்குவிக்கக் கசிந்துருகி கலைபொழியும் நாமகளே! கவிமழையே! நற்பெருஞ்சீர் கனிந்தருளும் கலையமுதே! நின்பதமலர் சரணடைந்தேன்! நிறைநின்றன் காயத்துருவே! |
|
* கலைமகள் அந்தாதி முற்றும் *
|
| கலைமகள் அகவல்: (தலைப்புக் கவிதை) |
|
அன்பினழகு வடிவமே அன்னைக் கலைமகள்! அறிவுநெறித் தெய்வமே அமுதஞானத் தலைமகள்! ஆயகலை அனைத்தையும் அருளும்வாணி அம்மையள்! ஆடல்பாடல் ஆனந்தம் அறிநிலையின் செம்மையள்! இயலிசை நாடகமாய் இனிமையாகும் நயத்தினள்! இன்பதுன்பம் யாதிலும் இயல்புமாகும் வயத்தினள்! ஈகைகருணை உள்ளமதில் ஈண்டுதருந் தாயவள்! ஈரமுள்ள நெஞ்சினுள் என்றுமேயிளச் சேயவள்! உதயமதியம் இரவுயென உலகினில் இலங்குவள்! உயர்வுதாழ்வு நிலையென உணர்வினில் துலங்குவள்! ஊழியையுங் காலத்தையும் உருவகிக்குந் தலைமகள்! ஊக்கத்தையும் ஆக்கத்தையும் நிருவகிக்குங் கலைமகள்! எழிலொழுங்கு நேர்மையில் இலங்கிடும் இனியவள்! எண்ணம்நினைவு வாய்மையில் துலங்கிடுங் கனியவள்! ஏற்றமிறக்கம் பண்ணென எழுச்சிநல்கும் பாமகள்! ஏற்றுவாக்கில் பண்பென இசைமிகுக்கும் நாமகள்! ஐயம்விளக்கம் உபாயம் அனைத்தையுங் கொடுப்பவள்! அச்சந்துக்கம் அபாயம் அனைத்தையுங் கெடுப்பவள்! ஒப்பனை கற்பனை உருவுமாகும் எழிலவள்! ஒப்புமை பேதமாகி ஒயிலுமாகுங் கலையவள்! ஓவியம் காவியம் உறைந்திடும் நுண்ணியள்! ஓதலில் வாதுவில் ஒளிர்ந்திடும் திண்ணியள்! ஔடதம் விடமுமாய் யாதுமாகுங் கன்னியள்! அன்னம் அமுதமாய் ஆர்த்திடும் அன்னையள்! கல்விகேள்வி ஞானந்தரும் கலைவாணி வேணியள்! கருத்திலொளி யோகந்தரும் வண்ணமயில் மேனியள்! சங்கடங் களையுமதிச் சகலகலா வல்லியள்! சத்தியத் துள்பொதிந்து சாதிக்கும் மெல்லியள்! நறுமணத்துள் நாதத்துள் நடனமிடுந் தேவியள்! நல்மனத்துள் நளினத்துள் நலந்தரும் மாதவள்! மலரிதழில் இலைதளிரில் மணங்கமழுங் கலையவள்! மனமலரில் கவிதையென மடல்விரிக்குங் கலைமகள்! கலைமகள் போற்றி போற்றி போற்றியே! |
|
*** கலைமகள் அகவல் முற்றும் ***
|
|
***
|
அன்னையர் அந்தாதி (பகுதி: 1)
அன்னையர் அந்தாதி
|
|
|---|---|
காப்பு:
கன்னியர் தேவியர் கடவுட் பாகத்துறை
அன்னையர் அந்தாதி முனைந்திட - முன்னவா கற்பகப் பிள்ளாயுன் கழலடி தொழுதேன் நற்றமிட் சொல்லாய் நிறை! |
|
| பாயிர அகவல்:
கேண்மிர் கேண்மீர் கேளிர் கேண்மீர் செப்பலைக் கொஞ்சம் செவிமடு கேண்மீர் முக்கண் தேற்றிய முழுமதி ஈண்டு அக்கண் தோற்றிய அருளொளி எழுத்தை அகத்தில் விளைத்த அணங்கியர் கருத்தை இடக்கண் உருவகம் இலங்குதிரு மகளாய் வலக்கண் என்பதும் வளர்கலை மகளாய் முதற்கண் ஆவதும் மூத்தவள் பொருளாய் |
8 |
| சடையோன் தரிக்கும்
முப்புறச் சடையாய் சபையோர் தைக்கும் முப்பொருள் விடையாய் பசுபதியார் தரும் பரம்பொருள் அறிந்து பாவையார் இறும் நறும்பொருள் உணர்ந்து உருப்பொருள் ஆகிய கலைமகள் தமையும் பருப்பொருள் ஆகிய திருமகள் தனையும் கருப்பொருள் ஆகிய பெருமகள் உமையும் திருப்பொருள் ஏகிய கருப்பொருள் ஆக்கி |
16 |
| அத்தன் இயம்பும் அருமை உணர்ந்து சித்தம் பயின்று செழுமை பயின்று அவனவள் காட்டும் அற்புதப் பொருளை அரவரவர் தீட்டும் அகப்பொருள் நலனை அம்மையர் ஆகிய மும்மகள் என்றும் மும்மகள் ஆகிய அன்னையர் என்றும் முன்னையர் உள்ளும் முந்தை வினையை அன்னையர் மெய்மை அந்தாதிப் பாவாய் |
24 |
| கலைமகள் ஊட்டிட தமிழ்ப்பால் உண்டு கருத்தவள் காட்டிட காதற்பால் கொண்டு அந்தாதி அருளிட கட்டளைப் படிவம் ஆதிகள் விரியும் கட்டளைப் படியும் அமையுங் கவிதை அற்புதந் தீட்டி அணையா மனதுள் நற்பதம் மூட்டி அடுத்தோர் புதுமையும் அகத்தே இயம்பி அடுக்கும் முதலிலும் அகவல் விளம்பி |
32 |
| வடகலை தென்கலை கீழ்க்கலை மேற்கலை வாழ்கலை என்றுமே வகைதொகை உணரா இன்னமுந் தமிழின் இலக்கணந் தெரியா இதுவரை எதுவுமே நலத்தினைப் புரியா யாவுமே அறியா இளையோன் என்பால் மேவிடுங் கலையா மனந்தனை வழங்கி தன்னை உணர்த்தி தமிழும் உணர்த்தி என்னில் முழுதுற எண்ணம் ஆகியே |
40 |
| அன்னை அந்தாதி ஆக்கிடப் பணிக்க பிள்ளைத் தமிழால் பேசிடத் துணிந்து குருவருள் கனிய உளமுற வணங்கி பரமனின் அடிமலர் பாதம் பணிந்தே பக்தியில் மலரைப் பிணைந்து தொடுக்க முத்தமிழ் அன்னை முனைந்து கொடுக்க உத்தம புத்திரன் உரைப்பதும் ஈங்கே சத்திய மொழியால் அன்னை அந்தாதி! |
48 |
| மறைபொருள் இஃதை மனனம் செய்தே மனத்தால் உணர்ந்து தியானம் புரிகின் இறைநலங் கனியும் இனிமை பெருகும் குறைகள் அகலும் தடைகள் விலகும்! புரியாப் பொருளும் புலப்படக் கூடும்! தெரியாத் திறமும் வெளிவரக் கூடும்! நிறைகள் நிறைத்து வளம்பல சேரும் இறையின் அருளே! இறைவா அருளே! |
56 |
| வையகம் உய்க! வாழ்க்கை உய்க! தாயகம் உய்க! தமிழும் உய்க! கேண்மீர் உய்க! கேண்மை உய்க! அண்டம் எங்கும் அன்பே உய்க! பசுபதி ஆகினன் பாதம் போற்றி! பாகம் பிரியாப் பகவதி போற்றி! தம்முள் விரியும் தமிழே போற்றி! எம்முள் நிறைகும் மும்மகள் அம்மையரே போற்றி! போற்றி! போற்றியே! |
64 |
*** பாயிர அகவல் முற்றும் ***
|
|
அன்னையர் அந்தாதி
|
|
| நூல்: | |
| இறை வணக்கம்: சென்னியுட் செறிந்து சிந்தையுட் சொரியும் அன்னையர் மும்மகள் அந்தாதி நன்னெறி விரிவருட் பொருளாய் விளைந்திடப் பணிவாம் கரிமுகன் பதமலர்த் தாழ்! |
|
| என்றும் மும்மகளே துணை! | |
| 1. கலைமகள் அந்தாதி: | |
| http://thamilkavithaikal.blogspot.com/2011/05/2.html | |
| 2. திருமகள் அந்தாதி (அலைமகள் அந்தாதி): | |
| http://thamilkavithaikal.blogspot.in/2011/06/3.html | |
| 3. அம்பிகை அந்தாதி (மலைமகள் அந்தாதி) : | |
* அன்னையர் அந்தாதி முற்றும் *
|
|
***
|
|
Labels:
Andhadhi,
Bhakthi,
Tamil,
Tamil Marabu,
அந்தாதி,
தமிழ்,
பக்தி,
மரபு,
மரபுக் கவிதை
Monday, February 14, 2011
வாழ்க்கை ஏதுக்கடா?
| வாழ்க்கை ஏதுக்கடா? | |
|---|---|
| 1 | நல்லதை நினைக்காமல் - உனக்கு |
| 2 | அன்பினை வழங்காமல் - உனக்கு அண்டமும் ஏதுக்கடா? - மனிதா அறத்தினை ஒழுகாமல் - உனக்கு ஆக்கங்கள் ஏதுக்கடா?
|
| 3 | பண்பினை வளர்க்காமல் - உனக்கு பாசங்கள் ஏதுக்கடா? - மனிதா பகைமை களையாமல் - உனக்கு படிப்பினை ஏதுக்கடா?
|
| 4 | நேர்மை நில்லாமல் - உனக்கு நெஞ்சம் ஏதுக்கடா? - மனிதா கூர்மை இல்லாமல் - உனக்கு குழப்பம் ஏதுக்கடா?
|
| 5 | தாய்மை போற்றாமல் - உனக்கு தாயகம் ஏதுக்கடா? - மனிதா வாய்மை காக்காமல் - உனக்கு வாய்ப்பும் ஏதுக்கடா?
|
| 6 | பாதியில் பெண்ணின்றேல் - உனக்கு பயணம் ஏதுக்கடா? - மனிதா நீதியில் கண்ணின்றேல் - உனக்கு ஞானம் ஏதுக்கடா?
|
| 7 | களவுகள் எளிதாயின் - உனக்கு காவலன் ஏதுக்கடா? - மனிதா இலவசம் வலிதாயின் - உனக்கு யாதுமே ஏதுக்கடா?
|
| 8 | கடமையும் இலதாயின் - உனக்கு கவலை ஏதுக்கடா? - மனிதா குடிசையும் இலதாயின் - உனக்கு குடும்பம் ஏதுக்கடா?
|
| 9 | சாதிகள் ஏதுக்கடா? - உனக்கு சண்டைகள் ஏதுக்கடா? - மனிதா சமரசம் காணாமல் - உனக்கு சமயங்கள் ஏதுக்கடா?
|
| 10 | பேதங்கள் ஏதுக்கடா? - உனக்கு பேதமை ஏதுக்கடா? - மனிதா வாதங்கள் ஏதுக்கடா? - உனக்கு வன்மங்கள் ஏதுக்கடா?
|
| 11 | மோதல்கள் ஏதுக்கடா? - உனக்கு மோகங்கள் ஏதுக்கடா? - மனிதா காதலே இல்லாமல் - உனக்கு காமம் ஏதுக்கடா?
|
| 12 | சோதனை செய்யாமல் - உனக்கு சோகங்கள் ஏதுக்கடா? - மனிதா சாதனை இல்லாமல் - உனக்கு சரித்திரம் ஏதுக்கடா?
|
| 13 | வல்லினம் ஏதுக்கடா? - உனக்கு மெல்லினம் ஏதுக்கடா? - மனிதா இடையினம் நாடாமல் - உனக்கு இன்பம் ஏதுக்கடா?
|
| 14 | வம்புகள் ஏதுக்கடா? - உனக்கு வன்முறை ஏதுக்கடா? - மனிதா இன்பத்தை நாடாமல் - உனக்கு துன்பங்கள் ஏதுக்கடா?
|
| 15 | மதவெறி ஏதுக்கடா? - உனக்கு மொழிவெறி ஏதுக்கடா? - மனிதா இனவெறி ஏதுக்கடா? - உனக்கு பணவெறி ஏதுக்கடா?
|
| 16 | ஆதியை அறியாமல் - உனக்கு ஆன்மா ஏதுக்கடா? - மனிதா சோதியைக் காணாமல் - உனக்கு சுயமும் ஏதுக்கடா?
|
| 17 | தேடலும் இல்லாமல் - உனக்கு தெய்வம் ஏதுக்கடா? - மனிதா தேம்பலும் நில்லாமல் - உனக்கு தேசம் ஏதுக்கடா?
|
| 18 | தீமைகள் விலகாமல் - உனக்கு தேர்ச்சியும் ஏதுக்கடா? - மனிதா தீட்டுகள் அகலாமல் - உனக்கு தேசியம் ஏதுக்கடா?
|
| 19 | பொருளே அறியாமல் - உனக்கு போதனை ஏதுக்கடா? - மனிதா இருளே அகலமால் - உனக்கு இதயம் ஏதுக்கடா?
|
| 20 | பொன்னகை ஏதுக்கடா? - உனக்கு பொய்மை ஏதுக்கடா? - மனிதா புன்னகை புரியாமல் - உனக்கு புதுமையும் ஏதுக்கடா?
|
| 21 | எளிமை கொள்ளாமல் - உனக்கு ஏளனம் ஏதுக்கடா? - மனிதா ஏழ்மை கொல்லாமல் - உனக்கு ஏற்றம் ஏதுக்கடா?
|
| 22 | அச்சம் ஏதுக்கடா? - உனக்கு ஆண்மை ஏதுக்கடா? - மனிதா பிச்சைப் பொருளாலே - உனக்கு பிழைப்பும் ஏதுக்கடா?
|
| 23 | உழைப்பே இல்லாமல் - உனக்கு உணவும் ஏதுக்கடா? - மனிதா பிழைப்பே இல்லாமல் - உனக்கு பேச்சும் ஏதுக்கடா?
|
| 24 | புனிதம் ஏதுக்கடா? - உனக்கு புத்தியும் ஏதுக்கடா? - மனிதா மனிதம் மதிக்காமல் - உனக்கு மாண்பும் ஏதுக்கடா?
|
| 25 | மயக்கம் ஏதுக்கடா? - உனக்கு மவுனம் ஏதுக்கடா? - மனிதா தயக்கம் ஏதுக்கடா - உனக்கு தைரியம் ஏதுக்கடா?
|
| 26 | உயிரினை மதிக்காமல் - உனக்கு உணர்வுகள் ஏதுக்கடா? - மனிதா உரிமையை மதிக்காமல் - உனக்கு விடுதலை* ஏதுக்கடா? * சுதந்திரம்
|
| 27 | பெருமையை துதிக்காமல் - உனக்கு பிறப்பும் ஏதுக்கடா? - மனிதா உறவினை மதிக்காமல் - உனக்கு சிறப்பும் ஏதுக்கடா?
|
| 28 | பிரிவுகள் ஏதுக்கடா? - உனக்கு பிளவுகள் ஏதுக்கடா? - மனிதா விருப்புகள் குறையாமல் - உனக்கு வெறுப்புகள் ஏதுக்கடா?
|
| 29 | சிறகுகள் இல்லாமல் - உனக்கு சிறைகள் ஏதுக்கடா? - மனிதா வரையறை இல்லாமல் - உனக்கு வேட்கை ஏதுக்கடா?
|
| 30 | உதவிகள் செய்யாமல் - உனக்கு உடலும் ஏதுக்கடா? - மனிதா உயர்வினை அடையாமல் - உனக்கு உளமும் ஏதுக்கடா?
|
| 31 | சீர்மை படையாமல் - உனக்குச் சிந்தனை ஏதுக்கடா? - மனிதா மூர்க்கம் உடையாமல் - உனக்கு வந்தனை ஏதுக்கடா?
|
| 32 | மேன்மை அடையாமல் - உனக்கு மெத்தனம் ஏதுக்கடா? - மனிதா மேதமை அடையாமல் - உனக்கு தத்துவம் ஏதுக்கடா?
|
| 33 | கேண்மை பிடிக்காமல் - உனக்கு கேள்வி ஏதுக்கடா? - மனிதா கீழ்மை தடுக்காமல் - உனக்கு கேளிக்கை ஏதுக்கடா?
|
| 34 | ஆட்டம் ஏதுக்கடா? - உனக்கு அகந்தை ஏதுக்கடா? - மனிதா பாட்டம் ஏதுக்கடா? - உனக்கு பற்றும் ஏதுக்கடா?
|
| 35 | வாக்கே தெளியாமல் - உனக்கு வாட்டம் ஏதுக்கடா? - மனிதா வஞ்சகம் ஒழியாமல் - உனக்கு ஓட்டும் ஏதுக்கடா?
|
| 36 | ஆக்கம் புரியாமல் - உனக்கு ஆத்திரம் ஏதுக்கடா? - மனிதா நோக்கே தெரியாமல் - உனக்கு வாழ்க்கை ஏதுக்கடா? |
| *** | |
Labels:
Philosophy,
Social,
Tamil Marabu,
சமூகம்,
தத்துவம்,
மரபு,
வாழ்க்கை
Subscribe to:
Posts (Atom)




