உ
குடி!
- உத்தமபுத்திரா புருஷோத்தம்
17-Mar-2020
மது-விற்கும் குடி-என்று பேர் - எங்கள்
மாநில-மாளும் மாந்தர்க்கும் குலத்திற்கும் பேர்!
மது-விற்கும் குடி-என்று பேர் - எங்கள்
மாநில-மாளும் மடையர்க்கும் கடையர்க்கும் பேர்!
மது-விற்கும் குடி-என்று பேர் - எங்கள்
மாநில-மாள வரவிற்கும் செலவிற்கும் நேர்!
மது-விற்கும் குடி-என்று பேர் - எங்கள்
மாநில-மான உயர்விற்கும் தாழ்விற்கும் வேர்! 1
மதுவிற்கும் குடியென்று பேர் - எங்கள்
மாந்தரார் குடிமையால் பலியாகும் ஊர்!
மதுவிற்கும் குடியென்று பேர் - எங்கள்
மாதரார் மடமையால் பழியாகும் சீர்!
மதுவிற்கும் குடியென்று பேர் - எங்கள்
மாநில அடிமைக்கும் மடிமைக்கும் தூர்!
மதுவிற்கும் குடியென்று பேர் - எங்கள்
மாநுட போதைக்கும் வாதைக்கும் வேர்! 2
மதுவிற்கும் குடியென்று பேர் - எங்கள்
மாநிலம் அயர்வால் மதிகொல்லும் கூர்!
மதுவிற்கும் குடியென்று பேர் - எங்கள்
மாநிலம் துயரால் பழிசொல்லும் தேர்!
மதுவிற்கும் குடியென்று பேர் - எங்கள்
மாநிலம் அயலார் பழுதாக்கும் சேர்!
மதுவிற்கும் குடியென்று பேர் - எங்கள்
மாநிலம் பயனிலா விழலாக்கும் போர்! 3
மதுவிற்கும் விடமென்று பேர் - உண்டால்
மனதிற்கும் உடலிற்கும் கேடாகும் வேர்!
மதுவிற்கும் தீதென்று பேர் - உண்டால்
அறிவிற்கும் திறனுக்கும் அடங்காத பேய்!
மதுவிற்கும் சரக்கென்று பேர் - உண்டால்
குணத்திற்கும் பணத்திற்கும் உலையாகும் நோய்!
மதுவிற்கும் கள்ளென்று பேர் - உண்டால்
அழிவிற்கும் இழிவிற்கும் தலையாகும் பாழ்! 4
இல்லார்க்கும் குடியென்று பேர் - மக்கள்
இருப்பிற்கும் இரப்பார்க்கும் யாதுக்கும் பேர்!
கள்ளிற்கும் குடியென்று பேர் - குடியில்
கல்லார்க்கும் கற்றார்க்கும் யாவர்க்கும் நேர்!
கள்ளுண்டு சிறக்குமோ பார்? - குடியால்
களிப்புண்டு மிதக்கையில் கடமைக்கு யார்?
தள்ளாடிப் பிறக்குமோ நேர்? - குடியால்
தடையுண்டு கிடக்கையில் உதிக்குமோ சீர்? 5
பருகற்கும் குடியென்று பேர் - தாகத்தில்
அருந்தற்கும் மிடறுக்கும் அவசியம் நீர்!
வருகைக்கும் குடியென்று பேர் - படைத்துத்
தருகைக்கும் பெருகைக்கும் தவறாது நீர்!
திருவிற்கும் குடிலென்று பேர் - தெய்வம்
அருவிற்கும் கருவிற்கும் அமிழ்தென்றே பேர்!
மறுமைக்கும் விடிவென்று பேர் - குடியை
மறுத்தற்கும் விடுகைக்கும் தெளிவொன்றே வேர்! 6
நீரின்றி அமையாது உலகு! - வான்
நெருப்போடு காற்றில் உயிர்க்கேது அலகு?
காரின்றி விளையாது உழவு! - குடிமை
கழனியில் ஏரின்றி கொய்வதே(து) உய்வு?
வேரின்றி நிலையாது அரசு! - குடிமை
சீரின்றி நெறியாது சிறக்குமோ அரசு?
நேரின்றி தழையாது புனிதம்! - குடிமை
சீரன்றி ஒழுகாது செழிக்குமோ மனிதம்? 7
மது குடியைக் கெடுக்கும்!
மதுப் பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும்!
* முற்றும் *
No comments:
Post a Comment