Tuesday, April 20, 2010

துன்பம் - ஐம்பது

துன்பம் - ஐம்பது


1. அன்பின்மை துன்பம்:
அன்பிலா மாந்தர் மண்ணில் துன்பம்;
     அவர்தம் கையால் உண்பதும் துன்பம்;
தெம்பிலா நெஞ்சால் தெளிவதும் துன்பம்;
     திடமிலா உடலால் விளைவதும் துன்பம்;
இன்பிலா வாழ்வும் வளமும் துன்பம்;
     இசைவிலாத் துணையும் மொழியும் துன்பம்;
முன்செலாத் தொழிலும் உழைப்பும் துன்பம்;
     முனைப்பிலா மனமும் தினமும் துன்பம்;

2. பொறாமை துன்பம்:
நம்பிக்கை சிதைக்கும் நண்பரும் துன்பம்;
     நன்றியை மறக்கும் அன்பரும் துன்பம்;
வம்பினை வளர்க்கும் வஞ்சகர் துன்பம்;
     வளத்தினைப் பொருமும் நெஞ்சகர் துன்பம்;
வெம்பியே கருக்கும் சொந்தம் துன்பம்;
     வேதனை பெருக்கும் பந்தம் துன்பம்;
தும்பினை விளைக்கும் போதனை துன்பம்;
     துடிப்பினைக் குலைக்கும் சோதனை துன்பம்;

(தும்பு = கறை, குற்றம்)

3. குறைகள் துன்பம்:
இங்கிதம் இல்லா மனிதரும் துன்பம்;
     இளமையில் வறுமை என்பதும் துன்பம்;
சங்கடப் படுத்தும் நிந்தனை துன்பம்;
     சஞ்சலப் படுத்தும் சிந்தனை துன்பம்;
பங்கிடை வைக்கும் பேதம் துன்பம்;
     பழமையை வைய்யும் வாதம் துன்பம்;
எங்கும் நிறைக்கும் மாசும் துன்பம்;
     எதிலும் தொலையாத் தூசும் துன்பம்;

4. விரிசல்கள் துன்பம்:
இம்சித்துத் தள்ளும் இல்லம் துன்பம்;
     இணக்கம் இல்லாச் சொல்லும் துன்பம்;
சம்மதம் இன்றிப் புணர்தலும் துன்பம்;
      சண்டை நிறைந்த இல்லறம் துன்பம்;
மமதை பெறுக்கும் மனையும் துன்பம்;
      மதிக்க மறுக்கும் துணையும் துன்பம்;
வமிசம் இல்லா வாழ்க்கை துன்பம்;
      வஞ்சகம் கொள்ளும் சேர்க்கை துன்பம்;

5. அழிவுகள் துன்பம்:
வழியினை அழித்து வாழுதல் துன்பம்;
     விழியினை இழந்து வீழுதல் துன்பம்;
இழிவினைக் கண்டு சகித்தல் துன்பம்;
     இழவினைக் கொண்டு சுகித்தல் துன்பம்;
அழிவினை பெருக்கும் யுத்தம் துன்பம்;
     அறவினை சருக்கும் சட்டம் துன்பம்;
மொழியினைப் பழிக்கும் மூடரும் துன்பம்;
      செழுவினை அழிக்கும் சீடரும் துன்பம்;

6. குழப்பம் துன்பம்:
அலையாய்ப் பரவும் அவலம் துன்பம்;
     மலையாய்த் தெரியும் கவலை துன்பம்;
தலையாய்க் கலங்கும் பிரிவும் துன்பம்;
     தொலையாய் மலங்கும் உறவும் துன்பம்;
கலையாய்த் திறம்பும் உளவும் துன்பம்;
     கருவாய் அரும்பும் களவும் துன்பம்;
நிலையாய் விளங்கும் களங்கம் துன்பம்;
      நிழலாய்த் தொடரும் கலக்கம் துன்பம்;

(திறம்பு=பிறழ், மாறுபடு)

7. வறட்சி துன்பம்:
மழையிலா மண்ணில் வாழ்பவை துன்பம்;
     கலையிலாக் கண்ணில் காண்பவை துன்பம்;
மொழியிலா ஊமையின் அழுகை துன்பம்;
     நிலையிலா வேலையில் உழல்கை துன்பம்;
அழிவிலாத் தீமையை உள்ளுதல் துன்பம்;
     தலையிலாச் சேனையைக் கொள்ளுதல் துன்பம்;
விழியிலாக் கண்ணில் அழகெலாம் துன்பம்;
     விலையிலா வாழ்வில் இழிவதே துன்பம்;

8. வினைகள் துன்பம்:
அச்சம் துன்பம்; அறிவால் கிட்டா
     உச்சம் துன்பம்; அடிமை கொள்ளும்
இச்சம் துன்பம்; அறிவை இழந்த
     குச்சம் துன்பம்; அணையா நெருப்பில்
மிச்சம் துன்பம்; அழியாக் கடனுள்
      சொச்சம் துன்பம்; அறிந்தும் மதியா
துச்சம் துன்பம்; அகந்தை மிகுத்த
     எச்சம் துன்பம்; ஒச்சம் துன்பம்;

(இச்சம் = விருப்பம்;, குச்சம் = புறங்கூறல், துச்சம் = சிறுமை, எச்சம் - வாரிசு, ஒச்சம் - பழுது)

9. விரோதம் துன்பம்:
அட்டம் துன்பம்; அடிமைப் படுத்தும்
     சட்டம் துன்பம்; அழிவைக் கொடுக்கும்
திட்டம் துன்பம்; அறவழி கெடுக்கும்
     நுட்பம் துன்பம்; அகந்தையில் ஆடும்
கொட்டம் துன்பம்; அற்ப எண்ணத்துத்
     திட்பம் துன்பம்; அறிவிலி மாந்தரின்
வட்டம் துன்பம்; ஆணவ மனிதரின்
      ஆட்டம் துன்பம்; நாட்டம் துன்பம்;

(அட்டம் = பகைமை, விரோதம்)

10. தொல்லை துன்பம்:
குடித்தல் துன்பம்; குழந்தையை மனைவியை
     அடித்தல் துன்பம்; கொடிய புகையினைப்
பிடித்தல் துன்பம்; குலைக்கும் பிணியால்
     துடித்தல் துன்பம்; குறைகள் நிறைந்து
நடித்தல் துன்பம்; பேணிய சொத்தைக்
     கெடுத்தல் துன்பம்; போலிக் கண்ணீர்
வடித்தல் துன்பம்; உரிமையை மறுத்தல்
     தடுத்தல் துன்பம்; படுத்தல் துன்பம்;

11. வஞ்சனை துன்பம்:
பழித்தல் துன்பம்; பகையோர் எனினும்
     இழித்தல் துன்பம்; பண்பைக் கொன்று
விழித்தல் துன்பம்; பாதையை அழித்து
     ஒழித்தல் துன்பம்; பதவியில் ஒதுக்கிச்
செழித்தல் துன்பம்; பாமர மக்களை
     மழித்தல் துன்பம்; பாவக் கணக்கில்
கொழித்தல் துன்பம்; பணியில் வீணாய்க்
     கழித்தல் துன்பம்; கிழித்தல் துன்பம்;

(இழித்தல் = இறக்குதல், கீழ்ப்படுத்துதல், விழித்தல் = அழைத்தல், மழித்தல் = மொட்டையாக்கல்)

12. வருத்துதல் துன்பம்:
பதைத்தல் துன்பம்; பதைக்கும் உயிரினை
     வதைத்தல் துன்பம்; பணியா மகவை
உதைத்தல் துன்பம்; படைத்த சிலைகளைச்
     சிதைத்தல் துன்பம்; பழியை முனைந்து
விதைத்தல் துன்பம்; பொருந்தார் புகழினைப்
     புதைத்தல் துன்பம்; புன்மை வளர்த்துக்
கதைத்தல் துன்பம்; புகையும் பகையினில்
     கொதித்தல் துன்பம்; மிதித்தல் துன்பம்;

13. அறியாமை துன்பம்:
வாடுதல் துன்பம்; வலி அறியாது
     நாடுதல் துன்பம்; திறமைகள் இன்றித்
தேடுதல் துன்பம்; தெய்வம் இகழ்ந்து
     சாடுதல் துன்பம்; திசை தெரியாது
ஓடுதல் துன்பம்; தெளிவே இலாது
     ஓதுதல் துன்பம்; விளையும் காதலை
மூடுதல் துன்பம்; பிழையாய்ப் பாடல்
     பாடுதல் துன்பம், ஆடுதல் துன்பம்;

14. சுகவீனம் துன்பம்:
சோகம் துன்பம்; சுவை இழிந்த
     மோகம் துன்பம்; சுதந்திரம் அழிந்த
போகம் துன்பம்; சுளுவில் ஒழியா
     ரோகம் துன்பம்; சுருதி குலைந்த
ராகம் துன்பம்; சுகித்தும் அழியாத்
     தாகம் துன்பம்; சுகத்தை இழந்த
வேகம் துன்பம்; சுபத்தை நல்கா
     ஊகம் துன்பம்; பாகம் துன்பம்;

15. ஒழுங்கீனம் துன்பம்:
மோதல் துன்பம்; முனைந்து அறியா
     ஓதல் துன்பம்; இணைந்து புரியாக்
காதல் துன்பம்; வாழத் தெரியாச்
     சாதல் துன்பம்; வகையும் அறியா
ஈதல் துன்பம்; வருத்திக் குலைக்கும்
     கூதல் துன்பம்; வாடைக் காற்றில்
ஊதல் துன்பம்; வளமை கெடுக்கும்
     வாதும் துன்பம்; சூதும் துன்பம்;

16. துர்பார்வை துன்பம்:
கோபம் துன்பம்; குறுகிய எண்ணக்
     கோடல் துன்பம்; குரவர் இட்ட
சாபம் துன்பம்; குட்டன் தவறைச்
     சாடல் துன்பம்; குன்றி மறையாத்
தாபம் துன்பம்; குறிக்கோள் அற்ற
     தேடல் துன்பம்; குற்றம் உற்ற
லாபம் துன்பம்; குறுகிக் குமுறும்
     வாடல் துன்பம்; மூடல் துன்பம்;

17. பழுதுகள் துன்பம்:
ஆசை துன்பம்; அற்ப குணத்தோர்
     நேசம் துன்பம்; அலறிக் கதறும்
ஓசை துன்பம்; அழிவை நல்கும்
     பாசம் துன்பம்; அகிம்சை அல்லாப்
பூசை துன்பம்; அறவழி பிறழ்ந்த
     காசும் துன்பம்; அழகு மடந்தை
மீசை துன்பம்; அழுக்கு நிறைந்த
     தேசம் துன்பம்; சேதம் துன்பம்;

18. தீயெண்ணம் துன்பம்:
வினைத்தல் துன்பம்; கண்களில் நீரினைப்
     பனித்தல் துன்பம்; கருத்தினைப் பிறர்பால்
திணித்தல் துன்பம்; கவனம் இல்லாக்
     கணித்தல் துன்பம்; கைகளைப் புறத்தே
பிணித்தல் துன்பம்; கௌரவம் அஞ்சாத்
     துணித்தல் துன்பம்; களங்கம் உற்றதை
நினைத்தல் துன்பம்; பொருத்தம் அற்றதைப்
     பிணைத்தல் துன்பம்; இணைத்தல் துன்பம்;

19. உழற்சி துன்பம்:
சிக்கல் துன்பம்; சிக்கா நீரால்
     விக்கல் துன்பம்; விலகா வலியால்
முக்கல் துன்பம்; முனைந்து தொடரா
     மக்கள் துன்பம்; விரைந்து உதவாச்
சுற்றம் துன்பம்; படுத்தும் சொத்தைப்
     பற்கள் துன்பம்; பயன்கள் அற்ற
சொற்கள் துன்பம்; பாதை முடக்கும்
     கற்கள் துன்பம்; முட்கள் துன்பம்;

20. ஏழ்மை துன்பம்:
உண்மை இல்லாத ஊரும் துன்பம்;
     உயர்வு இல்லாத பேரும் துன்பம்;
தண்மை இல்லாத தரையும் துன்பம்;
     தடுப்பாய் இல்லாத கரையும் துன்பம்;
திண்மை இல்லாத ஆண்மை துன்பம்;
     திடமாய் இல்லாத வண்மை துன்பம்;
மென்மை இல்லாத பெண்மை துன்பம்;
     மேன்மை இல்லாத எண்ணம் துன்பம்;

21. தீமைகள் துன்பம்:
இன்மையைப் பழிக்கும் இகழ்ச்சி துன்பம்;
     இயற்கையை அழிக்கும் முயற்சி துன்பம்;
நன்மையைக் கலைக்கும் வழக்கம் துன்பம்;
     நயத்தினைக் குலைக்கும் பழக்கம் துன்பம்;
தொன்மையை மறக்கும் நிலையும் துன்பம்;
     துயரினைப் பெருக்கும் கலையும் துன்பம்;
வன்மையை இழைக்கும் இயற்கை துன்பம்;
     வயத்தினை இழக்கும் செயற்கை துன்பம்;

22. பொய்கள் துன்பம்:
தாய்மை இழந்த சேய்மை துன்பம்;
     தலைமை இழந்த கைம்மை துன்பம்;
வாய்மை வழுக்கும் வாழ்த்தும் துன்பம்;
      வஞ்சிக் கொழுக்கும் வாழ்வும் துன்பம்;
பொய்மை செழிக்கும் நகலும் துன்பம்;
     போதை இழைக்கும் புகழும் துன்பம்;
தூய்மை தொலைக்கும் நியாயம் துன்பம்;
     துயரம் விளைக்கும் நேர்மை துன்பம்;

23. காலிகள் துன்பம்:
உரிமை மறுக்கும் ஆட்சி துன்பம்;
      உயர்வை அறுக்கும் வீழ்ச்சி துன்பம்;
கருணை தொலைக்கும் காட்சி துன்பம்;
      கருவைக் கலைக்கும் மாட்சி துன்பம்;
பொறுமை இழக்கும் மனமும் துன்பம்;
      புரிதல் இல்லாத் துணையும் துன்பம்;
சிறுமை புரியும் வீணர் துன்பம்;
      சிரிக்க மறந்த மாக்கள் துன்பம்;

24. மயக்கம் துன்பம்:
புகழ்ச்சிக்கு மயங்கும் மேதமை துன்பம்;
     இகழ்சிக்கு வருந்தும் பேதமை துன்பம்;
அளவுக்கு மிஞ்சிய அமிர்தமும் துன்பம்;
     வரவுக்கு மிஞ்சிய செலவும் துன்பம்;
விழலுக்கு இறைத்த வெள்ளமும் துன்பம்;
     வேதனை நிறைத்த உள்ளமும் துன்பம்;
ஒழுக்கம் வழுவிய நடத்தையும் துன்பம்;
     உண்மை நழுவிய இடத்தேயும் துன்பம்;

25. குற்றங்கள் துன்பம்:
வீட்டை அழிக்கும் வேட்கை துன்பம்;
     நாட்டைப் பழிக்கும் நாக்கும் துன்பம்;
காட்டை ஒடுக்கும் வினையும் துன்பம்;
     காட்டிக் கொடுக்கும் கயமை துன்பம்;
சேட்டை படைக்கும் பகைமை துன்பம்;
     பூட்டை உடைக்கும் தகைமை துன்பம்;
மூட்டை கடிக்கும் அவையும் துன்பம்;
     மாட்டை அடிக்கும் சுவையும் துன்பம்;

26. அழுக்குகள் துன்பம்:
பொறாமை உறையும் மனசும் துன்பம்;
     புத்தியில் நிறையும் மாசும் துன்பம்;
வறுமையில் உழலும் வீடும் துன்பம்;
     வறட்சியில் எரியும் காடும் துன்பம்;
மாறும் உலகை மறுப்பதும் துன்பம்;
     மாநிலம் உழவை மறப்பதும் துன்பம்;
நாறும் சூழலில் வாழ்வதும் துன்பம்;
     நடை பாதையில் உமிழ்வதும் துன்பம்;

27. ஒவ்வாமை துன்பம்:
ஊளை இடுகிற நாய்கள் துன்பம்;
     ஓலம் இடுகிற கோட்டான் துன்பம்;
வேளை கெட்ட உணவும் துன்பம்;
     விபரம் கெட்ட துணையும் துன்பம்;
மூளை இல்லா ஆக்கம் துன்பம்;
     ;முயற்சியே இல்லாப் போக்கும் துன்பம்;
சாலை இல்லாப் பயணம் துன்பம்;
     சம்மதம் இல்லாக் குழுமம் துன்பம்;

28. உலோபம் துன்பம்:
ஈகை மறுக்கும் இதயம் துன்பம்;
     இன்மை விளைக்கும் உதயம் துன்பம்;
பகை வளர்க்கும் மனமும் துன்பம்;
     பண்பை இழக்கும் தினமும் துன்பம்;
சூது நிறைக்கும் எண்ணம் துன்பம்;
     சோர்வைப் பெருக்கும் உள்ளம் துன்பம்;
நீதி மறைக்கும் நெஞ்சம் துன்பம்;
     நேர்மை குலைக்கும் வஞ்சம் துன்பம்;

29. சகிப்பின்மை துன்பம்:
இன்னல் மன்னும் இல்லம் துன்பம்;
     இருமனம் ஒன்றாத் திருமணம் துன்பம்;
கன்னல் கசக்கும் சொல்லும் துன்பம்;
     கருவம் மிதக்கும் உள்ளம் துன்பம்;
முன்னர் பின்னர் முரணும் துன்பம்;
     மூடி மறைக்கும் குறையும் துன்பம்;
சன்னல் இல்லா அறையும் துன்பம்;
     சகிப்பைக் கொள்ளா உலகும் துன்பம்;

30. கழிவிரக்கம் துன்பம்:
வதுவையின் போது மடமை துன்பம்;
     முதுமையின் போது தனிமை துன்பம்;
கைதியின் தலையில் சிறைதான் துன்பம்;
     கையறு நிலையில் வையமும் துன்பம்;
கதைத்தவை எண்ணில் கசப்பின் துன்பம்;
     கடந்தவை மண்ணில் நிலைப்பின் துன்பம்;
உதவிகள் இல்லா உயிரும் துன்பம்;
     உறவுகள் இல்லா உலகும் துன்பம்;

31. பேராசை துன்பம்:
போலிகள் துன்பம்; காலிகள் துன்பம்;
     பொலிவை இழந்த மேனியும் துன்பம்;
வேலியே பயிரினை மேய்வதும் துன்பம்;
     வேதனை தருகிற சொத்தும் துன்பம்;
காளையர் ஆடும் ஆட்டம் துன்பம்;
     கடனில் மூழ்கும் ஓட்டம் துன்பம்;
தேவைகள் இன்றிக் கொள்வதும் துன்பம்;
     தேவைக்கு வாராத வசதியும் துன்பம்;

32. கொடுங்கோன்மை துன்பம்:
உருட்டலும் துன்பம்; கொள்ளை அடித்துச்
     சுருட்டலும் துன்பம்; கள்ளச் சந்தையில்
வெருட்டலும் துன்பம்; குதிரை பேரத்தில்
     விரட்டலும் துன்பம்; அவதூறு சொல்லி
அரட்டலும் துன்பம்; பணத்தால் ஆதரவு
     திரட்டலும் துன்பம்; கயமை வழிகளில்
புரட்டலும் துன்பம்; கால்களை வாரி
     மிரட்டலும் துன்பம்; மருட்டலும் துன்பம்;

33. கொடியரசு துன்பம்:
இரக்கம் இல்லா அரசும் துன்பம்;
     இரங்கல் பாடும் தலைமையும் துன்பம்;
வரிகளைப் பெருக்கும் அரசும் துன்பம்;
     வாரிசு அரசியல் தலைமையும் துன்பம்;
நரித்தனம் செய்யும் அரசும் துன்பம்;
     நாடகம் ஆடும் தலைமையும் துன்பம்;
பிரிவினை வளர்க்கும் அரசும் துன்பம்;
     பேச்சால் மழுப்பும் தலைமையும் துன்பம்;

34. தறுதலை துன்பம்:
கறுப்புப் பணத்துத் தலைமை துன்பம்;
     கருத்தைத் திருப்பும் கயமை துன்பம்;
பொறுப்பு இல்லாத் தலைமை துன்பம்;
     பொய்யில் வெல்லும் முறைமை துன்பம்;
தறுக்கிக் திகழும் தலையும் துன்பம்;
     தனக்கெனக் கொழுகும் சிலையும் துன்பம்;
பொறுக்கிப் பிழைக்கும் தலையும் துன்பம்;
     பொருண்மை இல்லா உரையும் துன்பம்;

35. பகைமை துன்பம்:
அண்டை நாட்டில் இராணுவம் துன்பம்;
     அடிப்படைப் பிழையால் தொடரும் துன்பம்;
சண்டையில் குளிரும் தந்திரம் துன்பம்;
     சந்தினில் முந்தலும் சிந்தலும் துன்பம்;
கொண்டையில் ஈரும் பேனும் துன்பம்;
     குடும்பத்துள் நாறும் போரும் துன்பம்;
பண்டையில் இருந்தே பகைதான் துன்பம்;
     பங்கெனில் ஊரும் நீரும் துன்பம்;

36. திறமையின்மை துன்பம்:
முன்னேற்றம் இல்லா அரசால் துன்பம்;
     மூடும் தொழில்வள ஆட்சியும் துன்பம்;
தன்னிறை அடையா நாடும் துன்பம்;
     தரத்தினில் முடைப்படும் வீடும் துன்பம்;
கற்பினைப் போற்றா மானுடம் துன்பம்;
     கல்வியை உயர்த்தா மாநிலம் துன்பம்;
வெளிப்படை இல்லா ஆட்சியும் துன்பம்;
     வெறுமையில் களிக்கும் சூட்சியும் துன்பம்;

37. பித்தர்கள் துன்பம்:
முழுவதும் அறியா மடமை துன்பம்;
     முனைப்பாய் ஒழுகாக் கடமை துன்பம்;
அழுவதும் குறையா நிலைமை துன்பம்;
     அணைத்துச் செல்லாத் தலைமை துன்பம்;
அழிவால் நிறையும் வெறுமை துன்பம்;
     அறிவால் பெருக்காத் திறமை துன்பம்;
பழியால் தொடரும் இடர்கள் துன்பம்;
     பலியால் அடையும் பயன்கள் துன்பம்;

38. எத்தர்கள் துன்பம்:
தானெனும் அகந்தை என்றுமே துன்பம்;
     தம்பியின் பணத்தில் தானம் துன்பம்;
பொதுநலம் கெடுக்கும் கொள்கை துன்பம்;
     சுயநலம் பெருக்கும் தன்மை துன்பம்;
ஒதுக்கலில் பதுக்கலில் என்றுமே துன்பம்;
      உறவுக்கே சலுகை என்பதும் துன்பம்;
பிதற்றலைக் காவியம் என்பது துன்பம்;
     கிறுக்கலை ஓவியம் என்பது துன்பம்;

39. நேர்மையின்மை துன்பம்:
சோற்றுக்குப் பாடும் புலமை துன்பம்;
     சுகத்துக்கு ஆடும் கயமை துன்பம்;
வேற்றுமை போற்றும் மனமும் துன்பம்;
     விவரத்தை மறைக்கும் குணமும் துன்பம்;
நாற்றுக்குச் செயற்கை உரமும் துன்பம்;
     நல்லதைக் கெடுக்கும் கரமும் துன்பம்;
தோற்றத்தைத் தருகிற பொய்மை துன்பம்;
     துரோகித்துப் பெறுகிற வளமை துன்பம்;

40. தகுதியின்மை துன்பம்:
குறைகளைக் களையும் குற்றம் துன்பம்;
     குதிருக்குள் மறையும் புதிர்களும் துன்பம்;
சிறைகளை நிறைக்கும் சீற்றம் துன்பம்;
     செய்ததை மறைக்கும் பேச்சும் துன்பம்;
நிறையினை மறுக்கும் போக்கும் துன்பம்;
     நிச்சயம் இல்லாத வாக்கும் துன்பம்;
வறுமையைக் களையாத வாழ்க்கை துன்பம்;
     வரன் அமையாத மாந்தரும் துன்பம்;

41. தரமின்மை துன்பம்:
திருத்தம் இல்லாச் செய்வினை துன்பம்;
     திரித்துப் பரப்பும் செய்திகள் துன்பம்;
பொருத்தம் இல்லாப் பெருமை துன்பம்;
     புரவல் நாடகச் சிறுமை துன்பம்;
கருத்தும் இல்லாக் கவிதை துன்பம்;
      கருணை இல்லா இதயம் துன்பம்;
கரித்தும் பழிக்கும் உரைகள் துன்பம்;
     கண்ணியம் இல்லா முறைகள் துன்பம்;

42. இழப்புகள் துன்பம்:
இலக்கை இழந்த இயக்கம் துன்பம்;
     இதயம் இழந்த காதல் துன்பம்;
இருக்கை இழந்த அலுவல் துன்பம்;
     இரவில் இழந்த தூக்கம் துன்பம்;
உடுக்கை இழந்த மேடை துன்பம்;
     உதவி இழந்த குழுமம் துன்பம்;
வாய்ப்பை இழந்த வாழ்க்கை துன்பம்;
     வருகை இழந்த சந்தை துன்பம்;

43. பித்தலாட்டம் துன்பம்:
அறமற்றுத் திரிபுகளை ஏற்றுதல் துன்பம்;
     அறிவற்று ஆண்டுகளை மாற்றுதல் துன்பம்;
முறையற்ற திட்டங்களைப் புகுத்துதல் துன்பம்;
     முடிவற்ற கடன்களைப் பெருக்குதல் துன்பம்;
திறனற்று உரிமைகளைச் சொதப்புதல் துன்பம்;
     திடமற்று வீரங்களை முழக்குதல் துன்பம்;
குறையுற்று இருளினில் புதைத்தல் துன்பம்;
     குளிரற்றுச் சிறுமையில் வதைத்தல் துன்பம்;

44. இயலாமை துன்பம்:
அல்லாமை, அறியாமை, அடங்காமை துன்பம்;
     ஆற்றாமை, தேற்றாமை, ஊற்றாமை துன்பம்;
இல்லாமை, பொல்லாமை, நில்லாமை துன்பம்;
     இயலாமை, முயலாமை, தள்ளாமை துன்பம்;
உள்ளாமை, உறங்காமை, உதவாமை துன்பம்;
     உன்னாமை, உண்ணாமை, உயராமை துன்பம்;
கல்லாமை, கொள்ளாமை, ஈயாமை துன்பம்;
     கனியாமை, இனியாமை, கதையாமை துன்பம்;

45. பொல்லாமை துன்பம்:
எண்ணாமை, எழுகாமை, எழுதாமை துன்பம்;
     திண்ணாமை, தெரியாமை, தொடராமை துன்பம்;
வல்லாமை, வளராமை, வறியாமை துன்பம்;
     வள்ளாமை, வருகாமை, புலராமை துன்பம்;
பொல்லாமை, பொறாமை, புரியாமை துன்பம்;
     பற்றாமை, படராமை, பெருகாமை துன்பம்;
துள்ளாமை, துடிக்காமை, பிடிக்காமை துன்பம்;
     படிக்காமை, நடக்காமை, நடவாமை துன்பம்;

46. கேடுகள் துன்பம்:
கொலையும் களவும் புலையும் துன்பம்;
     குறையும் தனமும் அழகும் துன்பம்;
அலையும் மனமும் தினமும் துன்பம்;
     அலறும் பதறும் குணமும் துன்பம்;
அழுகும் காயும் கனியும் துன்பம்;
     அழியும் கலையும் சிலையும் துன்பம்;
உலரும் கருகும் மலரும் துன்பம்;
     உதிரும் சருகும் கனவும் துன்பம்;

47. புகைச்சல் துன்பம்:
சினமும் செருக்கும் பகையும் துன்பம்;
     சிகையும் சடையும் புகையும் துன்பம்;
எரியும் வனமும் பிணமும் துன்பம்;
     எகிரும் பணமும் குணமும் துன்பம்;
பிளிறும் களிரும் விடையும் துன்பம்;
     பிடியும் தளரும் நடையும் துன்பம்;
அகமும் புறமும் அழுக்கே துன்பம்;
     அறிவில் நிறையும் பழுதே துன்பம்;

48. சுமைகள் துன்பம்:
எண்ணில் எதிர் பார்ப்பும் துன்பம்;
     ஏலாச் சுமை சேர்ப்பும் துன்பம்;
பொன்னும் பெண்ணும் மண்ணும் துன்பம்;
     பொருளும் அறியா வாழ்வும் துன்பம்;
இன்மை விலகாத் தன்மையும் துன்பம்;
     இன்னா செய்யும் எண்ணமும் துன்பம்;
நன்மை அறியாப் பார்வையும் துன்பம்;
     நல்லவை புரியா வாழ்க்கையும் துன்பம்;

49. தெளிவின்மை துன்பம்:
துணிவு இல்லா முயற்சியே துன்பம்;
     பணிவு இல்லாப் பயிற்சியே துன்பம்;
கனிவு இல்லாச் சொல்லே துன்பம்;
     இனிமை இல்லா வாழ்வே துன்பம்;
தெளிவு இல்லா அறிவே துன்பம்;
     திறமை இல்லாக் குறையே துன்பம்;
முழுமை இல்லா எதுவுமே துன்பம்;
     முறைமை இல்லா மனமே துன்பம்;

50. விடையின்மை துன்பம்:
படிதல் இல்லா மகவே துன்பம்;
     பக்குவம் இல்லா மூப்பே துன்பம்;
பிடிதல் இல்லா விடுப்பே துன்பம்;
     விடுதல் இல்லாப் பிடிப்பே துன்பம்;
விடிவும் இல்லா வினையே துன்பம்;
     விடையும் இல்லா வினாவே துன்பம்;
முடிவும் இல்லாக் காதையே துன்பம்;
     முக்தியும் இல்லாப் பாதையே துன்பம்;

***

தெரிநிலை நூறு

தெரிநிலை நூறு


(குறிப்பு: ”இன்பம் ஐம்பது” மற்றும் ”துன்பம் ஐம்பது” எனும் இரு கவிதைகளுக்கான பாயிரம் இஃது.)

பாயிரம்:

இறைக் காப்பு:

இன்பமும் துன்பமும் இருவரை நூறாய்
கன்னித் தமிழில் கருத்தொடு எண்ணிக்
கன்னற் சுவையொடு காதலில் மொழிய
அன்னை அப்பனே கா!

இன்பமும் துன்பமும் இலங்கிடும் இகத்தில்
பன்னிய தெரிநிலைப் பாவாய் நூறாய்
மின்னிய எண்ணம் மெய்மையில் உரைக்க
அன்னைத் தமிழே வா!

***

முகவுரை:

இன்பமும் துன்பமும் இணைந்தநல் வாழ்வினில்
      இயம்பினன் பாரதி “எத்தனை கோடி
இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா!”
      இன்பத்தை எண்ணவும் இயலுமோ என்றே
உன்னித் துணிந்து உளத்தொடு முயன்றோம்;
      எண்ணினால் முடியும்; எண்ணத்தால் முடியும்;
இன்பமும் துன்பமும் இதயத்தின் உணர்வே
      இவையே இகத்தினில் சொர்க்கமும் நரகமும்;

இரவும் பகலும், இருளும் ஒளியும்
      இயற்கையே போலும் இன்பமும் துன்பமும்!
வரவும் செலவும் வாழ்வினில் நிகழும்
      வழிமுறை போலும் வளரும் தேயும்!
பெருகும் நேர்மறை எதிர்மறை எண்ணமும்
      பெறுகும் நலனும் பலனும் இஃதே!
தெரியும் துயரம் யாவையும் ஆதலின்
      தெளிந்து களைதலும் வாழ்வினில் இனிதே!

கருத்தினில் களித்துக் கனன்றவை ஈண்டு
      கனிவுறத் தமிழினில் கழறிட முயன்று
தெரிந்தவை அறிந்தவை தேர்ந்தவை திரட்டி
      திருவினை எண்ணிச் சிவனடி பணிந்து
இருவினை தொடரும் இகபர வாழ்வில்
      இனியவை பாதி இன்னல் மீதமென
தெரிநிலை நூறாய்த் திகழுறப் படைத்தோம்;
      தெளிவுறு மதியினில் திரளுக இன்பம்!

***


காணிக்கை:
அன்பு அன்னைக்கும் ஆருயிர் மைந்தனுக்கும் உரித்தாகுக.

***

Saturday, April 17, 2010

இன்பம் - ஐம்பது

இன்பம் - ஐம்பது


1. அன்பே இன்பம்:
அன்பொடு இகத்தினில் வாழுதல் இன்பம்;
      அறிவொடு நிலத்தினில் ஆளுதல் இன்பம்;
பண்புடை மாந்தராய்த் திகழுதல் இன்பம்;
      பணிவுடை மனிதரைப் புகழுதல் இன்பம்;
தென்றலில் மழையினில் நனைதல் இன்பம்;
      தெளிவுடைக் கவிதை புனைதல் இன்பம்;
வெண்மதி வானில் உலவுதல் இன்பம்;
      நிம்மதி நெஞ்சிடை நிலவுதல் இன்பம்;

2. காதல் இன்பம்:
இரவினில் காதலில் கொஞ்சுதல் இன்பம்;
      இளமையின் களிப்பினில் கெஞ்சுதல் இன்பம்;
அருகினில் சிறகினில் துஞ்சுதல் இன்பம்;
      அருமையில் பெருமையில் மிஞ்சுதல் இன்பம்;
திரையினில் மறைவினில் அஞ்சுதல் இன்பம்;
      திறமையில் பொறுமையில் விஞ்சுதல் இன்பம்;
உரியதோர் மங்கையின் கொங்கையில் இன்பம்;
      உருகிடும் சங்கம கங்கையில் இன்பம்;

3. இல்லறம் இன்பம்:
இசையுற வாழ்வினில் இலங்குதல் இன்பம்;
      இல்லறம் சிறப்புற விளங்குதல் இன்பம்;
பசையுறப் பாரினில் துலங்குதல் இன்பம்;
      பருவத்தில் திருமணம் புரிதலில் இன்பம்;
தசையுறு திடத்தினில் கலக்குதல் இன்பம்;
      தருமத்தின் உயர்வினை விளக்குதல் இன்பம்;
வசையற வாயுரை முழக்குதல் இன்பம்;
      வரவுக்குள் செலவினை அடக்குதல் இன்பம்;

4: நல்லறம் இன்பம்:
அயர்வற மகிழ்வொடு களித்தல் இன்பம்;
      அவதிக்கு நெகிழ்வொடு அளித்தல் இன்பம்;
உயர்வுறக் கருத்தொடு நினைத்தல் இன்பம்;
      ஓய்வறப் பொறுப்பொடு முனைத்தல் இன்பம்;
துயரற பயமறத் துலங்குதல் இன்பம்;
      துணிவுற நயமுறத் துவங்குதல் இன்பம்;
தெளிவுறு மதியினில் திளைத்தல் இன்பம்;
      திறம்படத் தமிழினில் உரைத்தல் இன்பம்;

5. அன்னை இன்பம்:
தன்மையில் பணிந்து இருத்தல் இன்பம்;
      தவறினைத் துணிந்து திருத்தல் இன்பம்;
தொன்மையின் உண்மையைப் புகழுதல் இன்பம்;
      தூய்மையில் துறவறம் திகழுதல் இன்பம்;
பன்மையில் விழித்துப் பழகுதல் இன்பம்;
      பசித்தவர் களிப்புறப் படைத்தலும் இன்பம்;
உண்ணலின் ஊட்டலைச் செய்தலும் இன்பம்;
      அன்னையின் மடியினில் சாய்தலும் இன்பம்;

6. வணங்குதல் இன்பம்:
எழுதல் இன்பம்; இரவினில் மறுகி
      விழுதல் இன்பம்; இதயம் குழைந்து
அழுதல் இன்பம்; இறையை உருகித்
      தொழுதல் இன்பம்; இளமையில் கற்றுத்
தெளிதல் இன்பம்; உயிருக்கு உயிராய்
      பழகுதல் இன்பம்; உயிரொடு உடலைத்
தழுவுதல் இன்பம்; உணர்வில் கலந்து
      ஒழுகுதல் இன்பம்; ஆளுதல் இன்பம்;

7. வாழுதல் இன்பம்:
எழுதுதல் இன்பம்; அறிவிலி வாதில்
      நழுவுதல் இன்பம்; அறவழிப் பாதையில்
ஒழுகுதல் இன்பம்; அறிவுக் கடலில்
      ஆழுதல் இன்பம்; அகத்தினில் ஜோதி
மூழுதல் இன்பம்; அறிவொளிச் சுடரில்
      மூழ்குதல் இன்பம்; ஆன்மத் தூய்மை
சூழுதல் இன்பம்; அன்புடை வாழ்கை
      நீளுதல் இன்பம்; வாழுதல் இன்பம்;

8. விருந்துகள் இன்பம்:
உழைத்தல் இன்பம்; உழவுத் தொழிலில்
      பிழைத்தல் இன்பம்; மழையில் மரங்கள்
கிளைத்தல் இன்பம்; பயிர்கள் மண்ணில்
      முளைத்தல் இன்பம்; மணிகள் முற்றின்
விளைத்தல் இன்பம்; மனையில் சேர்ந்து
      திளைத்தல் இன்பம்; மகிழ்வுற விருந்தினை
அழைத்தல் இன்பம்; மகிழ்ச்சி பொங்கக்
      களித்தல் இன்பம்; உறவுகள் இன்பம்;

9. இளமை இன்பம்:
படித்தல் இன்பம்; படித்தபின் வேலை
      பிடித்தல் இன்பம்; துடிப்பொடு கடமை
முடித்தல் இன்பம்; பிடித்தவர் கண்ணை
      அடித்தல் இன்பம்; சபையினர் போற்ற
நடித்தல் இன்பம்; காதலில் திருமணம்
      முடித்தல் இன்பம்; இசையெனக் கவிதை
வடித்தல் இன்பம்; கருணையில் உடைமை
      கொடுத்தல் இன்பம்; படைத்தல் இன்பம்;

10. கலைகள் இன்பம்:
விருத்தம் இன்பம்; நாட்டிய மங்கையர்
      நிருத்தம் இன்பம்; நல்லிசைப் பாட்டில்
திருத்தம் இன்பம்; நாயகன் நாயகி
      பொருத்தம் இன்பம்; நலமாய்த் திகழும்
கருத்தும் இன்பம்; ஆசையை அறவே
      அறுத்தல் இன்பம்; அறவழிப் பெருமை
சிறத்தல் இன்பம்; அழிவின் வழியை
      நிறுத்தல் இன்பம்; மறுத்தல் இன்பம்;

11. கல்வி இன்பம்:
துயிலுதல் இன்பம்; தொடர்ந்து மகிழ்வைப்
      பயிலுதல் இன்பம்; துவளாது வாழ்வில்
முயலுதல் இன்பம்; தொடுகை உணர்வில்
      மயங்குதல் இன்பம்; துணையைப் பொருந்தி
முயங்குதல் இன்பம்; தொடரும் கலையில்
      தயங்குதல் இன்பம்; துவங்கிய பின்னே
இயங்குதல் இன்பம்; மெய்யெனும் பொய்யில்
      மகிழ்வதும் இன்பம்; நெகிழ்வதும் இன்பம்;

12. கொடுத்தல் இன்பம்:
அணைத்தல் இன்பம்; அதரச் சுவையில்
      பிணைத்தல் இன்பம்; அன்பொடு நெஞ்சினை
இணைத்தல் இன்பம்; அண்மையில் அழகினை
      மலைத்தல் இன்பம்; நன்மைகள் தருவன
நினைத்தல் இன்பம்; நயம்படு பொருளினைச்
      சுவைத்தல் இன்பம்; உளத்தொடு சுகத்தினில்
திளைத்தல் இன்பம்; உதவியில் மனிதரை
      முகிழ்த்தல் இன்பம்; பகிர்தல் இன்பம்;

13. காமம் இன்பம்:
உணருதல் இன்பம்; ஊடலில் கசிந்து
      புணருதல் இன்பம்; காதலில் கூடி
மலருதல் இன்பம்; காவியம் பாடித்
      திணறுதல் இன்பம்; இரவினில் ஆடிக்
கிளருதல் இன்பம்; கனிமொழி பேசிக்
      குளறுதல் இன்பம்; கரைகளைத் தேடி
வளருதல் இன்பம்; கனவுகள் வளர்த்துப்
      புலருதல் இன்பம்; உலருதல் இன்பம்;

14. அனுபவம் இன்பம்:
தேடுதல் இன்பம்; தேனிசைத் தமிழில்
      பாடுதல் இன்பம்; சுகத்தொடு கண்களை
மூடுதல் இன்பம்; தாள இலயத்தொடு
      ஆடுதல் இன்பம்; அழகின் சிரிப்பை
நாடுதல் இன்பம்; அகமும் புறமும்
      கூடுதல் இன்பம்; அன்பிற்கு ஏங்கி
வாடுதல் இன்பம்; அன்னையைத் தேடி
      ஓடுதல் இன்பம்; சாடுதல் இன்பம்;

15. மனமே இன்பம்:
தானம் இன்பம்; வானம் இன்பம்;
      தன்னிலை மறக்கும் கானம் இன்பம்;
மோகம் இன்பம்; போகம் இன்பம்
      மோதலில் பிறக்கும் காதல் இன்பம்;
நாணம் இன்பம்; பாசம் இன்பம்
      நட்பினில் வருகிற நேசம் இன்பம்;
பானம் இன்பம்; பதவியும் இன்பம்
      பணிவில் தெரிகிற துணிவும் இன்பம்;

16. உணர்வுகள் இன்பம்:
தகிப்பது இன்பம்; சுகிப்பது இன்பம்;
      கொடுப்பது இன்பம்; எடுப்பது இன்பம்
நகைப்பது இன்பம்; புகைப்பது இன்பம்;
      இசைப்பது இன்பம்; இசைவது இன்பம்
பசிப்பது இன்பம்; புசிப்பது இன்பம்;
      ரசிப்பது இன்பம்; ருசிப்பது இன்பம்;
சகிப்பது இன்பம்; வசிப்பது இன்பம்;
      நுகர்வது இன்பம்; பகர்வது இன்பம்;

17. காலம் இன்பம்:
உதயம் இன்பம்; இரவும் இன்பம்;
      மதியம் இன்பம்; மாலை இன்பம்;
கதிரும் இன்பம்; நிழலும் இன்பம்;
      அனலும் இன்பம்; புனலும் இன்பம்
உறவும் இன்பம்; பிரிவும் இன்பம்;
      வரவும் இன்பம்; செலவும் இன்பம்;
பரிவும் இன்பம்; உரிமை இன்பம்;
      அறிவும் இன்பம்; தெளிவும் இன்பம்;

18. மெய்யறிவு இன்பம்:
கவனம் இன்பம்; புவனம் இன்பம்;
      காட்சி இன்பம்; தேர்ச்சி இன்பம்;
அகமும் இன்பம்; புறமும் இன்பம்;
      ஆட்சி இன்பம்; மாட்சி இன்பம்;
மவுனம் இன்பம்; தவமும் இன்பம்
      மீட்சி இன்பம்; நீட்சி இன்பம்;
வரமும் இன்பம்; திறமும் இன்பம்;
      சாட்சி இன்பம்; தீட்சை இன்பம்;

19. உறவுகள் இன்பம்:
பார்வை இன்பம்; தேர்வை இன்பம்;
      தண்மை இன்பம்; மென்மை இன்பம்;
வாய்மை இன்பம்; நேர்மை இன்பம்;
      கண்மை இன்பம்; நன்மை இன்பம்;
தாய்மை இன்பம்; சேய்மை இன்பம்;
      அண்மை இன்பம்; அன்னை அன்பாய்
காய்தல் இன்பம்; உவத்தல் இன்பம்;
      தந்தை காட்டும் சிரத்தை இன்பம்;

20. குழந்தைகள் இன்பம்:
பிள்ளைகள் இன்பம்; கிள்ளை மழலையை
      உள்ளுதல் இன்பம்; அமுத மழையினை
அள்ளுதல் இன்பம்; கன்னம் கொஞ்சிக்
      கிள்ளுதல் இன்பம்; கைகளில் வாரிக்
கொள்ளுதல் இன்பம்; கவலையை ஒருங்கே
      தள்ளுதல் இன்பம்; துடிப்போடு ஆடித்
துள்ளுதல் இன்பம்; பாடலைக் கூடி
      விள்ளுதல் இன்பம்; பள்ளிகள் இன்பம்;

21. வளர்தல் இன்பம்:
பிறத்தல் இன்பம்; நல்லவை சொல்லி
      வளர்த்தல் இன்பம்; நல்வினை பெருக்கி
சிறத்தல் இன்பம்; நல்லவர் தம்முடன்
      உரத்தல் இன்பம்; அல்லவை தன்னைத்
துறத்தல் இன்பம்; தீமையை நெஞ்சினில்
      அறுத்தல் இன்பம்; தீயவர் தொடர்பை
மறுத்தல் இன்பம்; நிலமகள் போலும்
      பொறுத்தல் இன்பம்; திருத்தல் இன்பம்;

22. படைத்தல் இன்பம்:
சமைத்தல் இன்பம்; சபையினர் கூடிச்
      சுவைத்தல் இன்பம்; சத்திய தத்துவம்
படைத்தல் இன்பம்; பைத்திய வழக்கம்
      உடைத்தல் இன்பம்; நம்பிக்கை தருவன
விதைத்தல் இன்பம்; வையகம் செழிக்க
      விளைத்தல் இன்பம்; கையறு நிலையினைச்
சிதைத்தல் இன்பம்; கனவுகள் மெய்ப்பட
      விழித்தல் இன்பம்; அமைத்தல் இன்பம்;

23. பாராட்டு இன்பம்:
ஆக்கம் இன்பம்; ஆயும் மனதின்
      ஏக்கம் இன்பம்; அரங்கம் தருகிற
ஊக்கம் இன்பம்; அதனால் வருகிற
      தாக்கம் இன்பம்; அறிவால் துணிந்த
நோக்கம் இன்பம்; ஆழ்ந்து நுணுகும்
      நோக்கும் இன்பம்; விரிந்து காணும்
போக்கும் இன்பம்; வேலும் ஆலும்
      பாக்கும் இன்பம்; தேக்கும் இன்பம்;

24. உழைப்பு இன்பம்:
யாகம் இன்பம்; யோகம் இன்பம்;
      தாரம் இன்பம்; பாரம் இன்பம்;
ஆய்வு இன்பம்; ஓய்வு இன்பம்;
      அன்பு இன்பம்; பண்பு இன்பம்;
தியானம் இன்பம்; தியாகம் இன்பம்;
      திரைக்கடல் இன்பம்; திரவியம் இன்பம்;
நாயாய் உழன்று நடப்பதும் இன்பம்;
      கடற்கரை மணலில் கிடப்பதும் இன்பம்;

25. ரசித்தல் இன்பம்:
கோடை இன்பம்; குளிர் இன்பம்;
      குருவிக் கூட்டில் மழை இன்பம்;
வாடை இன்பம்; அலை இன்பம்;
      அருவிப் பாட்டில் இசை இன்பம்;
ஆடை இன்பம்; அவை இன்பம்;
      அழகிய தமிழில் சுவை இன்பம்;
மேடை இன்பம்; கலை இன்பம்;
      தினமொரு குறளின் உரை இன்பம்;

26. நளினம் இன்பம்:
தாயகம் காக்கும் படை இன்பம்;
      தண்ணீர் தேக்கும் மடை இன்பம்;
தியாகம் வேள்விக்குக் கொடை இன்பம்;
      தெரியும் கேள்விக்கு விடை இன்பம்;
வாயில் புன்னகைக் கடை இன்பம்;
      வைகறைக் காற்றில் நடை இன்பம்;
தூய்மை துலங்கும் உடை இன்பம்;
      வெயிலோ மழையோ குடை இன்பம்;

27. நறுமணம் இன்பம்:
அரும்புகள் மலரும் வனம் இன்பம்;
      அறுசுவை பகரும் உணவு இன்பம்;
குறும்புகள் காட்டும் மகவு இன்பம்;
      குறுநகை தீட்டும் மொழி இன்பம்;
உறவினர் கூடும் நாள் இன்பம்;
      ஊரார் சேரும் தேர் இன்பம்;
விருந்தினர் நிறையும் இல் இன்பம்;
      மருந்தையும் பகிரும் சொல் இன்பம்;

28. இசை இன்பம்:
காற்றில் ஒலிக்கும் இசை இன்பம்;
      கண்கள் உரைக்கும் மொழி இன்பம்;
ஏற்றம் இரைக்கும் ஒலி இன்பம்;
      இரவில் கலங்கரை ஒளி இன்பம்;
ஆற்றும் உரையில் இதம் இன்பம்;
      ஆற்று மணலில் நடை இன்பம்;
தேற்றும் மனிதரின் உளம் இன்பம்;
      தேக பலத்தில் நலம் இன்பம்;

29. வளம் இன்பம்:
பறவைகள் வாழும் சோலை இன்பம்;
      நறுமணம் சூழும் மாலை இன்பம்;
நிறைமகள் இடுகிற கோலம் இன்பம்;
      வயல்வெளி மகளிரின் குலவை இன்பம்;
அறுபது அகவை நிறைதல் இன்பம்;
      அதனினும் எண்பதும் நூறும் இன்பம்;
முறையொடு ஆற்றும் வினையும் இன்பம்;
      முதுமொழிக் கூற்றில் நிறையும் இன்பம்;

30. தூய்மை இன்பம்:
அச்சம் அற்ற ஆண்மை இன்பம்;
      அழுகை அற்ற பெண்மை இன்பம்;
குற்றம் அற்ற கற்பு இன்பம்;
      குறைகள் அற்ற வெற்றி இன்பம்;
சஞ்சலம் அற்ற கல்வி இன்பம்;
      சுயநலம் அற்ற தொண்டு இன்பம்;
வஞ்சகம் அற்ற நெஞ்சம் இன்பம்;
      வருத்தம் அற்ற அண்மை இன்பம்;

31. நேர்மை இன்பம்:
அரசியல் அற்ற பணிமனை இன்பம்;
      ரகசியம் அற்ற துணையும் இன்பம்;
உரசல் அற்ற நட்பும் இன்பம்;
      விரிசல் அற்ற மனையும் இன்பம்;
துரோகம் அற்ற தோழமை இன்பம்;
      ரோகம் அற்ற தேகம் இன்பம்;
விரோதம் அற்ற சுற்றம் இன்பம்;
      விரசம் அற்ற சொற்கள் இன்பம்;

32. நாணயம் இன்பம்:
தழுவல் அற்ற படைப்பும் இன்பம்;
      தளைகள் அற்ற நடையும் இன்பம்;
நழுவல் அற்ற நண்பர் இன்பம்;
      களங்கம் அற்ற நல்லோர் இன்பம்;
வழுவல் அற்ற ஒழுக்கம் இன்பம்;
      பிழைகள் அற்ற பழக்கம் இன்பம்;
அழுகல் அற்ற கனிகள் இன்பம்;
      பழுதுகள் அற்ற விருதுகள் இன்பம்;

33. நாநயம் இன்பம்:
படுத்தல் அற்ற பாடம் இன்பம்;
      பகைத்தல் அற்ற வீடும் இன்பம்;
தடுத்தல் அற்ற காடும் இன்பம்;
      தடைகள் அற்ற நாடும் இன்பம்;
விடுத்தல் அற்ற பிடிப்பும் இன்பம்;
      கடுத்தல் அற்ற மொழியும் இன்பம்;
தொடுத்தல் அற்ற துணையும் இன்பம்;
      முடித்தல் அற்ற தொடரும் இன்பம்;

34. வெளிப்படை இன்பம்:
மறைத்தல் அற்ற இனிமை இன்பம்;
      சிதைத்தல் அற்ற தொன்மை இன்பம்;
குறைத்தல் அற்ற வாயில் இன்பம்;
      குழைத்தல் அற்ற பணிவும் இன்பம்;
வறுமைகள் அற்ற இளமை இன்பம்;
      களைத்தல் அற்ற பணியும் இன்பம்;
சிறுமைகள் அற்ற வளமை இன்பம்;
      வளைத்தல் அற்ற வாய்மை இன்பம்;

35. சுதந்திரம் இன்பம்:
விலங்கு அற்ற விடுதலை இன்பம்;
      விளம்பரம் அற்ற உபயம் இன்பம்;
சிலந்தி அற்ற மூலை இன்பம்;
      சிக்கல் அற்ற வேலை இன்பம்;
சலனம் அற்ற வேளை இன்பம்;
      குழப்பம் அற்ற மூளை இன்பம்;
கலக்கம் அற்ற இதயம் இன்பம்;
      கவலை அற்ற உதயம் இன்பம்;

36. தடையின்மை இன்பம்:
சோதனை அற்ற சாலை இன்பம்;
      சோகம் அற்ற பயணம் இன்பம்;
வேதனை அற்ற மனமும் இன்பம்;
      வேகம் அற்ற மாலை இன்பம்;
போதனை அற்ற காதல் இன்பம்;
      வரம்பும் அற்ற சுதந்திரம் இன்பம்;
ரோதனை அற்ற சூழல் இன்பம்;
      தொல்லை அற்ற செல்வம் இன்பம்;

37. வரம்புகள் இன்பம்:
மெல்வதை மட்டும் கடிப்பது இன்பம்;
      மெத்தையில் நித்திரை கொள்வது இன்பம்;
வெல்வதைச் சொல்லிச் செய்வது இன்பம்;
      வித்தையில் யாவையும் கற்பது இன்பம்;
சொல்லில் மாறாது இருப்பது இன்பம்;
      சுத்தத்தைப் பேணிக் காப்பது இன்பம்;
வல்லவை செய்து முடிப்பது இன்பம்;
      வளம்பெற ஆவணப் படுத்துதல் இன்பம்;

38. வாய்மை இன்பம்:
உயிரினை மேம்படப் போற்றுதல் இன்பம்;
      உண்மையை மெய்ம்படச் சாற்றுதல் இன்பம்;
பயிரினைச் செழிப்புறத் தேற்றுதல் இன்பம்;
      பார்வையை விழிப்புற மாற்றுதல் இன்பம்;
இயற்கையைக் களிப்புறச் சேர்தல் இன்பம்;
      இன்மையை முழுவறத் தீர்த்தல் இன்பம்;
செயற்கையை நலம்பெறத் தீட்டுதல் இன்பம்;
      நன்மையை வளம்பெறக் கூட்டுதல் இன்பம்;

39. புதுமை இன்பம்:
கலையினை அழகொடு புதுக்குதல் இன்பம்;
      கந்தலை இழிவினை ஒதுக்குதல் இன்பம்;
சிலையினை உயிரெனச் செதுக்குதல் இன்பம்;
      சிந்தனைச் சிறகினை விரித்தல் இன்பம்;
கவிதையின் நயத்தினைக் கதைத்தல் இன்பம்;
      காவியம் இலக்கியம் படைத்தல் இன்பம்;
மழைமுகில் வருகையில் மயிலுக்கும் இன்பம்;
      ஓவியம் வரைகையில் மனதுக்கும் இன்பம்;

40. பழமை இன்பம்:
நினைவினைக் கிளறும் புகைப்படம் இன்பம்;
      நெடுநாள் நினைக்கும் திரைப்படம் இன்பம்;
நினைத்தவை வாழ்கையில் நடக்கையில் இன்பம்;
      நெஞ்சினில் பிறக்கும் நினைவுகள் இன்பம்;
தொலைந்தவை கிட்டின் கிடைத்திடும் இன்பம்;
      கலைந்தவை கூடின் நிறைந்திடும் இன்பம்;
விளைந்தவை நல்வினை என்கையில் இன்பம்;
      இனியவை காண்கையில் மலர்ந்திடும் இன்பம்;

41. மொழி இன்பம்:
தேர்வில் வென்ற தகவல் இன்பம்;
      திடத்தைத் தருகிற அஞ்சல் இன்பம்;
யாரையும் வெல்லும் கனியுரை இன்பம்;
      வாய்மொழி சொல்லும் தேன்மொழி இன்பம்;
தூர தேசத்துத் தொடர்பும் இன்பம்;
      தொடரால் வருகிற அழைப்பும் இன்பம்;
வரவைப் பெருக்கும் தொழிலும் இன்பம்;
      வாய்ப்பைக் குவிக்கும் வர்த்தகம் இன்பம்;

42. பணி இன்பம்:
கடன்களை அடைக்கும் உளம் இன்பம்;
      கவலை துடைக்கும் மனம் இன்பம்;
உடைமையில் உயிரே உயர் இன்பம்;
      உலகினில் நீரே நிறை இன்பம்;
கடமையயில் நடுநிலைச் செயல் இன்பம்;
      கலகத்தை முடிக்கும் தொழில் இன்பம்;
படையினைத் தேற்றும் தலை இன்பம்;
      பணிவினைப் பேணும் நிலை இன்பம்;

43. தெளிவு இன்பம்:
அழகைக் காட்டிலும் அறிவு இன்பம்;
      அலையைக் காட்டிலும் கடல் இன்பம்;
உழைப்பைக் காட்டிலும் முனைப்பு இன்பம்;
      உலகைக் காட்டிலும் உயிர் இன்பம்;
மழையைக் காட்டிலும் பயிர் இன்பம்;
      மலரைக் காட்டிலும் மணம் இன்பம்;
நிழலைக் காட்டிலும் நீர் இன்பம்;
      நிலவைக் காட்டிலும் வான் இன்பம்;

44. வினை இன்பம்:
மலையைக் காட்டிலும் சிலை இன்பம்;
      மணலைக் காட்டிலும் வீடு இன்பம்;
விலையைக் காட்டிலும் பயன் இன்பம்;
      நினைவைக் காட்டிலும் நனவு இன்பம்;
செலவைக் காட்டிலும் வரவு இன்பம்;
      கனவைக் காட்டிலும் கதை இன்பம்;
பகலைக் காட்டிலும் இரவு இன்பம்;
      அனலைக் காட்டிலும் குளிர் இன்பம்;

45. ஈகை இன்பம்:
பிரிவைக் காட்டிலும் உறவு இன்பம்;
      பெறலைக் காட்டிலும் தரல் இன்பம்;
ஊரைக் காட்டிலும் பேர் இன்பம்;
      உறவைக் காட்டிலும் உணர்வு இன்பம்;
நீரைக் காட்டிலும் மோர் இன்பம்;
      நிறத்தைக் காட்டிலும் அறிவு இன்பம்;
பாரைக் காட்டிலும் பரிவு இன்பம்;
      பசுவைக் காட்டிலும் பால் இன்பம்;

46. வான் இன்பம்:
கருக்கலில் மழையின் வரவு இன்பம்;
      மழையில் மணலின் மணம் இன்பம்;
அறுவடை நாளின் உணவு இன்பம்;
      அனுபவம் பேசும் மொழி இன்பம்;
வறுமையை அழிக்கும் வழி இன்பம்;
      வளமையைக் கொழிக்கும் கலை இன்பம்;
பொறுமை காட்டும் குணம் இன்பம்;
      புதுமையை ஏற்கும் மனம் இன்பம்;

47. அறிவு இன்பம்:
வித்தில் விளையும் விந்தையே இன்பம்;
      யுத்தம் களையும் வையமே இன்பம்;
சக்தியில் மலரும் சாதனை இன்பம்;
      சத்தியம் ஒளிரும் சோதனை இன்பம்;
பக்தியில் தேடும் முக்தியே இன்பம்;
      முக்தியை நாடும் பக்தியே இன்பம்;
சித்தியில் தெளியும் புத்தியே இன்பம்;
      புத்தியில் அறியும் உணர்வே இன்பம்;

48. பணிவு இன்பம்:
காலம் முழுதும் கடமையில் ஒன்றாய்
      ஆலயம் தொழுதல் சாலவும் இன்பம்;
நாளும் பொழுதும் நல்லதை எண்ணி
      வாழும் நாளில் வளருதல் இன்பம்;
ஆழும் மனதில் அடக்கம் பேணி
      அறிவில் ஞானம் பெறுவது இன்பம்;
புலனை ஒன்றி இறையை உணர்ந்தே
      மீளாத் துயிலில் மாளுதல் இன்பம்;

49. இயற்கை இன்பம்:
இயற்கையைக் காத்தலே இன்பம்; - நெஞ்சில்
      இனிமையைச் சேர்த்தலே இன்பம்; - உளத்தில்
உயிர்களை மதித்தலே இன்பம்; - உலகில்
      பிணிகளை அழித்தலே இன்பம்; - நிலத்தில்
பயிர்களை வளர்த்தலே இன்பம்; - வளத்தில்
      மக்களைப் பெறுதலே இன்பம்; - நலத்தில்
வயிற்றுக்குப் புசித்தலே இன்பம்; - களிப்பில்
      யாக்கை சுகித்திடத் துய்த்தலே இன்பம்;

50. இறுதி இன்பம்:
பயத்தினை வெல்வதே இன்பம்; - மனத்தில்
      மரணத்தை வெல்வதே இன்பம்; - கல்வியில்
முயன்றதை அறிவதே இன்பம்; - பொறுப்பில்
      தாயகம் காப்பதே இன்பம்; - களத்தில்
உயர்வினை அடைவதே இன்பம்; - நடப்பில்
      இன்னலைச் சகித்தலே இன்பம்; - நிறைவில்
உய்த்திடும் ஞானமே இன்பம்; - இறுதியில்
      இரணமே இலா மரணமே இன்பம்;

                         உறுதியாய்
     மரணம் ஒன்றே மாறாப் பேரின்பம்;

***

ஆருயிரே... ஆருயிரே...

ஆருயிரே... ஆருயிரே...


ஆருயிரே... ஆருயிரே... ஆருயிரே... ஆருயிரே...

ஆருயிரே நீ அழகு நிலாவென
     பாடிய பாவலன் தெருவினிலே
தேடுகிறேன் உனைத் தினந்தோறும்
     தென்றலே எங்கு நீ சென்றாயோ?
                                             (ஆருயிரே... ஆருயிரே...)

ஓடையிலோர் நாள்நீ நீராடும் கோலம்
     ஓடையிலே நான் பாடிய கீதம்
ஜாடையிலே அவை சகலமும் பேசி
     ஜனித்ததங்கே நம் காதலின் தீபம்
ஏனிந்தக் கோபம் நான்வரும் நேரம்
     உன்வாடைக் காற்றும் நெடுந்தூரம் போகும்...
                                             (ஆருயிரே... ஆருயிரே...)

கார்கால மேகம் எழுதாத விளக்கம்
     கண்ணீரில் நீதரும் இணையாத நெருக்கம்
போறாத காலம் புதியதோர் வானம்
     என்குரல் கேட்க அலையுது நாளும்
வாழ்வோம் சகியே வழிகளை வகுப்போம்
     வாசலின் ஓரமுன் பூமுகங் காட்டு
                                             (ஆருயிரே... ஆருயிரே...)

ஆருயிரே நீ அழகு நிலாவென
     பாடிய பாவலன் தெருவினிலே
தேடுகிறேன் உனைத் தினந்தோறும்
     தென்றலே எங்கு நீ சென்றாயோ?

***

Friday, April 2, 2010

ஏமாற்றுக்காரர்

ஏமாற்றுக்காரர்


மன்னிப்பவன்
மனிதரில் மாணிக்கம்
என்று
உனை மன்னிக்க
எண்ணும்போது
உன்னை மன்னித்தேன்
என்று சொன்னாய் பார்
அப்போதுதான் தோன்றிற்று
உன்னையெல்லாம்
எப்படி
மன்னிப்பதென்று!

***

விபச்சாரம்

விபச்சாரம்


ரோட்டோரம்
ஒரு
ஊதாப்பூ
கண் சிமிட்டுகிறது...
எய்ட்ஸ்
இலவசம்.

***

நிலம்

நிலம்

இயற்கையின் குழப்பம்
நிலத்தை முழுவதும்
நீர் சூழாமல்
விலக்கி வைப்பது
நெருப்புச் சூரியனா?
நிலவா?, கடலா?
காற்றா? பனிக் கட்டியா?
எல்லாமும் இணை சேர்ந்து
நடத்தும்
ஆக்கிரமிப்பு ஆட்டமா?

***

நெருப்பு

நெருப்பு


நேரில் மோதினால்
நீரிலே அழியும்
நெருப்பு
சினந்து, தகித்து, தணலாய்,
வெட்கையாய், வெயிலாய்ச்
சூடு படுத்தி
நிழல் யுத்தத்தால் மட்டுமே
கொதிக்கவும், ஆவியாக்கவும்,
அழிக்கவும் முடிகிறது
நீரை.

***

ஹைக்கூ கவிதைகள்

ஹைக்கூ கவிதைகள்


மேகம்.
உருகாமலும் கரையாமலும்
மிதக்குதே வெயிலில் !
”மேகம்”

தென்றல் காற்றுக்கு மாத்திரம்
கரைந்து உருகும் பஞ்சுப் பொதி
மேகம்!

மழை.
யாரைக் தாக்க
சரம் சரமாய் அம்புகள் ?
"மழை"

பனிக்கட்டி. (ஐஸ் கட்டி)
என்ன ஆச்சரியம்!
கெட்டிப்பட்ட படிகத்
தண்ணித் துண்டு
நீரிலேயே மிதக்குதே
பனிக்கட்டி!

நெருப்பு.
நேரில் மோதினால்
நீரிலே அழியும்
"நெருப்பு"

வானவில்.
இயற்கை எங்கோ
ஓவியம் தீட்டத் தொட்டுக் கொள்ளும்
வண்ணக் கலவைப் பேழை
"வானவில்"

மின்னல்.
வானம் சொன்னது:
மழை என்ன அழுகையா?
ஸ்மைல் ப்ளீஸ்...சீஸ்...

இடி.
அடை மழையிலும்
விடாது வெடிக்கும் பட்டாசு
"இடி"

பூ.
மொட்டாகி, மலராகி அடச்சே ...
வாடி உதிர்ந்துபோகும் வாழ்க்கைதானா?
"பூ"

உலகம்.
உருண்டு கொண்டே இருக்கிறது
விடியலைத் தேடி
உலகம்!

உருண்டு கொண்டே இருக்கிறது
வெயிலை, வெப்பத்தை, வெளிச்சத்தைத் தேடி
"உலகம்"

மனிதா.
உன்னை வலைக்குள்
சிறை செய்யப் போதும்
ஒரு கொசு!

காற்று.
குழல் இசையைக் கடத்திவிட்டு
அடுத்தொரு மூச்சாய்
காற்று!

சாலை.
உன்னையும் என்னையும்
இணைக்கும் கம்பியாய் தரையில்
சாலை!

வாயிற் பாய்: (Door mat)
எவ்வளவுதான் அழகாக இருந்தாலும்
வரவேற்பில் மிதிவாங்குவது என்னவோ
வாயிற் பாய்தான்!

சேமிப்பு:
எறும்பும், தேனியும் மாத்திரமே சேமிக்கின்றன.
வாழ்வில் நம்பிக்கை அதிகமோ
விலங்குகளுக்கு?

***

வருக வருக உலகத் தமிழ் செம்மொழி மாநாடு 2010!!!

வருக வருக உலகத் தமிழ் செம்மொழி மாநாடு 2010!!!


பாலுக்கும் கூழுக்கும் பட்டாணி சுண்டலுக்கும்
     பட்டமெனும் ரொட்டிக்கும் பரிசில் எலும்புக்கும்
பாழுக்குப் போகின்ற பச்சோந்தி நாயினை
     பச்சைத் தமிழ் என்னல் ஆகுமா?
நாளைக்குப் பாடையிலே பரலோகம் போகையிலே
     “செந்தமிழ்” செத்தது என்பீரா? ஐயோ!
வேளைக்குப் பொய்நூறு புலம்பும் வீணரே
     வெட்கமும் மானமும் விற்கின்ற கடைச்சரக்கா?

காலுக்குப் போடும் காலணியாம் உழைப்பு;
     நாளும் கொள்ளை; நடப்பதெல்லாந் திருட்டு;
ஊழலின் உச்சமாய் அரசு; உடன்பிறப்புக்கு
     உளரலே கடிதம்; இலவச இலஞ்சம்;
மூளை மழுப்பிற்கு மானாட மயிலாட;
     ஒதுக்கிப் பதுக்கப் புதுப்புதுத் திட்டம்;
சாலை உலாவிற்கு மனிதச் சங்கிலி;
     பரவச நாடகம் பதவி விலகல்!

அழை யாமல் போவதெப்படி? கடிதம்
     அனுப்பிக் கடமை தீர்க்க வில்லையா?
கொலை யுண்ட மாந்தருக்காய் நித்தம்
     கூடி அழுததும் நினைவு இல்லையா?
காலை உணவிற்குக் கடற்கரை விரதம்
     கட்டளை இட்டதில் போர்நிற்க வில்லையா?
போலிக் கண்ணீரா? புரியாத பேச்சு;
     சட்டசபைச் சாளரத்தைக் கேள் சொல்லும்...

அழையா விருந்தா? யார் சொன்னார்?
     வெற்றிப் பூங்கொத்துக் காய்ந்து விடாதா?
குழுமம் அனுப்பிக் கூடிக் குலாவினால்
     மத்திய அரசும் மகிழ்ந்துவிட வில்லையா?
மலேயாத் தமிழர் அடித்தால் என்ன?
     மலையகத் தமிழர் செத்தால் என்ன?
ஈழம் சிதைத்தோம் என்பதில் பெருமை
     இன்னமும் பதவி என்பதெம் திறமை!!!

முழக்கம் அடிக்கடி முரசில் கேட்கும்
     உயிர் எமக்குத் தூசு; பதவியும்
இழப் போம்; முடிதனைத் துறப்போம்;
     துறந்ததற் கெல்லாம் தலையே சாட்சி!
மழுப்பல் பேச்சா? அரசியல் களத்தில்
     வழுக்கை என்பது அனுபவ எச்சம்!
விழுப்புண் என்பது வீரருக்கு அழகு!
     தமிழனின் அழகை மழித்ததின் மிச்சம்!

அழுவது எதற்கு? கலைந்தது கனவா?
     துரோகம் என்பது தமிழனில் புதிதா?
விழுந்தால் எழுவதும் விதைத்தால் முளைப்பதும்
     உலகத் தமிழர் அறியாக் கதையா?
பழையதை விடுத்து புகழாரம் பாடிக்
     களிப்பினில் திளைப்போம்; கவலையைத் துறப்போம்
எழுதுக சரித்திரம் துரோகம் அழிந்திட
     உலகத்தமிழ் மாநாடென நடந்ததை மறப்போம்!

சங்க இலக்கியம் செந்தமிழ் இலக்கியம்
     குட்டையைக் குழப்பி மீன்களைப் பிடிப்போம்
பக்தி இலக்கியம் திராவிட இலக்கியம்
     பட்டையைக் கிளப்பிசுய புராணம் படிப்போம்
கம்பன் வள்ளுவன் இளங்கோதொல் காப்பியன்
     எல்லாம் கவைக்குதவா தென்றே முடிப்போம்
செந்தமிழ் உலகம் சிந்தையிற் குழம்பின்
     செம்மொழிக் கூடலும் வெற்றியோ வெற்றி!

செந்தமிழ் மறந்தோர் சிந்தனை துறந்தோர்
     செம்புலங் காணா வண்டமிழ் வீரர்
நெஞ்சினில் ஈரம் கொஞ்சமும் இல்லார்
     அகிலம் புகழும் கூடலைக் காணீர்
கஞ்சிக்கு அலையும் தமிழரே வாரீர்
     கைகால் இழந்த தமிழரே வாரீர்
வஞ்சம் மறந்திடத் தமிழரே வாரீர்
     பழியினைத் துறக்கவோர் வழியினைத் தாரீர்!!!

***