Wednesday, January 20, 2010

இரவுக் கலம்

முன்னுரை:
இக்காலத்தில் சங்கத் தமிழில் கவிதை எழுத இயலுமா என்று தோன்றிய எண்ணத்தினால் நிகழ்ந்த ஒரு பெரிய முயற்சி இது. கீழே பொருளையும் கொடுத்துள்ளேன். முடிவு நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

எது எப்படியோ, இந்த அனுபவத்தில் நான் அறிந்தது:

1. சங்கத் தமிழில் எழுதுவது மிகவும் சிரமமானது. எனவேதான் ஒவ்வொரு சங்ககாலக் கவிஞரும் கொஞ்சமாய் எழுதி இருக்கிறார்கள் போலும். அதாவது விஷயம் இருப்பவர்கள் மாத்திரமே எழுதி இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. அல்லது மற்றயவை கவனத்தில் கொள்ளாது கழட்டி விடப் பட்டிருக்கலாம்.

2. எதுகை, மோனையோடு கூடிய கவிதைகளைக் காட்டிலும், இத்தகைய கவிதைகளில் தான் அர்த்தம் சிதறாமல் கிடைப்பதாக ஒரு நம்பிக்கை. இதைத்தான் Professor George L. Hart ஒரு பேட்டியின் போது சொன்னதாய்ப் படித்தது ஞாபகம். எனவேதான் முயன்று பார்த்தேன் என்பதும் உண்மை. மேலும் எனக்கு இவ்விதமாக கவிதை புனையும் எண்ணத்தைத் தோற்றுவித்த ஆர்குட் நண்பர் அஜீத்திற்கு நன்றி.

பொறுமையுடன் படிக்கும் உங்களுக்கும் நன்றி. மறக்காமல் உங்கள் கருத்தைப் பதியுங்கள். இம்மாதிரி முயற்சிகளுக்கு அவை உதவும்.


இரவுக் கலம்


ஞாயிறு உருமம் ஞான்று நடுத்தெருக் கடைஇல்,
பஞ்சரம் இலம்பும் முகப்பறை, புறக் கண்ணி அசுழம்,
ஆயிழை தோலிகை குந்த, பெயரன் பெயர்த்தி ஆடும்வாயில்
ஒப்பனை மடுத்த காளையர் நாயனம் தாளம் முழக்க,
நுதியசை வித்தை விளம்பி, இரவல் மிருதம் வினவி,
ஆர்த்த அரிசில் ஈட்டு, அயலகம் நாடி நகர்த்தகல;

குறு கணம் வழுவி, அரவொடு மாந்தன் நெஞ்சம்
மகுடி நிரவி, அஃதே யன்ன கன்னம் பருத்துக்
கரைந் திடவ் வரவம் அவிழ் சுருட்டைப் பெட்டகச்
சுருளிடைத் தலையுறுமி, விழித்தோன் யார் கொல்
அன்ன, சிறையடு தட்டம் போயின தொட்டு நோக்கும்
தடத்து; வினவுக் குறியென விடைத் தாடல் காட்டி,

அவ்வவை மகவினர் ஆவல் ஆறாக் காலை துயில்
தழுவக் கூடை சாத்தி, பரிசில் அரிசில் மாதுகரித்து;
நீங்கி, நாழிகை யழிந்து, மந்தி கழியொடு வந்தோனடுத்து,
அமர்ந்து தாவு வானரம் பல்லரிய செய்யச் சுட்டி,
இராகவக் கூற்றில் கரணமும் மனிதரன்ன ஆடலும் தோற்றி,
நிரைகுறு மாக்கள் களிக்க, இரவல் ஆயம் செறிப்ப,

தும்பு பிணை மந்தியோர் தோள் தொற்றிப் போந்த,
சிறுபொழுது கழிய, நீறணிக் களிறு பாகன் பணத்திடை
மணி சாற்றி வரவிட, சாமசத் துதிக்கை ஆசிகூலி
சிரம் ஐந்தாம் செப்பி; ஆயா சிசுக்கள் நிரல் அமர்த்தி,
மதகரி வழுத்த, விலையும் கனியும் இரவலும் ஆர்த்த,
ஈட்டவ் வேழம் பாகன் ஈந்து அரம்பை மட்டில்

முறையனை மாறுகண் பார்வல் நோக்கியே மாந்தி,
கஞ்ச மணி கொஞ்ச; செவி இரட்டுற, குஞ்சரம்
மிதமலை அன்ன இம்பர் நிகமம் விழைய விரைய,
பின்னை, கொசுவத் துகிலில் முற்றிழை அலியள்
பல்காலும் கைதட்டி தோரணம் அப்பால் தோகதம் உழ,
அருகி குதப்பு வாயொடு நிதி் இரத்து நிற்க;

அஞ்ஞை விளம்ப; அடிச்சி இடுத்த இரு பணம்
அரைக் கிழிதம் கச்சில் அடைத்து, மகவினர் மாட்டு
பெற்றம் நெட்டி, நொடித்துக் குழகி ஒயில் தலைக்கழிய;
குறுங்கால், அபரம் ஆயிடை நலிந்து நைவியச் சிறுமி,
ஆகாரம் தாரகமில் அகதி, சிக்கல் மல்குக் குஞ்சி;
கசடொடு கந்தல் கலிங்கம்; அதனினற்ப மதலைப் பகினி;

அந்தரம் அள்ளிப் புனைய, கைகள் பாசனம் ஏந்தி
”உண்டு இரு நாள் உகுத்து; பசி தம்மோய்” என
வாய்புலற்றி அருத்தியள்; ஆங்கு, புறத்தவிழ்த்த யட்சம்
உறுமிக் குதறக் குலைத்து ஏவலள் கண்ணி இழுப்பத்
திமிரி வழாஅல் தளத்திடை பச்சுதி, உற்று அடங்க
அரளி அணுவளை, ஞாளி உசும்பும் மனைக் கிழத்தி

”இற்றை செற்று நாளை வருதி” என நல்லுளத் தேவ,
சேய் முகத்த மற்றோர் தூடிதக் குருளை மகவினர்
மாட்டு யாங்குப் புதினம் தோற்பள் அன்னக் கோடலோ?
ஆயிழை ஏவல் வலுத்த சேடி கனத்து இரைத்து
”ஞெள்ளை அவிழச் சமைப்பன்; மீள்” என வெருட்ட,
கையறு மிரளி அகலி, உய்த்து, மறுகு கடுகி,

இரைத்து நடக்கை முயல; அடு தொளியோ, மனையோ
அடையல் நுதி வரத்து துட்கோ, இலங்கணமோ, இராவணமோ
ஆதானும் நிபம் வதனம் உறட்டி ஆகுலம் செப்ப,
குறுக்கு அமர்விய மதலை உவள் முகம் ஆய்ந்து
இரியல் உழ; அஃது தேற்ற வகிப்பளைத் திரிய
நோக்கி, யாதோ அங் குழவி பைய நகுத்ததே...

***


பொருள்:

பிச்சைப் பாத்திரம்


ஞாயிறு நடுப்பகல் வேளை நடுத் தெருவில் கடைசி வீட்டில்
பறவைக் கூடு தொங்குகின்ற முகப்பறை, புறத்தில் சங்கிலியில் நாய்
சிறந்த அணிகலன் நிரம்பிய பெண் ஊஞ்சலில் அமர்ந்திருக்க, பெயரனும் பெயர்த்தியும் ஆடுகின்ற வாசல் புறத்தில்
அலங்காரம் செய்த காளையும் (பூம் பூம் மாடும்) காளையனும் நாதஸ்வரம் மேழம் முழங்க
தலை ஆட்டும் வித்தை காட்டி பிச்சைப் பொருள் வேண்டிக் கேட்டு,
வழங்கிய அரிசியை வாங்கி அண்டை வீட்டை நோக்கி நகர்ந்து அகல

சிறு நேரம் சென்றபின் பாம்போடு ஒரு மனிதன் நெஞ்சம் முழுக்க
மகுடியை நிரப்பி மகுடியைப் போன்றே கன்னம் உப்பி
இசையில் கரைய, அந்த அரவம் திறந்த சுருட்டி வைக்கப்பட்ட வட்டப் பெட்டகம் போன்ற கூடையில்
சுருண்டநிலையில் தலையைச் சீறி, அழைத்தவன் எவன் அவன்
என்பதுபோல், சிறைப்பட்டு, மேல்வாய் நச்சுப் பல் இழந்த நேரம் முதலாய் நோக்குகின்ற
வழக்கம் போல், கேள்விக் குறி போலும் விடைத்து, ஆடல் காட்டி

ஆங்கே குழுமிய குழந்தைகள் ஆவல் தீராத வேளையில் துயிலைத்
தழுவ, கூடை அடைத்து, பரிசிலாக அரிசியைப் பிச்சை பெற்று
நீங்கிய பின்னர், நாழிகை கழிந்து, குரங்கும் கம்போடும் வந்தவன் அடுத்ததாய்
அமர்ந்து தாவிடும் வானர விலங்கைப் பல அரியசெயல்கள் செய்யக் காட்டி
இராகவச் சொல்லில் (ஆடுறா ராமா, ஆடுறா ராமா) கரணமும், மனிதர்போலும் ஆட்டமும் காட்டி
குழுமிய குழந்தைகள் மகிழ; இரந்து வரும்படி வாங்கி

கயிற்றில் பிணைத்த மந்தியைத் தோளில் தாங்கிப் போக;
சின்னேரம் போனபின்னர் ஆண் யானையும் பாகனும் அங்குசத்தோடு
மணிகள் ஒலிக்க வந்தனர்; யானைத் தும்பிக்கை ஆசீர்வதிக்க
தலைக்கு ஐந்தாம் சொல்லி, ஆயாள் குழந்தைகளை வரிசைப்படுத்தி, அமைதிப்படுத்தி;
யானை வாழ்த்த; கட்டணம் பழமும் பிச்சையும் கொடுக்க;
வாங்கிய யானை பாகனிடம் கொடுத்து வாழைப்பழத்தை மாத்திரம்

பாகனை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டே தின்று
வெண்கலமணி கொஞ்ச, காதுகள் அசைய யானை
மிதக்கும் மலை போலும் அடுத்த தெரு நாடிப் போனது;
அப்புறம் ஒரு புடவை கட்டிய திருநங்கை
அடிக்கடி கைதட்டி வாயிலைத் தாண்ட விரும்பி முயன்று
தோற்று வெற்றிலை குதப்பிய வாயால் யாசகம் கேட்டு நிற்க

அன்னை சொல்ல பணிப்பெண் கொடுத்த இரண்டு பணம்
இடையின் பணப்பையில் செருகி குழந்தைகள் பால்
காற்றில் நெட்டி முறித்துக் கொஞ்சி ஒய்யாரமாய்ப் பிரிய;
சிறுநேரம் கழித்து ஆங்கே நலிந்து மெலிந்த குட்டி
உணவு, உறைவிடம் கதி அற்று குளியல் அறியாத சிக்குக் குடிமியொடு
கசடும் கந்தல் துணியும் ஆடையாய் அதனிலும்கேவலமாய் குழந்தைச் சகோதரியை

இடையினில் தாங்கிக் கட்டி, கைகளில் பிச்சைப் பாத்திரம் ஏந்தி
”சாப்பிட்டு இரு நாட்கள் ஆயிற்று பசிக்கிறது தாயே” என்ற பல்லவியுடன்
வாய்பிதற்றி இரைஞ்சினள்; அப்போது புறத்தில் அவிழ்க்கப்பட நாய்
உறுமிக் குதறுவதற்குக் குலைத்து, பணிப்பெண் சங்கிலி இழுக்க
திமிறி வழுவும் தரையில் சருக்குவது கண்டு நெருங்கப்
பயந்து அண்டியவளைப் பார்த்து நாயை அதட்டிய இல்லத்தரசி

“இன்று போய் நாளை வா...” என்று நல் உள்ளத்தோடு பணிக்க
குழந்தையைச் சுமந்த இன்னொரு அழுக்குக் குழந்தை, குழந்தைகள்
பால் என்ன புதிதாய் வேடிக்கை காட்ட முடியும் என்று கருதினரோ?
அன்னையின் ஏவலை வழிமொழிந்த வேலைக்காரியும் கனத்த குரலில்
“நாயை அவிழ்த்து விட்டு விடுவேன் ஓடிப்போ” என்று விரட்ட
கலங்கி/வருந்தி மிரண்டு விலகி தப்பித்து சாலைக்கு ஓடி

மூச்சுவாங்கி நடக்க முனைய; அடுத்த தெருவோ, வீடோ
போவதற்கு முன்பே வந்த பயமா, பட்டினியா, அழுகையா
ஏதோ காரணத்தால் முகம் வாடிச் சோகம் சொல்ல;
இடையில் அமர்ந்த குழந்தையும் அவள் முகம் கண்டு
அழுவதற்கு எத்தனிக்க; அதை ஆற்ற முயன்றவளை மீண்டும்
பார்த்து எதற்காகவோ அக் குழந்தை மெல்லச் சிரித்தது...

***

Tuesday, January 12, 2010

மொழிவது அற மொழி

மொழிவது அற மொழி.


சாலையில் மூலையில் சந்தையில் சந்திப்பில்
ஆலய வாயிலில் அழகுபொன் மண்டபத்தில்
மேடையில் வீதியில் புழக்கடை வாசலில்
தேனீர்க் கடையில் தெருவோரம் முக்கில்
கல்லூரிப் பள்ளியில் காதலில் அலுவலில்
கரம்சிரம் புறம்நீட்டாப் பயணத்தில் ஓட்டத்தில்

கட்டிலில் முட்டத்தில் கண்துயிலும் பஞ்சணையில்
உண்ணும் கூடத்தில் உலவவரும் பூங்காவில்
வண்ணத்திரை அரங்கில் வாய்க்கும் இடைவெளியில்
தண்ணீர்ப் பிடிப்பில் நீச்சலில் குளக்கரையில்
நண்பர்தம் கூட்டத்தில் மணல்வெளியில் மாடத்தில்
நட்ட நடுவீட்டில் முன்னறையில் சாளரத்தில்

நாளெலாம் பேசுகிறார் நாவிருக்கும் மனிதர்கள்
வாய் ஓயாமல் வார்த்தை தேயாமல்
முக்காலம் முழுவதையும் எக்காலமும் தொடர்ந்து
சலியாது வலியாது சக்தியும் குறையாது
சகலமும் பேசிவிட; இன்றுகைத் தொலைபேசியும்...
என்னதான் கதைப்பீர்கள்? எங்கேயும் எப்போதும்?

அன்பின் பகிர்தலா? மனிதம் வளரட்டும்...
அருமைக் காதலா? கவிதை மலரட்டும்...
மனையவர் கெஞ்சலா? உறவு சிறக்கட்டும்...
மழலைக் கொஞ்சலா? மகிழ்ச்சி நிறைக்கட்டும்...
உறவா? பந்தமா? பாசம் நிலைக்கட்டும்...
உற்றார் சொந்தமா? அமைதி நிலவட்டும்...

ஆசை வினவலா? நேசம் பொங்கட்டும்...
அறிவுத் தேடலா? ஞானம் தளைக்கட்டும்...
வாழ்த்தும் நெஞ்சமா? வளமே தங்கட்டும்...
வாஞ்சைக் கூற்றா? பணிவு இனிக்கட்டும்...
இனிய சொல்லா? இன்பம் பெருகட்டும்...
இசையின் பொழிவா? இதயம் உருகட்டும்...

நட்பில் உரசலா? நம்பிக்கை விரிசலா?
நாளெலாம் பேசட்டும்; சந்தேகம் ஒழியட்டும்...
பிரிவா? விரகமா? துக்கமா? துயரமா?
ஆறுதல் மொழியில் அணையட்டும்; தெளியட்டும்...
வம்பா வாதமா? வற்றாத கோபமா?
வளரட்டும்: நாட்டில் தொலைபேசி நிறுவனம்!

புறமே சொல்லும் போக்கிரிப் பேச்சா?
புத்தியில் வழுவும் புறமொரு பேச்சா?
அகத்தின் புறமா? அறமிலாப் புறமா?
அண்டை அயலார் அழுக்குப் புறமா?
பிளவினைக் வளர்க்கப் பேசும் புறமா?
பழியினைப் பெருக்கும் பாழும் புறமா?

தூயோர் சொல்லும் அறத்தை மறுத்து
துன்பம் கொடுக்கும் புறத்தை நிறுத்து!
நேரில் புறத்தில் நேர்மையை வைத்து

தூய்மை கெடுக்கும் தூற்றலை நிறுத்து!
பொய்மை பெருக்கும் கயமை அறுத்து
அகத்தில் உளத்தில் அன்பை நிறுத்து!

புறத்தில் என்றும் புகழைப் பேசு..
புன்னகை இனிமை தவழப் பேசு...
அழகைப் பேசு; ஆய்வைப் பேசு...
ஆக்கம் தருகிற ஊக்கம் பேசு...
உண்மை பேசு; உயர்வைப் பேசு...
உள்ளும் வெளியும் ஒன்றே பேசு...

அனுபவ மொழியின் அறிவைப் பேசு...
அறநெறி தருகிற மாண்பைப் பேசு...
ஆன்மீகம் காட்டும் மேன்மையைப் பேசு...
அகிலம் போற்றும் நன்மையைப் பேசு...
உயரும் வழிகளை உணர்ந்து பேசு...
உதவிடும் மனிதரின் பண்பினைப் பேசு...

சண்டை நிந்தை சஞ்சலம் இல்லா
வஞ்சனை அற்ற சொல்லினைப் பேசு...
வறுமை குறைகள் வாட்டம் இல்லா
வாதுகள் அற்ற மொழியினைப் பேசு...
பொய்யும் பயமும் பூசலும் இல்லா
நச்சிலாச் சொல்லை நயம்படப் பேசு...

மாதொரு பாகம் ஆகிய இறையோன்
உண்ணவும் இலாது உமிழவும் இலாது
நஞ்சினைத் தொண்டையில் தேக்கிய காரணம்
நச்சுச் சொல்லை வாயால் என்றும்
துப்புதல் தவறு; தொடருதல் தவறு;
ஆதலின் அடக்கம் அமரருள் உய்க்கும்!

ஆதலின் மனதே! நாளும் பொழுதும்
நல்லதைப் பேசு; நல்லதே பேசு!

***


English Translation:

Speak the virtuous speech.


In the street, corner, market or junction
In the temple entrance or the grandeur golden hall
In the stage, the lane or the backyard door
In the tea stall, the road side or the terminus
In the class room of college, in love or in office
In the journey of no hand or head sticking out, or in the running

In the cot or in the slope or in the sleeping spongy bed
In the dining hall or in the strolling park
In the multiplex theatre or in the interval
In the water tank, in swimming, or at the pool side
In the friends meeting, in beach sand or in the upstairs
In the living room, in the visitors lounge or in the window

Day fully talking are those people of tongue
Mouth non stopping and the words not fading
Covering all three tenses, continuing all the time
No wearying, paining and never tiring
Speaking everything; now additionally the mobile phone too...
What would you speak? Everywhere and anywhere?

Is exchange of Love? Let humanity grow...
Is excellence of love? Let poems flow…
Is pleading from home? Let relations shine...
Is childish prattle? Get filled with joy...
Is relative or bond? Let affection remain...
Is the closest or relation? Let peace remain...

Is affectionate enquiry? Let love flourish...
Is search of knowledge? Let wisdom grow...
Is wishing heart? Let prosperity stay on...
Is fondness of elders? Let respect and bow...
Is pleasant word? Let happiness grow...
Is musical flow? Let heart melt...

Is rupture in friendship? Rift in faith?
Let speak the day full; Let suspicion go away...
Is separation? Parting? Is Distress or Affliction?
Let solace comfort and clear it away...
Is falsity or argument? Un-subsiding anger?
Let it grow: the telephone company of the country!

Is the speech of malicious slandering?
Is the speech of mind neglecting slandering?
Is the slander of inner? Or Non-virtuous slander?
Is the slander of darkness on neighbor and distant?
Is the slander to grow the rift?
Is the slander to multiply the sins?

Stop the afflicting slandering
That which denies the good virtues!
Stop the clean spoiling slander
By keeping righteousness the underneath!
Uphold the love inside the heart
Destroying the meanness and lies!

Speak the glory in public...
Speak the pleasant in smile...
Speak the beauty, speak the research...
Speak the positive and encouraging
Speak the truth and speak the eminence...
Speak the same in inner and out...

Speak the language of experience...
Speak the dignity of good virtues...
Speak the greatness of spirituality...
Speak the goodness praised by the world....
Speak the comprehended ways to grow...
Speak the courtesy of the helping people...

With no quarrel, abuse and worry
Speak the words of no cunning...
With no poverty, grievance and sadness
Speak the words of no polemic...
With no lies, fear and cover up
Speak the pleasant the no poison words...

The God that made of half feminine
With no intake or out throw
Reason for retaining the poison in the throat is
Poisonous words utter never by the mouth
Spitting or continuing is offense
Hence self-control redeems the heaven.

Therefore heart! Day and night
Speak the good; speak only the good!

***

எச்சங்கள்

எச்சங்கள்


மனிதமோ காகமோ
அமிர்தமே உண்டாலும்
மலங்கள் மாத்திரம்
அழிவதேயில்லை!

கடையோ குடையோ
எதை விரித்தாலும்...
மரணித்த போழ்து
குடம் உடைத்தாலும்...
எச்சங்கள் மாத்திரம்
ஒழிவதேயில்லை!

மனிதப் படைப்பா
மதிப்பேயில்லை
புனிதமா புடலங்காயா?
காகத்துக்குச் சிலை
புறாவுக்குக் கோபுரம்!

இரக்கப்படும்
இயற்கையின் கண்ணீரா?
எச்சத்தைக்
கழுவிச் செல்ல
எப்போதோ சிந்தும்
சில மழைத் துளிகள்...

***