Wednesday, January 20, 2010

இரவுக் கலம்

முன்னுரை:
இக்காலத்தில் சங்கத் தமிழில் கவிதை எழுத இயலுமா என்று தோன்றிய எண்ணத்தினால் நிகழ்ந்த ஒரு பெரிய முயற்சி இது. கீழே பொருளையும் கொடுத்துள்ளேன். முடிவு நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

எது எப்படியோ, இந்த அனுபவத்தில் நான் அறிந்தது:

1. சங்கத் தமிழில் எழுதுவது மிகவும் சிரமமானது. எனவேதான் ஒவ்வொரு சங்ககாலக் கவிஞரும் கொஞ்சமாய் எழுதி இருக்கிறார்கள் போலும். அதாவது விஷயம் இருப்பவர்கள் மாத்திரமே எழுதி இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. அல்லது மற்றயவை கவனத்தில் கொள்ளாது கழட்டி விடப் பட்டிருக்கலாம்.

2. எதுகை, மோனையோடு கூடிய கவிதைகளைக் காட்டிலும், இத்தகைய கவிதைகளில் தான் அர்த்தம் சிதறாமல் கிடைப்பதாக ஒரு நம்பிக்கை. இதைத்தான் Professor George L. Hart ஒரு பேட்டியின் போது சொன்னதாய்ப் படித்தது ஞாபகம். எனவேதான் முயன்று பார்த்தேன் என்பதும் உண்மை. மேலும் எனக்கு இவ்விதமாக கவிதை புனையும் எண்ணத்தைத் தோற்றுவித்த ஆர்குட் நண்பர் அஜீத்திற்கு நன்றி.

பொறுமையுடன் படிக்கும் உங்களுக்கும் நன்றி. மறக்காமல் உங்கள் கருத்தைப் பதியுங்கள். இம்மாதிரி முயற்சிகளுக்கு அவை உதவும்.


இரவுக் கலம்


ஞாயிறு உருமம் ஞான்று நடுத்தெருக் கடைஇல்,
பஞ்சரம் இலம்பும் முகப்பறை, புறக் கண்ணி அசுழம்,
ஆயிழை தோலிகை குந்த, பெயரன் பெயர்த்தி ஆடும்வாயில்
ஒப்பனை மடுத்த காளையர் நாயனம் தாளம் முழக்க,
நுதியசை வித்தை விளம்பி, இரவல் மிருதம் வினவி,
ஆர்த்த அரிசில் ஈட்டு, அயலகம் நாடி நகர்த்தகல;

குறு கணம் வழுவி, அரவொடு மாந்தன் நெஞ்சம்
மகுடி நிரவி, அஃதே யன்ன கன்னம் பருத்துக்
கரைந் திடவ் வரவம் அவிழ் சுருட்டைப் பெட்டகச்
சுருளிடைத் தலையுறுமி, விழித்தோன் யார் கொல்
அன்ன, சிறையடு தட்டம் போயின தொட்டு நோக்கும்
தடத்து; வினவுக் குறியென விடைத் தாடல் காட்டி,

அவ்வவை மகவினர் ஆவல் ஆறாக் காலை துயில்
தழுவக் கூடை சாத்தி, பரிசில் அரிசில் மாதுகரித்து;
நீங்கி, நாழிகை யழிந்து, மந்தி கழியொடு வந்தோனடுத்து,
அமர்ந்து தாவு வானரம் பல்லரிய செய்யச் சுட்டி,
இராகவக் கூற்றில் கரணமும் மனிதரன்ன ஆடலும் தோற்றி,
நிரைகுறு மாக்கள் களிக்க, இரவல் ஆயம் செறிப்ப,

தும்பு பிணை மந்தியோர் தோள் தொற்றிப் போந்த,
சிறுபொழுது கழிய, நீறணிக் களிறு பாகன் பணத்திடை
மணி சாற்றி வரவிட, சாமசத் துதிக்கை ஆசிகூலி
சிரம் ஐந்தாம் செப்பி; ஆயா சிசுக்கள் நிரல் அமர்த்தி,
மதகரி வழுத்த, விலையும் கனியும் இரவலும் ஆர்த்த,
ஈட்டவ் வேழம் பாகன் ஈந்து அரம்பை மட்டில்

முறையனை மாறுகண் பார்வல் நோக்கியே மாந்தி,
கஞ்ச மணி கொஞ்ச; செவி இரட்டுற, குஞ்சரம்
மிதமலை அன்ன இம்பர் நிகமம் விழைய விரைய,
பின்னை, கொசுவத் துகிலில் முற்றிழை அலியள்
பல்காலும் கைதட்டி தோரணம் அப்பால் தோகதம் உழ,
அருகி குதப்பு வாயொடு நிதி் இரத்து நிற்க;

அஞ்ஞை விளம்ப; அடிச்சி இடுத்த இரு பணம்
அரைக் கிழிதம் கச்சில் அடைத்து, மகவினர் மாட்டு
பெற்றம் நெட்டி, நொடித்துக் குழகி ஒயில் தலைக்கழிய;
குறுங்கால், அபரம் ஆயிடை நலிந்து நைவியச் சிறுமி,
ஆகாரம் தாரகமில் அகதி, சிக்கல் மல்குக் குஞ்சி;
கசடொடு கந்தல் கலிங்கம்; அதனினற்ப மதலைப் பகினி;

அந்தரம் அள்ளிப் புனைய, கைகள் பாசனம் ஏந்தி
”உண்டு இரு நாள் உகுத்து; பசி தம்மோய்” என
வாய்புலற்றி அருத்தியள்; ஆங்கு, புறத்தவிழ்த்த யட்சம்
உறுமிக் குதறக் குலைத்து ஏவலள் கண்ணி இழுப்பத்
திமிரி வழாஅல் தளத்திடை பச்சுதி, உற்று அடங்க
அரளி அணுவளை, ஞாளி உசும்பும் மனைக் கிழத்தி

”இற்றை செற்று நாளை வருதி” என நல்லுளத் தேவ,
சேய் முகத்த மற்றோர் தூடிதக் குருளை மகவினர்
மாட்டு யாங்குப் புதினம் தோற்பள் அன்னக் கோடலோ?
ஆயிழை ஏவல் வலுத்த சேடி கனத்து இரைத்து
”ஞெள்ளை அவிழச் சமைப்பன்; மீள்” என வெருட்ட,
கையறு மிரளி அகலி, உய்த்து, மறுகு கடுகி,

இரைத்து நடக்கை முயல; அடு தொளியோ, மனையோ
அடையல் நுதி வரத்து துட்கோ, இலங்கணமோ, இராவணமோ
ஆதானும் நிபம் வதனம் உறட்டி ஆகுலம் செப்ப,
குறுக்கு அமர்விய மதலை உவள் முகம் ஆய்ந்து
இரியல் உழ; அஃது தேற்ற வகிப்பளைத் திரிய
நோக்கி, யாதோ அங் குழவி பைய நகுத்ததே...

***


பொருள்:

பிச்சைப் பாத்திரம்


ஞாயிறு நடுப்பகல் வேளை நடுத் தெருவில் கடைசி வீட்டில்
பறவைக் கூடு தொங்குகின்ற முகப்பறை, புறத்தில் சங்கிலியில் நாய்
சிறந்த அணிகலன் நிரம்பிய பெண் ஊஞ்சலில் அமர்ந்திருக்க, பெயரனும் பெயர்த்தியும் ஆடுகின்ற வாசல் புறத்தில்
அலங்காரம் செய்த காளையும் (பூம் பூம் மாடும்) காளையனும் நாதஸ்வரம் மேழம் முழங்க
தலை ஆட்டும் வித்தை காட்டி பிச்சைப் பொருள் வேண்டிக் கேட்டு,
வழங்கிய அரிசியை வாங்கி அண்டை வீட்டை நோக்கி நகர்ந்து அகல

சிறு நேரம் சென்றபின் பாம்போடு ஒரு மனிதன் நெஞ்சம் முழுக்க
மகுடியை நிரப்பி மகுடியைப் போன்றே கன்னம் உப்பி
இசையில் கரைய, அந்த அரவம் திறந்த சுருட்டி வைக்கப்பட்ட வட்டப் பெட்டகம் போன்ற கூடையில்
சுருண்டநிலையில் தலையைச் சீறி, அழைத்தவன் எவன் அவன்
என்பதுபோல், சிறைப்பட்டு, மேல்வாய் நச்சுப் பல் இழந்த நேரம் முதலாய் நோக்குகின்ற
வழக்கம் போல், கேள்விக் குறி போலும் விடைத்து, ஆடல் காட்டி

ஆங்கே குழுமிய குழந்தைகள் ஆவல் தீராத வேளையில் துயிலைத்
தழுவ, கூடை அடைத்து, பரிசிலாக அரிசியைப் பிச்சை பெற்று
நீங்கிய பின்னர், நாழிகை கழிந்து, குரங்கும் கம்போடும் வந்தவன் அடுத்ததாய்
அமர்ந்து தாவிடும் வானர விலங்கைப் பல அரியசெயல்கள் செய்யக் காட்டி
இராகவச் சொல்லில் (ஆடுறா ராமா, ஆடுறா ராமா) கரணமும், மனிதர்போலும் ஆட்டமும் காட்டி
குழுமிய குழந்தைகள் மகிழ; இரந்து வரும்படி வாங்கி

கயிற்றில் பிணைத்த மந்தியைத் தோளில் தாங்கிப் போக;
சின்னேரம் போனபின்னர் ஆண் யானையும் பாகனும் அங்குசத்தோடு
மணிகள் ஒலிக்க வந்தனர்; யானைத் தும்பிக்கை ஆசீர்வதிக்க
தலைக்கு ஐந்தாம் சொல்லி, ஆயாள் குழந்தைகளை வரிசைப்படுத்தி, அமைதிப்படுத்தி;
யானை வாழ்த்த; கட்டணம் பழமும் பிச்சையும் கொடுக்க;
வாங்கிய யானை பாகனிடம் கொடுத்து வாழைப்பழத்தை மாத்திரம்

பாகனை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டே தின்று
வெண்கலமணி கொஞ்ச, காதுகள் அசைய யானை
மிதக்கும் மலை போலும் அடுத்த தெரு நாடிப் போனது;
அப்புறம் ஒரு புடவை கட்டிய திருநங்கை
அடிக்கடி கைதட்டி வாயிலைத் தாண்ட விரும்பி முயன்று
தோற்று வெற்றிலை குதப்பிய வாயால் யாசகம் கேட்டு நிற்க

அன்னை சொல்ல பணிப்பெண் கொடுத்த இரண்டு பணம்
இடையின் பணப்பையில் செருகி குழந்தைகள் பால்
காற்றில் நெட்டி முறித்துக் கொஞ்சி ஒய்யாரமாய்ப் பிரிய;
சிறுநேரம் கழித்து ஆங்கே நலிந்து மெலிந்த குட்டி
உணவு, உறைவிடம் கதி அற்று குளியல் அறியாத சிக்குக் குடிமியொடு
கசடும் கந்தல் துணியும் ஆடையாய் அதனிலும்கேவலமாய் குழந்தைச் சகோதரியை

இடையினில் தாங்கிக் கட்டி, கைகளில் பிச்சைப் பாத்திரம் ஏந்தி
”சாப்பிட்டு இரு நாட்கள் ஆயிற்று பசிக்கிறது தாயே” என்ற பல்லவியுடன்
வாய்பிதற்றி இரைஞ்சினள்; அப்போது புறத்தில் அவிழ்க்கப்பட நாய்
உறுமிக் குதறுவதற்குக் குலைத்து, பணிப்பெண் சங்கிலி இழுக்க
திமிறி வழுவும் தரையில் சருக்குவது கண்டு நெருங்கப்
பயந்து அண்டியவளைப் பார்த்து நாயை அதட்டிய இல்லத்தரசி

“இன்று போய் நாளை வா...” என்று நல் உள்ளத்தோடு பணிக்க
குழந்தையைச் சுமந்த இன்னொரு அழுக்குக் குழந்தை, குழந்தைகள்
பால் என்ன புதிதாய் வேடிக்கை காட்ட முடியும் என்று கருதினரோ?
அன்னையின் ஏவலை வழிமொழிந்த வேலைக்காரியும் கனத்த குரலில்
“நாயை அவிழ்த்து விட்டு விடுவேன் ஓடிப்போ” என்று விரட்ட
கலங்கி/வருந்தி மிரண்டு விலகி தப்பித்து சாலைக்கு ஓடி

மூச்சுவாங்கி நடக்க முனைய; அடுத்த தெருவோ, வீடோ
போவதற்கு முன்பே வந்த பயமா, பட்டினியா, அழுகையா
ஏதோ காரணத்தால் முகம் வாடிச் சோகம் சொல்ல;
இடையில் அமர்ந்த குழந்தையும் அவள் முகம் கண்டு
அழுவதற்கு எத்தனிக்க; அதை ஆற்ற முயன்றவளை மீண்டும்
பார்த்து எதற்காகவோ அக் குழந்தை மெல்லச் சிரித்தது...

***

16 comments:

  1. நாட்டாமைJanuary 20, 2010 at 10:25 AM

    சங்கத் தமிழ் கவிதையில் யாப்பு கையாளப்பட்டிருக்குமாயின் உங்களுக்கும் சங்கப் பலகை தயார்.

    ReplyDelete
  2. @நாட்டாமை
    //சங்கத் தமிழ் கவிதையில் யாப்பு கையாளப்பட்டிருக்குமாயின் உங்களுக்கும் சங்கப் பலகை தயார்.

    வரட்டும் வரட்டும். ”நல் இலக்கியங்கள் இணையத்தில் நிச்சயிக்கப் படுகின்றன’ என்று வரும் சந்ததி சொல்லட்டும். :-)

    வருகைக்கும் பதிவிற்கும் நன்றிகள் நண்பரே.

    ReplyDelete
  3. @முனைவர் இரா.குணசீலன்
    வருகைக்கும் பதிவிற்கும் நன்றிகள் நண்பரே.

    ReplyDelete
  4. இக் கவிதை நான் ஒரு முறை என் அறையின் பால்கனியிலிருந்து எதிர் வீட்டில் பார்த்த உண்மைச் சம்பவத்தின் பதிவே. இரவல் மறுக்கப்பட்ட அந்தப் பெண் குட்டி கண்கள் கலங்கியதை பார்த்த போதும், இப்போது அதை மீண்டும் எண்ணியும், பதிக்கும் போதும் இருமுறை கண்கள் பனித்தேன் என்பதும் சத்தியம்.

    மோனோலிசாவின் புன்னகைக்குப் பல்வித விளக்கம் கொடுக்க முயலும் இலக்கிய உலகம், பிச்சைக்காரியின் கைக் குழந்தையின் புன்னகைக்கும் விளக்கம் தரட்டுமே... இலக்கியமாவது படைக்கட்டுமே...

    சிலவற்றை நானே ஆரம்பித்து வைக்கின்றேன்.

    o தெய்வம் சின்னேரங்களில்
    இப்படித்தான்
    புன்னைகைக்கும்...

    o சகோதரி ஏன்
    அழுகிறாய்?
    பட்டினிக்குத் துரத்தும்
    இதே உலகம்;
    வேண்டுமானால் பார்...
    உன்
    வசந்த காலத்தில்
    வயிறு நிரைக்க
    மாத்திரம் மறக்காது!!!
    என்று
    நம்பிகை ஊட்டுகிறதோ?

    o தடைகளிலிருந்து
    தற்காலிகமாக
    தப்பித்து விட்டோம்
    பெண்ணே...
    உலகம் பெரியது
    இன்னும்
    அடுத்த தெரு
    இருக்கிறது வா...

    o இடுக்கல் வருங்கால்
    நகுக...
    இது எப்படி
    இந்தக் குழந்தைக்குத்
    தெரிந்தது?
    குழந்தையா
    வள்ளுவரா...
    யார் யாரிடம்
    படித்தார்கள்?

    o அழாதே
    சோதரி...
    தொடரும்
    வாழ்க்கை
    நிச்சயம்
    இனிக்கும்...?

    ReplyDelete
  5. இடுக்கல் என்பதை இடுக்கண் என்று படிக்கவும். தவறுக்கு மன்னிக்கவும்.

    ReplyDelete
  6. o வாடிய பயிரைக் கண்டு
    வாடும்
    வள்ளல்களும்
    இருப்பார்கள் அக்கா...
    மனிதர்களையும்
    மனிதர்களாகப்
    பார்க்கும்
    மனிதம்
    அடுத்த வீட்டிலாவது
    இருக்கும் அக்கா...

    ReplyDelete
  7. It looks like some of our friends are not able to register their comments. Please let me know if you have any problems or any similar experiences before.

    The problem seem to be not able to enter into this comment box. Any help will be appreiciated.

    Thank you,

    UthamaPuthra

    ReplyDelete
  8. அன்புள்ள தோழருக்கு,

    உங்களின் முயற்சிக்கும், அதன் வெற்றிக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    இன்றைய வலி, நாளைய வழி போல் உங்கள் எழுத்துக்கள் என்றும் அமைய இறைவனை வேண்டுகின்றேன்.

    இவன்,
    தஞ்சை.வாசன்

    ReplyDelete
  9. @தஞ்சை.வாசன்

    வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் நண்பரே.

    என்றும் வலிகளே இலாத இன்பமே பற்றட்டும் அனைவரையும்.

    நன்றி.

    ReplyDelete
  10. I am speechless. What do you call this genre as?
    We praise people even for petty things, we all know, it is an easy way of knowing others getting acquaintance and contacts. May be we learnt this habit from the Britishers, to praise everything around.

    Now I am in trouble, when you praise others even for reasonably good work, what will you do when you find a master piece? I am not appreciating or giving any comments about this work. Whatever I say will be an understatement. Just hats off to your work

    ReplyDelete
  11. @Ajithkumar

    Thanks a lot. You were one of the causes for me to have accomplished this. I hope you remember the incident when you commented on the "IruLil oLi" poem. Special thanks for the same to have made me to think on sangam lines.

    I don't know if many follow the sangam style today, we may have new genres opening up. I am happy that we will also be part for such trends.

    Keep coming at least for your thought provoking comments and for newer ideas. Pleasure would be mine as always…

    ReplyDelete
  12. yenakku kavithai yelutha theriyathu..yenakku neram kidaikum konja nerathula unga kavithai ya padichen...illa illa kavithaiyoda porul ya padichen..kan munne appadiye yela kadchikalum vanthu poi..kankal kalankiruchu...

    -Murugesan

    ReplyDelete
  13. நன்றிகள் முருகேசன்.

    கவிதையின் கருத்து உங்களின் மனதைத் தொட்டு, உணர்வுகளை வெளிப்படுத்தினால் அதுவே வெற்றி என்று எண்ணத் தோன்றுகின்றது. கவிதையின் வடிவம் எப்படி இருந்தால் என்ன? இல்லையா?

    ReplyDelete
  14. I am struck in awe. Unbelievable feat. I didnt imagined that the new age poets ccould script poetries in sangam style. I confess that i am unfit to appreciate your poetry, for i could get only a glimpse of your narration, couldnt comprehend fully. Nice that you had given the meaning to facilitate people like me. i read the poem once again and couldnt stop weeping.

    ReplyDelete
  15. Thank you @balag.

    ///i read the poem once again and couldnt stop weeping.

    You are kindly. இரக்கம் என்னும் உணர்வே மனிதர்களென்று காட்டும் தன்மை.

    Thanks a lot for the post and your sincere appreciation.

    ReplyDelete