Wednesday, June 24, 2009

சுழற்சி

சுழற்சி


தன்னை விடச் சிறிய
மீனை விழுங்கிக்
கொண்டிருக்கும் மீன்
இன்னும்
உணரவே இல்லை
தான் நீந்திக் கொண்டிருப்பது
இன்னொரு
மீனின் வாயில் என்பதை...

என் கண்ணின்
மணியில் நீ
உன் கண்ணின்
மணியில் நான்
மீண்டும் உள்ளே
உள்ளே மீண்டும் ...

புகைப்படக் கருவியை
வைத்துக் கொண்டு
ரகசியமாய் நான்
அவனைப் படம் பிடிக்க
எனக்குப் பின்னால்
இன்னொருவன் என்னை
அவனுக்குப் பின்னால்
இன்னொருவன் அவனை...
அட நான் படம் பிடிப்பவனும்
யாரையோ படம்பிடிக்க..
அடச்சே கடைசியில்தான்
தெரிந்தது அந்த
அவன் தான் அவன்...

யாரையோ,
எதையோ தேடி
ஓடுகையில்
ஒருவன் அல்லது எதுவோ
துரத்துவதும்
இது தானோ...

பூமி
சூரியனைச் சுற்றி
சுழன்று கொண்டே
இருக்கிறது தன்
நீள் வட்டப் பாதையில்
சந்திரன் பூமியை...
எதைத் தேடி?

***நம் தமிழ் நாடு

நம் தமிழ் நாடு

  
அரசின் இலச்சினை கோயில் கோபுரம்;
ஆட்சியர் மட்டும் நாத்திகர் கூட்டம்!
வந்தவர்க்கு எல்லாம் வாழ்வு நிச்சயம்;
சென்றவர் மாத்திரம் பிச்சைப் பாத்திரம்!

ஆலயம் கூட்டம்; ஆத்திகம் கூட்டம்;
குதர்க்கர் கூட்டம்; கூத்தியர் கூட்டம்;
ஆட்டம் பாட்டம்; அனைத்திலும் நாட்டம்;
கூடுவது ஒன்றே குறைவிலா இன்பம்!?

சித்தர் சைவர் புத்தர் வைணவர்
சாக்கியச் சமணர் இயேசு அல்லா
எல்லாம் இங்கே ஒன்றாய் நிற்கும்;
கோயில் நாடு நம்தமிழ் நாடு!

வடவன் மொழியை வாழ வைத்ததும்;
பரங்கி ஆட்சியை அழகு பார்த்ததும்;
தமிழன் அன்றேல் தலைமை தருவதும்;
தமிழ் என்றாலே உயிரைத் தருவதும்;

"உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு"
உரைத்த பொய்க்கே வாக்கைத் தருவதும்;
தலையைத் தடவி மொட்டை அடிக்கும்
ஆள்வோர் கூட்டம் வாழ்க்கை பெறுவதும்;

உதிரம் விற்று உடலை வளர்க்கும்
கலையிது வென்றே காட்டிய நாடு!
தொலைக் காட்சியாலே உறவை அறுத்து
உணர்வை மறந்த நம்தமிழ் நாடு!

நங்கையர் அழகில் பல்லை இளிக்கவும்
மங்கையர் நடிகையர் கோயில் செய்யவும்;
இலவசம் கொண்டு இன்பம் உய்யவும்;
இரப்பவர் கண்டு ஈகை செய்யவும்;

நாட்டைக் காக்க வீட்டைத் துறக்கவும்;
உடமை காக்க படையைச் சாரவும்
உழைத்தே உண்ணவும்; உறுதி கொள்ளவும்;
உயிரைப் பிறர்க்கே தியாகம் செய்யவும்;

அகமும் புறமும் ஒருங்கே பேசி
அழகை அறிவை பழங்கதை ஆக்கி
நடக்கும் வாழ்வை கடத்தும் ஆற்றலை
படைத்தே சிறக்கும் நம்தமிழ் நாடு!

பிச்சைக் காரரும் பெருந்தனக் காரரும்;
கொடைதருங் கடைஏழ் வள்ளரும்; அல்லரும்;
கொள்ளை அடித்தே பிள்ளை வளர்க்கும்
அருமை அரசும்; கருணை நிதியும்;

அறிவில் முதிர்ந்த அறிஞர் பலரும்;
அரைவேக் காட்டில் தன் உணர்வன்றி
தத்துவம் உதிர்க்கும் எத்தரும் பித்தரும்
கைகளைத் தட்டும் மடையரும் மாக்களும்;

குறைகள் மறந்து நிறைந்த நெஞ்சில்
கூடியே வாழும் மாந்தர்தம் கூட்டம்;
குறையோ நிறையோ; மாறு பாடுகளின்
மொத்த உச்சமே நம்தமிழ் நாடு!
 
***

சந்தேகம்


சந்தேகம்தக்‌ஷிணா மூர்த்தி
நஞ்சுண்ட கண்டன்
தென்னாடுடைய சிவனாய்
என்னாளும் இருக்கிறார்...
அமிர்தம் உண்ட
தேவர்களெல்லாம் எங்கே?
மண்ணுலகை விடுத்து
விண்ணுலகில் தான்
சாவாமல் வாழ்கிறார்களோ?


கொல்வதும் நானே
கொல்லப்படுவதும் நானே
என்னை நம்பி
”அம்பைத் தொடு, அடி”
என்று சொன்ன
கண்ணனும் ஒருநாள்
செத்தே போனான்;
கதை கேட்ட
பக்கத்து வீட்டு
அலமு கேட்டாள்
மாமா
ஒரு சந்தேகம்
செத்துப்போன கண்ணனுக்கு
சொர்க்கமா, நரகமா?

***

அப்பா

அப்பா


அப்பா...
அண்ணனுக்கும் நீதான்
அப்பாவாம்
ஆனால் அவன் ஒரிஜினலாம்
நான் மட்டும் டூப்ளிகேட்டாம்
ஏன் அப்பா
அம்மாவை நீ கல்யாணம்
பண்ணிக் கொள்ளவில்லை?
அம்மாவுக்கு வேணும்னா ஓகே
எனக்கு எல்லா இடத்துலயும்
அவமானமா இருந்தாலும் கூட
உங்க மகள்னு சொல்லிக்க மட்டும்
நான் வெட்கப்பட்டதே இல்லை
அப்பா...

நீங்கள்
ஸ்விஸ்ல பணம் போட்டாலும்
எனக்கு MP சீட் வாங்கித்
தந்தாலும்
"அம்மாவின்” மகள்ங்கிறது
மட்டும் போகவே போகாது ...
அதுக்காகத்தான்
நான்
என் புள்ளைய
அப்பனே தெரியாம
வளர்க்கப் போறேம் பா!

***

Monday, June 22, 2009

குருவிக் கூடு


குருவிக் கூடு


குருவி ஒன்று வீடு கட்டிக்
கொண்டிருந்தது
கூடத்துச மேல் சாளரத்தில்...

தேடிப் பிடித்து ஒரு
மூங்கில் கழியாலதைக் கலைத்துவிட
இளசு ஒன்று எத்தனிக்க

வீட்டுப் பெரிசு சொன்னார்
குருவிக் கூட்டைக் கலைக்காதே
உனக்கு வாரிசு இல்லாமல்
போய்விடும்...

விட்டுவிட்டது இளசு...

வாரிசுப் பயமா? மனித நேயமா?
இளசா? பெருசா?
எதுவோ ஒன்று... இல்லை எல்லாம்...

அங்கே இன்று
குருவிக்கூடு
அங்கீகரிக்கப் பட்டு விட்டது...

எதையும் அறியாக் குருவி மட்டும்
இன்னும் சிரத்தையாய்
கூடு கட்டிக் கொண்டிருக்கிறது

நெஞ்சுக்குள்ளே ஒரு புதுச் சொந்தம்
சுவாசித்த காற்றில் சுதந்திரம்
இன்றைய இளங்காலை
ஓர் இனிமை மிக்க ஆரம்பம்...


***


Saturday, June 20, 2009

எதிர்பார்ப்புக்கள்...


(எண்பதுகளில் எழுதியது. 85ஆக இருக்கலாம்! நடு வரிகள் மறந்து போயிற்று... மறுபடியும் எப்படியோ ஒப்பேத்தி இருக்கேன்!)எதிர்பார்ப்புக்கள்...

ஏடு எடுத்துப் படிச்சதில்ல
         எளச்சிப் போயி படுத்ததில்ல
மாடு பத்தித் திரிஞ்சவந்தாண்டி - என் மச்சான்
         மனசுக்குள்ள வெத வெதச்சாண்டி!

சீமைக்கும் போனது இல்ல
         செவத்த மேனி கருத்ததில்ல
பானக் கள்ளு குடிச்சவந்தாண்டி - என் மச்சான்
         பழைய கஞ்சி குடிச்சவந்தாண்டி!

மாடிவீட்டு மதுர சனம்
         யாழ்ப் பாணம் போறமுங்க
மச்சினியக் கூட்டிப் போனாக - என் மச்சான்
         மனசத்தானே கூட்டிப் போனாக!

ஊரு பாக்க போறமுன்னு
         போனமாசம் போன தங்கை
மாருகாட்டி மாண்டு போனாளாம் - ஐயோ
         மானத்துக்கே உயிர விட்டாளாம்!

சிங்கள ராணு வத்தான்
         சின்னவள செதற வைச்சு
நெஞ்சங்களப் பதற வைச்சானே! - எங்கள்
         நிம்மதியக் கொதறி வைச்சானே!

அன்னிய தேசம் தேடி
         அனியாயச் சாவுக்குத் தான்
ஆண்டவன் அனுப்பி வைச்சானா? - இல்ல அவுக
         அழியத்தான் தொடக்கி வைச்சானா?

எம்புட்டு அழுது என்ன
         எந்தச்சாமி தொழுது என்ன
செத்தவ வரவே இல்லியே! - என் மச்சான
         தேத்தத்தான் வார்த்தை வல்லியே!

சீவி வரும் வாளெடுத்து
         சிலம்பு சுத்தும் கம்பெடுத்து
சிங்கம் போல கெளம்பிப் போறாண்டி - என் மச்சான்
         சிங்களத்தை அழிக்கப் போறாண்டி!

மாரி அம்மன் படையலிட்டு
         மரிக் கொழுந்துப் பந்தலிட்டு
தெருவெல்லம் அலங்கரிப்பேண்டி! - என் மச்சான்
         திரும்பி வரக் காத்திருப்பேண்டி!

***

Friday, June 19, 2009

ஐவருக்கும் காதலன்

ஐவருக்கும் காதலன்


நிலம்:
பச்சைப் பட்டுடுத்திப்
பாதிக் கண்மூடி
நாணித் தலை குனிந்தாய்
நங்கையே
எந்த
நிலம் நோக்கி?


நீர்:
வெள்ளை உள்ளத்தை
வெள்ளமே நீ காட்டுகின்றாய்
உன்னையே பார்த்தாலும்
என்னையே நீ காட்டுகின்றாய்
தண்மை அன்பை
தரணிக்கே நீ ஊட்டுகின்றாய்!
தண்ணீரே அறிவாயா
நீரின்றி நானில்லை...


நெருப்பு:
உலகுக்கு நீ வேண்டும்
உணவுக்கு நீ வேண்டும்
உயிராக நீ வேண்டும்
உளத்தே நீ வேண்டும்
மழையாக்க நீ வேண்டும்
ஒளியாக்க நீ வேண்டும்
குளிரோட்ட நீ வேண்டும்
எரியூட்ட நீ வேண்டும்

மயக்கத்தைத் தோலுரிக்க
இணக்கமாய் நீ வேண்டும்
தயக்கத்தை வேறருக்க
இயக்கமாய் நீ வேண்டும்!
நெஞ்சத்தில் நீ இருந்தால்
அஞ்சாதோ எதிரணியும்
மஞ்சத்தில் வந்தமர்ந்தால்
பற்றாதோ மனமிரண்டும்

ஆன்ம ஜோதியாய்
அகத்தே இருளகற்றி
பொருப்பாக இருப்பாயா?
நெருப்பான என்கண்ணே?


காற்று:
தேகத்தே உயிர்தரிக்க
தேவை திடப்பொருள்(?) நீ...
தென்றல் என்றாலும்
தேகமே உன்பொருள் காண்!

ஆனவை ஏதிருந்தும்
அத்தனையும் வீணே காண்
சுவாசமிலாதே நான்
சுகிப்பது ஏதும் உண்டோ?

ஒலியென நீ அல்லால்
உரைத்திட மொழி ஏது?
அலையென நீ அல்லால்
அழைத்திட வழி ஏது?

ஆகாயம்:
நெஞ்சில் சிறகடித்து உன்
நினைவாய் இருக்கையிலே
பஞ்சாய் பறக்குதடி மனம்
பரிவட்டம் கொள்ளுதடி...

அண்ட வெளியிடையே மனம்
ஆனந்தக் களிப்பிடையே
வண்டாய் பறக்கையிலே வானம்
வசப்பட்டு இனிக்குதடி...

துள்ளிக் குதிக்குதடி தோழி
தொடரும் பெருவெளியில்
எல்லை காணாதே மனம்
ஏகிக் களிக்குதடி...

***

கலைமகள் என்ன விலைமகளா?

கருணாநிதிக்கு நோபல் பரிசு...

செய்தி: /////தமிழக முதல்வர் கருணாநிதியின் எழுத்துக்களை ஆங்கிலப்படுத்தி, அவற்றை நோபல் கமிட்டியின் பரிந்துரைக்காக அனுப்ப 12-பேர் அடங்கிய ஒரு குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவுக்கு பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜி.திருவாசகம் தலைவராம்.

இந்தக் கமிட்டியின் பிற உறுப்பினர்கள்:
1. கவிப்பேரரசு வைரமுத்து
2. அகத்தியலிங்கம்
3. மருதநாயகம்
4. வி.முருகன்
5. பி.கே.பழனிச்சாமி
6. கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன்
7. ரமணி
8. கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம்
9. கயல் விழி
10. எம்.ரவிச்சந்திரன்
11. சி.சிவசண்முகம்
கருணாநிதியின் எழுத்துகளை (கவிதைகள், கட்டுரைகள், [முரசொலிக்?] கடிதங்கள்) பாரதியார் பல்கலைக்கழகம் மொழிமாற்றி வெளியிடுமாம். இதற்கு ரூ. 10 லட்சம் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது.
http://www.hindu.com/2008/07/07/stories/2008070759541000.htm
///////////////

கருணாநிதிக்கு நோபல் பரிசு….

கெடக்குறதெல்லாம் கெடக்கட்டும்
கிழவனைத் தூக்கி
மணையிலே வைன்னாங்களாம்…. :) :) :)

அதற்காக:கலைமகள் என்ன விலைமகளா?


தத்தென்று பித்தென்று
       தமிழிலே எழுதினால்
              தத்துவம் ஆகி விடுமா?

பத்து இலட்சத்தில்
        பலர்கூடிப் பிதற்றினால்
               முத்தாக மாறி விடுமா?


சத்தில்லா சொற்றொடரும்
        தரமற்ற கவிதையும்
               சங்கத்தமிழ் ஆகி விடுமா?

பித்தளை ஈயம்
        பெருங்காயப் பாத்திரம்
               தங்கமென்று தேறி விடுமா?


எத்தனை காலத்து
        இலக்கிய மரபுகள்
               முத்தமிழ் கற்றுத் தருமா?

இத்ததும் பீத்ததும்
        இன்றையச் சொத்தென்று
               செந்தமிழ் செத்து விடுமா?


நயமற்ற கவிதையை
        மொழிமாற்றுச் செய்தாலே
               நல்லவை ஆகி விடுமா?

சுயமற்ற உளரலைச்
        சுகமான பொருளென்று
               சொன்னாலே விற்று விடுமா?


பாவாடை மேலாடை
        தூக்கியே பார்த்திட
               ஆங்கிலம் பொருள் தருமா?

பதைக்கின்ற செயலெலாம்
        பரவசம் எனக்கூற
               பாவலற்கு மனம் வருமா?


சுவையற்ற இயம்பலும்
        சொதப்பிய பிதற்றலும்
               தமிழ் கொல்லும் தரித்திரமே!

கலையற்ற பொருளினைத்
        தமிழின் அழகென்றால்
               பழி சொல்லும் சரித்திரமே!


பண்கெட்ட பாட்டினை
        பைத்தியக் கூத்தினை
              பாருக்குத் தமிழ் தருமா?

கண்கெட்ட குருடர்கள்
        கலையது என்பார்கள்
               கலைமாது விலைக்கு ஆகுமா?


காசுக்கு நோபலை
        யாரேனும் விற்றாலே
               கருணா நிதிக்குக் கிட்டும்!

கலைமகள் வாயின்றி
        கதறி அழும்போது
               கண்ணீரில் இரத்தம் கொட்டும்!


பாகம்: 2

ஏதுக்கும் தேறாத
        கூவத்துக் குப்பையை
               இலக்கியம் என்று மொழியவோ?

இதுவரை தாழாத
        தமிழன்னைக் குடில்மீது
               எல்லாரும் வந்து உமிழவோ?


யாசித்த பொருளதை
        யாருக்கும் தெரியாமல்
               நோபலுக்குப் பரிந்து உரைக்கவோ?

யோசிக்கத் திறமின்றி
        இருளிலே சுட்டதை
               பாருக்குத் திரிந்து உரைக்கவோ?


கன்னலே செந்தமிழே
        கற்கண்டே தேன்பாகே
               கருணைக்கு அளவு இல்லையோ?

கருத்தையே திருடினும்
        கருப்பையைச் சுருட்டினும்
               பொறுமைக்கு எல்லை இல்லையோ?


இதுவரைப் படைத்திட்ட
        இலக்கியம் யாதுக்கும்
               பரிசுக்குத் தகுதி இல்லையோ?

இவரன்றித் தமிழிலே
        இதுகாறும் பரிசிலுக்கு
               யாரேனும் பிறக்க வில்லையோ?


சூதுக்கும் வாதுக்கும்
        சூலாகிப் பெற்றதெலாம்
               சூத்திரம் சொல்லுதே அங்கே...

யாதுக்கும் தேறாத
        சாத்திரம் ஈதென்று
               சத்தியம் செய்வோம் இங்கே...


கற்பனை எல்லாம்
        விற்பனைக்கு என்றே
               கடைதனில் கிடைப்பதே போல்

கலைக்கான நோபலும்
        காவியப் பரிசிலும்
               காசுக்குச் சிக்கி விடுமோ?


மாசிலா மொழியென
        மாணிக்கச் சிலையென
               மாதவ மங்கை நல்லாள்;

ஏதமிலா மாதவள்
        இலக்கியக் கலைமகள்
               இதயத்தே ஏதோ சொன்னாள்...


இன்னும் உயிரோடு
        இருப்பது எதற்கென்று
               இயம்புக என மொழிந்தாள்!

இறந்திடத் துணிந்தேன்
        இஃதொன்றே போதும்
               என்றே தான் பொழிந்தாள்!

***


இருளில் ஒளி?


இருளில் ஒளி?


மீண்டும்
ஒரு
தீக்குச்சியைப் பற்ற வைத்து
என் இருண்ட வீட்டிற்குள்…
தேடிய போதுதான்
தெரிந்தது
எஞ்சியிருந்த
எனது
ஒரே ஒரு
மெழுகுவர்த்தியையும்
யாரோ
திருடி விட்டார்கள்…
தீர்மானித்து விட்டேன்
இனி தீக்குச்சிகளே
தேவையில்லை என்று…
ஆம்
எரிவதற்கு என்னிடம்
இனி
என்ன இருக்கிறது?
என்னைத் தவிர…

இருளைப் பழகிய கண்கள்
உடைந்து போன
உடல் பாகங்களுக்கு
உத்தேசமாகத் தடவிக்
கொடுக்க
சுவாசித்துக் கொண்டிருக்கிறேன்
இன்னும்…

இப்போது உயிருக்கென்ன
உணவா தேவை?
கண்களை மூடினாலும்
கனவுகள் உறங்கவில்லை…
உலகமே ஒருங்கி உடைத்தது
என் உடலை மட்டுந்தானே?
உளத்துக்குள் இன்னும்
ஒளி தெரிகிறதே…
மரணம் தூரமாம்
மனது சொன்னது
ரணங்கள் ஆறட்டும்…

எங்கோ தெரியும்
வெளிச்சப் புள்ளி
விடியலைச் சத்தியம் என்றது…

தூங்கும்போதும்
இன்னும்
நான்
சுவாசித்துக் கொண்டுதான்
இருக்கிறேன்…


***

நிலமகள்

நிலமகள்!

பச்சைப் பட்டு உடுத்தி
     பாதிக் கண் மூடி
இச்சை தரும் எழிலாய்
     இயற்கை நகை செய்வாய்!

வானிற் கோலந் தன்னை
     வளைந்தே வரைவது போல்
நாணித் தலை குனிந்தாய்
     நங்கையே எந்தநிலம் நோக்கி?

சுட்டும் கதிரவனைத் தினம்
     சுழன்று தனை மறந்தே
வட்டம் போடுவது ஏன்
     வருடம் கழிவதும் ஏன்?

எட்டும் தூரத்திலே நிலவு
     ஏங்கித் தவிக்கிறதே! நின்னை
வட்டம் அடித்தேயது தன்
     வாழ்வைக் களிப்பதும் ஏன்?

திங்கள் ஓர் முறையில்
     தேய்ந்து வளரும் மதி
பொங்கும் முழு அமுதாய்
     பொழிந்துபின் உருக் கரையும்...

ஏதுக்குக் காலம் எல்லாம்
     ஏகவழிப் பாதை யதில்
தூதுக்கும் யாரும் இன்றி
     தொடர்ந்தே காதல் செய்வீர்

மேதினி முழுவதுமே கொட்டி
     மின்னிடும் வைரங்கள் போல்
மேகத்து வெளியிலெலாம் வெள்ளி
     மீன்களின் கண் அடிப்போ?

கடலில் அலை காற்றில்
     கதிர் கனலொடு புனலுமதில்
நடனமே ஆடுகிறாய் நங்கை
     நாளும் பொழுது எல்லாம்!

வெம்மை ஆகுதியோ மேனி
     வேகும் வேள்விப் போதினிலே?
தம்மைத் தழுவிச் சீரமைக்க
     தாரை மழை பெய்குவதோ?

தெய்வத் தீர்த்தமதோ இரவில்
     தெளிக்கும் பனித் துளிகள்?
மெய்யைத் துலக்கவோ அருகில்
     மேகப் பஞ்சுத் திரள்?

அண்டப் பெரு வழியே
     ஆடும் நாயகியே; உந்தன்
கண்டக் குரல் ஒலிதான்
     கனிந்த பிரணவஓ மதுவாம்!

உடலும் எமக்குத் தந்து
     உயிர் அதிலே பொதிந்து
கடமையில் உணவு ஈந்து
     கருணையில் வாழ்வு வைத்தாய்!

ஆக்கி ஆட்டுவித்து எம்மை
     அன்பில் அரவணைத்தே, நித்தம்
தூக்கிச் சுமக்கின்றாய்; நெஞ்சில்
     தூங்கவும் வைக்கின்றாய்; அம்மா!

நாடகம் முடிந்தபின் தன்னுள்
     நலமுடன் ஒடுங்கவைத்தே எமக்கு
பாடமும் புகட்டுகின்றாய்; தாயே
     பரம ஞானமும் ஊட்டுகின்றாய்!

அறிவுத் திருமகளே! எங்கள்
     அன்புப் புவி மகளே!
அருமைத் தலைமகளே! எங்கள்
     அன்னை நில மகளே!
 
***