Saturday, June 20, 2009

எதிர்பார்ப்புக்கள்...


(எண்பதுகளில் எழுதியது. 85ஆக இருக்கலாம்! நடு வரிகள் மறந்து போயிற்று... மறுபடியும் எப்படியோ ஒப்பேத்தி இருக்கேன்!)



எதிர்பார்ப்புக்கள்...

ஏடு எடுத்துப் படிச்சதில்ல
         எளச்சிப் போயி படுத்ததில்ல
மாடு பத்தித் திரிஞ்சவந்தாண்டி - என் மச்சான்
         மனசுக்குள்ள வெத வெதச்சாண்டி!

சீமைக்கும் போனது இல்ல
         செவத்த மேனி கருத்ததில்ல
பானக் கள்ளு குடிச்சவந்தாண்டி - என் மச்சான்
         பழைய கஞ்சி குடிச்சவந்தாண்டி!

மாடிவீட்டு மதுர சனம்
         யாழ்ப் பாணம் போறமுங்க
மச்சினியக் கூட்டிப் போனாக - என் மச்சான்
         மனசத்தானே கூட்டிப் போனாக!

ஊரு பாக்க போறமுன்னு
         போனமாசம் போன தங்கை
மாருகாட்டி மாண்டு போனாளாம் - ஐயோ
         மானத்துக்கே உயிர விட்டாளாம்!

சிங்கள ராணு வத்தான்
         சின்னவள செதற வைச்சு
நெஞ்சங்களப் பதற வைச்சானே! - எங்கள்
         நிம்மதியக் கொதறி வைச்சானே!

அன்னிய தேசம் தேடி
         அனியாயச் சாவுக்குத் தான்
ஆண்டவன் அனுப்பி வைச்சானா? - இல்ல அவுக
         அழியத்தான் தொடக்கி வைச்சானா?

எம்புட்டு அழுது என்ன
         எந்தச்சாமி தொழுது என்ன
செத்தவ வரவே இல்லியே! - என் மச்சான
         தேத்தத்தான் வார்த்தை வல்லியே!

சீவி வரும் வாளெடுத்து
         சிலம்பு சுத்தும் கம்பெடுத்து
சிங்கம் போல கெளம்பிப் போறாண்டி - என் மச்சான்
         சிங்களத்தை அழிக்கப் போறாண்டி!

மாரி அம்மன் படையலிட்டு
         மரிக் கொழுந்துப் பந்தலிட்டு
தெருவெல்லம் அலங்கரிப்பேண்டி! - என் மச்சான்
         திரும்பி வரக் காத்திருப்பேண்டி!

***

No comments:

Post a Comment