Friday, June 19, 2009

ஐவருக்கும் காதலன்

ஐவருக்கும் காதலன்


நிலம்:
பச்சைப் பட்டுடுத்திப்
பாதிக் கண்மூடி
நாணித் தலை குனிந்தாய்
நங்கையே
எந்த
நிலம் நோக்கி?


நீர்:
வெள்ளை உள்ளத்தை
வெள்ளமே நீ காட்டுகின்றாய்
உன்னையே பார்த்தாலும்
என்னையே நீ காட்டுகின்றாய்
தண்மை அன்பை
தரணிக்கே நீ ஊட்டுகின்றாய்!
தண்ணீரே அறிவாயா
நீரின்றி நானில்லை...


நெருப்பு:
உலகுக்கு நீ வேண்டும்
உணவுக்கு நீ வேண்டும்
உயிராக நீ வேண்டும்
உளத்தே நீ வேண்டும்
மழையாக்க நீ வேண்டும்
ஒளியாக்க நீ வேண்டும்
குளிரோட்ட நீ வேண்டும்
எரியூட்ட நீ வேண்டும்

மயக்கத்தைத் தோலுரிக்க
இணக்கமாய் நீ வேண்டும்
தயக்கத்தை வேறருக்க
இயக்கமாய் நீ வேண்டும்!
நெஞ்சத்தில் நீ இருந்தால்
அஞ்சாதோ எதிரணியும்
மஞ்சத்தில் வந்தமர்ந்தால்
பற்றாதோ மனமிரண்டும்

ஆன்ம ஜோதியாய்
அகத்தே இருளகற்றி
பொருப்பாக இருப்பாயா?
நெருப்பான என்கண்ணே?


காற்று:
தேகத்தே உயிர்தரிக்க
தேவை திடப்பொருள்(?) நீ...
தென்றல் என்றாலும்
தேகமே உன்பொருள் காண்!

ஆனவை ஏதிருந்தும்
அத்தனையும் வீணே காண்
சுவாசமிலாதே நான்
சுகிப்பது ஏதும் உண்டோ?

ஒலியென நீ அல்லால்
உரைத்திட மொழி ஏது?
அலையென நீ அல்லால்
அழைத்திட வழி ஏது?

ஆகாயம்:
நெஞ்சில் சிறகடித்து உன்
நினைவாய் இருக்கையிலே
பஞ்சாய் பறக்குதடி மனம்
பரிவட்டம் கொள்ளுதடி...

அண்ட வெளியிடையே மனம்
ஆனந்தக் களிப்பிடையே
வண்டாய் பறக்கையிலே வானம்
வசப்பட்டு இனிக்குதடி...

துள்ளிக் குதிக்குதடி தோழி
தொடரும் பெருவெளியில்
எல்லை காணாதே மனம்
ஏகிக் களிக்குதடி...

***

No comments:

Post a Comment