Friday, June 19, 2009

நிலமகள்

நிலமகள்!

பச்சைப் பட்டு உடுத்தி
     பாதிக் கண் மூடி
இச்சை தரும் எழிலாய்
     இயற்கை நகை செய்வாய்!

வானிற் கோலந் தன்னை
     வளைந்தே வரைவது போல்
நாணித் தலை குனிந்தாய்
     நங்கையே எந்தநிலம் நோக்கி?

சுட்டும் கதிரவனைத் தினம்
     சுழன்று தனை மறந்தே
வட்டம் போடுவது ஏன்
     வருடம் கழிவதும் ஏன்?

எட்டும் தூரத்திலே நிலவு
     ஏங்கித் தவிக்கிறதே! நின்னை
வட்டம் அடித்தேயது தன்
     வாழ்வைக் களிப்பதும் ஏன்?

திங்கள் ஓர் முறையில்
     தேய்ந்து வளரும் மதி
பொங்கும் முழு அமுதாய்
     பொழிந்துபின் உருக் கரையும்...

ஏதுக்குக் காலம் எல்லாம்
     ஏகவழிப் பாதை யதில்
தூதுக்கும் யாரும் இன்றி
     தொடர்ந்தே காதல் செய்வீர்

மேதினி முழுவதுமே கொட்டி
     மின்னிடும் வைரங்கள் போல்
மேகத்து வெளியிலெலாம் வெள்ளி
     மீன்களின் கண் அடிப்போ?

கடலில் அலை காற்றில்
     கதிர் கனலொடு புனலுமதில்
நடனமே ஆடுகிறாய் நங்கை
     நாளும் பொழுது எல்லாம்!

வெம்மை ஆகுதியோ மேனி
     வேகும் வேள்விப் போதினிலே?
தம்மைத் தழுவிச் சீரமைக்க
     தாரை மழை பெய்குவதோ?

தெய்வத் தீர்த்தமதோ இரவில்
     தெளிக்கும் பனித் துளிகள்?
மெய்யைத் துலக்கவோ அருகில்
     மேகப் பஞ்சுத் திரள்?

அண்டப் பெரு வழியே
     ஆடும் நாயகியே; உந்தன்
கண்டக் குரல் ஒலிதான்
     கனிந்த பிரணவஓ மதுவாம்!

உடலும் எமக்குத் தந்து
     உயிர் அதிலே பொதிந்து
கடமையில் உணவு ஈந்து
     கருணையில் வாழ்வு வைத்தாய்!

ஆக்கி ஆட்டுவித்து எம்மை
     அன்பில் அரவணைத்தே, நித்தம்
தூக்கிச் சுமக்கின்றாய்; நெஞ்சில்
     தூங்கவும் வைக்கின்றாய்; அம்மா!

நாடகம் முடிந்தபின் தன்னுள்
     நலமுடன் ஒடுங்கவைத்தே எமக்கு
பாடமும் புகட்டுகின்றாய்; தாயே
     பரம ஞானமும் ஊட்டுகின்றாய்!

அறிவுத் திருமகளே! எங்கள்
     அன்புப் புவி மகளே!
அருமைத் தலைமகளே! எங்கள்
     அன்னை நில மகளே!
 
***

No comments:

Post a Comment