Tuesday, June 7, 2011

அன்னையர் அந்தாதி (பகுதி: 3)

அன்னையர் அந்தாதி (பகுதி: 3)

2. திருமகள் அந்தாதிஇறை வணக்கம்:
மாதவன் மனத்திரு மங்கையேநின தருளன்றி
யாதவம் வளமீயும் பூதலத்தே? - ஆதலுமாயுன்
திருவடிக்கே சரணானோம் திருமகளே எமக்கென்றும்
பெருநிதியப் பொருளாய்ப் பொழி. 
அந்தாதிக் கட்டளை:
செங்கமல அலர்மேல் செவ்விதழ் நறுமலராய்
செங்கண் மாலரங்கச் செம்மனத் திருமடந்தாய்
பிங்கலக் கைமாற்றில் பெருஞ்சிகை நெடியோன்
சங்கமத் தாய்வைத்த செல்வத்திரு உறுபொருளே!

உலகியலாய் உலகப்பருப் பொருண்மை உடைமையுமாய்
கலவியலால் காதற்காமம் களிக்குமுயர் நனியுணர்வாய்
நலமிகுக்கும் சம்பத்துமாய் நற்கதிதருஞ் சந்ததியுமாய்
இலக்காயுறு நல்வரத்தாய் இலங்குமின்பத் திருமகளே!
 
அந்தாதி: 

1. அலர்மேல் மங்கையே அழகுநல் புவிமகள்!

செங்கமல(ச்) செழுமலரில் சீர்மல்கி
          வாசஞ்செய் செம்பொருட்
தங்கமலர் தாரணியாய் தாயுமாய்
          தாரகையாய் தாமரைக்கண்
அங்கமுடை அம்போதி அத்தனவன்
          அகமலராய் அமர்ந்தேகி
அங்கையில் அகமிளகி பெரும்பேறு
          அருள்நல்கும் அலர்மேலே!


2. அலைமகள் நங்கையே அன்னைத் திருமகள்!

அலர்மேல் அமர்அருள் அலைமகள்
          அன்னையாய் அகிலத்து
மலர்மேல் எலாம்வள நலம்பொலி
          நாயகியாய் வையத்து
நிலம்பால் வைதேகியாய் பைந்தமிழ்
          பாச்சூடியாய் நித்திலத்து
சிலம்பால் சிந்தாமணி நகையேநின்
          திருவாய்ச் செவ்விதழே!


3. ஆழியிலே வந்துதித்த அற்புதமே அலைமகள்!

செவ்விதழ் சேயிழையாய் பாலாழி
          திரளமுதச் செல்வியுனை
செவ்வியத் தனபதிபால் கடனாகித்
          திருமணித்த செவ்வாயன்
அவ்விதமே காத்துநின்றே காலமெலாங்
          கழிப்பதுவோ அக்கடன்?
நவ்விநினது நாரணன்பால் நற்கருணை
          நவில்வாயே நறுமலரே!


4. ஆவினம் பால்சொரிய அமுதமாகுந் தலைமகள்!

நறுமலராய் ஐம்பூதத்து பருப்பொருள்
          ஐம்பொறி நடைக்கூட
மறுமலராய் அந்தரங்கக் கருப்பொருள்
          அகப்பை மனமடலாய்
உறுமலராய் ஐயிந்திரிய தன்மாத்திரை
          ஐவுடம்பு உடனுறைச்
செறுமலராய் ஏழ்தாது பிரபஞ்சவளர்
          பதிநாடிச் செங்கண்ணே!


5. இலக்குமித் தாயேநல் இதயத்திரு பெருமகள்!

செங்கண் இயற்கை செயற்கை
          மாயையாய் செழுமதியாய்
எங்கண் அஞ்ஞான அகத்துணர்
          இன்பதுன்ப பிரமையாய்
அங்கண் விளையும் அறிவொளி
          விளக்கத்து அகிலமாய்
வங்கண் யாங்கிலும் இலங்கும்
          இலக்குமி மாலரங்கமே!


6. இலங்கிடும் யாதிலும் இன்பநிலை தருமகள்!

மாலரங்கச் சீதனமே! மண்ணகத்து
          மாற்றா மாற்றமாய்
பாலரங்கத் தயிர்மோர் வெண்ணை
          நறுநெய் பாங்குறை
வாலரங்கப் பருவவிதி வளமுடை
          மாற்றாய் வளர்நிறை
சாலரங்கப் பெருநிதியச் சாதனமாய்
          செழிக்குஞ் செம்மனமே!


7. ஈட்டமாய் வளநலத்தை ஈண்டுதரும் நிறைமகள்!

செம்மனத் துரமொடு செழுநல்
          இலக்கொடு செய்வினை
எம்மனங் கருத்தொடு இயங்குமோ
          ஆங்கண் இலங்கியும்
கம்மனத் திறத்தொடு நற்கருமம்
          ஆற்றுமக் கடமையவர்
தம்மனத் திருவாய் வருவாய்
          தருவாய் திருமடந்தே!


8. ஈன்றவற்கே யாங்கனமும் மீண்டுவரும் மறைமகள்!

திருமடந்தாய் அரவாதே அறிவாழ்வார்
          ஆழ்ந்தமனத் திருவிடத்துக்
கருமடந்தாய் கரவாதே கருமவினை
          ஆன்றவர்பால் கருணைவளம்
தருமடந்தாய் இரவாதே இருந்தாலும்
          இரங்கிநலம் தந்தவர்பால்
பெருமடந்தாய் குறையாதே பன்மடங்கில்
          ஈந்தருளும் பிங்கலனே!


9. உலகத்தின் திருவாகி உள்ளமதில் உறைமகள்!

பிங்கலக் கருணையே! பொருளன்றி
          பெருநிலத்தே பயனில்லையால்
நங்கலப் பொருளிலாரை இல்லாரும்
          ஈந்தாருமே நயந்திலார்போல்
மங்கலப் பொருளுயிரை மாய்க்காதே
          நம்பிக்கை மனவளத்தால்
கங்கனங் கொண்டிலங்கி உலகூட்டிப்
          பரிமாறும் கைமாறே!


10. உணர்வாகி மலராகி உயர்வாகும் இறைமகள்!

கைமாற்றில் அறனீட்டம் கைவளமாய்
          நிலைநலக் களமீயும்
வைமாற்றில் அதனீட்டங் கைத்துதவப்
          பெருக்காகி வளமீயும்
மைமாற்றில் அதனாட்டம் வைத்தவுறு
          நஞ்சாகும் நலந்தேயும்
பைமாற்றில் பலனீட்டம் கைமாற்றும்
          பஞ்சமும் பெருஞ்சிகையே!


11. ஊனாகித் தேனாகி ஊஞ்சலாடும் நறுமகள்!

பெருஞ்சிகை(ப்) பெய்வளையே! பெருநிதியம்
          பெறுனர்பால் பெரும்பலந்
தருஞ்சிகை அகநெய்வார் தகைப்பேணி
          முனைவர்பால் தனமளக்கும்
அருஞ்சிகை அளவறிந்து செயலாக்கும்
          அனைவர்பால் அமுதளிக்கும்
நெருஞ்சிகை நெய்வாச நறுமதிநின்
          நெஞ்சின்பால் நெடியோனே!


12. ஊழ்வினைப் பொருளாகி ஊடலாகும் உறுமகள்!

நெடியோன் பெருமால் நெடுநல்
          அணங்காய் நின்மலர்
மடிமேல் இருத்தியும் வறுமையில்
          உழலவும் உன்பதம்
படியோர் வருந்தாமற் பல்வளம்
          கொழுகவும் பொருந்தாத்
துடியிடை பொருந்தலும் அவரவர்
          தொல்வினைச் சங்கமமே!


13. எளிமையும் வலிமையென எழுச்சிதருந் தாயவள்!

சங்கமத் திரட்டும் தாபரமும்
          நங்கையிற் சார்மையும்
வெங்கம் கையறவு களையுங்
          கொடைதரு வினைக்கே
பொங்கும் வல்நிதியம் நற்பணியும்
          எளிமையும் புரிவர்பால்
தங்கமுதப் பெருநிதியே தளைக்கும்
          புண்ணியத் தாய்வைத்தே!


14. எதிர்பாரா யோகமாகி இன்பந்தரும் மாயவள்!

தாய்வைத்த பெருநிதியம் தரணிவாழ்
          நல்வாய்ப்பும் தன்னுள்ளக
மாய்வைத்த மாயையும் தேவையும்
          மிகுதேடலும் மனநிறைவுக்
காய்வைத்த எதிர்பாராநல் யோகமும்
          ஞானமும் கைவளமும்
சேய்வைத்த பேரின்பமும் இசைவாகும்
          நற்பெருஞ் செல்வத்திருவே!


15. ஏழ்மை இல்லாமை நீக்கிவிடும் நல்லவள்!

செல்வத்திரு நற்செழுமை அல்லலறு
          மிகுவின்பம் சேர்ந்திலங்கி
இல்லத்திரு இன்மையும் இகழ்ச்சியும்
          அகற்றும்நல் இயல்பாயின்
அல்லல்தரு மதிமயக்கும் அழுக்காறும்
          அகந்தையும் அதன்விளை
மெல்லத்தரு பேராசையும் மறுமைக்கே
          வித்தாகும் உறுபொருளே!


16. ஏக்கத்தை இகவாழ்வில் போக்கிவிடும் வல்லவள்!

உறுபொருளே! கற்றார்க்கும் உற்றார்க்கும்
          மற்றார்க்கும் உய்வுதரும்
நறுபொருளே! வையகத்தின் வளத்தையும்
          வைப்பார்க்கு நலத்தையும்
இறுபொருளே! பகுத்தறிவாய் அனைத்திலும்
          பற்றகற்றும் இறுதிக்கும்
வறுபொருளே! உளத்தாசை ஒறுத்தார்க்கே
          வயமாகும் உலகியலே!


17. ஐம்புலனும் துய்த்துணரும் இன்பதுன்ப நலமவள்! 

உலகியலாய் ஐம்புலமும் அகப்புறமும்
          இன்பதுன்பம் உய்த்துணரும்
நிலவியலாய் தேவையிறும் பகர்பொருளும்
          நேசந்தரும் நுகர்பொருளும்
அலகியலாய் இலக்கதிலும் அடைதலிலும்
          அனுபவமாய் அன்றிலறும்
விலகியலாய் பெருஞ்சுனைக் களஞ்சியமாய்
          விளங்குநல் உலகப்பருவே!


18. ஐசுவரியம் தனமாகும் அனைத்தான வளமவள்!

உலகப்பருப் பொருளாய் பொய்மெய்
          மாயத்திலும் உணர்விலும்
கலகத்திரு காதலிலும் காமநிறைக்
          களிப்பிலும் கலப்பிலும்
நிலவசத்திரு வனப்பிலும் செல்வநலச்
          செழிப்பிலும் நேசத்திலும்
புலவசத்திரு பற்றலிலும் அற்றலிலும்
          பொழிந்திடும் பொருண்மையே!


19. ஒன்றிய இலக்குமாகி வெற்றிதரும் இனியவள்! 

பொருண்மை ஒருங்கடை இலக்கால்
          வெல்மடி போற்றலும்
அருண்மை வினையிடை திண்மை
          துணிவொடு ஆற்றலும்
மருண்மை தூக்கொடு இருண்மை
          போக்கலும் மாற்றுமை
வெருண்மை நீக்கலும் அன்னை
          வீரலக்குமி உடைமையே!


20. ஒருமை பலவாக்கிப் பெற்றுத்தருங் கனியவள்!

உடைமையுமாய் உயிரெழும் ஈட்டமுமாய்
          வளம்பொழிவல் ஊட்டமுமாய்
நடைமையுமாய் நல்வினை நாட்டமுமாய்
          நலந்தழைக்கும் நோட்டமுமாய்
படைமையுமாய் மாற்றத்தொடர் ஓட்டமுமாய்
          பருவகால ஆட்டமுமாய்
கடைமையுமாய் பெருக்குநல் கூட்டமுமாய்
          கடைத்தேற்றுவாய் கலவியலாலே!


21. ஓயாத அலையாகி ஆசைதரும் அலைமகள்!

கலவியலால் களிப்பாகிக் கசிந்துருகிக்
          கருவுயிராய்க் கனிவதுமாய்
உலவியலால் மூவாசைக் கடலலைப்
          பெருமுகிலாய் உவப்பதுமாய்
நிலவியலால் மும்மலத்து மும்மையுறு
          காரணியாய் நெஞ்சகத்துக்
குலவியலால் சொட்டுமது போகரசங்
          கொட்டுங்கவி காதற்காமமே!


22. ஓராதே நிலையாகி உய்விக்குந் தலைமகள்!

காதற்காமம் கடைந்தேறக் கருணைவளம்
          களைநுதலும் காமதேனாய்
மாதர்காமம் மடைமாறும் மனையறமும்
          மயக்கமறும் மங்கலமுமாய்
நோதற்காமம் நல்குரவின் இடர்களைந்து
          நோன்மைநிறை நிலைப்பேறாய்
கோதற்காமம் கொழிவிளைக் கோதனத்துக்
          கொடைவழிக் களிக்குமுயரே!


23. ஔவிய மருளுமாகி அலையவிடும் பெருமகள்!

களிக்குமுயர் பேரின்பத்து ஊற்றருவிப்
          பெட்டகமாய் கையிருப்பாய்
அளிக்குமுயர் வாருதியில் பசுமனத்துப்
          பகப்பண்பாய் அன்பளிப்பாய்
தளிக்குமுயர் தன்னலத்து அகவிருளைத்
          தாண்டிப்பின் திருவிளக்காய்
நளிக்குமுயர் நல்மனத்து நற்பேறாய்
          நலமளிக்கும் நனியுணர்வே!


24. ஆக்கும் பொருளுமாகி உலவவிடுந் திருமகள்!

நனியுணர்வாய் கருமவினைக் கருவறையாய்
          நன்நிலைமை நல்வாய்ப்புக்
கனியுணர்வாய் கவனம்நிறை வினையறமாய்
          செய்வினைக் களப்பொலிவுத்
தனியுணர்வாய் திருந்துவினை விழுமியமாய்
          தகைசால் திரவியத்திரு
நுனியுணர்வாய் நாற்பொருள் நுண்ணுணரும்
          நற்பேறாய் நலமிகுக்குமே!


25. காடாகி மலையாகிக் கடலாகும் பொழிலவள்!

நலமிகுக்கும் இயற்கை நிலமாகி
          மலையாகி நாடாகி
வலமிகுக்கும் ஊற்றாகி ஆற்றாகி
          கடலாகி வானாகி
தலமிகுக்கும் மழையாகி தளிராகி
          வளமாகி தனமாகி
சலமிகுக்கும் சங்கமத்து வித்தாய்
          சான்றாகும் சம்பத்துமே!


26. காயாகிக் கனியாகிக் களிப்பாகும் எழிலவள்!

சம்பத்துமாய் மனைவாசல் நிலபுலத்து
          நன்மக்களுந் தனவளமாய்
தம்பத்துமாய் மந்தைநிறை சமூகத்தாய்
          வாழ்வியல் சந்தையுமாய்
பிம்பத்துமாய் வணிகவியல் பொருளியல்
          பெருகுநிலைப் பங்குமதாய்
நம்பத்துமாய் இலங்குவழி நாணயமாய்
          விளங்குமெழில் நற்கதியே!


27. சக்கரச் சுழற்சியாய் சதுராடுஞ் சேயவள்!

நற்கதிதருஞ் செழுபயன் இகக்காரணி
          முன்வினை நற்பலனும்
முற்பதிதரும் சுழல்விளை முற்றாஅவா
          மயல்வித்து மறுமையும்
கற்பகந்தருங் கொழுநலங் கருதியாங்கு
          கைவண்ணங் கிட்டுதலும்
சிற்சுகமருள் நிலைத்தலும் ஊழ்வினை
          செய்தவமே சந்ததியுமே!


28. சகமாகி மாற்றாகிச் சகலமாகும் மாயவள்!

சந்ததியுமாய் பந்தமுமாய் சமமாகுஞ்
          சொந்தமுமாய் சம்பத்தாய்
வந்ததுமாய் வருவதுமாய் மாற்றுமாய்
          மாற்றாநல் வரம்பிலாச்
சிந்தையுமாய் நல்லறமாய் சீர்மைமிகு
          சௌபாக்கியத் தாயுமாய்
எந்தையுமாய் இருக்கிறாய் மாயமுமாய்
          இலக்குமியே இலக்காயே!


29. தொடராகி மறுமைதனைத் துலக்குந் தூயவள்!

இலக்காயுறு உளப்பொருளாய் இயங்குநல்
          தூண்டலுமாய் இலங்கியும்
கலக்காயுறு அகத்திருளாய் உழற்றுமதி
          கல்லாமையால் கிடப்பாயும்
துலக்காயுறு துய்ப்பொருளாய் விளங்கிவல்
          பேராசையால் தொடராயும்
நலக்காயுறு மறுமையாய்மீள் நன்னிலத்தில்
          தொழிற்படும் நல்வரத்தே!


30. தொழிலாகி வறுமையினை விலக்குந் தாயவள்!

நல்வரத்தாய் நடைமுறை நடுவறத்து
          நல்வித்தாய் நாயகியாய்
பல்வரத்தாய் பணிமுறை பண்பறத்து
          பணிவித்தாய் பார்கவியாய்
நில்வரத்தாய் நேர்மறை நல்லறத்து
          நினைவித்தாய் நிம்மதியாய்
இல்வரத்தாய் வாழ்வகை உயர்வித்து
          இருதயத்தாய் இலங்குமின்பமே!


31. நண்ணிய வகையெலாம் நலந்தரும் புவிமகள்!

இலங்குமின்பத் திருமதியாய் எண்ணியவை
          எண்ணியாங்கு இயல்பவளாய்
நிலங்குமின்பத் திருநிறையாய் நண்ணுவர்க்கே
          நலந்தரும் நிறைகுடமாய்
விலங்குமின்பத் தவநெறியாய் பற்றறுக்கும்
          வினைவாணருக்கு மாத்திரமாய்
துலங்குமின்பத் திருப்பொருளாய் முத்திநலத்
          துணைநல்கும் திருமகளே!


32. நுண்ணிய யோகமுயர் வீடுந்தருந் திருமகள்! 

திருமகளே! எண்மகளாய் மாயமும்
          மயக்கமும் தெளிவிக்கும்
பெருமகளே! பொன்மகளாய் யோகமும்
          பெருநெறியும் பொலிவிக்கும்
குருமகளே! செம்மகளாய் கருவிலுந்
          திருவாய்க் குபேரவருளைத்
தருமகளே! எம்மகத்தே யாண்டுமே
          தகைத்திருவே செங்கமலமே!
 
* திருமகள் அந்தாதி முற்றும் *
திருமகள் அகவல்: (தலைப்புக் கவிதை)
அலர்மேல் மங்கையே அழகுநல் புவிமகள்!
அலைமகள் நங்கையே அன்னைத் திருமகள்!
ஆழியிலே வந்துதித்த அற்புதமே அலைமகள்!
ஆவினம் பால்சொரிய அமுதமாகுந் தலைமகள்!
இலக்குமித் தாயேநல் இதயத்திரு பெருமகள்!
இலங்கிடும் யாதிலும் இன்பநிலை தருமகள்!
ஈட்டமாய் வளநலத்தை ஈண்டுதரும் நிறைமகள்!
ஈன்றவற்கே யாங்கனமும் மீண்டுவரும் மறைமகள்!

உலகத்தின் திருவாகி உள்ளமதில் உறைமகள்!
உணர்வாகி மலராகி உயர்வாகும் இறைமகள்!
ஊனாகித் தேனாகி ஊஞ்சலாடும் நறுமகள்!
ஊழ்வினைப் பொருளாகி ஊடலாகும் உறுமகள்!
எளிமையும் வலிமையென எழுச்சிதருந் தாயவள்!
எதிர்பாரா யோகமாகி இன்பந்தரும் மாயவள்!
ஏழ்மை இல்லாமை நீக்கிவிடும் நல்லவள்!
ஏக்கத்தை இகவாழ்வில் போக்கிவிடும் வல்லவள்!

ஐம்புலனும் துய்த்துணரும் இன்பதுன்ப நலமவள்!
ஐசுவரியம் தனமாகும் அனைத்தான வளமவள்!
ஒன்றிய இலக்குமாகி வெற்றிதரும் இனியவள்!
ஒருமை பலவாக்கிப் பெற்றுத்தருங் கனியவள்!
ஓயாத அலையாகி ஆசைதரும் அலைமகள்!
ஓராதே நிலையாகி உய்விக்குந் தலைமகள்!
ஔவிய மருளுமாகி அலையவிடும் பெருமகள்!
ஆக்கும் பொருளுமாகி உலவவிடுந் திருமகள்!

காடாகி மலையாகிக் கடலாகும் பொழிலவள்!
காயாகிக் கனியாகிக் களிப்பாகும் எழிலவள்!
சக்கரச் சுழற்சியாய் சதுராடுஞ் சேயவள்!
சகமாகி மாற்றாகிச் சகலமாகும் மாயவள்!
தொடராகி மறுமைதனைத் துலக்குந் தூயவள்!
தொழிலாகி வறுமையினை விலக்குந் தாயவள்!
நண்ணிய வகையெலாம் நலந்தரும் புவிமகள்!
நுண்ணிய யோகமுயர் வீடுந்தருந் திருமகள்! 


திருமகள் போற்றி போற்றி போற்றியே!
*** திருமகள் அகவல் முற்றும் ***
 
***

2 comments:

 1. மலை மகள் உங்கள் மனதில்
  கலைமகள் உங்கள் மதியில்
  அலைமகள் உங்கள் அருகில்!
  மிக அருமையாக இருக்கு..
  ஒலிப்பதிவாகவும் கிடைத்தால்
  எங்களை போன்ற சொம்பேறிகளுக்கு
  ப்யன்படும்.... நன்றி!!!

  ReplyDelete
 2. கனகதாரா துதி போல் அருமையாய் இருக்கிறது...

  ReplyDelete