Showing posts with label ஆன்மீகம். Show all posts
Showing posts with label ஆன்மீகம். Show all posts

Monday, April 7, 2014


அன்னையர் அந்தாதி (பகுதி: 5)

3. அம்பிகை அந்தாதி - விரிவாக்கம்


இறை வணக்கம்:
ஆதிஅந்தமில் அத்தனொடு அங்கமாகி அண்டமெலாம்
சோதிப்பரமாய் சேர்ந்திலங்கும் அம்மை - ஆதிபராசக்தியே
நல்லவை யாவுமாகி நலத்தொடு யாதும்வெல்லும்
வல்லமை ஈவாய் வலிந்து.
அந்தாதிக் கட்டளை: (விரிவாக்கம்)
வான்நிறை சேயோனாய் வாகையாகும் பேரொளியே!
 
அந்தாதி: 

33. நவலோகம் நவரசத்து ஞாலமாகும் தாயவள்!

வான்நிறை மீன்போலும் வையமீதில் 
          வழுகழுவும் பிறவிகளாய்
ஊன்நிறை யாக்கையுள் உயிர்தரித்து
          உதித்துவளர் யாத்திரையில்
கோன்நிறை அண்டமொடு குவலயக்
          கோட்டமும் செம்மையுற
தேன்நிறை நவசக்தித் தோன்றலாகும்
          சச்சிதானந்தச் சேயோனே!


34. நவயிரவுப் பரவசத்து ஞானமாகும் மாயவள்!

சேயோனாய் அவதரித்து சேவையிலும்
          தொண்டிலும் சின்னகை
வாயோனாய் உடற்பொருள் ஆவிமனம்
          வாக்குயாதும் யார்பாலும்
காயோனாய் அன்பாதரவு கருணையை
          அர்ப்பணித்துக் கடமையில்
தாயோனாய் ஆற்றுவதே தாயர்போற்றும்
          வெற்றி வாகையாகுமே!


35. முந்தையுமாய் மூலமுமாய் சித்தியாகும் சிரமவள்!

வாகையாகும் பிறவிக்கும் வண்ணம்
          நிறைகும் வாழ்க்கைக்கும்
தோகையாகும் தோழமைக்கும் துணைநின்ற
          சுற்றம் சூழலிற்கும்
ஈகையாகும் நெஞ்சிற்கும் எண்ணம்விதி
          ஆயுள்ஞானம் யாதிற்கும்
போகையாகும் முன்னரே பொழிகிறோம்
          ஆழ்ந்தநன்றி, பேரொளியே!


36. மும்மகளாய் முதல்வியாய் முக்தியாகும் பரமவள்!

பேரொளியே! பராபரையே! பேதமிலாப்
          பெருவெளியே! பேரண்டத்து
வேரொளியே! அடிமுடியாய் முடிஅடியாய்
          முதலாகும் மும்மையர்
நேரொளியே! முக்கண்ணியே! நிலைபேற்று
          நாரணியே! நேர்மறைத்
தேரொளியே! திரிபுரைநின் சேவடிக்கே
          சரணாங்கள் வான்நிறையே!
* அம்பிகை அந்தாதி முற்றும் *
அம்பிகை அகவல்: (தலைப்புக் கவிதை)
அணுவாகி அண்டமாகி அகிலமாளும் அன்னையள்!
அந்தமாதி அலகிலாது ஆடிநிற்கும் அம்மையள்!
ஆலமுண்ட கண்டனின் அகத்துறை மாதவள்!
ஆற்றலாகி நம்பகத்தின் ஊற்றுமாகும் தேவியள்!
இயங்குநிலை மெய்ப்பொருளின் இகபரத்துச் சக்தியள்!
இயற்கையாகி உய்வைத்தரும் இன்பநிலை முக்தியள்!
ஈஸ்வரியாய் பரம்பொருளாய் இலங்குமுயர் தாயவள்!
ஈன்றவற்றில் கருப்பொருளாய் துலங்குமெழில் தூயவள்!

உயிருடலாய் உளமதியாய் உலவிநிற்கும் உமையவள்!
உணர்வகமாய் பலநலமாய் உறுதிநிற்கும் இமையவள்!
ஊழியாட்டம் நர்த்தனமாய் உலகையாட்டும் வல்லியள்!
ஊக்கமொடு ஊட்டமுமாய் உவகையூட்டும் மெல்லியள்!
எந்தையுமாய் அன்னையுமாய் எழுந்தருளும் இறையவள்!
எண்ணமுமாய் திண்ணமுமாய் இதயமாகும் நிறையவள்!
ஏற்றமுமாய் மாற்றமுமாய் இயக்கமாகும் மென்மையள்!
ஏதிலார்க்கும் வாழ்வியலாய் இன்பமாகும் தன்மையள்!

ஐக்கியமாய் பாலிணையாய் அறங்காட்டும் பரமவள்!
ஐங்கரனின் தாயமுதாய்த் திறங்கூட்டும் உரமவள்!
ஒப்பிலியாய் அன்பழகாய் உயர்வுகாட்டுந் தலைமகள்!
ஒற்றுமைதன் திடவளமாய் வெற்றிதீட்டும் மலைமகள்!
ஓங்காரம் உடுக்கையிடி ஒலியிலங்கும் மாயவள்!
ஓம்புமுயிர் மேம்படவே ஒளிதுலங்கும் தூயவள்!
ஔடதமாய் விடத்தையும் அமுதமாக்கும் அன்னையள்!
ஔவியத்து முடத்தையும் அழித்தருளும் சென்னியள்!

கருப்பொருளில் உயிர்மெய்யாய் கலந்திலங்கும் தாயவள்!
கருணையுளோர் அன்னையராய்க் கனிந்திலங்கும் தூயவள்!
சங்கரியாய் கொற்றவையாய் சங்கரிக்கும் நெருப்பவள்!
சங்கரனார் அங்கவையாய் சஞ்சரிக்கும் பொருப்பவள்!
தருமத்தின் துணைக்கோடாய்த் தரணியாளும் துர்க்கையள்!
தருணத்தில் இணைவாழ்வாய்த் திறமருளும் இயற்கையள்!
பசுபதியாய்ப் பாசமாகிப் பரமுமாகும் அன்னையள்!
பசுங்கிளியாய் நேசமாகும் பராசக்திஓம் அம்மையள்! 


நவலோகம் நவரசத்து ஞாலமாகும் தாயவள்!
நவயிரவுப் பரவசத்து ஞானமாகும் மாயவள்!
முந்தையுமாய் மூலமுமாய் சித்தியாகும் சிரமவள்!
மும்மகளாய் முதல்வியாய் முக்தியாகும் பரமவள்!


அம்பிகை போற்றி போற்றி போற்றியே!
*** அம்பிகை அகவல் முற்றும் ***
நூற் பயன்:

அன்னையர் அந்தாதி மும்மாலை

          அம்மையர் சூடிடத் தொழுதாலே
முன்னை வினைகள் முற்றாகும்
          முழுமை நிறைகும் வாழ்வாகும்
பின்னை செழுமை மகிழ்வோடு
          பெருமை செம்மை நலமாகும்
தன்னை உணர்ந்த செயலாலே
          தவறா வெற்றியும் சத்தியமே!
 
* அன்னையர் அந்தாதி முற்றும் *
***

Saturday, February 8, 2014

அன்னையர் அந்தாதி (பகுதி: 4)

அன்னையர் அந்தாதி (பகுதி: 4)

3. அம்பிகை அந்தாதி


இறை வணக்கம்:
ஆதிஅந்தமில் அத்தனொடு அங்கமாகி அண்டமெலாம்
சோதிப்பரமாய் சேர்ந்திலங்கும் அம்மை - ஆதிபராசக்தியே
நல்லவை யாவுமாகி நலத்தொடு யாதும்வெல்லும்
வல்லமை ஈவாய் வலிந்து.
அந்தாதிக் கட்டளை:
அருவுருவாய் அணுவுயிராய் அண்டமெலாம் ஆனதொன்றாய்
கருவறையாய் விரிவுரையாய் கண்துஞ்சாப் பெருவெளியாய்
கருமவினைப் பராபரையாய் கடவுளுறைக் கருப்பொருளாய்
திருவருளாய் பரம்பொருளாய் திறமருளும் மலைமகளே!

பொன்னொளி பாய்ச்சியிருட் பொய்மையைப் போக்குவித்து
மின்னலிடை வளர்மதியாய் மெய்யுணர்த்தி வளம்பெருக்கி
இன்னலழித்து இன்பமளித்து இயல்புநிலை இயக்குவித்து
அன்புமிகுத்து அமுதளித்து அருள்நல்கும் அன்னையே!
 
அந்தாதி: 

1. அணுவாகி அண்டமாகி அகிலமாளும் அன்னையள்!

அருவுருவாய் அவனவளாகி அதுவுமிதுவும்
          யாதுமாகி அரனுறைத்
திருவுருவாய் திருவிடத்துத் திருநிறைத்
          திருமதியாய் திருவுளமாய்
பெருவுருவாய் பெம்மானாய் பெருவெளிப்
          பெருக்கத்துப் பேரழகாய்
அருளுருவாய் அம்மையாய் அண்டமொடு
          ஆற்றலுமாகும் அணுவுயிரே!


2. அந்தமாதி அலகிலாது ஆடிநிற்கும் அம்மையள்!

அணுவுயிராய் ஆக்கியும் அடக்கியும் 

          அகன்றும் அகிலத்துக்
கணுவுயிராய் கரும்பிடைக் கருவாய்
          கால்வழி காணக்கரந்து
நுணுகுயிராய் நுழைந்தும் நுதற்றியும்
          நுதுத்தும் நுவலொணா
அணுகுயிராய் அன்புசால் அனைத்தாய்
          ஆடுகிறாய் அண்டமெலாமே!


3. ஆலமுண்ட கண்டனின் அகத்துறை மாதவள்!

அண்டமெலாம் அந்தரமாய் அணுநிறைப் 

          பிண்டமாய் அகிலமொடு
பண்டமெலாம் துகளதுவாய் பிணைப்பாய்
          வெற்றாய் பரமனொடு
கண்டமெலாம் விடத்திருட் கருமையாய்
          உறைந்தும் கண்ணுறங்கா
சண்டமெலாம் இடமிருந்து வலம்வரும்
          செய்நெறியாய் ஆனதொன்றே!


4. ஆற்றலாகி நம்பகத்தின் ஊற்றுமாகும் தேவியள்!

ஆனதொன்றாய் பலவாறாய் அண்டமொடு 

          அருங்கோளாய் ஐம்பூதத்
தானதொன்றாய் ஒளியிருளாய் தற்சுழலாய்
          சூழ்சுற்றாய் வியாபித்த
வானமொன்றாய் வல்லூழியாய் வாயுவாய்
          மாவலியாய் வரம்பிலா
ஞானமொன்றாய் இயற்கை நயந்துரைக்கும்
          நம்பிக்கைக் கருவறையே!


5. இயங்குநிலை மெய்ப்பொருளின் இகபரத்துச் சக்தியள்!

கருவறையாய் கருவுயிராய் காரியத்துக்

          காரணியாய் காணரியாத்
திருமறையாய் தோற்றுவாய் தூண்டலாய்
          செயலுமாய் திறமுமாய்
பெருநிதியாய் வளமதுவாய் பெரும்பேறாய்
          சித்தியாய் பெருஈடாய்
வருநிறையாய் விழுச்செல்வ வளர்மதியாய்
          மாற்றாகும் விரிவுரையே!


6. இயற்கையாகி உய்வைத்தரும் இன்பநிலை முக்தியள்!

விரிவுரையாய் விளக்கொளிராய் விளக்கியும் 

          விளங்கா வினைமதியார்
பரிபுரையாய் பன்மாணாய்ப் பையப்பையப்
          பட்டுணரப் புரிந்தருளும்
திரிபுரையாய் தெரிபொருள் தெய்வமுறு
          தெரிநிலையாய் தெள்ளமுதக்
கரிமுகனாய் கடுவினை களைந்தறக்
          காத்திருப்பாய் கண்துஞ்சாயே!


7. ஈஸ்வரியாய் பரம்பொருளாய் இலங்குமுயர் தாயவள்!

கண்துஞ்சா(ப்) பெற்றியளாய் கனிந்துருகும் 

          கருணையும் கவனமும்நடு
வண்துஞ்சா நன்னெஞ்சும் வகைவகுத்த
          நன்னெறியொடு மனத்துரமும்
எண்ணஞ்சா நினைவகமும் ஈந்துவக்கும்
          இனிமையும் எழில்வடிவும்
பெண்ணஞ்சா(ப்) பொறுமையும் பணிவன்பும்
          பொழிந்தருளும் பெருவெளியே!


8. ஈன்றவற்றில் கருப்பொருளாய் துலங்குமெழில் தூயவள்!

பெருவெளியாய் சூலாகிவேலாகும் பெருவிதியாய் 

          பரமான்மப் பெருஞ்சுடர்த்
திருவொளியாய் திறந்தவெளி திகழெழிலாய்
          தூவெளிக்கும் மனவெளிக்கும்
அருளொளியாய் அன்னையர்க்கும் அன்னையாய்
          அப்பருக்கும் அம்மையாய்
கருவொளியாய் கணமுமாற்றல் கலையாதொளிரும்
          கருப்பொருள் கருமவினையே!


9. உயிருடலாய் உளமதியாய் உலவிநிற்கும் உமையவள்!

கருமவினைப் பலன்முதலாய் காலமீறாய்க் 

          கலந்தாடுங் காரிகையாய்
தருமவினைப் பயன்மெய்யாய் தாய்மைக்கு
          நாயகியாய் தவத்தொடராய்
சருவவினைப் பெருகிவகுத்து சமைத்திசை
          கூடிக்கழித்து சக்திசிவமாய்
பருவவினைப் பண்ணெழுதி பல்லுயிரைப்
          பயிர்செய்கும் பராபரையே!


10. உணர்வகமாய் பலநலமாய் உறுதிநிற்கும் இமையவள்!

பராபரையாய் பகுத்தளித்த பராசக்தியைப்
          பரிந்துவக்கப் பகிருதலும்
பராமரித்துப் பிறர்களிக்கப் பண்ணுதலும்
          பரானுபவப் பரமானந்தத்
தராதரமாய் துய்ப்பதிலும் துன்பமதைத்
          துடைப்பதிலும் ஐம்புலத்துச்
சராசரமாய் உள்ளமதாய்ச் சலனிப்பதும்
          சுவாசிப்பதுவும் கடவுளுறையே!


11. ஊழியாட்டம் நர்த்தனமாய் உலகையாட்டும் வல்லியள்!

கடவுளுறைக் காதலியாய்க் காமமுங்கூடிக் 

          கலந்தாடிக் கண்டவிடத்து
இடரொடுக்கி இன்பங்கூட்டி இகபரத்தொடு
          இயக்கமுமாய் இருவினைத்
தொடருக்குங் காரணியாய் தொடர்பற்றுத்
          துறப்பிற்கும் பூரணியாய்
கடவுமுறை படைத்துமுறு கடமையொடு
          நடவுசெய்யுங் கருப்பொருளே!


12. ஊக்கமொடு ஊட்டமுமாய் உவகையூட்டும் மெல்லியள்!

கருப்பொருளாய் கருமவினைக் காதைமுதல்

          காயமதின் கடைவிதித்தும்
உருப்பொருளாய் உயிர்மெய் உய்த்தெழ
          யாங்கணமும் வளர்சமைத்தும்
எருப்பொருளாய் தேவையாயும் இயக்கும்பல்
          ஆசையாயும் இலங்கியும்நற்
திருப்பொருளாய் வளமமைத்துத் தேடலஃதில்
          வாகையாகும் திருவருளே!


13. எந்தையுமாய் அன்னையுமாய் எழுந்தருளும் இறையவள்!

திருவருளாய் ஒன்றுதலை சிரத்ததுவாய்
          இருத்தலை தாய்தந்தை
குருவருளாய் மூன்றுதலை குளிர்மதியை
          நாட்டலை கூரறிவால்
அருவிதியாய் அஞ்சுதலை அகற்றுதலை
          ஆறுதலை அளித்தலை
இருநிதியாய் எழுதலை எட்டுதலை
          இயலுவாய் பரம்பொருளே!


14. எண்ணமுமாய் திண்ணமுமாய் இதயமாகும் நிறையவள்!

பரம்பொருளாய் நவத்தலை பற்றுதலை 

          நலமாக்கும் பதியறிவாய்
உரப்பொருளாய் உவத்தலை உயர்தலை
          பலமாக்கும் உளமதுவாய்
வரப்பொருளாய் வாழுதலை வாழ்த்தலை
          வளமாக்கும் திடமதுவாய்
தரப்பொருளாய் துணிதலை சிறத்தலை
          செயலாக்கும் திறமருளே!


15. ஏற்றமுமாய் மாற்றமுமாய் இயக்கமாகும் மென்மையள்! 

திறமருளும் ஆக்கமுமாய் திரவியத்து 

          ஊக்கமுமாய் தேற்றமுமாய்
அறமருளும் தாக்கமுமாய் அன்புமிகு
          காக்கலுமாய் ஆற்றலுமாய்
புறமருளும் தூக்கமுமாய் புன்மையிலா
          நோக்கமுமாய் போற்றலுமாய்
மறமருளும் ஏற்றமுமாய் மாற்றமுமாய்
          வாழ்வாகும் மலைமகளே!


16. ஏதிலார்க்கும் வாழ்வியலாய் இன்பமாகும் தன்மையள்!

மலைமகளே! மாண்புதரும் வலிமையிலும்
          மகிழ்வுதரும் எளிமையிலும்
தலைமகளே! அன்புநிறைத் தியாகத்திலும்
          அறிவுவளர் தியானத்திலும்
நிலைமகளே! பண்புஉறை நெஞ்சினிலும்
          பாசந்தரும் நினைவினிலும்
சிலைமகளே! சிங்கத்துறு ஊர்தியிலும்
          சிரித்தருளும் பொன்னொளியே!


17. ஐக்கியமாய் பாலிணையாய் அறங்காட்டும் பரமவள்!

பொன்னொளி பொருந்து புவனத்துப்

          பொறிநுகர்ப் பொழிலாய்
முன்னராய் பகுத்தவிரு மோகனப்
          பாலொப்பாய் முனைந்துயர
இன்னுயிர் துணையாய் இணையாய்
          பிணையாய் இயலதுவாய்
பின்னமும் இன்பமது பின்னலாய்ப்
          பெருகிவரப் பாய்ச்சியருளே!


18. ஐங்கரனின் தாயமுதாய்த் திறங்கூட்டும் உரமவள்!

பாய்ச்சியிருட் கருவறையுள் பந்தமொடு 

          பாசமதுவுந் தொடக்கியிடர்
மாய்ச்சியருங் கவிதையென வந்துதிக்கக்
          காத்திருந்து வாடாதுடற்
காய்ச்சியருட் கருவுயிரைக் கொடியிடைக்
          கண்மலர ஆர்த்தபெரும்
ஆய்ச்சியருட் கனிந்திடுவள் அகற்றுவள்
          அகத்திருட் பொய்மையையே!


19. ஒப்பிலியாய் அன்பழகாய் உயர்வுகாட்டுந் தலைமகள்!

பொய்மையைப் புரட்டை பொறாமை 

          பிழையை பழியஞ்சாச்
செய்மையைப் பலியை சிந்தனைச்
          செருக்கை சேரழுக்கை
மெய்மையைப் புரியாமும் மலத்தை
          மனமாசை மயக்கை
வெய்மையைப் பிணியை வெறுப்பை
          வெல்லுவள் போக்குவித்தே!


20. ஒற்றுமைதன் திடவளமாய் வெற்றிதீட்டும் மலைமகள்!

போக்குவித்து மடிமையை பொல்லாமை

          பேதைமையை புறந்தள்ள
நோக்குவித்து பொறுப்பொடு நல்வாழ்வை
          முன்னெடுக்க நம்பிக்கை
தூக்குவித்து ஒற்றுமையை தூண்டுவித்து
          தொய்விலா முயற்சியை
ஊக்குவித்து உழைப்பதால் ஒளிருவள்
          வெற்றிகளால் மின்னலிடையே!


21. ஓங்காரம் உடுக்கையிடி ஒலியிலங்கும் மாயவள்!

மின்னலிடை ஒளிகசிய மேகத்திடை
          ஒலிமுழங்க மென்னகைத்து
அன்புநிறை ஆற்றலஃது அகிலத்திடை
          அலைகடலாய் ஆர்ப்பரிக்க
பொன்புனை மாயையென புவிவான்
          சுழலுங்கால் புனலனலாய்
இன்னமுது ஞானமொடு எழிலொழுக
          இலங்குமுயிர் வளர்மதியே!


22. ஓம்புமுயிர் மேம்படவே ஒளிதுலங்கும் தூயவள்!

வளர்மதியாய் அகத்தான்மா வாழ்வெலாம் 

          நன்னெறியில் உய்த்துணர
இளங்கதிராய் அகந்தையவா ஐயந்திரிபொடு
          அச்சமயர்வு இடரகற்றி
களஞ்சியமாய் அகத்துறைக் கருணையொடு
          அன்புமிகக் கனிந்தருள
வளந்தருவாய் அகத்தொளி மேன்மையுற
          பொய்யகல மெய்யுணர்த்தியே!


23. ஔடதமாய் விடத்தையும் அமுதமாக்கும் அன்னையள்!

மெய்யுணர்த்தி ஒன்றுளொன்றாய் உள்வெளியாய் 

          ஒன்றுபலவாய் விலக்கீர்ப்பாய்
செய்யுணர்த்தி தீதினுள்நன்றாய் செப்பஞ்செய்யும்
          தெளிதேர்வாய் தீர்வாய்தலைப்
பெய்யுணர்த்தி பிரிவொன்றாய் பெற்றிமைஉயிர்
          பெறுவுழற்சிப் பரிமாற்றாய்
வெய்யுணர்த்தி நிழலுணர்த்தி விடமுறுக்கி
          விளைகுவாய் வளம்பெருக்கியே!


24. ஔவியத்து முடத்தையும் அழித்தருளும் சென்னியள்!

வளம்பெருக்கி வினைவகை வகைவகுத்து 

          விளைவித்து வாழும்வகைக்
களம்பெருக்கி விதிவிதித்தும் கருதுவகைக்
          களிமிகுத்து ஆடும்வகைத்
தளம்பெருக்கி தரணியதைச் சமப்படுத்திச்
          சீரமைப்பாய் உவந்திடுவாய்
உளம்பெருக்கி ஊனமொடு உளம்புமதி
          உளக்கோட்டம் இன்னலழித்தே!


25. கருப்பொருளில் உயிர்மெய்யாய் கலந்திலங்கும் தாயவள்!

இன்னலழித்து எஞ்ஞான்றும் இனிமைதரும் 

          இயல்பினளாய் ஏதின்மைதம்
தின்னலழித்து சந்ததமும் தெளிவுநிறைப்
          பெருவுளத்தாய் சேய்மைவடுக்
கன்னலழித்து காயமாற்றினும் கனிவுபொழி
          கருப்பொருளாய் கெடுந்துளிர்
உன்னலழித்து உளத்துடிப்பாய் உயிர்மெய்யாய்
          உறைவாயே இன்பமளித்தே!


26. கருணையுளோர் அன்னையராய்க் கனிந்திலங்கும் தூயவள்!

இன்பமளித்து இருமையும் இருபாலரும் 

          இசைந்தொழுக இயங்குதற்பால்
அன்புமளித்து அருளொடும் அருங்கதியும்
          அரவணைப்பும் அரும்புதற்பால்
நன்புமளித்து நற்கருவியாய் நடுவுரையும்
          நன்பொருளாய் உதிரத்திசுவொடு
என்புமளித்து இன்னுயிரை ஈன்றுமுயர்த்
          தாய்மையாகும் இயல்புநிலையே!


27. சங்கரியாய் கொற்றவையாய் சங்கரிக்கும் நெருப்பவள்! 

இயல்புநிலை இசையற்று இயலிரிந்தார்
          இடுமிட்டீறு இடும்பைமிகு
செயல்விளை தற்பமற்பம் செறுந்திறல்
          சிரமொழிக்க தழல்வெற்பு
புயல்பொழி பேரிடர்மாரி பிரளயமொடு
          புவியண்டம் புரளப்புதுக்கி
துயர்வினை துடைத்தறத் தூவினை
          தொடர்வாய் இயக்குவித்தே!


28. சங்கரனார் அங்கவையாய் சஞ்சரிக்கும் பொருப்பவள்! 

இயக்குவித்து இடையறா இயங்கியலாய் 

          இனிமையிலும் இளமையிலும்
மயக்குவித்து முழுவுரிமை மையயீர்ப்பென
          மண்ணிகத்துள் மதிநலத்துள்
பயக்குவித்து பருவகாலம் பகலிரவுமென
          பண்படத்தேற்றி பயிற்றுவித்து
அயக்குவித்து அரணுவித்து அடைக்கலமும்
          அருளுகிறாய் அன்புமிகுத்தே!


29. தருமத்தின் துணைக்கோடாய்த் தரணியாளும் துர்க்கையள்!

அன்புமிகுத்து அகிலத்துயிர் அனைத்தும் 

          அண்டிநின்று அமைதியேக
இன்புமிகுத்து இயற்கைநல இசைபேணும்
          இதயமுளார் இறும்பூதெய்த
நன்புமிகுத்து நன்றிமிகுத்த நல்லார்க்கும்
          நடுவுநடுவார்க்கும் நல்குவாய்
வன்புமிகுத்து வாய்மைக்கும் வண்மைக்கும்
          முக்திநல அமுதளித்தே!


30. தருணத்தில் இணைவாழ்வாய்த் திறமருளும் இயற்கையள்!

அமுதளித்து அறிவொடுநல் அனுபவமும் 

          அனைத்தும் பகிர்ந்துயிர்
சுமுகமாய் சங்கமிக்கும் சுந்தரியாய்
          சுகித்துச்சகிக்கும் சகியவளாய்
சமுத்திரச் சக்தியளாய் சால்பூட்டும்
          சாதனைச்சார்பில் துணைவியாய்
அமுதசுரபி அன்னையாய் அன்புகாட்டும்
          அருமகளாய் அருள்நல்கே!


31. பசுபதியாய்ப் பாசமாகிப் பரமுமாகும் அன்னையள்!

அருள்நல்கும் ஆனந்தவாரி அம்பிகையாய் 

          ஆற்றலொடு ஆழ்ந்துணரத்
தெருள்நல்கும் தெளிஞானத் தேவதையாய்
          தேற்றமொடு திண்மையாய்
மருள்நல்கும் மறுமையாய் மதிவெல்கும்
          மரணமிலா மாற்றுமாய்முப்
பொருள்நல்கும் பற்றுமகற்றி பொருண்மை
          பரகதிநல்கும் அன்னையே!


32. பசுங்கிளியாய் நேசமாகும் பராசக்திஓம் அம்மையள்!

அன்னையே! அருள்ஞான அமுதூட்டும் 

          அகிலாண்ட அம்மையே!
தன்னையே அறிந்தார்க்கு தந்தையும்
          தம்மையும் தெரிக்காட்டும்
முன்னையே! முக்திதரும் முழுமுதற்
          மெய்மையே! மும்மையே!
நின்னையே சரணானோம் நின்மலி! 
          நிறைவுதருவாய் அருவுருவே!
* அம்பிகை அந்தாதி முற்றும் *
அம்பிகை அகவல்: (தலைப்புக் கவிதை)
அணுவாகி அண்டமாகி அகிலமாளும் அன்னையள்!
அந்தமாதி அலகிலாது ஆடிநிற்கும் அம்மையள்!
ஆலமுண்ட கண்டனின் அகத்துறை மாதவள்!
ஆற்றலாகி நம்பகத்தின் ஊற்றுமாகும் தேவியள்!
இயங்குநிலை மெய்ப்பொருளின் இகபரத்துச் சக்தியள்!
இயற்கையாகி உய்வைத்தரும் இன்பநிலை முக்தியள்!
ஈஸ்வரியாய் பரம்பொருளாய் இலங்குமுயர் தாயவள்!
ஈன்றவற்றில் கருப்பொருளாய் துலங்குமெழில் தூயவள்!

உயிருடலாய் உளமதியாய் உலவிநிற்கும் உமையவள்!
உணர்வகமாய் பலநலமாய் உறுதிநிற்கும் இமையவள்!
ஊழியாட்டம் நர்த்தனமாய் உலகையாட்டும் வல்லியள்!
ஊக்கமொடு ஊட்டமுமாய் உவகையூட்டும் மெல்லியள்!
எந்தையுமாய் அன்னையுமாய் எழுந்தருளும் இறையவள்!
எண்ணமுமாய் திண்ணமுமாய் இதயமாகும் நிறையவள்!
ஏற்றமுமாய் மாற்றமுமாய் இயக்கமாகும் மென்மையள்!
ஏதிலார்க்கும் வாழ்வியலாய் இன்பமாகும் தன்மையள்!

ஐக்கியமாய் பாலிணையாய் அறங்காட்டும் பரமவள்!
ஐங்கரனின் தாயமுதாய்த் திறங்கூட்டும் உரமவள்!
ஒப்பிலியாய் அன்பழகாய் உயர்வுகாட்டுந் தலைமகள்!
ஒற்றுமைதன் திடவளமாய் வெற்றிதீட்டும் மலைமகள்!
ஓங்காரம் உடுக்கையிடி ஒலியிலங்கும் மாயவள்!
ஓம்புமுயிர் மேம்படவே ஒளிதுலங்கும் தூயவள்!
ஔடதமாய் விடத்தையும் அமுதமாக்கும் அன்னையள்!
ஔவியத்து முடத்தையும் அழித்தருளும் சென்னியள்!

கருப்பொருளில் உயிர்மெய்யாய் கலந்திலங்கும் தாயவள்!
கருணையுளோர் அன்னையராய்க் கனிந்திலங்கும் தூயவள்!
சங்கரியாய் கொற்றவையாய் சங்கரிக்கும் நெருப்பவள்!
சங்கரனார் அங்கவையாய் சஞ்சரிக்கும் பொருப்பவள்!
தருமத்தின் துணைக்கோடாய்த் தரணியாளும் துர்க்கையள்!
தருணத்தில் இணைவாழ்வாய்த் திறமருளும் இயற்கையள்!
பசுபதியாய்ப் பாசமாகிப் பரமுமாகும் அன்னையள்!
பசுங்கிளியாய் நேசமாகும் பராசக்திஓம் அம்மையள்! 


அம்பிகை போற்றி போற்றி போற்றியே!
*** அம்பிகை அகவல் முற்றும் ***
 
***

Tuesday, June 7, 2011

அன்னையர் அந்தாதி (பகுதி: 3)

அன்னையர் அந்தாதி (பகுதி: 3)

2. திருமகள் அந்தாதி



இறை வணக்கம்:
மாதவன் மனத்திரு மங்கையேநின தருளன்றி
யாதவம் வளமீயும் பூதலத்தே? - ஆதலுமாயுன்
திருவடிக்கே சரணானோம் திருமகளே எமக்கென்றும்
பெருநிதியப் பொருளாய்ப் பொழி. 
அந்தாதிக் கட்டளை:
செங்கமல அலர்மேல் செவ்விதழ் நறுமலராய்
செங்கண் மாலரங்கச் செம்மனத் திருமடந்தாய்
பிங்கலக் கைமாற்றில் பெருஞ்சிகை நெடியோன்
சங்கமத் தாய்வைத்த செல்வத்திரு உறுபொருளே!

உலகியலாய் உலகப்பருப் பொருண்மை உடைமையுமாய்
கலவியலால் காதற்காமம் களிக்குமுயர் நனியுணர்வாய்
நலமிகுக்கும் சம்பத்துமாய் நற்கதிதருஞ் சந்ததியுமாய்
இலக்காயுறு நல்வரத்தாய் இலங்குமின்பத் திருமகளே!
 
அந்தாதி: 

1. அலர்மேல் மங்கையே அழகுநல் புவிமகள்!

செங்கமல(ச்) செழுமலரில் சீர்மல்கி
          வாசஞ்செய் செம்பொருட்
தங்கமலர் தாரணியாய் தாயுமாய்
          தாரகையாய் தாமரைக்கண்
அங்கமுடை அம்போதி அத்தனவன்
          அகமலராய் அமர்ந்தேகி
அங்கையில் அகமிளகி பெரும்பேறு
          அருள்நல்கும் அலர்மேலே!


2. அலைமகள் நங்கையே அன்னைத் திருமகள்!

அலர்மேல் அமர்அருள் அலைமகள்
          அன்னையாய் அகிலத்து
மலர்மேல் எலாம்வள நலம்பொலி
          நாயகியாய் வையத்து
நிலம்பால் வைதேகியாய் பைந்தமிழ்
          பாச்சூடியாய் நித்திலத்து
சிலம்பால் சிந்தாமணி நகையேநின்
          திருவாய்ச் செவ்விதழே!


3. ஆழியிலே வந்துதித்த அற்புதமே அலைமகள்!

செவ்விதழ் சேயிழையாய் பாலாழி
          திரளமுதச் செல்வியுனை
செவ்வியத் தனபதிபால் கடனாகித்
          திருமணித்த செவ்வாயன்
அவ்விதமே காத்துநின்றே காலமெலாங்
          கழிப்பதுவோ அக்கடன்?
நவ்விநினது நாரணன்பால் நற்கருணை
          நவில்வாயே நறுமலரே!


4. ஆவினம் பால்சொரிய அமுதமாகுந் தலைமகள்!

நறுமலராய் ஐம்பூதத்து பருப்பொருள்
          ஐம்பொறி நடைக்கூட
மறுமலராய் அந்தரங்கக் கருப்பொருள்
          அகப்பை மனமடலாய்
உறுமலராய் ஐயிந்திரிய தன்மாத்திரை
          ஐவுடம்பு உடனுறைச்
செறுமலராய் ஏழ்தாது பிரபஞ்சவளர்
          பதிநாடிச் செங்கண்ணே!


5. இலக்குமித் தாயேநல் இதயத்திரு பெருமகள்!

செங்கண் இயற்கை செயற்கை
          மாயையாய் செழுமதியாய்
எங்கண் அஞ்ஞான அகத்துணர்
          இன்பதுன்ப பிரமையாய்
அங்கண் விளையும் அறிவொளி
          விளக்கத்து அகிலமாய்
வங்கண் யாங்கிலும் இலங்கும்
          இலக்குமி மாலரங்கமே!


6. இலங்கிடும் யாதிலும் இன்பநிலை தருமகள்!

மாலரங்கச் சீதனமே! மண்ணகத்து
          மாற்றா மாற்றமாய்
பாலரங்கத் தயிர்மோர் வெண்ணை
          நறுநெய் பாங்குறை
வாலரங்கப் பருவவிதி வளமுடை
          மாற்றாய் வளர்நிறை
சாலரங்கப் பெருநிதியச் சாதனமாய்
          செழிக்குஞ் செம்மனமே!


7. ஈட்டமாய் வளநலத்தை ஈண்டுதரும் நிறைமகள்!

செம்மனத் துரமொடு செழுநல்
          இலக்கொடு செய்வினை
எம்மனங் கருத்தொடு இயங்குமோ
          ஆங்கண் இலங்கியும்
கம்மனத் திறத்தொடு நற்கருமம்
          ஆற்றுமக் கடமையவர்
தம்மனத் திருவாய் வருவாய்
          தருவாய் திருமடந்தே!


8. ஈன்றவற்கே யாங்கனமும் மீண்டுவரும் மறைமகள்!

திருமடந்தாய் அரவாதே அறிவாழ்வார்
          ஆழ்ந்தமனத் திருவிடத்துக்
கருமடந்தாய் கரவாதே கருமவினை
          ஆன்றவர்பால் கருணைவளம்
தருமடந்தாய் இரவாதே இருந்தாலும்
          இரங்கிநலம் தந்தவர்பால்
பெருமடந்தாய் குறையாதே பன்மடங்கில்
          ஈந்தருளும் பிங்கலனே!


9. உலகத்தின் திருவாகி உள்ளமதில் உறைமகள்!

பிங்கலக் கருணையே! பொருளன்றி
          பெருநிலத்தே பயனில்லையால்
நங்கலப் பொருளிலாரை இல்லாரும்
          ஈந்தாருமே நயந்திலார்போல்
மங்கலப் பொருளுயிரை மாய்க்காதே
          நம்பிக்கை மனவளத்தால்
கங்கனங் கொண்டிலங்கி உலகூட்டிப்
          பரிமாறும் கைமாறே!


10. உணர்வாகி மலராகி உயர்வாகும் இறைமகள்!

கைமாற்றில் அறனீட்டம் கைவளமாய்
          நிலைநலக் களமீயும்
வைமாற்றில் அதனீட்டங் கைத்துதவப்
          பெருக்காகி வளமீயும்
மைமாற்றில் அதனாட்டம் வைத்தவுறு
          நஞ்சாகும் நலந்தேயும்
பைமாற்றில் பலனீட்டம் கைமாற்றும்
          பஞ்சமும் பெருஞ்சிகையே!


11. ஊனாகித் தேனாகி ஊஞ்சலாடும் நறுமகள்!

பெருஞ்சிகை(ப்) பெய்வளையே! பெருநிதியம்
          பெறுனர்பால் பெரும்பலந்
தருஞ்சிகை அகநெய்வார் தகைப்பேணி
          முனைவர்பால் தனமளக்கும்
அருஞ்சிகை அளவறிந்து செயலாக்கும்
          அனைவர்பால் அமுதளிக்கும்
நெருஞ்சிகை நெய்வாச நறுமதிநின்
          நெஞ்சின்பால் நெடியோனே!


12. ஊழ்வினைப் பொருளாகி ஊடலாகும் உறுமகள்!

நெடியோன் பெருமால் நெடுநல்
          அணங்காய் நின்மலர்
மடிமேல் இருத்தியும் வறுமையில்
          உழலவும் உன்பதம்
படியோர் வருந்தாமற் பல்வளம்
          கொழுகவும் பொருந்தாத்
துடியிடை பொருந்தலும் அவரவர்
          தொல்வினைச் சங்கமமே!


13. எளிமையும் வலிமையென எழுச்சிதருந் தாயவள்!

சங்கமத் திரட்டும் தாபரமும்
          நங்கையிற் சார்மையும்
வெங்கம் கையறவு களையுங்
          கொடைதரு வினைக்கே
பொங்கும் வல்நிதியம் நற்பணியும்
          எளிமையும் புரிவர்பால்
தங்கமுதப் பெருநிதியே தளைக்கும்
          புண்ணியத் தாய்வைத்தே!


14. எதிர்பாரா யோகமாகி இன்பந்தரும் மாயவள்!

தாய்வைத்த பெருநிதியம் தரணிவாழ்
          நல்வாய்ப்பும் தன்னுள்ளக
மாய்வைத்த மாயையும் தேவையும்
          மிகுதேடலும் மனநிறைவுக்
காய்வைத்த எதிர்பாராநல் யோகமும்
          ஞானமும் கைவளமும்
சேய்வைத்த பேரின்பமும் இசைவாகும்
          நற்பெருஞ் செல்வத்திருவே!


15. ஏழ்மை இல்லாமை நீக்கிவிடும் நல்லவள்!

செல்வத்திரு நற்செழுமை அல்லலறு
          மிகுவின்பம் சேர்ந்திலங்கி
இல்லத்திரு இன்மையும் இகழ்ச்சியும்
          அகற்றும்நல் இயல்பாயின்
அல்லல்தரு மதிமயக்கும் அழுக்காறும்
          அகந்தையும் அதன்விளை
மெல்லத்தரு பேராசையும் மறுமைக்கே
          வித்தாகும் உறுபொருளே!


16. ஏக்கத்தை இகவாழ்வில் போக்கிவிடும் வல்லவள்!

உறுபொருளே! கற்றார்க்கும் உற்றார்க்கும்
          மற்றார்க்கும் உய்வுதரும்
நறுபொருளே! வையகத்தின் வளத்தையும்
          வைப்பார்க்கு நலத்தையும்
இறுபொருளே! பகுத்தறிவாய் அனைத்திலும்
          பற்றகற்றும் இறுதிக்கும்
வறுபொருளே! உளத்தாசை ஒறுத்தார்க்கே
          வயமாகும் உலகியலே!


17. ஐம்புலனும் துய்த்துணரும் இன்பதுன்ப நலமவள்! 

உலகியலாய் ஐம்புலமும் அகப்புறமும்
          இன்பதுன்பம் உய்த்துணரும்
நிலவியலாய் தேவையிறும் பகர்பொருளும்
          நேசந்தரும் நுகர்பொருளும்
அலகியலாய் இலக்கதிலும் அடைதலிலும்
          அனுபவமாய் அன்றிலறும்
விலகியலாய் பெருஞ்சுனைக் களஞ்சியமாய்
          விளங்குநல் உலகப்பருவே!


18. ஐசுவரியம் தனமாகும் அனைத்தான வளமவள்!

உலகப்பருப் பொருளாய் பொய்மெய்
          மாயத்திலும் உணர்விலும்
கலகத்திரு காதலிலும் காமநிறைக்
          களிப்பிலும் கலப்பிலும்
நிலவசத்திரு வனப்பிலும் செல்வநலச்
          செழிப்பிலும் நேசத்திலும்
புலவசத்திரு பற்றலிலும் அற்றலிலும்
          பொழிந்திடும் பொருண்மையே!


19. ஒன்றிய இலக்குமாகி வெற்றிதரும் இனியவள்! 

பொருண்மை ஒருங்கடை இலக்கால்
          வெல்மடி போற்றலும்
அருண்மை வினையிடை திண்மை
          துணிவொடு ஆற்றலும்
மருண்மை தூக்கொடு இருண்மை
          போக்கலும் மாற்றுமை
வெருண்மை நீக்கலும் அன்னை
          வீரலக்குமி உடைமையே!


20. ஒருமை பலவாக்கிப் பெற்றுத்தருங் கனியவள்!

உடைமையுமாய் உயிரெழும் ஈட்டமுமாய்
          வளம்பொழிவல் ஊட்டமுமாய்
நடைமையுமாய் நல்வினை நாட்டமுமாய்
          நலந்தழைக்கும் நோட்டமுமாய்
படைமையுமாய் மாற்றத்தொடர் ஓட்டமுமாய்
          பருவகால ஆட்டமுமாய்
கடைமையுமாய் பெருக்குநல் கூட்டமுமாய்
          கடைத்தேற்றுவாய் கலவியலாலே!


21. ஓயாத அலையாகி ஆசைதரும் அலைமகள்!

கலவியலால் களிப்பாகிக் கசிந்துருகிக்
          கருவுயிராய்க் கனிவதுமாய்
உலவியலால் மூவாசைக் கடலலைப்
          பெருமுகிலாய் உவப்பதுமாய்
நிலவியலால் மும்மலத்து மும்மையுறு
          காரணியாய் நெஞ்சகத்துக்
குலவியலால் சொட்டுமது போகரசங்
          கொட்டுங்கவி காதற்காமமே!


22. ஓராதே நிலையாகி உய்விக்குந் தலைமகள்!

காதற்காமம் கடைந்தேறக் கருணைவளம்
          களைநுதலும் காமதேனாய்
மாதர்காமம் மடைமாறும் மனையறமும்
          மயக்கமறும் மங்கலமுமாய்
நோதற்காமம் நல்குரவின் இடர்களைந்து
          நோன்மைநிறை நிலைப்பேறாய்
கோதற்காமம் கொழிவிளைக் கோதனத்துக்
          கொடைவழிக் களிக்குமுயரே!


23. ஔவிய மருளுமாகி அலையவிடும் பெருமகள்!

களிக்குமுயர் பேரின்பத்து ஊற்றருவிப்
          பெட்டகமாய் கையிருப்பாய்
அளிக்குமுயர் வாருதியில் பசுமனத்துப்
          பகப்பண்பாய் அன்பளிப்பாய்
தளிக்குமுயர் தன்னலத்து அகவிருளைத்
          தாண்டிப்பின் திருவிளக்காய்
நளிக்குமுயர் நல்மனத்து நற்பேறாய்
          நலமளிக்கும் நனியுணர்வே!


24. ஆக்கும் பொருளுமாகி உலவவிடுந் திருமகள்!

நனியுணர்வாய் கருமவினைக் கருவறையாய்
          நன்நிலைமை நல்வாய்ப்புக்
கனியுணர்வாய் கவனம்நிறை வினையறமாய்
          செய்வினைக் களப்பொலிவுத்
தனியுணர்வாய் திருந்துவினை விழுமியமாய்
          தகைசால் திரவியத்திரு
நுனியுணர்வாய் நாற்பொருள் நுண்ணுணரும்
          நற்பேறாய் நலமிகுக்குமே!


25. காடாகி மலையாகிக் கடலாகும் பொழிலவள்!

நலமிகுக்கும் இயற்கை நிலமாகி
          மலையாகி நாடாகி
வலமிகுக்கும் ஊற்றாகி ஆற்றாகி
          கடலாகி வானாகி
தலமிகுக்கும் மழையாகி தளிராகி
          வளமாகி தனமாகி
சலமிகுக்கும் சங்கமத்து வித்தாய்
          சான்றாகும் சம்பத்துமே!


26. காயாகிக் கனியாகிக் களிப்பாகும் எழிலவள்!

சம்பத்துமாய் மனைவாசல் நிலபுலத்து
          நன்மக்களுந் தனவளமாய்
தம்பத்துமாய் மந்தைநிறை சமூகத்தாய்
          வாழ்வியல் சந்தையுமாய்
பிம்பத்துமாய் வணிகவியல் பொருளியல்
          பெருகுநிலைப் பங்குமதாய்
நம்பத்துமாய் இலங்குவழி நாணயமாய்
          விளங்குமெழில் நற்கதியே!


27. சக்கரச் சுழற்சியாய் சதுராடுஞ் சேயவள்!

நற்கதிதருஞ் செழுபயன் இகக்காரணி
          முன்வினை நற்பலனும்
முற்பதிதரும் சுழல்விளை முற்றாஅவா
          மயல்வித்து மறுமையும்
கற்பகந்தருங் கொழுநலங் கருதியாங்கு
          கைவண்ணங் கிட்டுதலும்
சிற்சுகமருள் நிலைத்தலும் ஊழ்வினை
          செய்தவமே சந்ததியுமே!


28. சகமாகி மாற்றாகிச் சகலமாகும் மாயவள்!

சந்ததியுமாய் பந்தமுமாய் சமமாகுஞ்
          சொந்தமுமாய் சம்பத்தாய்
வந்ததுமாய் வருவதுமாய் மாற்றுமாய்
          மாற்றாநல் வரம்பிலாச்
சிந்தையுமாய் நல்லறமாய் சீர்மைமிகு
          சௌபாக்கியத் தாயுமாய்
எந்தையுமாய் இருக்கிறாய் மாயமுமாய்
          இலக்குமியே இலக்காயே!


29. தொடராகி மறுமைதனைத் துலக்குந் தூயவள்!

இலக்காயுறு உளப்பொருளாய் இயங்குநல்
          தூண்டலுமாய் இலங்கியும்
கலக்காயுறு அகத்திருளாய் உழற்றுமதி
          கல்லாமையால் கிடப்பாயும்
துலக்காயுறு துய்ப்பொருளாய் விளங்கிவல்
          பேராசையால் தொடராயும்
நலக்காயுறு மறுமையாய்மீள் நன்னிலத்தில்
          தொழிற்படும் நல்வரத்தே!


30. தொழிலாகி வறுமையினை விலக்குந் தாயவள்!

நல்வரத்தாய் நடைமுறை நடுவறத்து
          நல்வித்தாய் நாயகியாய்
பல்வரத்தாய் பணிமுறை பண்பறத்து
          பணிவித்தாய் பார்கவியாய்
நில்வரத்தாய் நேர்மறை நல்லறத்து
          நினைவித்தாய் நிம்மதியாய்
இல்வரத்தாய் வாழ்வகை உயர்வித்து
          இருதயத்தாய் இலங்குமின்பமே!


31. நண்ணிய வகையெலாம் நலந்தரும் புவிமகள்!

இலங்குமின்பத் திருமதியாய் எண்ணியவை
          எண்ணியாங்கு இயல்பவளாய்
நிலங்குமின்பத் திருநிறையாய் நண்ணுவர்க்கே
          நலந்தரும் நிறைகுடமாய்
விலங்குமின்பத் தவநெறியாய் பற்றறுக்கும்
          வினைவாணருக்கு மாத்திரமாய்
துலங்குமின்பத் திருப்பொருளாய் முத்திநலத்
          துணைநல்கும் திருமகளே!


32. நுண்ணிய யோகமுயர் வீடுந்தருந் திருமகள்! 

திருமகளே! எண்மகளாய் மாயமும்
          மயக்கமும் தெளிவிக்கும்
பெருமகளே! பொன்மகளாய் யோகமும்
          பெருநெறியும் பொலிவிக்கும்
குருமகளே! செம்மகளாய் கருவிலுந்
          திருவாய்க் குபேரவருளைத்
தருமகளே! எம்மகத்தே யாண்டுமே
          தகைத்திருவே செங்கமலமே!
 
* திருமகள் அந்தாதி முற்றும் *
திருமகள் அகவல்: (தலைப்புக் கவிதை)
அலர்மேல் மங்கையே அழகுநல் புவிமகள்!
அலைமகள் நங்கையே அன்னைத் திருமகள்!
ஆழியிலே வந்துதித்த அற்புதமே அலைமகள்!
ஆவினம் பால்சொரிய அமுதமாகுந் தலைமகள்!
இலக்குமித் தாயேநல் இதயத்திரு பெருமகள்!
இலங்கிடும் யாதிலும் இன்பநிலை தருமகள்!
ஈட்டமாய் வளநலத்தை ஈண்டுதரும் நிறைமகள்!
ஈன்றவற்கே யாங்கனமும் மீண்டுவரும் மறைமகள்!

உலகத்தின் திருவாகி உள்ளமதில் உறைமகள்!
உணர்வாகி மலராகி உயர்வாகும் இறைமகள்!
ஊனாகித் தேனாகி ஊஞ்சலாடும் நறுமகள்!
ஊழ்வினைப் பொருளாகி ஊடலாகும் உறுமகள்!
எளிமையும் வலிமையென எழுச்சிதருந் தாயவள்!
எதிர்பாரா யோகமாகி இன்பந்தரும் மாயவள்!
ஏழ்மை இல்லாமை நீக்கிவிடும் நல்லவள்!
ஏக்கத்தை இகவாழ்வில் போக்கிவிடும் வல்லவள்!

ஐம்புலனும் துய்த்துணரும் இன்பதுன்ப நலமவள்!
ஐசுவரியம் தனமாகும் அனைத்தான வளமவள்!
ஒன்றிய இலக்குமாகி வெற்றிதரும் இனியவள்!
ஒருமை பலவாக்கிப் பெற்றுத்தருங் கனியவள்!
ஓயாத அலையாகி ஆசைதரும் அலைமகள்!
ஓராதே நிலையாகி உய்விக்குந் தலைமகள்!
ஔவிய மருளுமாகி அலையவிடும் பெருமகள்!
ஆக்கும் பொருளுமாகி உலவவிடுந் திருமகள்!

காடாகி மலையாகிக் கடலாகும் பொழிலவள்!
காயாகிக் கனியாகிக் களிப்பாகும் எழிலவள்!
சக்கரச் சுழற்சியாய் சதுராடுஞ் சேயவள்!
சகமாகி மாற்றாகிச் சகலமாகும் மாயவள்!
தொடராகி மறுமைதனைத் துலக்குந் தூயவள்!
தொழிலாகி வறுமையினை விலக்குந் தாயவள்!
நண்ணிய வகையெலாம் நலந்தரும் புவிமகள்!
நுண்ணிய யோகமுயர் வீடுந்தருந் திருமகள்! 


திருமகள் போற்றி போற்றி போற்றியே!
*** திருமகள் அகவல் முற்றும் ***
 
***

Monday, March 29, 2010

மனிதா... மனிதா...

மனிதா... மனிதா...


தொடக்கம் என்பதும் நீயுமல்ல
முற்றும் என்பதும் நீயுமல்ல
மாற்றம் செய்ததும் நிலையுமல்ல
மாறும் என்பதும் நிச்சயமல்ல
நடந்தவை எல்லாம் முடிவுமல்ல
நடப்பவை எல்லாம் தொடருமல்ல
நேற்றும் இன்றும் நாளையுமல்ல
நினைப்பவை எல்லாம் நடப்பதுமல்ல
துணிந்தவை எல்லாம் இறுதியுமல்ல
தொடரும் என்பதும் உறுதியுமல்ல

கண்டவை எல்லாம் உண்மையுமல்ல
காணாதவை எல்லாம் பொய்யுமல்ல
கடந்தவை எல்லாம் முடிந்ததுமல்ல
கனவுகள் எல்லாம் விடிந்ததுமல்ல
வகுத்தவை எல்லாம் நிகழ்வதுமல்ல
வாழ்வின் கணங்கள் நிலைப்பதுமல்ல
தொலைந்தவை எல்லாம் நிஜமுமல்ல
துவங்குதல் எல்லாம் முதலுமல்ல
மறைந்தவை எல்லாம் களவுமல்ல
மறத்தால் விளைவது நலமுமல்ல

மவுனம் என்பது சம்மதமல்ல
மனதால் கெடினும் கற்புமல்ல
பொய்மை என்பது புனிதமுமல்ல
பொருளே வாழ்வின் இனிமையுமல்ல
சலனம் கொள்வதில் அமைதியுமல்ல
சலித்துக் கொள்வதால் நிறைவதுமல்ல
அவசரம் காட்டின் நிகழ்வதுமல்ல
அழுதால் மட்டும் விலகுவதல்ல
கரணம் அடித்து விடிவதுமல்ல
மரணம் என்பது விடையுமல்ல

நெஞ்சில் நிற்பவை சொந்தமுமல்ல
நிழலாய் வருபவர் நண்பருமல்ல
பந்தம் தெரிகிற இணைப்புமல்ல
பாசம் வெறுமே நினைப்புமல்ல
எதுவும் வாழ்வில் நிரந்தரமல்ல
இழந்தோம் என்பதும் எதுவுமேயல்ல
கொடுத்தோன் மனதில் குறைவதுமல்ல
படைத்தோன் மடியில் துன்பமுமல்ல
இறையோன் பாதத்தில் குறைகளுமல்ல
சரணாகதி எனில் மரணமுமல்ல !!!

***

பொருள் விளக்கம்:

தொடக்கம் என்பதும் நீயுமல்ல
முற்றும் என்பதும் நீயுமல்ல


மனிதா, உயிர்களிலோ, உலகிலோ அன்றில் மனித குலத்திலோ தொடக்கம் என்பது தனிப்பட்ட வகையில் நீயுமல்ல.

அன்றில் இவற்றின் முடிவு என்பதும் நீயுமல்ல. ஒரு நீண்ட தொடர்ச்சியில் நீயும் ஒரு அங்கம் அவ்வளவே.


மாற்றம் செய்ததும் நிலையுமல்ல
மாறும் என்பதும் நிச்சயமல்ல


நீ செய்த எல்லாவிதமான இயற்கை மாற்றமும் அவை மாறாத் தன்மை கொண்டவையுமல்ல,

அன்றில் இங்கேயுள்ளவையோ, அன்றில் மாற்றி வைத்தவையோ தொடர்ந்து மாறிக் கொண்டேயிருக்குமா என்பதும், மாற்றம் என்பது ஒன்றே மாறாதது என்பதை அறிந்திருந்தாலும், சர்வ நிச்சயமாகச் சொல்ல இயலாதது.


நடந்தவை எல்லாம் முடிவுமல்ல
நடப்பவை எல்லாம் தொடருமல்ல


இதுவரை நிகழ்ந்தவை யாவும் தீர்வான முடிவுகளுமல்ல.

அன்றில் நடந்து கொண்டிருப்பவையோ, நடக்கப் போவையோ இவற்றின் தொடர்ச்சியாக இருக்குமென்பதுமில்லை.


நேற்றும் இன்றும் நாளையுமல்ல
நினைப்பவை எல்லாம் நடப்பதுமல்ல


நேற்றோ, இன்றோ நாளையாவதில்லை. ஒவ்வொன்றும் வெவ்வேறு. ஒவ்வொரு கணமும் தனித்தன்மை கொண்டது.

நினைப்பதெல்லாம் நடந்து விடுவதும் இல்லை. அவ்வாறு நடந்துவிட்டால் தெய்வம் என்பதற்குத் தேவையே இருக்காது.


துணிந்தவை எல்லாம் இறுதியுமல்ல
தொடரும் என்பதும் உறுதியுமல்ல


வாழ்க்கையில் இதைத்தான் கற்றுக் கொண்டுவிட்டோம் என்று எதையும் துணிந்து ஒரு முடிவிற்கு வரலாம் என்றால் அவை இறுதியாக இல்லை. எல்லாம் மாறிக் கொண்டே இருக்கிறது.

சரி மாறிக் கொண்டிருப்பதால் அடுத்தும் மாறுமோ என்றால் அதிலும் உறுதியாகச் சொல்ல முடிவதில்லை. இதைத்தான் உறுதியான துணிபுகளைச் சொல்லிவிடத் தெரிந்து விட்டால் பங்கு வாணிபமோ அல்லது வேறு தொழிலிலோ எப்போதும் வெற்றியையே பெற்று வாழ்ந்து விடலாமே?


கண்டவை எல்லாம் உண்மையுமல்ல
காணாதவை எல்லாம் பொய்யுமல்ல

நாம் அறிந்தவை எல்லாம் அறுதி செய்யப்பட்ட உண்மையா என்றால் இல்லை. அவை மாறாத்தன்மை கொண்டிருந்தால், மாறாத உண்மையாக இருந்தால் மாற்றங்களே நிகழக் கூடாதே.

சரி நான் காணாதவை, அறியாதவை எல்லாம் உண்மை என்று சொல்ல முடியாதே, அவை பொய்தானோ என்றும் உறுதிபட எப்படிச் சொல்வது?


கடந்தவை எல்லாம் முடிந்ததுமல்ல
கனவுகள் எல்லாம் விடிந்ததுமல்ல

நம் வாழ்வில் நம்மைக் கடந்து சென்றவை எல்லாம் பழங்கதையாய் முடிந்து போனது அன்றில் இறந்து போனது தானே என்று சொல்லி விடலாமா? நிச்சயமாக முடியாது. நேற்றைய நீட்சியில் தானே இன்று பயணித்துக் கொண்டிருக்கிறோம். நேற்றுச் செய்து கொண்ட திருமண பந்தம் நேற்றோடு முடியவில்லையே...

கனவுகளே வாழ்வாகிவிட்டால் எத்தனை இன்பமானதாக இருக்கும். கண்ட கனவுகள் எல்லாம் பலிக்கவில்லையே. எல்லாக் கனவுகளும் பலித்துவிட்டால், மனிதன் கனவிலேயே வாழ்ந்துவிட மாட்டானா?


வகுத்தவை எல்லாம் நிகழ்வதுமல்ல
வாழ்வின் கணங்கள் நிலைப்பதுமல்ல


கனவுகள் கலைகின்றவை. சரி திட்டமிட்டு வகுத்தவையாவது கன கச்சிதமாக நிகழுமா என்றால், அவையும் அதன் முழுப் பூரணத்தோடு நிகழ்வதில்லையே.

வாழ்வின் ஒவ்வொரு இனிய கணங்களும் தொடாராதா என்று மனம்தான் ஏங்கும். அவை நிலைப்பதில்லையே. இன்பமும் துன்பமும் மாறி மாறித் தோன்றி வாழ்வை நிலையற்றதாய் செய்து கொண்டு ஒரு வகையில் சுவாரஸ்யம் குறையாமலும் கொண்டு செல்லச் செய்கின்றது.


தொலைந்தவை எல்லாம் நிஜமுமல்ல
துவங்குதல் எல்லாம் முதலுமல்ல


இதுவரை வாழ்வில் தொலைத்தவை எல்லாம் போனவைதானா? நமது இன்பத் தருணங்கள், பிள்ளைப் பருவம் அனைத்தும் பொய்யுமல்ல, திருப்பி மீட்டெடுத்துவிட முடிகின்ற நிஜமுமல்ல.

நாம் துவங்குகின்ற எதுவும் அதுவே முதல் முறையானது என்றும் அல்ல. நாம் தான் கண்டுபிடித்தோம் என்று கர்வம் கொள்ள என்ன இருக்கிறது. சிற்பி ஒருவர் சொன்னது போல அந்தக் கல்லுக்குள்ளேதான் சிலை இருந்தது, தேவையற்றதைப் பிரித்து நீக்குதல் மட்டுமே நான் செய்தேன். இதைப்போன்றதே மனிதனின் ஒவ்வொரு கண்டுபிடிப்பும்.


மறைந்தவை எல்லாம் களவுமல்ல
மறத்தால் விளைவது நலமுமல்ல


நம்மிடம் இருந்து காணாமல் போனவையெல்லாம் களவாடப் படவுமில்லை. அவை மாற்றம் பெற்றன அல்லது எங்கோ இன்னும் மறைந்து இருப்பினைக் கொண்டுதான் இருக்கிறது.

அறம் மறந்து அறமற்ற தீய மறத்தால், தீயவற்றைப் பின்பற்றுவதால் விளைவது நலமுமல்ல, நிம்மதியுமல்ல.

வாழ்வில் அறம்தான் நிம்மதி தரும். இதை யார் வகுத்தார்கள். நம் மூதாதையர் அனுபவத்தால் கண்டவையே நல்லவை கெட்டவை என்று அடையாளம் காட்டப் பட்டிருக்கின்றன. ஒரு உயிர்க் கொல்லி விடத்தை, நாம் புதிதாக மீண்டும் பயன் படுத்தி அனுபவம் கொள்வதில்லையே. பிறகு மற்ற மறங்களை மாத்திரம் ஏன்? எனவே மறங்கள் என்பவை ஒதுக்கப் படவேண்டிய தீய வழிகளே.


மவுனம் என்பது சம்மதமல்ல
மனதால் கெடினும் கற்புமல்ல


மவுனமாக இருந்துவிடுவதால் அது சம்மதம் என்று பொருள் படாது. மனிதருக்கு மாத்திரம் அல்ல இயற்கைக்கும் பொருந்திய வாக்கியமிது.

கற்பு என்பது சொல் பிறழாமை மாத்திரமா? மனத்துக்கண் மாசிலனாது இருத்தலே. மனதளவில் கெட்ட எண்ணம் கொண்டால் கூட மாசுடையவராய், கற்பற்றவராய்க் கொள்ள வேண்டியதே. மனிதா, நாம் நமது ஆன்மாவோடு பேசுகிறோம். ஆன்மாவிற்கு, மனத்திற்குச் சாட்சியோடு உள்ளத்தில் குற்றம் இல்லாதவரே கற்புப் பொருந்தியவர் என்றால் நம்மை நாமே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய தருணம் இஃது. அழுக்கினை அகற்றித் தூயவராய் வாழுதல் எங்ஙனம்? ஆன்மீகம் ஒன்றே வழி. இறைவனடி ஒன்றே கதி.


பொய்மை என்பது புனிதமுமல்ல
பொருளே வாழ்வின் இனிமையுமல்ல


அறத்தினை விடுத்து, உண்மையினை மறுத்துப் பொய்மையோடு வாழ்வதைச் சுதந்திர உலகில் தடுப்பது யார்? அப்படி என்றால் ஏன் பொய்யைப் பற்றிக் கொண்டு வாழக்கூடாது என்கிறீர்களா? பொய்மை என்பது புனிதமற்றது. தூய்மையற்றது. உண்மை அல்லாதது. போலியானது. சட்டத்திற்குப் புறம்பானது. வெறும் மாயை பலன் தராதோடு, இகழ்ச்சியைத்தான் பெற்றுத் தரும்.

சரி பொருட் செல்வத்தைக் குறிக்கோளாய்ப் பற்றி வாழ்வை நடாத்தினோமென்றால் அதுதான் சரியான முறையோ? அல்ல அல்ல. பொருட்களே வாழ்வும் அல்ல. உணவு உண்ணுவது மாத்திரமே வாழ்க்கையும் அல்ல. பணமும், பொன்னும் பொருளும் எல்லாவற்றையும் தர இயலாது. மருந்தை வாங்கலாம்; நல்ல சுகாதாரத்தை அல்ல; புத்தகத்தை வாங்கலாம்; அறிவை அல்ல. கட்டிலை வாங்கலாம்; தூக்கத்தை அல்ல. ஆதலால் பொருளே வாழ்க்கையின் குறிக்கோளும் அல்ல, அதுவே வாழ்வின் இன்பமுமல்ல.


சலனம் கொள்வதில் அமைதியுமல்ல
சலித்துக் கொள்வதால் நிறைவதுமல்ல


ஆசைப்பட்டு, ஆதங்கப்பட்டு, நமக்குச் சாதகமான நிகழ்வுகள் இல்லாத போது, நமது எதிர்பார்ப்புக்களுக்கு, திட்டங்களுக்குத் தக்கவாறு செயல்பாடுகள் அமையாத போது, சலனப் படுவதில் அர்த்தமுமில்லை; அமைதி கிட்டுவதுமில்லை. சந்தேகங்களாலும், வேதனைகளாலும், எதிர்பார்ப்புக்களாலும் நிம்மதி எப்படிக் கிட்டும்?

அன்றில் எல்லாவற்றிற்கும் சலித்துக் கொள்வதால் நிறைந்துவிடுமா? சலிப்பு என்பது முயற்சிக்கு எதிரி. விடா முயற்சியால் மட்டுமே சாதிக்க முடியும். தோல்வியில் துவள்வதும், தொடர் முயற்சிக்குச் சலித்துக் கொள்வதும் வெற்றிகளையோ, அமைதியையோ, இன்பத்தையோ நிறைப்பதில்லை. முயற்சியில் சலியாது, வெற்றியில் ஆடாது அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்ல வேண்டியது இயற்கையின் நியதி.

உயிர் ஓடிக் கொண்டிருக்கின்ற வரையில் தான் வாழுவோம். வாழ்வில் ஓய்வு என்பது உண்மையில் ஓடிக் கொண்டே, வாழ்ந்து கொண்டே சுவாசிக்க வேண்டிய சாகசம் தான். மூச்சை நிறுத்திவிட்டு ஓய்வு என்பது மரணம் அல்லவா?


அவசரம் காட்டின் நிகழ்வதுமல்ல
அழுதால் மட்டும் விலகுவதல்ல


ஆத்திரப் பட்டு, அவரசப் பட்டு வாழ்க்கையில் நாம் சாதிக்கப் போவது எதுவுமே இல்லை. நமது அவசரத்திற்கு திருமணம் முடிந்தவுடனேயே, அன்றில் ஒரு மாத காலத்திற்குள் குழந்தையை இயற்கையாகப் பெற்றுவிடத்தான் இயலுமா? ஓர் உண்மை என்னவென்றால், ஆத்திரங்களால் வாழ்வின் வெற்றி தோல்விகள் நிகழ்வதில்லை.

நமது தோல்விகளும், ஏமாற்றங்களும், வலிகளும், ரணங்களும் அழுதால் தீர்ந்து விடுமா? அழுதால் விதியை மாற்றமுடியுமா? வாழ்வின் பல்வேறு நிகழ்வுகள் நமக்குச் சாதகமாக இருப்பதில்லை. ஏனென்றால் நமது விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் சக்தி நம்மிடம் இல்லை. நம்மை மீறிய இயக்கம் உலகில் நம்மைச் சுற்றி நிகழ்கையில், இன்னுமா பேராற்றலை உணர இயலவில்லை?


கரணம் அடித்து விடிவதுமல்ல
மரணம் என்பது விடையுமல்ல


எத்தனை குட்டிக் கரணம், எந்தக் கரணமோ அடித்தாலும் விடிதல் என்பது உடனே நிகழுவதில்லை. அது அது நிகழ வேண்டிய காலத்தில்தான் நிகழும். நம்பிக்கை தரும் ஒரு நல்ல செய்தி - ஒவ்வொரு இரவும் நிச்சயம் விடியும்.

எதுவுமே நம் விருப்பத்திற்கு இணங்க, நமது தோதிற்கிணங்க நிகழவில்லையெனில் இந்த வாழ்க்கை தான் எதற்கு? என்று மரணத்தை தழுவுவதால் நம் விருப்பங்கள் கை கூடப் போவதில்லையே. செயற்கை மரணங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வல்ல.


நெஞ்சில் நிற்பவை சொந்தமுமல்ல
நிழலாய் வருபவர் நண்பருமல்ல


நெஞ்சிலே நிலையாய் நாம் நினைந்து மகிழுவோரெல்லாம் நம் சொந்தங்களல்ல. கண் தெரியாதவர் பாதையைக் கடக்க உதவிய அந்தக் கருணை மகான் யாரோ நம் நெஞ்சில். ஏன்? அன்பு என்பதைச் சொந்தம் எனும் வலைக்குள் சுருக்கி விட முடியுமா? அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாள்?

நம்மைத் தொடர்ந்து நிழல் போலும் வருகின்றவர் எப்போதும் நண்பர்களாக இருந்து விடுவதில்லை. எனவே கவனமும் தேவைப் படுகிறது. பல சமயங்களில் வாழ்க்கையில் எதையும் அப்படியே ஏற்றுக் கொள்ள இயலாததாகவும் இருக்கிறதே.


பந்தம் தெரிகிற இணைப்புமல்ல
பாசம் வெறுமே நினைப்புமல்ல


சொந்த பந்தங்கள் என்பவை கண்ணுக்குத் தெரிகின்ற வலையல்லவே. நமது தொப்புள் உறவுக் கொடி கூடத் துண்டிக்கப்பட்டு விடுகின்றதே? உண்மையில் உறவுகளெல்லாம் உணர்வால்தான். மனதால் வருகின்ற வினைதான்.

எனவே பாசம் என்பதெல்லாம் வெறும் எண்ணங்கள் மாத்திரமா? மூளையில் தோன்றும் நினைவுத் திரட்டலின் புரட்டலா, உருட்டலா, வழுக்கலா? அவை நினைவையும் தாண்டிய இதயத்தின் கருணை உணர்வு. பாசம் என்பது நினைப்பு மாத்திரமல்ல.


எதுவும் வாழ்வில் நிரந்தரமல்ல
இழந்தோம் என்பதும் எதுவுமேயல்ல


சரி இந்தச் சொந்தம், பந்தம், நட்பு, வேறு இன்ன பிற எதுவும் வாழ்வில் நிரந்தரமல்லவே. நிலையில்லாத வாழ்க்கை. எதை வென்றாலும், தோற்றாலும், கொண்டாலும், கொடுத்தாலும் அவையெல்லாம் மீண்டும் ஒருவகை மாயமே. ஏனென்றால் அவை நிரந்தரமாக இருக்கப் போவதுமில்லை. அவை இருந்தாலும் நாம் நிரந்தரமாக இருந்து பார்க்கப் போவதுமில்லை. எச்சங்களாய் விட்டுச் செல்லும் புகழ் கூட நம்மைப் பொறுத்த வரையில் நாம் மறைந்த பின் நம்மால் அனுபவிக்க முடியாததுதானே.

சரி அதற்காக ஏன் வருந்தவேண்டும். எதுவும் நமதல்ல. எதையும் நாம் கொண்டு வரவுமில்லை; கொண்டு செல்லப் போவதுமில்லை. இதுவரையில் வாழ்ந்தது கூடப் பொய்யாய், பழங்கதையாய் மாயமாய்ப் போனது வாழ்க்கை. இதில் எதைப் பெற்றோம் அன்றில் இழந்தோம்? எனவே நாம் இழந்து விட்டோம் என்று துக்கப் படவோ அன்றில் அடைந்து விட்டோம் என்று பெருமைப் படவோ எதுவுமேயில்லை. நமது பயணம் முடிந்தால் இந்த உலகம் கூட நமக்குச் சொந்தமில்லை.


கொடுத்தோன் மனதில் குறைவதுமல்ல
படைத்தோன் மடியில் துன்பமுமல்ல


இடையில் கணங்களில், வாழ்க்கைத் தருணங்களில் தம் கைப்பட்ட பொருளைப் பிறருக்கு கொடுத்து வாழ்ந்தவன் அதை உண்மையில் இழந்து விடுவதில்லை. நெஞ்சம் நிறைகிறதே இன்பம். வாங்கியவனுக்கு மாத்திரமா? கொடுத்தவனிற்கும் தான். எதிர்பார்ப்புக்கள் இல்லாத நிர்வாண நெஞ்சங்கள், சிறு குழந்தையின் உற்சாகத்தோடு குதூகலிந்து மகிழ்ச்சி அடையும், கொடுப்பதிலும், கொடுக்கப் படுவதிலும்.

குழந்தையாய் ஆடுகிறது உள்ளம். குதூகலிக்கிறது. வட்டமடிக்கிறது. அழுகிறது, சிரிக்கிறது, ஆனந்திக்கிறது. ஊட்ட வருகின்ற தாயிடமிருந்து ஓடி, ஆடி கண்ணாமூச்சி செய்து, அழிச்சாட்டியம் செய்து களிப்படைகிறது. படைத்தவள் களைக்கிறாள். படியிலே அமருகிறாள். பிள்ளை மீண்டும் ஓடி மகிழ்கிறது. பின்னால் அன்னை வருகிறாள் என்று சந்தோசித்துப் பார்த்து ஏமாறுகிறது. சத்தம் போட்டுப் பார்க்கிறது. அன்னையின் அமைதியில் அதுவும் அமைதி பெற்று மெதுவாக வந்து பெற்றவள் மடியில் படுத்து அன்னை முகம் பார்த்துச் சத்தமின்றி நித்திரை கொள்கிறது.

இவ்வாறே மனம் படைத்தவனின் படைப்பில் எல்லாவற்றையும் கொள்ள நினைத்து, ஆடி, அடங்கி, அமைதியாக வந்து படைப்பின் மடியில் அடைக்கலம் கொள்கிறது. சரண் அடைகிறது. சரணம் அடைந்த உள்ளம் அமைதியில் திளைக்கிறது.


இறையோன் பாதத்தில் குறைகளுமல்ல
சரணாகதி எனில் மரணமுமல்ல !!!


குறையேதுமில்லை இறைவா. இறைவா என்றழைத்தாலே நமக்குக் குறையேதும் தோன்றுவதில்லையே. தந்தையிடம் முறையிட்டுவிட்டால் பார்த்துக் கொள்வார் என்கின்ற நிம்மதியில் மனம் அமைதி கொண்டதே. அவரின் நிழலில், பாதத்தடியில் நம் குறைகளெல்லாம் மறைந்து விடுகின்றதே. அனைத்தையும் பார்த்துக் கொள்ள நம்மைக் காட்டிலும் சக்திமிக்க, நம்மைப் படைத்த பேராற்றல் இருக்கிறது.

இறைவா உன்னை உணர்ந்து சரணம் அடைந்த மனத்திற்கு மரண பயமுமில்லை; ஏன் மரணம் கூட இல்லை. மோட்சத்தால் இறைவனின் பாதத்தை அடைந்து, பேரொளியில் சேர்ந்து விடும் ஆன்மாவிற்குத்தான் அழிவென்பது ஏது?

***