Monday, April 7, 2014


அன்னையர் அந்தாதி (பகுதி: 5)

3. அம்பிகை அந்தாதி - விரிவாக்கம்


இறை வணக்கம்:
ஆதிஅந்தமில் அத்தனொடு அங்கமாகி அண்டமெலாம்
சோதிப்பரமாய் சேர்ந்திலங்கும் அம்மை - ஆதிபராசக்தியே
நல்லவை யாவுமாகி நலத்தொடு யாதும்வெல்லும்
வல்லமை ஈவாய் வலிந்து.
அந்தாதிக் கட்டளை: (விரிவாக்கம்)
வான்நிறை சேயோனாய் வாகையாகும் பேரொளியே!
 
அந்தாதி: 

33. நவலோகம் நவரசத்து ஞாலமாகும் தாயவள்!

வான்நிறை மீன்போலும் வையமீதில் 
          வழுகழுவும் பிறவிகளாய்
ஊன்நிறை யாக்கையுள் உயிர்தரித்து
          உதித்துவளர் யாத்திரையில்
கோன்நிறை அண்டமொடு குவலயக்
          கோட்டமும் செம்மையுற
தேன்நிறை நவசக்தித் தோன்றலாகும்
          சச்சிதானந்தச் சேயோனே!


34. நவயிரவுப் பரவசத்து ஞானமாகும் மாயவள்!

சேயோனாய் அவதரித்து சேவையிலும்
          தொண்டிலும் சின்னகை
வாயோனாய் உடற்பொருள் ஆவிமனம்
          வாக்குயாதும் யார்பாலும்
காயோனாய் அன்பாதரவு கருணையை
          அர்ப்பணித்துக் கடமையில்
தாயோனாய் ஆற்றுவதே தாயர்போற்றும்
          வெற்றி வாகையாகுமே!


35. முந்தையுமாய் மூலமுமாய் சித்தியாகும் சிரமவள்!

வாகையாகும் பிறவிக்கும் வண்ணம்
          நிறைகும் வாழ்க்கைக்கும்
தோகையாகும் தோழமைக்கும் துணைநின்ற
          சுற்றம் சூழலிற்கும்
ஈகையாகும் நெஞ்சிற்கும் எண்ணம்விதி
          ஆயுள்ஞானம் யாதிற்கும்
போகையாகும் முன்னரே பொழிகிறோம்
          ஆழ்ந்தநன்றி, பேரொளியே!


36. மும்மகளாய் முதல்வியாய் முக்தியாகும் பரமவள்!

பேரொளியே! பராபரையே! பேதமிலாப்
          பெருவெளியே! பேரண்டத்து
வேரொளியே! அடிமுடியாய் முடிஅடியாய்
          முதலாகும் மும்மையர்
நேரொளியே! முக்கண்ணியே! நிலைபேற்று
          நாரணியே! நேர்மறைத்
தேரொளியே! திரிபுரைநின் சேவடிக்கே
          சரணாங்கள் வான்நிறையே!
* அம்பிகை அந்தாதி முற்றும் *
அம்பிகை அகவல்: (தலைப்புக் கவிதை)
அணுவாகி அண்டமாகி அகிலமாளும் அன்னையள்!
அந்தமாதி அலகிலாது ஆடிநிற்கும் அம்மையள்!
ஆலமுண்ட கண்டனின் அகத்துறை மாதவள்!
ஆற்றலாகி நம்பகத்தின் ஊற்றுமாகும் தேவியள்!
இயங்குநிலை மெய்ப்பொருளின் இகபரத்துச் சக்தியள்!
இயற்கையாகி உய்வைத்தரும் இன்பநிலை முக்தியள்!
ஈஸ்வரியாய் பரம்பொருளாய் இலங்குமுயர் தாயவள்!
ஈன்றவற்றில் கருப்பொருளாய் துலங்குமெழில் தூயவள்!

உயிருடலாய் உளமதியாய் உலவிநிற்கும் உமையவள்!
உணர்வகமாய் பலநலமாய் உறுதிநிற்கும் இமையவள்!
ஊழியாட்டம் நர்த்தனமாய் உலகையாட்டும் வல்லியள்!
ஊக்கமொடு ஊட்டமுமாய் உவகையூட்டும் மெல்லியள்!
எந்தையுமாய் அன்னையுமாய் எழுந்தருளும் இறையவள்!
எண்ணமுமாய் திண்ணமுமாய் இதயமாகும் நிறையவள்!
ஏற்றமுமாய் மாற்றமுமாய் இயக்கமாகும் மென்மையள்!
ஏதிலார்க்கும் வாழ்வியலாய் இன்பமாகும் தன்மையள்!

ஐக்கியமாய் பாலிணையாய் அறங்காட்டும் பரமவள்!
ஐங்கரனின் தாயமுதாய்த் திறங்கூட்டும் உரமவள்!
ஒப்பிலியாய் அன்பழகாய் உயர்வுகாட்டுந் தலைமகள்!
ஒற்றுமைதன் திடவளமாய் வெற்றிதீட்டும் மலைமகள்!
ஓங்காரம் உடுக்கையிடி ஒலியிலங்கும் மாயவள்!
ஓம்புமுயிர் மேம்படவே ஒளிதுலங்கும் தூயவள்!
ஔடதமாய் விடத்தையும் அமுதமாக்கும் அன்னையள்!
ஔவியத்து முடத்தையும் அழித்தருளும் சென்னியள்!

கருப்பொருளில் உயிர்மெய்யாய் கலந்திலங்கும் தாயவள்!
கருணையுளோர் அன்னையராய்க் கனிந்திலங்கும் தூயவள்!
சங்கரியாய் கொற்றவையாய் சங்கரிக்கும் நெருப்பவள்!
சங்கரனார் அங்கவையாய் சஞ்சரிக்கும் பொருப்பவள்!
தருமத்தின் துணைக்கோடாய்த் தரணியாளும் துர்க்கையள்!
தருணத்தில் இணைவாழ்வாய்த் திறமருளும் இயற்கையள்!
பசுபதியாய்ப் பாசமாகிப் பரமுமாகும் அன்னையள்!
பசுங்கிளியாய் நேசமாகும் பராசக்திஓம் அம்மையள்! 


நவலோகம் நவரசத்து ஞாலமாகும் தாயவள்!
நவயிரவுப் பரவசத்து ஞானமாகும் மாயவள்!
முந்தையுமாய் மூலமுமாய் சித்தியாகும் சிரமவள்!
மும்மகளாய் முதல்வியாய் முக்தியாகும் பரமவள்!


அம்பிகை போற்றி போற்றி போற்றியே!
*** அம்பிகை அகவல் முற்றும் ***
நூற் பயன்:

அன்னையர் அந்தாதி மும்மாலை

          அம்மையர் சூடிடத் தொழுதாலே
முன்னை வினைகள் முற்றாகும்
          முழுமை நிறைகும் வாழ்வாகும்
பின்னை செழுமை மகிழ்வோடு
          பெருமை செம்மை நலமாகும்
தன்னை உணர்ந்த செயலாலே
          தவறா வெற்றியும் சத்தியமே!
 
* அன்னையர் அந்தாதி முற்றும் *
***

2 comments:

  1. தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றிகள் இராஜராஜேஸ்வரி.

    ReplyDelete