Monday, September 7, 2015

Karpaga Vinayakar Ahaval - கற்பக விநாயகர் அகவல்


கற்பக விநாயகர் அகவல்




சீர்பெறு வையகச் செழுஞ் சேகரமாய்

நேர்மறை வைகலில் நெடுஞ் சாகரமாய்

ஞாலம் ஏத்தும் ஞானக் கூத்தென

மூலம் போற்றும் மூத்த பொருளாய்

களிற்று முகமும் கனிவுறு அகமும்

ஒளிர்தரு உடலும் உயர்திரு வடிவும்
6


படர்ந்த நுதலொடு பரமன் கண்ணும்

அடர்ந்த புருவமும் அழகிரு விழியும்

சிப்பியுள் முத்தெனச் சிரிக்கும் பாவையும்

ஒப்பிலித் துதிக்கையின் ஓங்கார உருவும்

ஒற்றைத் தந்தமும் ஒருப்படு சிந்தையும்

நெற்றியில் தவழும் கற்றைக் குழலும்
12


சீலஞ் செப்பும் சிவகுலக் குறியென

சூலத் திலகமும் சுடர்திரு நீறும்

மலர் சிரமேவிய மணிமுடி மதியும்

அலர் வாயிதழும் அசையியல் காதும்

அருக மாலை அணிதிகழ் கழுத்தும்

பரந்த மார்பும் பருத்த தொந்தியும்
18


இடையில் உடுத்திய இளந்துகில் ஆடையும்

நடையில் மிடுக்கை நவிலும் சிலம்பும்

வாஞ்சனை சொரியும் வாகன மூஞ்சூறும்

பூஞ்சிகை சரியும் பொலிவுறு புறமும்

விரிந்த தோளும் வியத்தகு புயமும்

பிரிந்த கரத்திரு பெருமைப் பிடியும்
24


திருக்கை விளங்கு திருவீசர் இலிங்கமொடு்

இருக்கை இலங்கிய அரைக் கமலாசனமும்

வலம்புரிச் சின்னமும் வடதிசைத் தவமும்

நலம்புரி யோகமாய் நயமுறு நேர்த்தியுள்

குடைவரைக் குடிலுறை குணமுயர் குன்றாய்

தடைகளைப் பொடிபட தகர்த்திடு கன்றாய்
30


மருதீசர் உடனுறை வாடா மலர்மங்கை

மருதங்குடி அமர் விநாயக மூர்த்தியே!

பற்றிலி வரத்தாய் பணிபுரி தக்கார்

நற்குடி நகரத்தார் கற்பகத் திருவே!

காட்டைத் திருத்தி வீட்டை நிறுவிய

நாட்டுக் கோட்டை நாயகப் பிள்ளாய்!
36


தலைச்சன் குட்டியெம் தமையன் தமது

தலைமைப் பீடம் தரணியில் ஈதென

அண்மைப் பொய்கையும் அரச மரமும்

தண்மை ததும்பும் தவமிரு கரையில்

சாலவும் அணிதிரள் துதிசெய் மண்டபம்

ஆலயம் கோபுரம் அருளொளி துலங்க
42


வாகை விளக்காய் உயர் கொடிமரமும்

தோகை நிழல்தரு சூழமர் கூடமும்

தென்றல் தவழும் திருப்பெருங் குளமும்

நன்றெனக் கமழும் நறுமணப் பொழிலும்

வாயிலில் கொழிக்கும் வனப்புறு செழிப்பென

இயற்கை தொடுக்கும் இனிமைகள் இலங்க
48


அங்கம் மிளிர்க்கும் தங்கக் கவசமும்

அங்கியும் வைரத்து ஆரமும் சுட்டியும்

வல்லமை குறிக்கும் வளமொடு நலமென

இல்லகம் தனத்திரு எழிலினை முழங்க

அவல்பொரி கடலை அப்பம் கொழுக்கட்டை 

உவப்பொடு படைத்த மோதக உண்டி
54


அருஞ்சுவை இயற்றும் ஆற்றலை நுகர்ந்து

அருட்கண் புகற்றும் அறச்சுவை விரும்பி

ஐம்பெரும் பூதமும் ஐம்புல மெய்மையும்

ஐம்பொறி உணர்வென ஐங்கரத்து அடக்கி

முதலைந் தெழுத்தும் முழுதுறப் பொருந்த

இதமுறு அமைதியை அதிர்வுற இயம்பி
60


முற்படு யாவிலும் மக்களே முதற்றென

கற்பகப் பிள்ளாய் கருத்தினை இருத்தி

நண்ணித் தொழுது நலமுற நின்னை

எண்ணித் துணிந்த காரியம் யாதிலும்

முன்வினைப் பலனை முழுதறக் களைந்து

முனைப்படு எதிலும் முந்துற விளைந்து
66


உகரச் சுழிப்பிலும் ஊழினை ஒடுக்கி

பகருநற் செய்கையும் பாங்குற நிறைவுற

பிள்ளையர் ஊக்கமும் பெருக்கிய நோக்கமும்

கொள்சீர் ஆக்கமும் கொடுக்கும் சித்தியாய்

தாகமும் பணிவும் தளரா வினவலும்

வேகமும் துணிவும் விவேகமும் புத்தியாய்
72


குறிப்பறி துரிதக் கொள்கைச் சிறப்பை

முறித்த தந்தம் மொழியும் அறிவென

கவனக் கூர்மை கனிந்துறக் குட்டியும்

தவமெனத் தோப்புக் கரணமும் இடவே

நினைவொடு நல்லறம் நேர்மை ஒழுக்கம்

நனவொடு புரிசெயல் ஞானமும் நல்கி
78


கலையும் எழிலும் கைப்படு பொருளென

நிலைதரு கல்வியும் நிறைவும் பல்கி

தெளிவுறு நோக்கும் திடம்படு திறமையும்

ஆளுமை அனுபவம் அனைத்தும் மல்கி

அகந்தை இருளை ஆசை மருளை

உகந்து விலக்கி உருப்பட அருளி
84


எளியவர் வறியவர் யாவர்க்கும் இரங்கி

களிப்புற உதவிடக் கருணையும் வழங்கி

இயலுறு நலமுடன் இசையுறு வளமும்

வயப்படு செல்வமும் வாழ்வும் கூட்டி

தன்னுள் தேடும் தியானம் யோகம்

தன்னில் ஆழ்ந்து தன்னை வெல்ல
90


போக்கும் வரத்தும் பூரகக் கும்பமும்

காக்கும் வளிமுறை கவனப் படுத்தி

துரிய கலையும் தொடர்பெரு நிலையும்

அரிதுறு கற்பக அடைவென அளித்து

வாயிரு போவெனும் வையத்து இருக்கை

ஆயிடை வாழ்வெனும் அறநெறி துலக்கி
96


அகத்தும் புறத்தும் அன்பே உறையும்

அகிலப் பொருளின் அருமை உரைத்து

ஓமெனும் நாத விந்துவில் ஒடுங்கும்

ஆமெனும் இசைவு அகநிலை தீட்டி

தம்முள் இலங்கும் சிவத்தைக் காட்டி

மும்மை அமுதம் முழுமையும் ஊட்டி
102


செம்மைக் குருவென சிந்தை தெளிய

எம்மை எமக்கே இனிதுற விளம்பி

அள்ளி வழங்கும் ஆளும் பரமாய்

உள்ளத்து ஏகி உணர்வென ஆகி

நற்கதி அருளும் கற்பகத் திருவே!

அற்புதப் பிள்ளாய் பொற்பதம் சரணே!
108


ஓம் ஸ்ரீ கற்பக விநாயகா போற்றி! போற்றி!


•••  முற்றும்  •••

All Rights Reserved and Remain with the Author.

No comments:

Post a Comment