மனிதா... மனிதா... |
தொடக்கம் என்பதும் நீயுமல்ல முற்றும் என்பதும் நீயுமல்ல மாற்றம் செய்ததும் நிலையுமல்ல மாறும் என்பதும் நிச்சயமல்ல நடந்தவை எல்லாம் முடிவுமல்ல நடப்பவை எல்லாம் தொடருமல்ல நேற்றும் இன்றும் நாளையுமல்ல நினைப்பவை எல்லாம் நடப்பதுமல்ல துணிந்தவை எல்லாம் இறுதியுமல்ல தொடரும் என்பதும் உறுதியுமல்ல கண்டவை எல்லாம் உண்மையுமல்ல காணாதவை எல்லாம் பொய்யுமல்ல கடந்தவை எல்லாம் முடிந்ததுமல்ல கனவுகள் எல்லாம் விடிந்ததுமல்ல வகுத்தவை எல்லாம் நிகழ்வதுமல்ல வாழ்வின் கணங்கள் நிலைப்பதுமல்ல தொலைந்தவை எல்லாம் நிஜமுமல்ல துவங்குதல் எல்லாம் முதலுமல்ல மறைந்தவை எல்லாம் களவுமல்ல மறத்தால் விளைவது நலமுமல்ல மவுனம் என்பது சம்மதமல்ல மனதால் கெடினும் கற்புமல்ல பொய்மை என்பது புனிதமுமல்ல பொருளே வாழ்வின் இனிமையுமல்ல சலனம் கொள்வதில் அமைதியுமல்ல சலித்துக் கொள்வதால் நிறைவதுமல்ல அவசரம் காட்டின் நிகழ்வதுமல்ல அழுதால் மட்டும் விலகுவதல்ல கரணம் அடித்து விடிவதுமல்ல மரணம் என்பது விடையுமல்ல நெஞ்சில் நிற்பவை சொந்தமுமல்ல நிழலாய் வருபவர் நண்பருமல்ல பந்தம் தெரிகிற இணைப்புமல்ல பாசம் வெறுமே நினைப்புமல்ல எதுவும் வாழ்வில் நிரந்தரமல்ல இழந்தோம் என்பதும் எதுவுமேயல்ல கொடுத்தோன் மனதில் குறைவதுமல்ல படைத்தோன் மடியில் துன்பமுமல்ல இறையோன் பாதத்தில் குறைகளுமல்ல சரணாகதி எனில் மரணமுமல்ல !!! |
|
*** |
பொருள் விளக்கம்: |
|
தொடக்கம் என்பதும் நீயுமல்ல முற்றும் என்பதும் நீயுமல்ல மனிதா, உயிர்களிலோ, உலகிலோ அன்றில் மனித குலத்திலோ தொடக்கம் என்பது தனிப்பட்ட வகையில் நீயுமல்ல. அன்றில் இவற்றின் முடிவு என்பதும் நீயுமல்ல. ஒரு நீண்ட தொடர்ச்சியில் நீயும் ஒரு அங்கம் அவ்வளவே. மாற்றம் செய்ததும் நிலையுமல்ல மாறும் என்பதும் நிச்சயமல்ல நீ செய்த எல்லாவிதமான இயற்கை மாற்றமும் அவை மாறாத் தன்மை கொண்டவையுமல்ல, அன்றில் இங்கேயுள்ளவையோ, அன்றில் மாற்றி வைத்தவையோ தொடர்ந்து மாறிக் கொண்டேயிருக்குமா என்பதும், மாற்றம் என்பது ஒன்றே மாறாதது என்பதை அறிந்திருந்தாலும், சர்வ நிச்சயமாகச் சொல்ல இயலாதது. நடந்தவை எல்லாம் முடிவுமல்ல நடப்பவை எல்லாம் தொடருமல்ல இதுவரை நிகழ்ந்தவை யாவும் தீர்வான முடிவுகளுமல்ல. அன்றில் நடந்து கொண்டிருப்பவையோ, நடக்கப் போவையோ இவற்றின் தொடர்ச்சியாக இருக்குமென்பதுமில்லை. நேற்றும் இன்றும் நாளையுமல்ல நினைப்பவை எல்லாம் நடப்பதுமல்ல நேற்றோ, இன்றோ நாளையாவதில்லை. ஒவ்வொன்றும் வெவ்வேறு. ஒவ்வொரு கணமும் தனித்தன்மை கொண்டது. நினைப்பதெல்லாம் நடந்து விடுவதும் இல்லை. அவ்வாறு நடந்துவிட்டால் தெய்வம் என்பதற்குத் தேவையே இருக்காது. துணிந்தவை எல்லாம் இறுதியுமல்ல தொடரும் என்பதும் உறுதியுமல்ல வாழ்க்கையில் இதைத்தான் கற்றுக் கொண்டுவிட்டோம் என்று எதையும் துணிந்து ஒரு முடிவிற்கு வரலாம் என்றால் அவை இறுதியாக இல்லை. எல்லாம் மாறிக் கொண்டே இருக்கிறது. சரி மாறிக் கொண்டிருப்பதால் அடுத்தும் மாறுமோ என்றால் அதிலும் உறுதியாகச் சொல்ல முடிவதில்லை. இதைத்தான் உறுதியான துணிபுகளைச் சொல்லிவிடத் தெரிந்து விட்டால் பங்கு வாணிபமோ அல்லது வேறு தொழிலிலோ எப்போதும் வெற்றியையே பெற்று வாழ்ந்து விடலாமே? கண்டவை எல்லாம் உண்மையுமல்ல காணாதவை எல்லாம் பொய்யுமல்ல நாம் அறிந்தவை எல்லாம் அறுதி செய்யப்பட்ட உண்மையா என்றால் இல்லை. அவை மாறாத்தன்மை கொண்டிருந்தால், மாறாத உண்மையாக இருந்தால் மாற்றங்களே நிகழக் கூடாதே. சரி நான் காணாதவை, அறியாதவை எல்லாம் உண்மை என்று சொல்ல முடியாதே, அவை பொய்தானோ என்றும் உறுதிபட எப்படிச் சொல்வது? கடந்தவை எல்லாம் முடிந்ததுமல்ல கனவுகள் எல்லாம் விடிந்ததுமல்ல நம் வாழ்வில் நம்மைக் கடந்து சென்றவை எல்லாம் பழங்கதையாய் முடிந்து போனது அன்றில் இறந்து போனது தானே என்று சொல்லி விடலாமா? நிச்சயமாக முடியாது. நேற்றைய நீட்சியில் தானே இன்று பயணித்துக் கொண்டிருக்கிறோம். நேற்றுச் செய்து கொண்ட திருமண பந்தம் நேற்றோடு முடியவில்லையே... கனவுகளே வாழ்வாகிவிட்டால் எத்தனை இன்பமானதாக இருக்கும். கண்ட கனவுகள் எல்லாம் பலிக்கவில்லையே. எல்லாக் கனவுகளும் பலித்துவிட்டால், மனிதன் கனவிலேயே வாழ்ந்துவிட மாட்டானா? வகுத்தவை எல்லாம் நிகழ்வதுமல்ல வாழ்வின் கணங்கள் நிலைப்பதுமல்ல கனவுகள் கலைகின்றவை. சரி திட்டமிட்டு வகுத்தவையாவது கன கச்சிதமாக நிகழுமா என்றால், அவையும் அதன் முழுப் பூரணத்தோடு நிகழ்வதில்லையே. வாழ்வின் ஒவ்வொரு இனிய கணங்களும் தொடாராதா என்று மனம்தான் ஏங்கும். அவை நிலைப்பதில்லையே. இன்பமும் துன்பமும் மாறி மாறித் தோன்றி வாழ்வை நிலையற்றதாய் செய்து கொண்டு ஒரு வகையில் சுவாரஸ்யம் குறையாமலும் கொண்டு செல்லச் செய்கின்றது. தொலைந்தவை எல்லாம் நிஜமுமல்ல துவங்குதல் எல்லாம் முதலுமல்ல இதுவரை வாழ்வில் தொலைத்தவை எல்லாம் போனவைதானா? நமது இன்பத் தருணங்கள், பிள்ளைப் பருவம் அனைத்தும் பொய்யுமல்ல, திருப்பி மீட்டெடுத்துவிட முடிகின்ற நிஜமுமல்ல. நாம் துவங்குகின்ற எதுவும் அதுவே முதல் முறையானது என்றும் அல்ல. நாம் தான் கண்டுபிடித்தோம் என்று கர்வம் கொள்ள என்ன இருக்கிறது. சிற்பி ஒருவர் சொன்னது போல அந்தக் கல்லுக்குள்ளேதான் சிலை இருந்தது, தேவையற்றதைப் பிரித்து நீக்குதல் மட்டுமே நான் செய்தேன். இதைப்போன்றதே மனிதனின் ஒவ்வொரு கண்டுபிடிப்பும். மறைந்தவை எல்லாம் களவுமல்ல மறத்தால் விளைவது நலமுமல்ல நம்மிடம் இருந்து காணாமல் போனவையெல்லாம் களவாடப் படவுமில்லை. அவை மாற்றம் பெற்றன அல்லது எங்கோ இன்னும் மறைந்து இருப்பினைக் கொண்டுதான் இருக்கிறது. அறம் மறந்து அறமற்ற தீய மறத்தால், தீயவற்றைப் பின்பற்றுவதால் விளைவது நலமுமல்ல, நிம்மதியுமல்ல. வாழ்வில் அறம்தான் நிம்மதி தரும். இதை யார் வகுத்தார்கள். நம் மூதாதையர் அனுபவத்தால் கண்டவையே நல்லவை கெட்டவை என்று அடையாளம் காட்டப் பட்டிருக்கின்றன. ஒரு உயிர்க் கொல்லி விடத்தை, நாம் புதிதாக மீண்டும் பயன் படுத்தி அனுபவம் கொள்வதில்லையே. பிறகு மற்ற மறங்களை மாத்திரம் ஏன்? எனவே மறங்கள் என்பவை ஒதுக்கப் படவேண்டிய தீய வழிகளே. மவுனம் என்பது சம்மதமல்ல மனதால் கெடினும் கற்புமல்ல மவுனமாக இருந்துவிடுவதால் அது சம்மதம் என்று பொருள் படாது. மனிதருக்கு மாத்திரம் அல்ல இயற்கைக்கும் பொருந்திய வாக்கியமிது. கற்பு என்பது சொல் பிறழாமை மாத்திரமா? மனத்துக்கண் மாசிலனாது இருத்தலே. மனதளவில் கெட்ட எண்ணம் கொண்டால் கூட மாசுடையவராய், கற்பற்றவராய்க் கொள்ள வேண்டியதே. மனிதா, நாம் நமது ஆன்மாவோடு பேசுகிறோம். ஆன்மாவிற்கு, மனத்திற்குச் சாட்சியோடு உள்ளத்தில் குற்றம் இல்லாதவரே கற்புப் பொருந்தியவர் என்றால் நம்மை நாமே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய தருணம் இஃது. அழுக்கினை அகற்றித் தூயவராய் வாழுதல் எங்ஙனம்? ஆன்மீகம் ஒன்றே வழி. இறைவனடி ஒன்றே கதி. பொய்மை என்பது புனிதமுமல்ல பொருளே வாழ்வின் இனிமையுமல்ல அறத்தினை விடுத்து, உண்மையினை மறுத்துப் பொய்மையோடு வாழ்வதைச் சுதந்திர உலகில் தடுப்பது யார்? அப்படி என்றால் ஏன் பொய்யைப் பற்றிக் கொண்டு வாழக்கூடாது என்கிறீர்களா? பொய்மை என்பது புனிதமற்றது. தூய்மையற்றது. உண்மை அல்லாதது. போலியானது. சட்டத்திற்குப் புறம்பானது. வெறும் மாயை பலன் தராதோடு, இகழ்ச்சியைத்தான் பெற்றுத் தரும். சரி பொருட் செல்வத்தைக் குறிக்கோளாய்ப் பற்றி வாழ்வை நடாத்தினோமென்றால் அதுதான் சரியான முறையோ? அல்ல அல்ல. பொருட்களே வாழ்வும் அல்ல. உணவு உண்ணுவது மாத்திரமே வாழ்க்கையும் அல்ல. பணமும், பொன்னும் பொருளும் எல்லாவற்றையும் தர இயலாது. மருந்தை வாங்கலாம்; நல்ல சுகாதாரத்தை அல்ல; புத்தகத்தை வாங்கலாம்; அறிவை அல்ல. கட்டிலை வாங்கலாம்; தூக்கத்தை அல்ல. ஆதலால் பொருளே வாழ்க்கையின் குறிக்கோளும் அல்ல, அதுவே வாழ்வின் இன்பமுமல்ல. சலனம் கொள்வதில் அமைதியுமல்ல சலித்துக் கொள்வதால் நிறைவதுமல்ல ஆசைப்பட்டு, ஆதங்கப்பட்டு, நமக்குச் சாதகமான நிகழ்வுகள் இல்லாத போது, நமது எதிர்பார்ப்புக்களுக்கு, திட்டங்களுக்குத் தக்கவாறு செயல்பாடுகள் அமையாத போது, சலனப் படுவதில் அர்த்தமுமில்லை; அமைதி கிட்டுவதுமில்லை. சந்தேகங்களாலும், வேதனைகளாலும், எதிர்பார்ப்புக்களாலும் நிம்மதி எப்படிக் கிட்டும்? அன்றில் எல்லாவற்றிற்கும் சலித்துக் கொள்வதால் நிறைந்துவிடுமா? சலிப்பு என்பது முயற்சிக்கு எதிரி. விடா முயற்சியால் மட்டுமே சாதிக்க முடியும். தோல்வியில் துவள்வதும், தொடர் முயற்சிக்குச் சலித்துக் கொள்வதும் வெற்றிகளையோ, அமைதியையோ, இன்பத்தையோ நிறைப்பதில்லை. முயற்சியில் சலியாது, வெற்றியில் ஆடாது அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்ல வேண்டியது இயற்கையின் நியதி. உயிர் ஓடிக் கொண்டிருக்கின்ற வரையில் தான் வாழுவோம். வாழ்வில் ஓய்வு என்பது உண்மையில் ஓடிக் கொண்டே, வாழ்ந்து கொண்டே சுவாசிக்க வேண்டிய சாகசம் தான். மூச்சை நிறுத்திவிட்டு ஓய்வு என்பது மரணம் அல்லவா? அவசரம் காட்டின் நிகழ்வதுமல்ல அழுதால் மட்டும் விலகுவதல்ல ஆத்திரப் பட்டு, அவரசப் பட்டு வாழ்க்கையில் நாம் சாதிக்கப் போவது எதுவுமே இல்லை. நமது அவசரத்திற்கு திருமணம் முடிந்தவுடனேயே, அன்றில் ஒரு மாத காலத்திற்குள் குழந்தையை இயற்கையாகப் பெற்றுவிடத்தான் இயலுமா? ஓர் உண்மை என்னவென்றால், ஆத்திரங்களால் வாழ்வின் வெற்றி தோல்விகள் நிகழ்வதில்லை. நமது தோல்விகளும், ஏமாற்றங்களும், வலிகளும், ரணங்களும் அழுதால் தீர்ந்து விடுமா? அழுதால் விதியை மாற்றமுடியுமா? வாழ்வின் பல்வேறு நிகழ்வுகள் நமக்குச் சாதகமாக இருப்பதில்லை. ஏனென்றால் நமது விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் சக்தி நம்மிடம் இல்லை. நம்மை மீறிய இயக்கம் உலகில் நம்மைச் சுற்றி நிகழ்கையில், இன்னுமா பேராற்றலை உணர இயலவில்லை? கரணம் அடித்து விடிவதுமல்ல மரணம் என்பது விடையுமல்ல எத்தனை குட்டிக் கரணம், எந்தக் கரணமோ அடித்தாலும் விடிதல் என்பது உடனே நிகழுவதில்லை. அது அது நிகழ வேண்டிய காலத்தில்தான் நிகழும். நம்பிக்கை தரும் ஒரு நல்ல செய்தி - ஒவ்வொரு இரவும் நிச்சயம் விடியும். எதுவுமே நம் விருப்பத்திற்கு இணங்க, நமது தோதிற்கிணங்க நிகழவில்லையெனில் இந்த வாழ்க்கை தான் எதற்கு? என்று மரணத்தை தழுவுவதால் நம் விருப்பங்கள் கை கூடப் போவதில்லையே. செயற்கை மரணங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வல்ல. நெஞ்சில் நிற்பவை சொந்தமுமல்ல நிழலாய் வருபவர் நண்பருமல்ல நெஞ்சிலே நிலையாய் நாம் நினைந்து மகிழுவோரெல்லாம் நம் சொந்தங்களல்ல. கண் தெரியாதவர் பாதையைக் கடக்க உதவிய அந்தக் கருணை மகான் யாரோ நம் நெஞ்சில். ஏன்? அன்பு என்பதைச் சொந்தம் எனும் வலைக்குள் சுருக்கி விட முடியுமா? அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாள்? நம்மைத் தொடர்ந்து நிழல் போலும் வருகின்றவர் எப்போதும் நண்பர்களாக இருந்து விடுவதில்லை. எனவே கவனமும் தேவைப் படுகிறது. பல சமயங்களில் வாழ்க்கையில் எதையும் அப்படியே ஏற்றுக் கொள்ள இயலாததாகவும் இருக்கிறதே. பந்தம் தெரிகிற இணைப்புமல்ல பாசம் வெறுமே நினைப்புமல்ல சொந்த பந்தங்கள் என்பவை கண்ணுக்குத் தெரிகின்ற வலையல்லவே. நமது தொப்புள் உறவுக் கொடி கூடத் துண்டிக்கப்பட்டு விடுகின்றதே? உண்மையில் உறவுகளெல்லாம் உணர்வால்தான். மனதால் வருகின்ற வினைதான். எனவே பாசம் என்பதெல்லாம் வெறும் எண்ணங்கள் மாத்திரமா? மூளையில் தோன்றும் நினைவுத் திரட்டலின் புரட்டலா, உருட்டலா, வழுக்கலா? அவை நினைவையும் தாண்டிய இதயத்தின் கருணை உணர்வு. பாசம் என்பது நினைப்பு மாத்திரமல்ல. எதுவும் வாழ்வில் நிரந்தரமல்ல இழந்தோம் என்பதும் எதுவுமேயல்ல சரி இந்தச் சொந்தம், பந்தம், நட்பு, வேறு இன்ன பிற எதுவும் வாழ்வில் நிரந்தரமல்லவே. நிலையில்லாத வாழ்க்கை. எதை வென்றாலும், தோற்றாலும், கொண்டாலும், கொடுத்தாலும் அவையெல்லாம் மீண்டும் ஒருவகை மாயமே. ஏனென்றால் அவை நிரந்தரமாக இருக்கப் போவதுமில்லை. அவை இருந்தாலும் நாம் நிரந்தரமாக இருந்து பார்க்கப் போவதுமில்லை. எச்சங்களாய் விட்டுச் செல்லும் புகழ் கூட நம்மைப் பொறுத்த வரையில் நாம் மறைந்த பின் நம்மால் அனுபவிக்க முடியாததுதானே. சரி அதற்காக ஏன் வருந்தவேண்டும். எதுவும் நமதல்ல. எதையும் நாம் கொண்டு வரவுமில்லை; கொண்டு செல்லப் போவதுமில்லை. இதுவரையில் வாழ்ந்தது கூடப் பொய்யாய், பழங்கதையாய் மாயமாய்ப் போனது வாழ்க்கை. இதில் எதைப் பெற்றோம் அன்றில் இழந்தோம்? எனவே நாம் இழந்து விட்டோம் என்று துக்கப் படவோ அன்றில் அடைந்து விட்டோம் என்று பெருமைப் படவோ எதுவுமேயில்லை. நமது பயணம் முடிந்தால் இந்த உலகம் கூட நமக்குச் சொந்தமில்லை. கொடுத்தோன் மனதில் குறைவதுமல்ல படைத்தோன் மடியில் துன்பமுமல்ல இடையில் கணங்களில், வாழ்க்கைத் தருணங்களில் தம் கைப்பட்ட பொருளைப் பிறருக்கு கொடுத்து வாழ்ந்தவன் அதை உண்மையில் இழந்து விடுவதில்லை. நெஞ்சம் நிறைகிறதே இன்பம். வாங்கியவனுக்கு மாத்திரமா? கொடுத்தவனிற்கும் தான். எதிர்பார்ப்புக்கள் இல்லாத நிர்வாண நெஞ்சங்கள், சிறு குழந்தையின் உற்சாகத்தோடு குதூகலிந்து மகிழ்ச்சி அடையும், கொடுப்பதிலும், கொடுக்கப் படுவதிலும். குழந்தையாய் ஆடுகிறது உள்ளம். குதூகலிக்கிறது. வட்டமடிக்கிறது. அழுகிறது, சிரிக்கிறது, ஆனந்திக்கிறது. ஊட்ட வருகின்ற தாயிடமிருந்து ஓடி, ஆடி கண்ணாமூச்சி செய்து, அழிச்சாட்டியம் செய்து களிப்படைகிறது. படைத்தவள் களைக்கிறாள். படியிலே அமருகிறாள். பிள்ளை மீண்டும் ஓடி மகிழ்கிறது. பின்னால் அன்னை வருகிறாள் என்று சந்தோசித்துப் பார்த்து ஏமாறுகிறது. சத்தம் போட்டுப் பார்க்கிறது. அன்னையின் அமைதியில் அதுவும் அமைதி பெற்று மெதுவாக வந்து பெற்றவள் மடியில் படுத்து அன்னை முகம் பார்த்துச் சத்தமின்றி நித்திரை கொள்கிறது. இவ்வாறே மனம் படைத்தவனின் படைப்பில் எல்லாவற்றையும் கொள்ள நினைத்து, ஆடி, அடங்கி, அமைதியாக வந்து படைப்பின் மடியில் அடைக்கலம் கொள்கிறது. சரண் அடைகிறது. சரணம் அடைந்த உள்ளம் அமைதியில் திளைக்கிறது. இறையோன் பாதத்தில் குறைகளுமல்ல சரணாகதி எனில் மரணமுமல்ல !!! குறையேதுமில்லை இறைவா. இறைவா என்றழைத்தாலே நமக்குக் குறையேதும் தோன்றுவதில்லையே. தந்தையிடம் முறையிட்டுவிட்டால் பார்த்துக் கொள்வார் என்கின்ற நிம்மதியில் மனம் அமைதி கொண்டதே. அவரின் நிழலில், பாதத்தடியில் நம் குறைகளெல்லாம் மறைந்து விடுகின்றதே. அனைத்தையும் பார்த்துக் கொள்ள நம்மைக் காட்டிலும் சக்திமிக்க, நம்மைப் படைத்த பேராற்றல் இருக்கிறது. இறைவா உன்னை உணர்ந்து சரணம் அடைந்த மனத்திற்கு மரண பயமுமில்லை; ஏன் மரணம் கூட இல்லை. மோட்சத்தால் இறைவனின் பாதத்தை அடைந்து, பேரொளியில் சேர்ந்து விடும் ஆன்மாவிற்குத்தான் அழிவென்பது ஏது? |
|
*** |
Monday, March 29, 2010
மனிதா... மனிதா...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment