Monday, March 29, 2010

பெண்ணீயம்

பெண்ணீயம்


அப்பாதான்
முதலில் பார்த்தார்
முகப்புக் கூரைத்
தீப் பற்றியதை

தோட்ட நடைவாசலை
ஓட்டமாய்க் கடந்து
தெருக்கதவைத் திறந்து
தெருவில் போவோரைப் பார்த்து
“ஐயா தீப்புடிசிருச்சு
ஓடியாங்க” என்று
கத்திவிட்டு
கிணற்றடியில் கிடந்த
வாளித் தண்ணீரை
தூக்கிக் கொண்டு
ஓட எத்தனிக்க

உள்ளிருந்து ஓடிவந்த
சூடிதார் மகள்
இடுப்பில் கைவைத்தபடி
அப்பனைப் பார்த்துச் சொன்னாள்:
“இதுதான் ஆணாதிக்கத்தின்
உச்சம்!!!
பெண்கள் வந்தால்
தீயை அணைக்க மாட்டார்களா?
ஐயாக்களை மட்டும்
கூப்பிடுகிறீர்களே?”

வேடிக்கைக்கு நேரம்
இதுவல்ல மகளே
என்ற அப்பா
விரைந்து சென்று
வாளி நீரை
கூரையில் எறிந்தார்...

வீட்டினுள் இருந்து
ஓடி வந்த அம்மா
மகளின் மேல்
“மூதேவி மூதேவி” என்று
இரண்டு முறை
மொத்தினார்.

உன்னையெல்லாம்
காலேஜுக்கு அனுப்பிச்சோமே...
சனியனே
தண்ணீரைக் கொண்டுபோய்
ஊத்துடி, இல்லைன்னா
வீட்டுச் சாமானையாவது
வெளியில இழுத்து போடுடி
பீடை
என்று கதறியதோடு
அவரும் கிணற்றில்
வாளியை உள்ளிறக்கி
நீரை இறைக்கலானார்.

கிணத்தடி நீர்த் தொட்டியில்
அடித் தண்ணீரை
செம்பில் மோந்து
இன்னொரு வாளியை
நிரப்பிக் கொண்டிருந்த
அப்பத்தா
வாய்ப் புகையிலை
எச்சிலைப்
புளிச்சென்று
தூப்பாளில் துப்பி
மனைப் பெண்டிரைப்
பார்த்துச் சொன்னார்...
பெண்ணீயம், பித்தளை
புண்ணாக்கு
“வெளங்கீருவியடி பொண்டுகளா...”!

***

No comments:

Post a Comment