Saturday, February 13, 2010

ஆதலினால் வேலை செய்வீர்...

கவிதைப் பின்புலம்:
நான் எதற்காக உழைக்க வேண்டும்!!!
இன்றைய தமிழகம்

ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம்
ஒருவர் கேட்டார் எதற்காக இத்தனை கஷ்டப்படுகிறாய்?
நான் கேட்டேன் கஷ்டப்படாமல் எப்படி வாழ்க்கையை ஓட்ட முடியும்?
அவர் சிரித்தபடி சொன்னார் என்னைப்பார்.
1ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டுவிட்டு உறங்கிடுவேன்.
உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடிடுவேன்
உயர்சிகிச்சை பெற்றிடுவேன் ராஜமரியாதையுடன்!!!
உழைக்காமல் எப்படியப்பா இத்தனையும் முடியும்?
முதலாமவர் கேட்டார் நான் யார் தெரியுமா?
தமிழ்நாட்டுக் குடிமகன்
என் நாட்டில் உணவுக்கு அரிசி 1 ரூபாய்
சமைப்பதற்கு கேஸும் அடுப்பும் இலவசம்.
பொழுது போக்க வண்னத்தொலைக்காட்சி பெட்டி மின்சாரத்துடன் இலவசம்
குடும்பத்துடன் உயிர்காக்கும் உயர் சிகிச்சையும் இலவசம்
எதற்காக உழைக்க வேண்டும்?
நான் கேட்டேன் உன் எதிர்கால சந்ததியின் நிலை என்ன?
பலமாக சிரித்தபடி உரைத்தார்..
மனைவி பிள்ளை பெற்றால் ரூபாய் 5000 இலவசம் சிகிச்சையுடன்,
குழந்தைக்கு சத்துணவு இலவசம் பாலர் பள்ளியில்,
படிப்பு சீருடையுடன், மதிய உணவும் இலவசம் முட்டையுடன்,
பாடப்புத்தகம் இலவசம், படிப்பும் இலவசம்,
பள்ளி செல்ல பஸ் பாசும் இலவசம்
தேவையென்றால் சைக்கிளும் இலவசம்
பெண் பருவமடைந்தால் திருமண உதவித்தொகை 25000 இலவசம்
1 பவுன் தாலியுடன் திருமண செலவும் இலவசம்
தேவையென்றால் மாப்பிள்ளையுடன் பேப்பரில் விளம்பரமும் இலவசம்.
மகள் பிள்ளை பெற்றால் அதே கதை தொடரும் அவள் வாழ்க்கையிலும்...
நான் எதற்காக உழைக்க வேண்டும்!!!

இதை இன்றைய தமிழகம் என்ற தலைப்பில் பதிவிட்டவர்... சச்சிதானந்தன் முருகேசன் அவருக்கு நன்றிகள்..

இதைஓர்குட் தமிழ் குழுமத்தில் பதித்த ஷேர் மார்கெட்டிற்கு நன்றிகள்.

ஆதலினால் வேலை செய்வீர்...


இலவசமாம் இலவசம்; இங்கே
      எல்லாமா சும்மா இலவசம்?
வண்டி ஒண்ணு வெச்சிருந்தா
      பெட்ரோல் போட வேணாமா?
மாமுகிட்டே மாட்டிக் கிட்டா
      மாமூல் கட்ட வேணாமா?
மாலை நேரம் வந்துச்சுண்ணா
      டாஸ்மார்க் போக வேணாமா?

நெஞ்சம்நெறய இழுத்துச் சுவைக்க
      சிகரெட் பீடி வேணாமா?
மஞ்சத்திலே கொஞ்சி மகிழ
      மல்லியப் பூ வேணாமா?
சிரிச்சுப் பேசிப் பொஞ்சாதிக்கு
      அல்வாக் கொடுக்க வேணாமா?
சிவந்து நிண்ணு தூள்கெளப்ப
      கொழுந்து வெத்திலை வேணாமா?

வாய் நெறையும் வெத்திலைக்கு
      சுண்ணாம்பு தான் வேணாமா?
பாலும் தேனும் ஓடினாலும்
      குடிக்கத் தண்ணி வேணாமா?
அரிசிவாங்கி ஒலைய வைக்க
      ஒத்த ரூபா வேணாமா?
பருப்புஎண்ணை மளிகை யின்னு
      பல சரக்கு வேணாமா?

ஊத்திக் கொள்ளத் தயிருமோரு
      ஊறுகா தான் வேணாமா?
வாயுறைக்கத் தொட்டுக் கொள்ள
      காய்கறி தான் வேணாமா?
வேட்டிசட்டை துணி துவைக்க;
      வளர்ந்துவிட்டா முடி செரைக்க;
சீப்புசோப்பு பவுடர் வாங்க;
      காசு பணம் வேணாமா?

பள்ளியிலே பிள்ளை சேர
      சீட்டு ’வாங்க’ வேணாமா?
கல்லூரி வந்து விட்டா
      சீட்டு என்ன சும்மாவா?
படிக்காமல் தேர்ச்சிப் பெற
      பணம் இல்லாமல் ஆகுமா?
பட்டம் ஒண்ணு வாங்கிப்புட்டா
      பட்டது எல்லாம் தீருமா?

படிச்சுருந்தா வேலை மட்டும்
      பறந்து வந்து சேருமா?
கஷ்டப் பட்டுப் படிச்சாலும்
      காசு இல்லாம முடியுமா?
கவெர்மெண்டு வேலை யத்தான்
      ஓசி “வாங்க” முடியுமா?
கடவுளையே கும்பிட் டாலும்
      காசு இல்லாமல் ஆகுமா?

கட்டணம் தான் இல்லாமலே
      பயணம் போக முடியுமா?
காசில்லாமல் போனில் பேசி
      ’ஹலோ’ சொல்ல முடியுமா?
அவசரமா ஒண்ணுக்குப் போக
      அட இலவசமா முடியுமா?
ஆத்திரம் அவசர முன்னா
      அரசாங்கந் தான் கொடுக்குமா?

இலவச வைத்தியந் தான்
      நெசமாச் சும்மாக் கெடைக்குமா?
கட்டையில போனாலும் இங்கே
      காசு இல்லாமால் ஆகுமா?
உத்தரவு இருப்ப தெல்லாம்
      நடை முறையில் ஆகுமா?
ஓட்டு இல்லாதப் பொணத்துக்கு
      உதவ நிதியம் சேருமா?

உயிர்போன உடலை இங்கே
      கண்ணீர் தான் எரிக்குமா?
ஒப்பாரி அழுகை பார்த்து
      உலகம் வந்து பொதைக்குமா?
ஒத்தரூவா வாய்க் கரிசி
      செத்துப் போகப் போதுமா?
செத்துப் போன சான்றிதழ்
      செலவு இல்லாமல் கிட்டுமா?

இலவசத் திட்ட முண்ணா
      தானாச் சும்மா விளையுதா?
இரவல் வாங்கி அரசாங்கம்
      எடுத்துப் பொரட்டித் திரட்டுதா?
வங்கியிலே கடனை வாங்கி
      வட்டி கட்டிக் கொடுக்குதா?
வரிப் பணத்தைக் கூட்டிக்கூட்டி
      குடி மகனைப் படுத்துதா?

மக்களாட்சி நடக்கு துண்ணா
      யாரு வூட்டுத் துட்டுங்கோ?
மக்கள்கிட்டேப் பணம் புடுங்கி
      இலஞ்சம் எனும் பிட்டுங்கோ?
மந்திரிகள் இதுக்கு எதுக்கு?
      பஞ்சா யத்துப் பண்ணவா?
சந்திலேயும் சிந்து பாடிப்
      பங்கு வாங்கித் துண்ணவா?

தேர்தலுக்கு முன்னால் தந்தால்
      ”சொந்தப் பணம்” கையூட்டு
தேர்தலுக்குப் பின்னால் வந்தால்
      ”மக்கள் பணம்” கைநீட்டு
வாக்குறுதி இலஞ்சம் இல்லை
      தேர்தல் ஆணையம் முழிக்குது
வாக்கை ‘வாங்கி’ ஜெயிச்சகட்சி
      பகற் கொள்ளையில் கொழிக்குது!

சட்டத்துலே ஓட்டை யிண்ணு
      முட்டாள் கூடச் சொல்லுவான்
சட்டப்படித் தப்பு இல்லேண்ணா
      அறிஞன் கூடத் திருடுவான்
கொள்ளையிலே பங்கு தந்தா
      கூச்சல் போட யாருங்கோ?
ங்கொப்புரானே சத்தியமா இது
      ஜன நாயக நாடுங்கோ!

மந்திரிமார் வீடு எல்லாம்
      மார்பிளில் தான் இருக்கோணும்
மந்திரியின் மக்கள் எல்லாம்
      வெளி நாட்டில் படிக்கோணும்
சிங்கப்பூர் மாப் பிள்ளையின்னு
      சீர் செனத்தி கொடுக்கோணும்
செல்லமகள் கனி மொழிக்குப்
      பெரும் பதவி வாங்கோணும்

பேரன் பேரில் இன்னுமோர்
      புதிய சானல் துவங்கோணும்
பேத்திக்கும் பதவி வாங்கிப்
      பெருங் கொள்ளை அடிக்கோணும்
தேர்தலுன்னு வந்து விட்டால்
      உறையில் போட்டுக் கொடுக்கோணும்
தேர்தலும் முடிந்து விட்டால்
      தொகுதிப் படையல் வைக்கோணும்

ஆதலினால் வேலை செய்வீர்;
      இந்த அரசாங்கமும் பொழைக்கணும்
மானிடரே உழைப்பீர் நீவிர்;
      நாமும் இங்கே செழிக்கணும்
நாடுனக்குச் செய்யாதது என்ன?
      நன்றி கொண்டு பார்க்கணும்
நல்லபிள்ளை போல நீங்கள்
      நாங்கள் வாழவே உழைக்கணும் !!!

***

6 comments:

 1. ந​டைமு​றைகளின் அசதிகள்.. விறுவிறுப்பாக படிக்கக் கி​டைக்கிறது. நல்ல சிந்த​னை. வாழ்த்துகள்!

  ReplyDelete
 2. வருகைக்கும் கருத்திற்கும் பாராட்டிற்கும் நன்றி ஜெகநாதன்.

  ReplyDelete
 3. வருகைக்கும் பதிவிற்கும் நன்றிகள் உலவு.காம்

  ReplyDelete
 4. அருமை.. nanri en pathivai padithatharku.. en pilaiyai nan thiruthi kondaen.. eluthu pilaikalai nan kuraithukolla muyalkiren..

  ReplyDelete
 5. புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
  உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
  ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

  தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

  இவன்
  http://www.bogy.in

  ReplyDelete