Thursday, November 19, 2009

அன்பை அறிவோம்!

அன்பை அறிவோம்!


வலியவரும் எளியவர்முன்
         மண்டியிடும் மந்திரமும்
வீழ்த்தவரும் வேங்கையரும்
         தாழ்ந்துவிடும் தந்திரமும்
அறிவுடை மேதையரும்
         அண்டிவரும் விந்தையதும்

இன்பமுற இன்னுயிர்கள்
         ஈண்டுதமை நாடுவதும்
அன்புநெறி மாந்தர்பெரு
         வாழ்வுநிலை கூடுவதும்
அன்புதரு இன்பநிலை!
         இயற்கையது ஐயமிலை!

யாவரையும் அன்புநிறை
         ஆதரவில் பேணிவரின்
கோபமும் அற்றுவிடும்
         குறைகளும் இற்றுவிடும்
பைத்தியம் தெளிவாகும்
         பார்வைகள் விரிவாகும்

கல்லும் கரைந்துவிடும்
         காளையும் மடிதுயிலும்
நல்லவழிச் சாலைதேடி
         அல்லவையும் ஓடிவரும்
முள்ளும் மலராகும்
         முடிநாரும் மணமாகும்!

மண்ணில் பிறக்கையில்
         யாவரும் கேடில்லை;
அன்பைப் பெருக்கிவிடின்
         யாவதும் கேடில்லை;
அன்பே இறையாகும்
         அறிவோம் நலமாகும்!

இன்பமும் துன்பமும்
         அன்பின் விளைச்சலே
உள்ளம் சுரக்கும்
         உணர்வுக் கரைசலே
அன்பேநம் அறிவும்;
         அனைத்தும் அஃதே!

***

No comments:

Post a Comment