Monday, March 29, 2010

கண்ணன் என் காதலன்...

கண்ணன் என் காதலன்...


கண்ணன் முகம்மறந்து போனால் - இரு
கண்ணும் இழந்த நிலையாகும்;
வெண்மை கருமையங் கில்லை - மேலும்
வண்ணப் படமுமில்லை கண்டாய்;
பார்வையே பறிபோகும் பாவாய் - அதில்
பாதையழிந்து மயங்குவே னல்லோ?
சூழும் சோதனை கோடி- இனி
வாழும் வழியென்னடி தோழி?

இருண்டு போகுமடி வையம் - கண்ணென
இரண்டு இருந்திட்ட போழ்தும்;
வண்ணக் குருடே தோன்றும் - கண்ணன்
வாழ்ந்து மறைந்திட்ட நெஞ்சில்.
கனவுகள் விளைவது மில்லை - நல்ல
கற்பனை வளர்வது மில்லை;
எண்ணத்தின் மாட்சியு மில்லை - ஒளி
வண்ணக் காட்சியு மில்லை;

கண்ணன் இல்லாதே நெஞ்சில் - பேதை
கண்டினி மகிழ்வது மேது? (மனக்)
கள்வனைக் காணாதே தோழி - இரு
கண்கள் இமைப்பதும் உண்டோ?
இன்பம் என்பதும் உண்டோ? - மாயன்
இல்லா திருக்கும்இதயத் துள்ளே?
உள்ளம் அழுதிடும் தோழி - அந்த
உத்தம னில்லாஒவ்வோர் கணமும்;

வல்லவன் கள்வனென் கண்ணன் - அந்த
நல்லவ னில்லாவாழ் வெனக்கேது? (அவன்)
சொல்லிடும் வார்த்தை கீதம் - மனம்
அள்ளிடும் கானத்தினடித்தள நாதம்;
மெல்லிய ராகத்து மோகம் - தூய
மேன்மை தருசேயனென் மாயன்
செல்லம் எற்றைக்குமென் கண்ணன் - எனைச்
சேர்ந்திடச் சொல்லடி தோழி!

***

No comments:

Post a Comment