வருக வருக உலகத் தமிழ் செம்மொழி மாநாடு 2010!!! |
|
பாலுக்கும் கூழுக்கும் பட்டாணி சுண்டலுக்கும் பட்டமெனும் ரொட்டிக்கும் பரிசில் எலும்புக்கும் பாழுக்குப் போகின்ற பச்சோந்தி நாயினை பச்சைத் தமிழ் என்னல் ஆகுமா? நாளைக்குப் பாடையிலே பரலோகம் போகையிலே “செந்தமிழ்” செத்தது என்பீரா? ஐயோ! வேளைக்குப் பொய்நூறு புலம்பும் வீணரே வெட்கமும் மானமும் விற்கின்ற கடைச்சரக்கா? காலுக்குப் போடும் காலணியாம் உழைப்பு; நாளும் கொள்ளை; நடப்பதெல்லாந் திருட்டு; ஊழலின் உச்சமாய் அரசு; உடன்பிறப்புக்கு உளரலே கடிதம்; இலவச இலஞ்சம்; மூளை மழுப்பிற்கு மானாட மயிலாட; ஒதுக்கிப் பதுக்கப் புதுப்புதுத் திட்டம்; சாலை உலாவிற்கு மனிதச் சங்கிலி; பரவச நாடகம் பதவி விலகல்! அழை யாமல் போவதெப்படி? கடிதம் அனுப்பிக் கடமை தீர்க்க வில்லையா? கொலை யுண்ட மாந்தருக்காய் நித்தம் கூடி அழுததும் நினைவு இல்லையா? காலை உணவிற்குக் கடற்கரை விரதம் கட்டளை இட்டதில் போர்நிற்க வில்லையா? போலிக் கண்ணீரா? புரியாத பேச்சு; சட்டசபைச் சாளரத்தைக் கேள் சொல்லும்... அழையா விருந்தா? யார் சொன்னார்? வெற்றிப் பூங்கொத்துக் காய்ந்து விடாதா? குழுமம் அனுப்பிக் கூடிக் குலாவினால் மத்திய அரசும் மகிழ்ந்துவிட வில்லையா? மலேயாத் தமிழர் அடித்தால் என்ன? மலையகத் தமிழர் செத்தால் என்ன? ஈழம் சிதைத்தோம் என்பதில் பெருமை இன்னமும் பதவி என்பதெம் திறமை!!! முழக்கம் அடிக்கடி முரசில் கேட்கும் உயிர் எமக்குத் தூசு; பதவியும் இழப் போம்; முடிதனைத் துறப்போம்; துறந்ததற் கெல்லாம் தலையே சாட்சி! மழுப்பல் பேச்சா? அரசியல் களத்தில் வழுக்கை என்பது அனுபவ எச்சம்! விழுப்புண் என்பது வீரருக்கு அழகு! தமிழனின் அழகை மழித்ததின் மிச்சம்! அழுவது எதற்கு? கலைந்தது கனவா? துரோகம் என்பது தமிழனில் புதிதா? விழுந்தால் எழுவதும் விதைத்தால் முளைப்பதும் உலகத் தமிழர் அறியாக் கதையா? பழையதை விடுத்து புகழாரம் பாடிக் களிப்பினில் திளைப்போம்; கவலையைத் துறப்போம் எழுதுக சரித்திரம் துரோகம் அழிந்திட உலகத்தமிழ் மாநாடென நடந்ததை மறப்போம்! சங்க இலக்கியம் செந்தமிழ் இலக்கியம் குட்டையைக் குழப்பி மீன்களைப் பிடிப்போம் பக்தி இலக்கியம் திராவிட இலக்கியம் பட்டையைக் கிளப்பிசுய புராணம் படிப்போம் கம்பன் வள்ளுவன் இளங்கோதொல் காப்பியன் எல்லாம் கவைக்குதவா தென்றே முடிப்போம் செந்தமிழ் உலகம் சிந்தையிற் குழம்பின் செம்மொழிக் கூடலும் வெற்றியோ வெற்றி! செந்தமிழ் மறந்தோர் சிந்தனை துறந்தோர் செம்புலங் காணா வண்டமிழ் வீரர் நெஞ்சினில் ஈரம் கொஞ்சமும் இல்லார் அகிலம் புகழும் கூடலைக் காணீர் கஞ்சிக்கு அலையும் தமிழரே வாரீர் கைகால் இழந்த தமிழரே வாரீர் வஞ்சம் மறந்திடத் தமிழரே வாரீர் பழியினைத் துறக்கவோர் வழியினைத் தாரீர்!!! |
|
*** |
Friday, April 2, 2010
வருக வருக உலகத் தமிழ் செம்மொழி மாநாடு 2010!!!
Subscribe to:
Post Comments (Atom)
Arumaiyaana kavithai nanparea..!
ReplyDelete@Neelakandan
ReplyDeleteதங்களின் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி நண்பரே.