Tuesday, April 20, 2010

தெரிநிலை நூறு

தெரிநிலை நூறு


(குறிப்பு: ”இன்பம் ஐம்பது” மற்றும் ”துன்பம் ஐம்பது” எனும் இரு கவிதைகளுக்கான பாயிரம் இஃது.)

பாயிரம்:

இறைக் காப்பு:

இன்பமும் துன்பமும் இருவரை நூறாய்
கன்னித் தமிழில் கருத்தொடு எண்ணிக்
கன்னற் சுவையொடு காதலில் மொழிய
அன்னை அப்பனே கா!

இன்பமும் துன்பமும் இலங்கிடும் இகத்தில்
பன்னிய தெரிநிலைப் பாவாய் நூறாய்
மின்னிய எண்ணம் மெய்மையில் உரைக்க
அன்னைத் தமிழே வா!

***

முகவுரை:

இன்பமும் துன்பமும் இணைந்தநல் வாழ்வினில்
      இயம்பினன் பாரதி “எத்தனை கோடி
இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா!”
      இன்பத்தை எண்ணவும் இயலுமோ என்றே
உன்னித் துணிந்து உளத்தொடு முயன்றோம்;
      எண்ணினால் முடியும்; எண்ணத்தால் முடியும்;
இன்பமும் துன்பமும் இதயத்தின் உணர்வே
      இவையே இகத்தினில் சொர்க்கமும் நரகமும்;

இரவும் பகலும், இருளும் ஒளியும்
      இயற்கையே போலும் இன்பமும் துன்பமும்!
வரவும் செலவும் வாழ்வினில் நிகழும்
      வழிமுறை போலும் வளரும் தேயும்!
பெருகும் நேர்மறை எதிர்மறை எண்ணமும்
      பெறுகும் நலனும் பலனும் இஃதே!
தெரியும் துயரம் யாவையும் ஆதலின்
      தெளிந்து களைதலும் வாழ்வினில் இனிதே!

கருத்தினில் களித்துக் கனன்றவை ஈண்டு
      கனிவுறத் தமிழினில் கழறிட முயன்று
தெரிந்தவை அறிந்தவை தேர்ந்தவை திரட்டி
      திருவினை எண்ணிச் சிவனடி பணிந்து
இருவினை தொடரும் இகபர வாழ்வில்
      இனியவை பாதி இன்னல் மீதமென
தெரிநிலை நூறாய்த் திகழுறப் படைத்தோம்;
      தெளிவுறு மதியினில் திரளுக இன்பம்!

***


காணிக்கை:
அன்பு அன்னைக்கும் ஆருயிர் மைந்தனுக்கும் உரித்தாகுக.

***

4 comments:

 1. விருப்பமுற்றும்,
  வெளியிடா விருப்பம் துன்பம்!
  வேறுபட்டும்,
  இடைவிடாத விருப்பம் துன்பம்!
  அறியாமல்,
  கட்டுப்பட்ட தவறுகளும் துன்பம்!
  அறிந்தும்,
  கட்டவிழ்ந்த உறவுகளும் துன்பம்!
  கிடைத்தும்,
  தொலைத்து விட்ட நிம்மதி துன்பம்!
  படைத்தும்,
  பயன் பெறா வாழ்வு துன்பம்!
  இதயம் இல்லா,
  இடத்தில் இன்புருவதும் துன்பம்!
  உதயம் வராத,
  இடத்தில் விதைப்பதும் துன்பம்!

  ReplyDelete
 2. @V. Rajalakshmi

  உங்களின் பதிவு அருமை தோழி.

  என்னிடம் இன்னும் 12 சரணங்களுக்கு மேல் (அதாவது குறைந்த பட்சமாக 12 * 8 =96 கண்ணிகள்) கைவசம் தயாராக இருக்கின்றன. அனைத்தையும் ஐம்பதற்குள் சுருக்க வேண்டிய அவசியத்தில் அவற்றைக் கழிக்க வேண்டியதாயிற்று. அதாவது அதிகபட்சமான துன்பங்கள் பட்டியலில் உள்ளன. அதில் சொல்லாது மூடி வைத்த காதல், பசி, பட்டினி, மதவெறி, இனவெறி, மொழிவெறி என்று இன்னும் பல நல்லவையும் உள்ளன. என்ன செய்ய? சுருக்குவதே பெரும்பாடு ஆனது இவ்வமயம்.

  இடைவிடாத விருப்பம் -> தீராத ஆசை - இஃது ”ஆசை துன்பம்; ” என்பதில் அடங்கியதாகக் கருதுகின்றேன்.

  அறியாமல் கட்டுப்பட்ட தவறுகள் துன்பம்; - அறியாமல் செய்த தவறுகளா? கட்டுபட்ட தவறுகளா? இரண்டுமே வருந்துவதற்கு ஒன்றுமில்லையே.

  அறிந்தும் கட்டவிழ்ந்த உறவுகளும் துன்பம்; adultery? இதை வமிசம் இல்லா வாழ்க்கை துன்பம்; வஞ்சகம் கொள்ளும் சேர்க்கை துன்பம்; என்பதில் அடங்கியதாகக் கொண்டேன்.

  கிடைத்தும் தொலைத்து விட்ட நிம்மதி துன்பம்! உண்மைதான். தொலைத்ததன் காரணத்தைச் சுட்டாமலே கூட அஃது துன்பம் தான். சுட்டினால் வகைப் படுத்தலாம்.

  படைத்தும் பயன் பெறா வாழ்வு துன்பம்; யார் படைத்து? பிறருக்கு அல்லது யாருக்கும் பயன் படாத வாழ்க்கை துன்பம் சரியாக இருக்கும். பல நிலைகளில் உதவியின் பிரச்சினைகளை அலசி உள்ளோம். இருப்பினும் இதுவும் ஒரு ‘நல்ல’ சொல்லப் படவேண்டிய துன்பம் தான்.

  இதயம் இல்லா இடத்தில் இன்புருவது? இன்பு”று”வது, இதயமே இல்லாத இடத்தில் இன்புறுவது சாத்தியமே இல்லையே. ஆதலின் அங்குத் துன்பமும் இருக்காதே.

  உதயம் வராத இடத்தில் விதைப்பதும், அதாவது இருட்டில் விதைப்பதா..? ஆராய்ச்சிக் கூடங்களில் இருட்டில் விதைக்கிறார்களே? :) , அதாவது விளையா இடத்தில் விதைப்பது துன்பம் என்றால் சரியாக இருக்கும்.

  ஒருவேளை இன்பம் துன்பம் இரண்டையும் நூறாக விரிவாகக் கொண்டு சென்றால் அனைத்தையும் அவ்வமயம் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறேன்.

  நன்றி.

  ReplyDelete
 3. Again, absolutely beautiful words, however I don't agree with this thought. Happiness or Joy cannot come from outside, it is created within. The concept of Joy or Sorrow is happening with in, there is no way an external factor will be responsible for it.

  If there is no external factor for happiness or sorrow, then it is us who gives us happiness or sorrow.. In such a case anyone who is sorrow is merely a stupid, because he is not choosing to be joyful.

  The only factor that is not in control for many in this world is selecting the womb in which they are born. For everything else we are responsible. The whole concept of sorrow, is because of an escapist attitude of blaming external factors influencing our life.

  "Theethum Nandrum Pirar Thara Vaara" - if we are responsible for being sorrow, are we not stupids?

  ReplyDelete