Tuesday, April 17, 2018

இயற்கை அறம்!


இயற்கை அறம்!

- உத்தமபுத்திரா புருஷோத்தம்
17-Apr-2018

நீரின்(றி) அமையா(து) உலகு
 நெருப்பின்றிச் சமையா(து) அகிலம்
காரின்றிப் பொழியாது வானம்
 கதிரின்றிச் சுழலாது வையம்
சீரின்(றி) உலவாது ஞாலம்
 திகிரி(யி)ன்(றி) உருளாது காலம்
பாரின்றி விளையாது பயிர்கள்
 பசியின்றி வளராதே உயிர்கள்!
1


கதிரின்றிப் புலரா(து) இரவு
 கருவின்றி மலரா(து) உறவு
நதியின்றித் திரளாது பண்பு
 நலமின்றித் திகழா(து) அன்பு
மதியின்றிக் குலவாது ஞானம்
 வளியின்றி நிலவாது சீவம்
பதியின்றிச் சிறவாது பெண்மை
 பாதியாய் நிறைவதே உண்மை!
2


மலையின்றிப் பிறவாது நீறு
 மடுவின்றிச் சுரவா(து) ஆறு
நிலையின்றி நிறையாது மனது
 நிழலின்றி மறையாது நிலவு
விலையின்றிப் புரியா(து) அரிது
 விரைவின்றித் தெரியாது பொழுது
அலையின்றிப் புரவாது மேகம்
 அமுதாகிச் சொரியாதே வானம்!
3


விருப்பின்(றி) ஈர்க்காது ஞாலம்
 விழிப்பின்றிச் சேர்க்காது ஞானம்
சுரத்தின்(றி) உதிக்காது கானம்
 சுவையின்(றி) உவக்காது மோனம்
கருத்தின்றிக் கனியாது கவிதை
 கலையின்(றி) இனியாது காதல்
விருத்தியில் நிறையாதே ஆசை
 வெளியின்றிப் பரவாதே ஓசை!
4


குருவின்றித் தெளியா(து) அறிவு
 குறையின்(றி) ஒளிராது நிலவு
இருப்பின்றி வற்றாது செல்வம்
 இறுதிக்கும் முற்றாது கல்வி
திருவின்(றி) உய்யாது குடிமை
 திறனின்றிப் பொய்யாது மடிமை
அருளின்(றி) அமையாது சித்தி
 அன்பின்(றி) அடையாதே முக்தி!
5


நலனின்றிச் சுகிக்காது சேர்க்கை
 நட்பின்றிச் சகிக்காது வாழ்க்கை
பலமின்(றி) ஏறாது பாகை
 பணிவின்றிச் சூடாது வாகை
பலனின்றிப் போகாது உழைப்பு
 பயனின்(றி) ஆகாது பிழைப்பு
மலமின்(றி) உய்வதே பிறப்பு
 மரணித்தும் வாழ்வதே சிறப்பு!
6


அச்சமின்றி நடப்பது துணிவு
 ஆழ்ந்துபின் முடிப்பது துணிபு
துச்சமென்(று) இகழாது ஆண்மை
 தோல்வியில் துவளாது மேன்மை
இச்சகத்தில் மகிழாது பெருமை
 இழிவென்று நெகிழாது சிறுமை
உச்சமென்று விழையாதே பொய்மை
 உயிரின்றிப் பிழையாதே மெய்மை!
7


திரியின்(றி) ஒளிராது தீபம்
 திரையின்றித் துளிராது ஞாலம்
வரியின்றி வளராது தேசம்
 மலரின்றிக் கிளராது வாசம்
பரிவின்(றி) உருகா(து) உள்ளம்
 பனியின்றிப் பெருகாது வெள்ளம்
பிரிவின்றிப் புரியாது பாசம்
 பிளவினில் தெரியாதே நேசம்!
8


நகையின்றிப் பயக்குமோ நலம்?
 நாணின்றி நயக்குமோ குலம்?
பகையின்றித் தெளியுமோ பலம்?
 படையின்றி நிலைக்குமோ வயம்?
வகையின்றிச் செழிக்குமோ வளம்?
 வரையின்றிக் கொழிக்குமோ நிலம்?
தகையின்றிச் சேருமோ நீட்சி?
 தாழ்வின்றி நேருமோ மீட்சி?
9


விழியின்றி நிறக்குமோ வண்ணம்?
 வினையின்றிச் சிறக்குமோ எண்ணம்?
தொழிலின்றித் துலங்குமோ வாழ்வு?
 தொடர்பின்(றி) இலங்குமோ சால்பு?
மொழியின்றி முளைக்குமோ இணைப்பு?
 முனைப்பின்றிக் கிளைக்குமோ பிணைப்பு?
எழிலின்றிக் கொஞ்சுமோ பொய்கை?
 இயற்கையை விஞ்சுமோ செய்கை?
10


* முற்றும் *


அருஞ்சொற் சூழ்பொருள்:
---
அரிது = அரியவை, அபூர்வமானது
நெகிழ் = இளகு, நழுவு, விலகு, பிரி, அழி
இச்சகம் = வெற்றுப் புகழ்ச்சி, முகஸ்துதி
பதி = தலைவன், இறைவன்
இருப்பு = இருத்தல், வாழுதல், தங்கு
பாகை = தலைப்பாகை, மகுடம்
ஈர் = இழு
பார் = உலகம், பூமி
உய் = நற்கதி அடை
பிணைப்பு = நெருக்கம், நட்பு, காதல்
குடிமை = குடிப்பிறப்பு, குடி மேம்படல்
புரவு = பாதுகா, பரிசு, கொடை, செழுமை
குலவு = நெருங்கி உறவாடு, தங்கு, பொலிவுறு
பொய்கை = இயற்கை நீர்நிலை, குளம்
சகி = பொறு
பொழுது = காலம்
சால்பு = மேன்மை, உயர்வு, சிறப்பு
மடிமை = சோம்பல்
சீவம் = சீவன், உயிர்
மடு = சுனை, பொய்கை
சுரத்து = ஈடுபாடு, சிரத்தை
மலம் = மும்மலம் (ஆணவம், கன்மம், மாயை)
செய்கை = செயல், வினை, செயற்கை
முற்று = நிறைவு, முழுமை, பூரணம்
சேர்க்கை = துணை, தொடர்பு, புணர்ச்சி
வயம் = வெற்றி
தகை = பொருத்தம், மதிப்பு, நன்மை, நலம்
வரை = எல்லை, வரம்பு
திகிரி = சக்கரம், சுழல், வட்ட வடிவம், சூரியன்
வளி = காற்று
திரை = அலையெழு, ஓடை, நதி, ஆறு
வாகை = வெற்றி
நகை = மகிழ்ச்சி, மலர்ச்சி, சிரிப்பு
விருத்தி = இனப்பெருக்கம், வளர்ச்சி
நாண் = நாணம், மான உணர்ச்சி
விழை = மதி, விரும்பு
நீறு = சாம்பல், புழுதி, சுண்ணாம்பு, விபூதி
வெளி = காற்று வெளி, Space

***


No comments:

Post a Comment