Tuesday, October 19, 2010

கைபேசி (பகுதி: 2)

கைபேசி! (பகுதி: 2)

கைபேசிக் கவிதையின் நீட்சியாக, குறள் வகையில் சில கருத்துக்களைச் சொல்ல விளைந்தேன். உண்மையில் முன்னர் எழுதிய குறளைத் திருத்தவே முயன்றேன். அஃது ஒரு அத்தியாயமாகவே நீண்டு விட்டது.

கைபேசி நாகரீகத்தை நெறிப்படுத்தக் குறளால்தான் முடியுமோ? நீங்களே சொல்லுங்களேன்.

குறள் :
1. நோக்கக் குழையா நுண்ணலைக் கைப்பேசி
கேட்கக் குழையுந் தரும்.
2. காணாது மறையும் கைபேசி கண்டாலும்
நாணாது நன்றே நகும்.
3. இயைந்தே கைபேசி இயம்பினும் நெடண்மை
முயங்கிச் சிதைக்கும் செவி.
4. இம்மியே இயக்கினும் இணைக் கைப்பேசி
விம்மியே பயக்குந் துயர்.
5. தெவிட்டு மொலி தெறின் கைப்பேசி
செவிட்டு வழிக்கே செயும்.
6. வாட்டும் வருத்தம் வகையறியான் வல்லானோ
காட்டும் கைபேசிச் சினம்?
7. இறையில்லத் துவிசை இறுத்தாக் கைப்பேசி
நிறையல்ல வசைமேவுங் குறை.
8. சபையிடைச் சலனச் சதுராடும் கைப்பேசி
மிகையல்ல மேன்மைக் கிழுக்கு.
9. சங்கத்தே சமனித்துச் சாற்றாதே கைபேசியுள்
பங்கத்தே இரைத்தலா பண்பு?
10. சந்தை கூவலை சந்தெலாமுந்திப் பரவல்
நிந்தை கைபேசியின் கண்.

விளக்கவுரை:
1:
நோக்கக் குழையா நுண்ணலைக் கைப்பேசி
கேட்கக் குழையுந் தரும்.


நோக்கக் குழையா நுண் அலைக் கைப்பேசி
கேட்கக் குழையும் தரும்.


பொருளுரை:
நோக்கினாலும் குழைந்து இளகா நுண்ணலைக் கைபேசி, ஒலி கேட்கக் குழைவினைத் தரும். அதாவது நம் மனதை இளகச் செய்யும். மேலும் நாம் ஒலிப்பதைக் கேட்கத் தன் காதினைத் தரும் என்றும் பொருள் படும். (குழை - காது)


2:
காணாது மறையும் கைபேசி கண்டாலும்
நாணாது நன்றே நகும்.


காணாது மறையும் கைபேசி; கண்டாலும்
நாணாது நன்றே நகும்.


பொருளுரை: எங்கோ தொலைந்து காணாது போகும் கைபேசி கண்ணுக்கு மீண்டும் கிட்டினாலும் நாணாதே நன்றாகத் தன் இயல்போடு ஒலிக்கும். உம் எனும் உகாரத்தால் கண்டாலும் காணாவிட்டாலும் அதாவது எப்போதுமே நாணாது நன்றாக நகும் என்பதும் பொருளாகும். கண்ணில் காணாது மறைந்து விட்டாலும் அஃது எழுப்பும் ஒலியால் அதன் இருப்பிடத்தைக் காணலாம் என்பது உட்பொருள்.


3:
இயைந்தே கைபேசி இயம்பினும் நெடண்மை
முயங்கிச் சிதைக்கும் செவி.


இயைந்தே கைபேசி இயம்பினும், நெடு அண்மை
முயங்கிச் சிதைக்கும் செவி.


பொருளுரை: எத்தனை தான் ஒப்பும்படியான இனிய மொழியினைக் கொடுப்பினும் கைபேசியைக் காதிற்கு அண்மையில் நெடு நேரம் கொண்டு கேட்டால், அஃது முயன்று விரைவில் செவியின் செயல்பாட்டைச் சிதைத்துவிடும். எனவே காது கெட்டுவிடும் ஆதலின் குறைவான பயன் பாட்டிற்கு மட்டும் கைப்பேசியைப் பயன படுத்துதல் நல்லது என்பது பொருள்.


4:
இம்மியே இயக்கினும் இணைக் கைப்பேசி
விம்மியே பயக்குந் துயர்.


இம்மியே இயக்கினும், இணைக் கைப்பேசி
விம்மியே பயக்கும் துயர்.


பொருளுரை: [வாகனத்தை அல்லது வேறு ஒன்றை இயக்கிக் கொண்டிருக்கையில்] இம்மி அளவு நேரமே எனினும் இணையாக இயக்கும் கைபேசி, [கவனத்தைச் சிதற வைப்பதால் பயன் படுத்துவருக்கு மாத்திரம் அன்றி அஃது அனைவருக்கும் இன்னலை] பெருந் துன்பத்தை நல்கி விடும். ஆதலின் வேறொன்றை இயக்கும் சமயத்தில் கைபேசியையும் கூடவே இணையாகப் பயன் படுத்துதல்; ஏன் முயற்சித்தலே கூடத் தவறு என்பது ஈண்டு பெறத் தக்கது.

5:
தெவிட்டு மொலி தெறின் கைப்பேசி
செவிட்டு வழிக்கே செயும்.


தெவிட்டு மொலி தெறின், கைப்பேசி
செவிட்டு வழிக்கே செயும்.

பொருளுரை: துள்ளும் கைபேசி ஒலியை தெவிட்டும் அளவிற்கு அதிகமாகக் கொள்ளுதல் நிச்சயம் செவிட்டுக்கே வழி செய்து உடல் நலத்தையும், உள நலத்தையும் பாதித்து விடும். ஆதலின் உயரிய ஒலியளவைத் தவிர்த்து மென்மையாகவும் குறைவாகவும் கொள்ளுதல் நலம் என்பதாம். அளவிற்கு மீறிய அமிர்தமும் விடம்தானே?


6:
வாட்டும் வருத்தம் வகையறியான் வல்லானோ
காட்டும் கைபேசிச் சினம்?


வாட்டும் வருத்தம் வகை அறியான்; வல்லானோ
காட்டும் கைபேசிச் சினம்?


பொருளுரை: வாட்டுகின்ற உரையின் வருத்தத்தின் வகையை; காரணத்தை அறியாதவன், கைபேசியின் மேல் காட்டும் சினத்தால் ஏதும் வல்லவன் ஆவானோ? சினத்தால் அவன் இழப்பது கைபேசியையும், நலத்தையும் தானே அன்றிப் பெறுவது எந்த வல்லமையையோ, திறமையையோ, நன்மையையோ அல்ல என்பது தெளிவு.


7:
இறையில்லத் துவிசை இறுத்தாக் கைப்பேசி
நிறையல்ல வசைமேவுங் குறை.


இறை இல்லத்து விசை இறுத்தாக் கைப்பேசி
நிறை அல்ல; வசை மேவும் குறை.


பொருளுரை: இறை இல்லமாகிய கோயிலில்; ஆலயத்தில் நிறுத்தி வைக்கப் படாத கைபேசியால் ஒருவருக்கு எந்த நிறையும் வரப்போவதில்லை; உண்மையில் அஃது பிறரின் வசையைத்தான் மிகுந்து வலியப் பெறும் குறைபாடான செயல் ஆகும். (இறுத்து - முடி, நிறுத்து). ஆதலின் கோயில்களில் கைப்பேசியை நிறுத்தி விடுதல் உத்தமம்.


8:
சபையிடைச் சலனச் சதுராடும் கைப்பேசி
மிகையல்ல மேன்மைக் கிழுக்கு.


சபையிடைச் சலன(ம்) சதுராடும் கைப்பேசி
மிகை அல்ல; மேன்மைக்கு இழுக்கு.


பொருளுரை: பலர் கூடியிருக்கும் முக்கியச் சபையினில் சலனப்படுத்திச் சதுராடும் கைபேசி குழுமியவரின் முன்னே மேன்மையல்ல; உண்மையில் அஃது ஒருவரின் மேன்மைக்கு இழுக்கு என்றால் அஃது மிகையல்ல. அஃது குழுமிய நேரத்தில் பிறருக்குத் தொந்தரவாக இருப்பதுடன் குழுமிய காரணத்திற்கும் இடைமறிக்கும் இடைஞ்சலாகவும் இழுக்காகவும் கூட அமைந்துவிடும். ஆதலின் குழுமக் கூட்டங்களுக்குச் செல்லும்போது திசைதிருப்பத்தைத் தவிர்க்க கைப்பேசியை நிறுத்தி விடுதல் அன்றில் சப்த்தமின்றிச் செயல்பட வைத்தல் நலம்.


9:
சங்கத்தே சமனித்துச் சாற்றாதே கைபேசியுள்
பங்கத்தே இரைத்தலா பண்பு?


சங்கத்தே சமனித்துச் சாற்றாதே; கைபேசியுள்
பங்கத்தே இரைத்தலா பண்பு?


பொருளுரை: கைபேசியில் அமைதியாகப் பேசாமல் பங்கம் விளைவிக்கும் வகையில் இரைந்து கத்திப் பேசுவதா பண்பு? அவ்வாறு காட்டுக் கத்தாய் கூச்சலிட்டுப் பேசுவது சமூக நாகரீகம் ஆகுமா? அல்ல என்பது தெளிவு. ஆதலின் கைபேசியில் அமைதியாகப் பேசுதலே சமூகத்தில் உயரிய சிறந்த பண்பு.


10:
சந்தை கூவலை சந்தெலாமுந்திப் பரவல்
நிந்தை கைபேசியின் கண்.


சந்தை(க்) கூவலை சந்தெலாம் உந்திப் பரவல்
நிந்தை; கைபேசியின் கண்.

பொருளுரை: சந்தையை, சந்தைப் படுத்தும் கூப்பாட்டை; விளம்பரத்தை, அறைகூவலை கைபேசியின் கண் கிடைக்கும் வாய்ப்புக்களிலெல்லாம் முன்னோக்கிப் பரப்புதல் பயனர் நிந்தையையே பதிலாக விளைவிக்கும். பயனாளிகளுக்குக் கைபேசி வழி சந்தைப் படுத்துதல் உண்மையில் எரிச்சலூட்டும் அணுகுமுறை.

***

6 comments:

  1. அருமையான சிந்தனை ! குறள்கள் !
    இரண்டாவது குறளின் பொருளில் ஒரு சந்தேகம் - கைபேசியை தொலைத்ததற்காக கைபேசியை தொலைத்தவர் தானே நான வேண்டும்.
    ஏன் கைபேசி நாணவேண்டும் ?

    ReplyDelete
  2. @சாம்ராஜ்ய ப்ரியன்
    தங்களின் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி.

    ReplyDelete
  3. @JohnsonChristopher
    தங்களின் வருகைக்கும் பதிவிற்கும் முதற்கண் நன்றி.

    அருமையான சந்தேகம்தான். பாராட்டுக்கள்.

    குழந்தைகள் நாம் தொலைத்தோமா அவர்களே காணாமல் போய் திரும்பி வந்தார்களோ யான் அறியேன். ஆனால் அவர்கள் வந்த பிறகு ஒரு நாணம் காட்டுவார்களே அது ஒரு அழகு. அதைப் போலவே காணாமல் போய் வந்தோமே என்றோ, இருட்டுக்குள் சத்தமிட்டுக் கொண்டிருந்தோமோ என்றெல்லாம் கைபேசி நாணுவதில்லை என்று கொஞ்சம் நகைச் சுவைக்காகத்தான் அஃது. உங்களுக்கே நன்றாகத் தெரியும் உயிரற்ற கைபேசி குழையுமா? நாணுமா?

    தொலைப்பதென்னவோ உண்மையில் மனிதர்கள் தான். சந்தேகமே இல்லை. கிடைத்தவுடன் முத்தம் கூடக் கொடுப்பார்கள். உயிர் போய் உயிர் வந்ததாம். மனிதர்கள்!!!

    ReplyDelete
  4. அருமையான இருவரி குறள்கள்!
    மீண்டும் ஒரு வள்ளூவர்!
    தற்சமய வாழ்க்கை முறையில்
    கைபேசி இல்லாதவன், வாய் பேச்சி இல்லாதவன் போல் ஆகிறானே! ஆனால் கைபேசி போதை கொண்டோற்க்கு இக்குறள்கள் நல்ல பாடம்...

    ReplyDelete
  5. @V. Rajalakshmi
    நன்றி ச்கோ.

    ///மீண்டும் ஒரு வள்ளுவர்.
    ஐயையோ. திருவள்ளுவராக எல்லாம் ஆகமுடியாது. சும்மா ஒரு சின்ன முயற்சி அவ்வளவே.

    இருப்பினும் காலமும் நேரமும் கூட வந்தால் ”குறள் ++” எழுதலாம் என்று ஓர் எண்ணம் வந்துள்ளது. காரணம் குறள் வடிவம். இஃது கொஞ்ச வார்த்தைகளில் பொருளைத் திணிக்கச் சவாலாகவும், யாப்பின் இலக்கணப்படி மிகச் சிரமமானதாகவும் இருந்தாலும் அதிவிருப்பத்தைத் தூண்டுவதாகவும் உள்ளது என்பதால்.

    முதலில் இன்னும் கொஞ்சம் வாழ்க்கைப் படித்துக் கொள்ளுகிறேன். சொந்த அறிவுரையெல்லாம் பிறகு பார்ப்போம். (இப்பவே தலையில் முன் வழுக்கை தென்படுகிறது) :)

    ReplyDelete