Saturday, September 11, 2010

மாகவி பாரதி நினைவஞ்சலி

மாகவி பாரதி நினைவஞ்சலி

கவிதைப் பின்புலம்:

மகாகவிக்கு இன்று நினைவு நாள். இதற்கு இன்று ஆர்குட் தமிழ் குடும்பம் என்னும் குழுவில் வெளிவந்த 1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் "என் கணவர்" என்ற தலைப்பில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரையின் ஒரு பகுதி:

ஊருக்குப் பெருமை என் வாழ்வு. வையகத்தார் கொண்டாட வாழவேண்டும் என்ற என் கனவு ஓரளவு பலித்ததென்னவோ உண்மைதான். இன்று என் கணவரின் புகழ் விண்முட்டிச் செல்கிறது. இன்று மகாகவியின் மனைவியாகப் போற்றப்படும் நான் அன்று பைத்தியக்காரன் மனைவியென்று பலராலும் ஏசப்பட்டேன்... விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம். உலகத்தோடொட்டி வாழ வகை அறியாத கணவருடன் அமர வாழ்வு வாழ்ந்தேன் என்றால் உங்களுக்குச் சிரிப்பாகத்தான் இருக்கும். யாருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் வாய்க்கலாம். ஆனால் கவிஞன் மனைவியாயிருப்பது கஷ்டம்.

கவிஞர்கள் போக்கே ஒரு தனி. உண்பதிலும் உறங்குவதிலும் கூட சாதாரண மனிதரைப்போல் அவர்கள் இருப்பதில்லை. கற்பனைச் சிறகு விரித்துக் கவிதை வானில் வட்டமிடும் பறவை, பூலோகத்திலே இருண்ட வீட்டிலே மனைவிக்கும் மற்றவருக்கும் சம்பாத்தியம் செய்துபோட்டு, சாதாரண வாழ்க்கை வாழ முடியுமா?
வறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை; ஆனால் வயிற்றுக்குணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டி வருகிறது. காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவேயின்றிக் காலம் கழித்தானேயானால், என்ன செய்ய முடியும்?

கவிஞன் விசித்திரமான தன்மை நிறைந்தவன்; அவனுக்கு எதுவும் பெரிதில்லை. ஆனால் கவலை நிறைந்த வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்று எந்தப் பெண்தான் நினைக்க முடியும்? சிறு வயதில் ஆசாபாசங்களும் அபிலாஷைகளும் ஒவ்வொரு பெண்ணின் மனத்திலும் நிறைந்திருப்பது இயற்கைதானே? சுகமாக வாழுவதற்கு சொர்க்கலோகம் சென்றால்தான் முடியும் என்ற நிலை கவிஞன் மனைவிக்கு ஏற்பட்டு விடுகிறது. அந்த நாளிளிருந்த சத்திமுத்தப் புலவரின் மனைவியிடமிருந்து இன்று என்வரை சுகவாழ்வு ஒரே விதமாகத்தான் அமைந்திருக்கிறது. ஏகாந்தத்தில் அமர்ந்துவிட்டால் முனிவரும்கூட அவரிடம் பிச்சைதான் வாங்கவேண்டும். ஆனால் மனைத் தலைவியாகிய நான் அவ்வாறு நிஷ்டையிடமிருக்க முடியுமா?

செல்லம்மாள் பாரதியின் உரையினை அங்கு வழங்கியமைக்கு மிக்க நன்றி. நடைமுறை வாழ்க்கையில் அவர் கூற்றின் ஒவ்வொரு வார்த்தையும் மாற்ற முடியாத உண்மையென்பதால் மிகவும் வலிக்கிறது. இருப்பினும் இவையெல்லாம் மாகவியை உண்டாக்கவே ஏற்பட்ட இயற்கையின் விதியெனக் கொள்வோம்.

இதைப் படித்தவுடனே என்னிடம் ஏற்பட்ட உணர்வையே, செல்லம்மாவிற்குப் பதிலாய், பாரதிக்கு அஞ்சலியாக இங்கே சமர்ப்பிக்கின்றேன்.

திருமதி. செல்லம்மாள் பாரதியின் உரையினை ஆர்குட் தமிழ்க் குடும்பம் குழுமத்தில் பதிப்பித்த திரு. சிவா ரஞ்சன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

மாகவி பாரதி நினைவஞ்சலி

மா கவியாய்ப் பிறந்திடவே
     மாதவம் செய்திடல் வேண்டுமம்மா...
மாண்பொடு வாழ்வினைக் கவிபடைக்க
     மனைவியும் பிள்ளையும் வேண்டுமம்மா...
இல்லறம் என்பதை அறியாதே
     ஏட்டிலே கவிதை தேறாதே!
ஊழ்வினை என்பது வலிதானோ
     உலகம் புகழும் இன்னாளும்?

நடைமுறைச் சந்தையில் உழல்வதற்கே
     நல்லதோர் கணவரும் வேண்டுமென்றால்....
தலைமுறை தாண்டி நிற்பதற்கோர்
     தன்னிலை மறத்தல் நியாயமம்மா!
அற்புதக் கவிதைகள் பிறந்திடவே
     அடிமைத் தளைகள் எரிந்திடவே
அக்கினிக் குஞ்சொன்று பிறந்ததம்மா
     அனைத்தையும் தாண்டி நிறைந்ததம்மா!

இல்லாளின் இல்லாமை அறியாதே
     இடர்படும் இல்லாருக்கு அழுததம்மா...
நல்லதோர் வீணையாய் நலத்துடனே
     நாளும் புழுதியில் உழன்றதம்மா...
புத்தியில் சுடரென உய்வதற்க்கே
     பித்தனைப் போலவும் திகழ்ந்ததம்மா...
எத்தனை கோடி இன்பமென்றே
     இலக்கிய உலகினில் மிதந்ததம்மா....

செல்லம்மாள் நின்றன் துணையாலே
     சிந்தனை வெளிதனில் பறந்ததம்மா
கண்ணம்மா என்றொரு கனவுலகில்
     கவிதை கொஞ்சிக் களித்ததம்மா...
அன்னைத் தமிழின் அருள்முன்னே
     ஆசை, அபிலாசை சரியாமோ?
செல்வம் என்பது பொருளாமோ?
     இன்பம் என்பது இருளாமோ?

பசியிலும் கவிதை தந்தானே....
     பழையன கழித்து நின்றானே...
பொய்யினைச் சாடி உடைத்தானே...
     புதியன தேடிப் படைத்தானே...
செந்தமிழ் நாடெனக் கண்டானே...
     தேன்சுவைப் பாடலைச் சொன்னானே....
வானகம் ஏகி மறைந்தாலும்...
     வையகம் போற்றிட நின்றானே....

பாரதி என்றும் வாழுகின்றான்...
     பாரினில் ஒளியாய் வாழுகின்றான்...
தமிழர் நெஞ்சில் வாழுகின்றான்...
     தாரணி எங்கும் வாழுகின்றான்...
அன்புத் தமிழால் வாழுகின்றான்....
     அழியாப் புகழால் வாழுகின்றான்....
இன்பச் சுவையாய் வாழுகின்றான்...
     இசையாய்ப் பொருளாய் வாழுகின்றான்...!

வாழட்டும் பாரதி என்றென்றும் ...
     வளரட்டும் அவன்புகழ் எங்கெங்கும்!!!!

***

2 comments:

  1. எங்கும் கிருஷ்ணன் ,எதிலும் கிருஷ்ணன் என்பது போல கவிஞர்களின் ஒவ்வொரு எழுத்திலும் பாரதி, ஒவ்வொரு எண்ணத்திலும் பாரதி!

    மிக அருமையான அஞ்சலி!கவிஞர்களுக்கு கவிதைதான் கடவுள்! பாரதிக்கு கவிதையை அஞ்சலியாக கொடுத்த இந்த பாவலனுக்கு நன்றிகள் பல.

    ReplyDelete
  2. @V. Rajalakshmi
    நன்றிகள் தோழி.

    ReplyDelete