Sunday, May 2, 2010

தெரிநிலை நூறு (முகவுரை)

தெரிநிலை நூறு (முகவுரை)


தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு வணக்கம். நடக்கும் இருபத்தோராம் நூற்றாண்டில் இலக்கியத் தமிழுக்கு இன்னோர் அணியாக “தெரிநிலை நூறு” என்னும் இக் கவிதைத் தொகுப்பை இயற்றியதில் பெருமை அடைகிறேன். இலக்கியத்தில் இதுவே எனது கன்னி முயற்சி.

முதலில் வெளியிட்ட “இன்பமும் துன்பமும்”, “எத்தனை கோடி இன்பம்...” மற்றும் “துன்பம் என்பது...” , என்னும் கவிதைகளையே சீர்படுத்தி, விரிவுபடுத்தி இவ்விதமாக மாற்றிச் செம்மை செய்துள்ளேன். இதற்குக் காரணம் தமிழில் உள்ள “இன்னா நாற்பது, இனியவை நாற்பது” என்பவை பற்றிப் பிறகே எனக்கு நினைவிற்கு வந்தமையால்.

பிறகு அவற்றைத் தேடிப் பார்த்த போதுதான் பல உண்மைகளும் தெரிந்தது. திருக்குறளை உள்ளடக்கிய பதினெண் கீழ்க்கணக்கு வகைகளுள், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, பழமொழி நானூறு” என்பவை எண்ணிக்கையோடு படைக்கப் பட்டுள்ளன. ஆதலின் “இன்பமும் துன்பமும்” என்பதைக் கூடப் பொருத்தமாகவும், சீராகவும் ஒரு நல்ல எண்ணிக்கையில் விரிக்கலாமே என்ற எண்ணம் தோன்றிற்று.

அதாவது இன்றையக் காலத்திற்குப் பொருந்தியவாறு, இயன்றவரையில் எளிய இயல் தமிழைக் கொண்டு படைத்தால் என்ன என்று தோன்றியதற்கான பலனே இப்போது இத்தலைப்பில் நிறைவேறியது. இன்பமும் துன்பமும்
பாதிக்குப் பாதி அதாவது ஐம்பதுக்கு ஐம்பது தான் வாழ்வியலில் குறைந்த பட்சமாக எண்ணிக்கை அளவிலாவது நியாயமாகவும், பொருத்தமாகவும் இருக்கக் கூடும். இருப்பினும் இதற்குள் அடங்காத, சொல்லப்படாத இன்பமும் துன்பமும் எத்தனையோ கோடி நிச்சயமாக இருக்கும் என்பதை சொல்லத் தேவையே இல்லை. அவற்றையெல்லாம் வகைப்படுத்த நேரம், காலம் எனக்குப் போதாது என்றே கருதுகின்றேன்.

இருப்பினும் சொன்ன வகைகளுக்குள், அதாவது விருத்தங்களில், வெறும் போற்றிக் கண்ணிகள் போல் அல்லாது, பல புதுமைகளையும் முயற்சித்துள்ளேன். ஆத்திச் சூடி போலும், பழமொழிகள் போலும், ஒவ்வொரு வரியும் எடுத்தாளச் சுலபமாகவும் இருக்குமாறு எத்தனித்திருக்கிறேன். அவை யாவும் நான்கு வார்த்தைகளுக்குள்ளும், அருகில் உள்ள வாக்கியத்தையும் தொடர்பு கொண்டும் அல்லது தனித்தும் இருக்கும். அதைப் போலவே சிலவற்றுள் நான்கு வார்த்தைகளுள்ளும் ஒரே வார்த்தை மற்ற வார்த்தைகளை வரிசைக் கிரமத்தில் மட்டும் அல்லாது மாறிப் புணர்ந்து பல பொருட்களாகவும் விரியும். இதைக் கூர்ந்து நோக்கினால் விளங்கும். அவற்றைப் படிப்போர் உணர்ந்து வெளிக் கொணருவார்கள் என்று நம்புவதால் இங்கே விவரிப்பதை விட்டு விடுகின்றேன்.

சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த தமிழுக்கு, இன்று இணையத்தில் பல சங்கங்கள் இருப்பதால் மகிழ்ச்சியே. தமிழ் இலக்கண இலக்கிய அறிவு மிக்கோர் முன் வந்து இதைப் பரீட்சித்துச் சொன்னால் உண்மையிலேயே மிக உதவியாக இருக்கும். வாய்ப்பிருந்தால் இன்னும் பல படைப்புக்களைச் செம்மையோடு வெளிக்கொணர அஃது ஏதுவாக இருக்கும்.

இப் பனுவலில் பிழை யாதாகினும் தெரிந்தால் பொறுத்துக் கொண்டு, அதை எனது பார்வைக்குக் கொண்டு வந்தால் உங்களுக்கு உரிய நன்றியோடு அதைத் திருத்துவதே எனது முதல் பணியாகக் கொண்டு செம்மைப் படுத்துவேன் என்று உறுதி அளிக்கிறேன். மேலும் ஒருவேளை இப்பனுவல் நூலாக வெளிவந்தால் நிச்சயம் திருத்தியவர்கள் பெயரையும், இடத்தையும் குறிப்பிடுவது எனது கடமையாகக் கொள்வேன் என்று தெரிவிக்கின்றேன். கூடவே இது தனி நூலாகுவதற்கு உரிய தகுதி உடையதா என்பதையும் விவாதத்திற்கு வைக்கிறேன்.

இன்பமும் துன்பமும் ஐம்பதுக்கு ஐம்பதை வாசிப்போருக்கு என்றும் இன்பமே பெருகட்டும் என்று வேண்டி இம் முன்னுரையை நிறைவு செய்கிறேன். மறக்காமல், மறைக்காமல் உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்.

இன்பமும் துன்பமும் ஐம்பதுக்கு ஐம்பது என்று முதலில் பெயரிடப்பட்ட இந்தத் தொகுப்பு நூலுக்கு “தெரிநிலை நூறு” என்று பெயரிடக் காரணமாக இருந்த ஆர்குட் தமிழ் குழும நண்பர்கள் சிவா, பாலன் முத்துக்குமாரசுவாமி, நாட்டாமை ராம், சக்தி, மற்றும் பாராட்டிய அனைத்து நண்பர்களுக்கும் சிறப்பு நன்றிகள். தனிப்பட்ட வகையில் இப்பக்கத்தைக் கண்டு பாராட்டிய, தொடர்பு கொண்டு உரையாடிய தினேஷ், ராஜ்ப்ரியன் மற்றும் ஏனைய நண்பர்களுக்கும் நன்றிகள்.

நன்றி.

உத்தமபுத்திரா

இணைப்புக்கள்:

தெரிநிலை நூறு (
http://thamilkavithaikal.blogspot.com/2010/04/blog-post_20.html)
இன்பம் ஐம்பது (http://thamilkavithaikal.blogspot.com/2010/04/blog-post_5164.html)
துன்பம் ஐம்பது (http://thamilkavithaikal.blogspot.com/2010/04/blog-post_1998.html)

***