Monday, February 14, 2011

வாழ்க்கை ஏதுக்கடா?

வாழ்க்கை ஏதுக்கடா?

1

நல்லதை நினைக்காமல் - உனக்கு
      நாசமும் ஏதுக்கடா? - மனிதா
அல்லதை மறுக்காமல் - உனக்கு
      ஆசையும் ஏதுக்கடா?

2 அன்பினை வழங்காமல் - உனக்கு
     அண்டமும் ஏதுக்கடா? - மனிதா
அறத்தினை ஒழுகாமல் - உனக்கு
     ஆக்கங்கள் ஏதுக்கடா?

3 பண்பினை வளர்க்காமல் - உனக்கு
     பாசங்கள் ஏதுக்கடா? - மனிதா
பகைமை களையாமல் - உனக்கு
     படிப்பினை ஏதுக்கடா?

4 நேர்மை நில்லாமல் - உனக்கு
     நெஞ்சம் ஏதுக்கடா? - மனிதா
கூர்மை இல்லாமல் - உனக்கு
     குழப்பம் ஏதுக்கடா?

5 தாய்மை போற்றாமல் - உனக்கு
     தாயகம் ஏதுக்கடா? - மனிதா
வாய்மை காக்காமல் - உனக்கு
     வாய்ப்பும் ஏதுக்கடா?

6 பாதியில் பெண்ணின்றேல் - உனக்கு
     பயணம் ஏதுக்கடா? - மனிதா
நீதியில் கண்ணின்றேல் - உனக்கு
     ஞானம் ஏதுக்கடா?

7 களவுகள் எளிதாயின் - உனக்கு
      காவலன் ஏதுக்கடா? - மனிதா
இலவசம் வலிதாயின் - உனக்கு
      யாதுமே ஏதுக்கடா?

8 கடமையும் இலதாயின் - உனக்கு
      கவலை ஏதுக்கடா? - மனிதா
குடிசையும் இலதாயின் - உனக்கு
      குடும்பம் ஏதுக்கடா?

9 சாதிகள் ஏதுக்கடா? - உனக்கு
      சண்டைகள் ஏதுக்கடா? - மனிதா
சமரசம் காணாமல் - உனக்கு
      சமயங்கள் ஏதுக்கடா?

10 பேதங்கள் ஏதுக்கடா? - உனக்கு
      பேதமை ஏதுக்கடா? - மனிதா
வாதங்கள் ஏதுக்கடா? - உனக்கு
      வன்மங்கள் ஏதுக்கடா?

11 மோதல்கள் ஏதுக்கடா? - உனக்கு
      மோகங்கள் ஏதுக்கடா? - மனிதா
காதலே இல்லாமல் - உனக்கு
      காமம் ஏதுக்கடா?

12 சோதனை செய்யாமல் - உனக்கு
      சோகங்கள் ஏதுக்கடா? - மனிதா
சாதனை இல்லாமல் - உனக்கு
      சரித்திரம் ஏதுக்கடா?

13 வல்லினம் ஏதுக்கடா? - உனக்கு
      மெல்லினம் ஏதுக்கடா? - மனிதா
இடையினம் நாடாமல் - உனக்கு
      இன்பம் ஏதுக்கடா?

14 வம்புகள் ஏதுக்கடா? - உனக்கு
      வன்முறை ஏதுக்கடா? - மனிதா
இன்பத்தை நாடாமல் - உனக்கு
      துன்பங்கள் ஏதுக்கடா?

15 மதவெறி ஏதுக்கடா? - உனக்கு
      மொழிவெறி ஏதுக்கடா? - மனிதா
இனவெறி ஏதுக்கடா? - உனக்கு
      பணவெறி ஏதுக்கடா?

16 ஆதியை அறியாமல் - உனக்கு
      ஆன்மா ஏதுக்கடா? - மனிதா
சோதியைக் காணாமல் - உனக்கு
      சுயமும் ஏதுக்கடா?

17 தேடலும் இல்லாமல் - உனக்கு
      தெய்வம் ஏதுக்கடா? - மனிதா
தேம்பலும் நில்லாமல் - உனக்கு
      தேசம் ஏதுக்கடா?

18 தீமைகள் விலகாமல் - உனக்கு
      தேர்ச்சியும் ஏதுக்கடா? - மனிதா
தீட்டுகள் அகலாமல் - உனக்கு
      தேசியம் ஏதுக்கடா?

19 பொருளே அறியாமல் - உனக்கு
      போதனை ஏதுக்கடா? - மனிதா
இருளே அகலமால் - உனக்கு
      இதயம் ஏதுக்கடா?

20 பொன்னகை ஏதுக்கடா? - உனக்கு
      பொய்மை ஏதுக்கடா? - மனிதா
புன்னகை புரியாமல் - உனக்கு
      புதுமையும் ஏதுக்கடா?

21 எளிமை கொள்ளாமல் - உனக்கு
      ஏளனம் ஏதுக்கடா? - மனிதா
ஏழ்மை கொல்லாமல் - உனக்கு
      ஏற்றம் ஏதுக்கடா?

22 அச்சம் ஏதுக்கடா? - உனக்கு
      ஆண்மை ஏதுக்கடா? - மனிதா
பிச்சைப் பொருளாலே - உனக்கு
      பிழைப்பும் ஏதுக்கடா?

23 உழைப்பே இல்லாமல் - உனக்கு
      உணவும் ஏதுக்கடா? - மனிதா
பிழைப்பே இல்லாமல் - உனக்கு
      பேச்சும் ஏதுக்கடா?

24 புனிதம் ஏதுக்கடா? - உனக்கு
      புத்தியும் ஏதுக்கடா? - மனிதா
மனிதம் மதிக்காமல் - உனக்கு
      மாண்பும் ஏதுக்கடா?

25 மயக்கம் ஏதுக்கடா? - உனக்கு
      மவுனம் ஏதுக்கடா? - மனிதா
தயக்கம் ஏதுக்கடா - உனக்கு
      தைரியம் ஏதுக்கடா?

26 உயிரினை மதிக்காமல் - உனக்கு
      உணர்வுகள் ஏதுக்கடா? - மனிதா
உரிமையை மதிக்காமல் - உனக்கு
      விடுதலை* ஏதுக்கடா?
* சுதந்திரம்

27 பெருமையை துதிக்காமல் - உனக்கு
      பிறப்பும் ஏதுக்கடா? - மனிதா
உறவினை மதிக்காமல் - உனக்கு
      சிறப்பும் ஏதுக்கடா?

28 பிரிவுகள் ஏதுக்கடா? - உனக்கு
      பிளவுகள் ஏதுக்கடா? - மனிதா
விருப்புகள் குறையாமல் - உனக்கு
      வெறுப்புகள் ஏதுக்கடா?

29 சிறகுகள் இல்லாமல் - உனக்கு
      சிறைகள் ஏதுக்கடா? - மனிதா
வரையறை இல்லாமல் - உனக்கு
      வேட்கை ஏதுக்கடா?

30 உதவிகள் செய்யாமல் - உனக்கு
      உடலும் ஏதுக்கடா? - மனிதா
உயர்வினை அடையாமல் - உனக்கு
      உளமும் ஏதுக்கடா?

31 சீர்மை படையாமல் - உனக்குச்
      சிந்தனை ஏதுக்கடா? - மனிதா
மூர்க்கம் உடையாமல் - உனக்கு
      வந்தனை ஏதுக்கடா?

32 மேன்மை அடையாமல் - உனக்கு
      மெத்தனம் ஏதுக்கடா? - மனிதா
மேதமை அடையாமல் - உனக்கு
      தத்துவம் ஏதுக்கடா?

33 கேண்மை பிடிக்காமல் - உனக்கு
     கேள்வி ஏதுக்கடா? - மனிதா
கீழ்மை தடுக்காமல் - உனக்கு
     கேளிக்கை ஏதுக்கடா?

34 ஆட்டம் ஏதுக்கடா? - உனக்கு
      அகந்தை ஏதுக்கடா? - மனிதா
பாட்டம் ஏதுக்கடா? - உனக்கு
      பற்றும் ஏதுக்கடா?

35 வாக்கே தெளியாமல் - உனக்கு
      வாட்டம் ஏதுக்கடா? - மனிதா
வஞ்சகம் ஒழியாமல் - உனக்கு
      ஓட்டும் ஏதுக்கடா?

36 ஆக்கம் புரியாமல் - உனக்கு
      ஆத்திரம் ஏதுக்கடா? - மனிதா
நோக்கே தெரியாமல் - உனக்கு
      வாழ்க்கை ஏதுக்கடா?

***

Saturday, February 12, 2011

காதலர் தினம்!

காதலர் தினம்!

அன்பே என்றும் அவனியிலே
அடிப்படை என்றே ஆதரித்தே
நாளும் மகிழ்ந்து கொண்டாடி
நலத்தொடு சிறப்புற வாழ்ந்திடவே
வாழ்வின் வசந்தக் கணங்களுக்கு
வந்திடும் நேசத் திருநாளில்
காதல் மிளிரும் இதயங்களே
காதலர் தினத்து வாழ்த்துக்களே!

நினைவோ கனவோ நிஜமோ
நெஞ்சில் காதல் நிறைந்திடவும்
மகிழ்பவர் கண்டு மனமாற
மகிழ்வே கொண்டு சிறப்புறவும்
பாசக் கிளிகள் என்னாளும்
பாரில் காதல்பண் பாடிடவும்
வாசமலராய் மனங்கள் எல்லாம்
நேசம் பேசுமோர் நினைவுநாளே!

அன்பை உளங்கள் பகிர்ந்திடவும்
அன்பை உதடுகள் பகர்ந்திடவும்
பிளவுகள் விலகி வாழ்ந்திடவும்
பிரிவினை அகலச் சேர்ந்திடவும்
பேதங்கள் துறந்து பேசிடவும்
வாதங்கள் மறந்து கூடிடவும்
மனங்கள் ஒன்றி மகிழ்ந்திடவும்
மனிதம் போற்றும் நன்னாளே...

காதலைச் சொல்லும் தருணமோ?
கருணையும் கனிவும் பொழியுமோ?
கோபமும் மோதலும் ஊடலும்
கொள்ளை போகாத் திருநாளாம்
வாய்ப்பினை நல்கும் நன்நாளே
வளரட்டும் காதலும் என்னாளும்
வாழ்த்தியே மகிழ்வோம் பொன்னாளை
வாழிய காதலர் நன்னாளே!

***