Tuesday, May 17, 2011

அன்னையர் அந்தாதி (பகுதி: 2)

அன்னையர் அந்தாதி (பகுதி: 2)

1. கலைமகள் அந்தாதி



இறை வணக்கம்:
கருத்துட் கனன்ற கலைமகட் பொருண்மை
அருட்பா நிறைத்த அந்தாதியால் - உரைக்க
வயப்படு வாணிநீயே வனப்புடை வாக்காய்
நயத்தொடு நல்குவாய் நயந்து.
அந்தாதிக் கட்டளை:
காயத்துரு வடிவமுமாய் கண்மலரும் வண்ணமுமாய்
நேயர்செவி மடுக்குமொலி நெஞ்சுருகும் பண்ணமுதாய்
தூயவெண் தாமரைக்கண் துலங்குமெழில் நான்முகியாய்
தாயறிவாய் பேதித்துத் தரங்காட்டும் நறுமுகையே!

முகவெழிலும் முறுவலிதழும் முத்தென்னும் பல்லொளியில்
அகவிருள்தம் முனைவரிடம் அகல்வித்தும் எழுத்துவித்தும்
பகுத்துணரும் மதிநலனாய் பருப்பொருளின் உருப்பொருளாய்
தொகுத்துணர விதித்தருளும் தொகைஞானக் கலைவாணியே!
 
அந்தாதி: 

1. அன்பினழகு வடிவமே அன்னைக் கலைமகள்!

காயத்துரு வாகிவெண் கமலாசனத்(து)
          அமர்மலர்க் கருணையாய்
ஆயகலை அகிலத்து அருளிடும்
          அன்னையாய் அயனகத்து
நாயகியாய் வீணைதரும் நாதமுடன்
          விளம்பிமிகு நல்லிசை
வாயமுதாய் ஞானமெழில் வள்ளலாய்
          வழங்குநல் வடிவமுமே!


2. அறிவுநெறித் தெய்வமே அமுதஞானத் தலைமகள்!

வடிவமுமாய் வளமைசொல் வனப்புமாய்
          வளர்நிலை வரம்பிலியாய்
விடியலுமாய் வித்தைதரும் போதகியாய்
          விதிவகுக்கும் வேதகியாய்
படிகநிறமாய் பனிமலராய் பதம்மிகுத்த
          பைந்தமிழ்ப் பாவையாய்
கடிமலராய் மனமலரில் கருதுபொருட்
          கமழ்ந்திடுங் கண்மலரே!


3. ஆயகலை அனைத்தையும் அருளும்வாணி அம்மையள்!

கண்மலரும் எண்ணமுமாய் கருப்பொருளின்
          வண்ணமுமாய் கனிமொழித்
திண்ணமுமாய் திசையெங்குந் திறல்பவளோ?
          தெளிர்பவளோ?  தண்மதியால்
பண்புவளர்ப் பைங்கிளியோ? பால்பிரிக்கும்
          அன்னமோ பயில்நடையில்?
வண்ணமயில் தோகையோ? வல்லெழிலாய்நீ
          விளையாடும் வண்ணமுமே!


4. ஆடல்பாடல் ஆனந்தம் அறிநிலையின் செம்மையள்!

வண்ணமுமாய் இன்பமுமாய் வானிலொளி
          நடம்புரியும் வான்கொடியாய்
விண்ணகமாய் தத்துவமாய் வெளிச்சந்தரு
          விளக்கமுமாய் வித்தைமிகும்
மண்ணகமாய் பிண்டமுமாய் வியங்குகோள்
          அண்டமுமாய் மனவெழிலாய்
நுண்மதியால் பண்மிகுத்து நுகர்பொருளாய்
          பரிணமிக்கும் நேயர்செவியே!


5. இயலிசை நாடகமாய் இனிமையாகும் நயத்தினள்!

நேயர்செவி விருந்தாய் நெஞ்சிளக்கி
          மருந்ததுவாய் நினைவறமாய்
நயனமொழி பொழியுமதி நடனமெனும்
          கலையருவி நதிமழையாய்
இயம்புவழி தேன்மொழி யாலிசைக்கும்
          நல்லறமாய் ஏந்திழையாள்
முயங்குமது நரம்புவழி முகக்குமிசை
          வருடுமழை மடுக்குமொலியே!


6. இன்பதுன்பம் யாதிலும் இயல்புமாகும் வயத்தினள்!

மடுக்குமொலி இசைமிகுத்து வையத்துயிர்
          இன்பதுன்பம் வாழ்ந்துயர
முடுக்குவித்து நிலத்துமிசை முனைந்தேற
          அனல்புனல் வான்படராய்
எடுத்தியம்பி இயன்றவுயிர் முயன்றவரை
          முக்திநலம் இயல்பவளை
நெடும்புகழ் நிறைதரும் நித்திலத்தை
          நினைந்திருக்க நெஞ்சுருகுமே!


7. ஈகைகருணை உள்ளமதில் ஈண்டுதருந் தாயவள்! 

நெஞ்சுருகும் ஏழையர்க்கும் நினைவறமும்
          ஏழிசையும் நிலைநிறுத்தும்
வஞ்சமிலா நெஞ்சினர்பால் வாஞ்சையுடன்
          கல்விஞானம் வரமளிக்கும்
கொஞ்சுமொழி ஏடேந்துங் கோலமயில்
          செங்கரத்துக் கலைவாணிநின்
பஞ்சணைய பதமலர்த்தாள் பணிந்துருகப்
          பரிமளிக்கும் பண்ணமுதே!


8. ஈரமுள்ள நெஞ்சினுள் என்றுமேயிளச் சேயவள்!

பண்ணமுதாய் புதுமைகளைப் படைப்பிக்கும்
          பொன்னமுதப் பூங்குழலி;
எண்ணமதில் செழுங்கலையும் ஏற்றநலமும்
          முழுமையும் இயலுங்கிளி;
கண்ணியத்து நெஞ்சகத்தே கருமவினை
          திறமுயர்த்துங் கலைக்கிழத்தி;
துண்ணியகச் சுடர்பெருக்கி துறையெலாம்
          அறிவுநல்குந் தூயவளே!


9. உதயமதியம் இரவுயென உலகினில் இலங்குவள்!

தூயவெண் சங்கத்துத் தொடரொலியாய்
          ஓங்காரஞ் சங்கமித்து
நாயகியாய் இரவுபகல் நாளுருளக்
          கனவும்நனவு நடப்புமாகி
மாயப்பிறப் பிடரால் துயருழலும்
          வாழ்வை மானுடத்தை
சாயத்தால் சதுராடிச் சீராக்குஞ்
          சதுர்மகள் தாமரையே!


10. உயர்வுதாழ்வு நிலையென உணர்வினில் துலங்குவள்!

தாமரைக்கண் அகத்தேவுயர் தமியளாய்
          தாயாய் தாரமாய்
தோமத்தில் சோதரியாய் தோழியாய்
          சேயாய் தரணிவுயிர்
வாமத்தில் வகையறிவு வடிவுநிற
          இயலுறழ்ந்து மாற்றகலத்
தூமதியால் சோதித்து போதித்து
          சாதித்தன்பு துலங்குமெழிலே!


11. ஊழியையுங் காலத்தையும் உருவகிக்குந் தலைமகள்!

துலங்குமெழில் காரணியாய் தூயன்புத்
          தாரணியாய் துன்பநிலை
கலங்குமனம் தெளிந்தறிய அறம்பொருள்
          இன்பம்வீடாய் கலைநெறி
இலங்குமயில்; இதந்தருநல் கடையவருங்
          கடைந்தேற இனிமைநிறை
நலங்குவித்து நடைவிளம்பி தெளிஞானத்
          துணைநல்கும் நான்முகியே!


12. ஊக்கத்தையும் ஆக்கத்தையும் நிருவகிக்குங் கலைமகள்!

நான்முகியாய் நல்லறத்து வாழ்வளிக்கும்
          அருங்கலையே; நானிலத்து
வான்முகிலாய் இடபிங்கலை மையநிலை
          பிரணவாணவ ஒடுங்கலை
ஊன்பொதிக்கு உறுத்தியும் நடுங்கலை
          தடங்கலை ஒறுங்கலையாய்
தேன்மதிக்குத் தேவையெனுந் திகட்டொணாத்
          தேறுங்கலை தாயறிவே!


13. எழிலொழுங்கு நேர்மையில் இலங்கிடும் இனியவள்!

தாயறிவாய் ஒருமனத் திருகண்
          முக்குணச் சதுர்மறை
நாயகியாய் ஐம்பொறி அறுசுவை
          ஏழிசை நல்லறச்
சேயகமாய் எண்திசை நவரசப்
          பற்றாகித் தீதெனும்
பேயகலப் பிணியகலப் பேணுவித்து
          வாலறிவாய் பேதித்தவளே!


14. எண்ணம்நினைவு வாய்மையில் துலங்கிடுங் கனியவள்!

பேதித்து வகையாகி பிணக்கொழி
          ஞானவருட் பொருளாகி
வாதித்து இயல்விதி போதித்து
          வாய்மை உணர்வித்து
சோதித்து மெய்நீதி ஓதுவித்து
          சுழற்சிதன் சூட்சுமமும்
சாதித்து சலித்து சகலகலை
          சமைக்கிறாய் தரங்காட்டியே!


15. ஏற்றமிறக்கம் பண்ணென எழுச்சிநல்கும் பாமகள்!

தரங்காட்டும் அருங்கலைத் துலாக்கோலாய்
          தரணிமிசைத் தையலாய்
உரங்காட்டும் உள்ளறிவாய் உணர்வாய்
          உதயமிக்கும் உத்தமியாய்
சிரங்காட்டும் சிந்தனைத் தெளிவுமாய்
          நற்கலை தீக்கலையாய்
நரங்காட்டும் செய்வினைக் காரணியாய்
          நலங்காட்டும் நறுமுகையே!


16. ஏற்றுவாக்கில் பண்பென இசைமிகுக்கும் நாமகள்!

நறுமுகையே நயக்கும் நலவுறுதி;
          நளினவழி நேர்மறை
குறுநகையே பயக்கும் கோலயிசை;
          நடுநிலை குளிர்மதி
பொறுமையே செயக்கும் பெருமை;
          இன்சொல் பொருந்து
மறுமொழியே இயக்கும் வாக்கும்
          முயக்கும் முகவெழிலே!


17. ஐயம்விளக்கம் உபாயம் அனைத்தையுங் கொடுப்பவள்!

முகவெழிலும் எழில்நடையும் முழுவயிர
          உடற்பொலிவும் முழுமதியின்
தகவொளியும் இளங்கதிரின் தகுவெயிலும்
          இளஞ்சுவடில் தருபொருளும்
அகவெழிலும் அறப்பொருளாய் அனுபவத்து
          விழுப்பொருளாய் அறிவுநிலை
முகத்தெரியும் முதற்றறிவாய் மூதறிவாய்ப்
          பரிமளிக்கும் முறுவலிதழே!


18. அச்சந்துக்கம் அபாயம் அனைத்தையுங் கெடுப்பவள்!

முறுவலிதழும் மோகமும் முத்தமும்
          காமமும் முனைந்தேறி
செறுபகையும் போகமும் செற்றறுக்கும்
          யோகமும் சேர்ந்தேகி
உறுபசியும் ஓவாப்பிணியும் உதறுஞ்சுக
          அறிஞானம் உணர்ந்தாகி
வறுமையும் வல்வினையுங் களையுங்கலை
          வாக்காகும் முத்தென்னே!


19. ஒப்பனை கற்பனை உருவுமாகும் எழிலவள்!

முத்தென்னும் கற்பனை சிற்பமாய்
          சித்திரமாய் மொழியியலாய்
சித்தென்னும் அகம்நாடி செயல்வித்தாய்
          ஒழுங்கியல் சொத்துமாய்
அத்தென்னும் அலகில்லா அடிவிதியாய்
          அகிலத்து அருள்ஞானப்
பித்தென்னும் பேரருளில் பிணைந்தாடும்
          பரம்பொருட் பல்லொளியே!


20. ஒப்புமை பேதமாகி ஒயிலுமாகுங் கலையவள்!

பல்லொளியில் ஒன்றாய்மிகு பொருளாய்
          பரவசப் பிரிவொப்பாய்
வல்லெழிலில் இலைதளிரில் மலரிதழில்
          இயல்புதரு வடிவழகில்
நல்லறத்தில் செஞ்சொல் நனிமொழியில்
          கனிந்துருகி நுவலுதலில்
அல்பகலென்? அகற்றுவாய் அரற்றும்
          அறியாமை அகவிருளையே!


21. ஓவியம் காவியம் உறைந்திடும் நுண்ணியள்! 

அகவிருள்தம் அகல்விக்கும் அறிவொளி
          அருள்விக்கும் அன்னையாய்
தகவல்மொழி தளைத்துவளர் தரணிவசம்
          தகைத்துயருஞ் சாத்திரமாய்
அகரமுதலும் விளங்கலை அன்னார்க்கும்
          விளங்குகலை அனுபவமாய்
முகவருளாய் விழுமியத்தால் அன்னாய்
          விளக்கிடுவாய் முனைவரிடமே!


22. ஓதலில் வாதுவில் ஒளிர்ந்திடும் திண்ணியள்! 

முனைவரிடம் ஊக்கமும் ஆக்கமும்
          உரங்கூட்டும் வளர்மதியால்
சினைபெருகும் எழிலின்பச் சிந்தனையின்
          வளங்கூட்டி செய்தொழிலால்
வினையகலும் நன்னெறியும் வழிமுறையும்
          தகைக்கும் விளக்கமதாய்
அனைவருளும் இருளகற்றும் அகத்துறை
          ஆன்மவொளி அகல்வித்தே!


23. ஔடதம் விடமுமாய் யாதுமாகுங் கன்னியள்! 

அகல்வித்தும் அருள்வித்தும் அகவழுக்கைத்
          தெளிவித்தும் ஔடதமாய்
நுகர்வித்தும் நுண்கலையைப் பகர்வித்தும்
          நுழைபுலத்தை நேர்மறையாய்
புகல்வித்தும் உணர்வித்தும் புணர்வித்தும்
          உண்ணுவித்தும் புன்மைதனை
இகல்வித்தும் கல்வித்தாய் இலங்குகிறாய்
          எண்ணுவித்தும் எழுத்துவித்தே!


24. அன்னம் அமுதமாய் ஆர்த்திடும் அன்னையள்! 

எழுத்துவித்தும் உறங்குவித்தும் நச்சினார்க்கு
          இனியவளாய் இரங்குவித்தும்
வழுத்துவித்தும் பரம்பொருளை மெச்சினார்க்கு
          வணக்குவித்தும் வழங்குவித்தும்
செழுத்துவித்தும் செம்பொருளால் செயல்வித்தும்
          சேகரத்துவளர் செழுஞானம்
பழுத்துவித்தும் சூத்திரமாய் பண்பாடாய்
          பரிணமிப்பாய் பகுத்துணரவே!


25. கல்விகேள்வி ஞானந்தரும் கலைவாணி வேணியள்! 

பகுத்துணரும் அறிவுதரும் பண்புநலம்
          மிகுத்துவரப் பற்றறுக்கும்
தகுத்துணரும் முக்குற்றைத் தகர்த்தெறிய
          தானதருமம் தாமந்தரும்
நகுத்துணரும் நல்லறிவால் நாணயத்தால்
          நாநயத்தால் நயம்பயக்கும்
வகுத்துணரும் யாக்கையும் வளர்ந்தேகும்
          வாழ்கலை மதிநலனே!


26. கருத்திலொளி யோகந்தரும் வண்ணமயில் மேனியள்!

மதிநலனாய் மூவாசை மும்மலமழிய
          முக்திதரும் மருங்கினில்
கதியருளாய் யோகத்துயில் யாகந்தரும்
          மோனமுயர் கருத்ததனில்
நதிவழிவாய் அருவியலாய் ஞாலந்தரும்
          அறிவொளி ஞானப்பிழிவாய்
பதியறிவாய் பாரதியாய் பரம்பொருளாய்
          பதமாகும் பருப்பொருளே!


27. சங்கடங் களையுமதிச் சகலகலா வல்லியள்!

பருப்பொருளின் பரணிமிகும் படைப்பருளால்
          படருந்துயர் பற்றறுத்து
கருப்பொருளின் திரள்பொருளை கூர்மதியால்
          சீர்செய்து கவனமீர்
திருப்பொருளாய் திருவமுதத்து திடப்பொருளாய்
          திரட்டியாய் திருவுளத்து
விருப்பொருளாய் எண்ணெண் கலைப்பொருளாய்
          விளங்கும் உருப்பொருளே!


28. சத்தியத் துள்பொதிந்து சாதிக்கும் மெல்லியள்!

உருப்பொருளாய் நல்லறத்தால் உள்ளுணர்வில்
          மெய்யுணர்வை உய்த்துணர
பருப்பொருளாய் விரியுமுடல் பண்கூட்டிப்
          பக்குவமாகிப்பின் பராபரமறிய
கருப்பொருளாய் இருத்திமனங் கைகூட்டி
          நல்வினையைக் கைக்கொள்ள
தரும்பொருளாய் முக்திஞானந் தழைக்குஞ்
          சித்தியாகுவாய் தொகுத்துணரவே!


29. நறுமணத்துள் நாதத்துள் நடனமிடுந் தேவியள்! 

தொகுத்துணர வையத்துயிர் துகளெலாம்
          அன்புநிறைச் செம்பொருளாய்
செகுத்துணர மதிநலத்துள் செறிவாகும்,
          நிலையாமைத் தன்மையுமாய்
பகுத்துணர பொழிஞாலம் பரிணமிக்கும்
          மெய்ஞானப் பாங்குமதுவாய்
வகுத்துணர நிலைவாழ்வு மன்னுபுகழ்
          ஒன்றென்றே விதித்தருளுமே!


30. நல்மனத்துள் நளினத்துள் நலந்தரும் மாதவள்! 

விதித்தருளும் நறுங்கலையும் வழிமுறையும்
          வினையறமும் விழுப்பொருளும்
கதித்தருளும் மொழிவளமும் கல்வியறிவும்
          உளநலமும் கருதுபொருளும்
மதித்தருளும் அறக்குருபரரும் ஐம்பூதங்களும்
          மறுக்கடவுளரும் உன்னகத்தில்
துதித்தருளும் படிக்களித்துத் திறமனைத்தும்
          வலிந்தளிக்கும் தொகைஞானமே!


31. மலரிதழில் இலைதளிரில் மணங்கமழுங் கலையவள்! 

தொகைஞானக் கலைமாதே கண்ணகத்தே
          தெளிஞானம் துலக்கியபின்
பகையேது? புகையேது? பாவந்தரும்
          வினையேது? பற்றுமகன்றின்
நகைநாண வகையேது? கையறு
          வதையுமேது? நள்ளிருளுமேயேது?
குகையெனும் அகமாடத்துட் குலையா
          அறிவொளிக் கலைவாணியே!


32. மனமலரில் கவிதையென மடல்விரிக்குங் கலைமகள்! 

கலைவாணியே! களங்கமிலா மனமலரில்
          களிமிகுத்துக் கவிநிறைக்குங்
கலைஞானமே! உளங்குவித்துக் கரங்குவிப்பார்
          நலங்குவிக்கக் கசிந்துருகி
கலைபொழியும் நாமகளே! கவிமழையே!
          நற்பெருஞ்சீர் கனிந்தருளும்
கலையமுதே! நின்பதமலர் சரணடைந்தேன்!
          நிறைநின்றன் காயத்துருவே!

* கலைமகள் அந்தாதி முற்றும் *
கலைமகள் அகவல்: (தலைப்புக் கவிதை)
அன்பினழகு வடிவமே அன்னைக் கலைமகள்!
அறிவுநெறித் தெய்வமே அமுதஞானத் தலைமகள்!
ஆயகலை அனைத்தையும் அருளும்வாணி அம்மையள்!
ஆடல்பாடல் ஆனந்தம் அறிநிலையின் செம்மையள்!
இயலிசை நாடகமாய் இனிமையாகும் நயத்தினள்!
இன்பதுன்பம் யாதிலும் இயல்புமாகும் வயத்தினள்!
ஈகைகருணை உள்ளமதில் ஈண்டுதருந் தாயவள்!
ஈரமுள்ள நெஞ்சினுள் என்றுமேயிளச் சேயவள்!

உதயமதியம் இரவுயென உலகினில் இலங்குவள்!
உயர்வுதாழ்வு நிலையென உணர்வினில் துலங்குவள்!
ஊழியையுங் காலத்தையும் உருவகிக்குந் தலைமகள்!
ஊக்கத்தையும் ஆக்கத்தையும் நிருவகிக்குங் கலைமகள்!
எழிலொழுங்கு நேர்மையில் இலங்கிடும் இனியவள்!
எண்ணம்நினைவு வாய்மையில் துலங்கிடுங் கனியவள்!
ஏற்றமிறக்கம் பண்ணென எழுச்சிநல்கும் பாமகள்!
ஏற்றுவாக்கில் பண்பென இசைமிகுக்கும் நாமகள்!

ஐயம்விளக்கம் உபாயம் அனைத்தையுங் கொடுப்பவள்!
அச்சந்துக்கம் அபாயம் அனைத்தையுங் கெடுப்பவள்!
ஒப்பனை கற்பனை உருவுமாகும் எழிலவள்!
ஒப்புமை பேதமாகி ஒயிலுமாகுங் கலையவள்!
ஓவியம் காவியம் உறைந்திடும் நுண்ணியள்!
ஓதலில் வாதுவில் ஒளிர்ந்திடும் திண்ணியள்!
ஔடதம் விடமுமாய் யாதுமாகுங் கன்னியள்!
அன்னம் அமுதமாய் ஆர்த்திடும் அன்னையள்!

கல்விகேள்வி ஞானந்தரும் கலைவாணி வேணியள்!
கருத்திலொளி யோகந்தரும் வண்ணமயில் மேனியள்!
சங்கடங் களையுமதிச் சகலகலா வல்லியள்!
சத்தியத் துள்பொதிந்து சாதிக்கும் மெல்லியள்!
நறுமணத்துள் நாதத்துள் நடனமிடுந் தேவியள்!
நல்மனத்துள் நளினத்துள் நலந்தரும் மாதவள்!
மலரிதழில் இலைதளிரில் மணங்கமழுங் கலையவள்!
மனமலரில் கவிதையென மடல்விரிக்குங் கலைமகள்! 

 
கலைமகள் போற்றி போற்றி போற்றியே!
*** கலைமகள் அகவல் முற்றும் ***
 
***

அன்னையர் அந்தாதி (பகுதி: 1)

அன்னையர் அந்தாதி


காப்பு: 
கன்னியர் தேவியர் கடவுட் பாகத்துறை
அன்னையர் அந்தாதி முனைந்திட - முன்னவா
கற்பகப் பிள்ளாயுன் கழலடி தொழுதேன்
நற்றமிட் சொல்லாய் நிறை!
 
பாயிர அகவல்:
கேண்மிர் கேண்மீர் கேளிர் கேண்மீர்
செப்பலைக் கொஞ்சம் செவிமடு கேண்மீர்
முக்கண் தேற்றிய முழுமதி ஈண்டு
அக்கண் தோற்றிய அருளொளி எழுத்தை
அகத்தில் விளைத்த அணங்கியர் கருத்தை
இடக்கண் உருவகம் இலங்குதிரு மகளாய்
வலக்கண் என்பதும் வளர்கலை மகளாய்
முதற்கண் ஆவதும் மூத்தவள் பொருளாய்
8
சடையோன் தரிக்கும் முப்புறச் சடையாய்
சபையோர் தைக்கும் முப்பொருள் விடையாய்
பசுபதியார் தரும் பரம்பொருள் அறிந்து
பாவையார் இறும் நறும்பொருள் உணர்ந்து
உருப்பொருள் ஆகிய கலைமகள் தமையும்
பருப்பொருள் ஆகிய திருமகள் தனையும்
கருப்பொருள் ஆகிய பெருமகள் உமையும்
திருப்பொருள் ஏகிய கருப்பொருள் ஆக்கி
16
அத்தன் இயம்பும் அருமை உணர்ந்து
சித்தம் பயின்று செழுமை பயின்று
அவனவள் காட்டும் அற்புதப் பொருளை
அரவரவர் தீட்டும் அகப்பொருள் நலனை
அம்மையர் ஆகிய மும்மகள் என்றும்
மும்மகள் ஆகிய அன்னையர் என்றும்
முன்னையர் உள்ளும் முந்தை வினையை
அன்னையர் மெய்மை அந்தாதிப் பாவாய்
 

24
கலைமகள் ஊட்டிட தமிழ்ப்பால் உண்டு
கருத்தவள் காட்டிட காதற்பால் கொண்டு
அந்தாதி அருளிட கட்டளைப் படிவம்
ஆதிகள் விரியும் கட்டளைப் படியும்
அமையுங் கவிதை அற்புதந் தீட்டி
அணையா மனதுள் நற்பதம் மூட்டி
அடுத்தோர் புதுமையும் அகத்தே இயம்பி
அடுக்கும் முதலிலும் அகவல் விளம்பி
 


32
வடகலை தென்கலை கீழ்க்கலை மேற்கலை
வாழ்கலை என்றுமே வகைதொகை உணரா
இன்னமுந் தமிழின் இலக்கணந் தெரியா
இதுவரை எதுவுமே நலத்தினைப் புரியா
யாவுமே அறியா இளையோன் என்பால்
மேவிடுங் கலையா மனந்தனை வழங்கி
தன்னை உணர்த்தி தமிழும் உணர்த்தி
என்னில் முழுதுற எண்ணம் ஆகியே
  40
அன்னை அந்தாதி ஆக்கிடப் பணிக்க
பிள்ளைத் தமிழால் பேசிடத் துணிந்து
குருவருள் கனிய உளமுற வணங்கி
பரமனின் அடிமலர் பாதம் பணிந்தே
பக்தியில் மலரைப் பிணைந்து தொடுக்க
முத்தமிழ் அன்னை முனைந்து கொடுக்க
உத்தம புத்திரன் உரைப்பதும் ஈங்கே
சத்திய மொழியால் அன்னை அந்தாதி!
48
மறைபொருள் இஃதை மனனம் செய்தே
மனத்தால் உணர்ந்து தியானம் புரிகின்
இறைநலங் கனியும் இனிமை பெருகும்
குறைகள் அகலும் தடைகள் விலகும்!
புரியாப் பொருளும் புலப்படக் கூடும்!
தெரியாத் திறமும் வெளிவரக் கூடும்!
நிறைகள் நிறைத்து வளம்பல சேரும்
இறையின் அருளே! இறைவா அருளே!
56
வையகம் உய்க! வாழ்க்கை உய்க!
தாயகம் உய்க! தமிழும் உய்க!
கேண்மீர் உய்க! கேண்மை உய்க!
அண்டம் எங்கும் அன்பே உய்க!
பசுபதி ஆகினன் பாதம் போற்றி!
பாகம் பிரியாப் பகவதி போற்றி!
தம்முள் விரியும் தமிழே போற்றி!
எம்முள் நிறைகும் மும்மகள்
அம்மையரே போற்றி! போற்றி! போற்றியே!
64
*** பாயிர அகவல் முற்றும் ***
காணிக்கை: (சமர்ப்பணம்)
தமக்கைக்கு தாரத்திற்கு தாயாருக்கு சீர்முறையிலும்
சமர்த்துப் புத்திரனுக்கு முழுமையிலும் - தமக்குள்
அரும்பிய அருட்பாவை அன்னையர் அந்தாதியாய்
விரும்பிப் படைத்தோம் விருந்து!
அர்ப்பணம்:
ஆச்சி கலைவாணிக்கு கலைமகள் அந்தாதியும் - மனையாள்
ஆச்சி உண்ணாமலைக்கு அலைமகள் அந்தாதியும் - அன்னை
ஆச்சி மீனாட்சிக்கு மலைமகள் அந்தாதியும் - எங்களாருயிர்
அன்புப் புத்திரன் ஹரிராகவனிற்கு அனைத்துமாயும் ஆகுமே
அன்னையர் அந்தாதி அர்ப்பணம்.
அன்னையர் அந்தாதி
நூல்:
இறை வணக்கம்:
சென்னியுட் செறிந்து சிந்தையுட் சொரியும்
அன்னையர் மும்மகள் அந்தாதி நன்னெறி
விரிவருட் பொருளாய் விளைந்திடப் பணிவாம்
கரிமுகன் பதமலர்த் தாழ்!
என்றும் மும்மகளே துணை!
1. கலைமகள் அந்தாதி:
http://thamilkavithaikal.blogspot.com/2011/05/2.html
2. திருமகள் அந்தாதி (அலைமகள் அந்தாதி): 
http://thamilkavithaikal.blogspot.in/2011/06/3.html
3. அம்பிகை அந்தாதி (மலைமகள் அந்தாதி) : 
http://thamilkavithaikal.blogspot.in/2014/02/4.html
அன்னையர் அந்தாதி விளக்கம்: (பொழிப்புரை) Album
https://www.facebook.com/media/set/?set= a.1400954103470841.1
*** அன்னையர் அந்தாதி முற்றும் ***