Tuesday, May 17, 2011

அன்னையர் அந்தாதி (பகுதி: 1)

அன்னையர் அந்தாதி


காப்பு: 
கன்னியர் தேவியர் கடவுட் பாகத்துறை
அன்னையர் அந்தாதி முனைந்திட - முன்னவா
கற்பகப் பிள்ளாயுன் கழலடி தொழுதேன்
நற்றமிட் சொல்லாய் நிறை!
 
பாயிர அகவல்:
கேண்மிர் கேண்மீர் கேளிர் கேண்மீர்
செப்பலைக் கொஞ்சம் செவிமடு கேண்மீர்
முக்கண் தேற்றிய முழுமதி ஈண்டு
அக்கண் தோற்றிய அருளொளி எழுத்தை
அகத்தில் விளைத்த அணங்கியர் கருத்தை
இடக்கண் உருவகம் இலங்குதிரு மகளாய்
வலக்கண் என்பதும் வளர்கலை மகளாய்
முதற்கண் ஆவதும் மூத்தவள் பொருளாய்
8
சடையோன் தரிக்கும் முப்புறச் சடையாய்
சபையோர் தைக்கும் முப்பொருள் விடையாய்
பசுபதியார் தரும் பரம்பொருள் அறிந்து
பாவையார் இறும் நறும்பொருள் உணர்ந்து
உருப்பொருள் ஆகிய கலைமகள் தமையும்
பருப்பொருள் ஆகிய திருமகள் தனையும்
கருப்பொருள் ஆகிய பெருமகள் உமையும்
திருப்பொருள் ஏகிய கருப்பொருள் ஆக்கி
16
அத்தன் இயம்பும் அருமை உணர்ந்து
சித்தம் பயின்று செழுமை பயின்று
அவனவள் காட்டும் அற்புதப் பொருளை
அரவரவர் தீட்டும் அகப்பொருள் நலனை
அம்மையர் ஆகிய மும்மகள் என்றும்
மும்மகள் ஆகிய அன்னையர் என்றும்
முன்னையர் உள்ளும் முந்தை வினையை
அன்னையர் மெய்மை அந்தாதிப் பாவாய்
 

24
கலைமகள் ஊட்டிட தமிழ்ப்பால் உண்டு
கருத்தவள் காட்டிட காதற்பால் கொண்டு
அந்தாதி அருளிட கட்டளைப் படிவம்
ஆதிகள் விரியும் கட்டளைப் படியும்
அமையுங் கவிதை அற்புதந் தீட்டி
அணையா மனதுள் நற்பதம் மூட்டி
அடுத்தோர் புதுமையும் அகத்தே இயம்பி
அடுக்கும் முதலிலும் அகவல் விளம்பி
 


32
வடகலை தென்கலை கீழ்க்கலை மேற்கலை
வாழ்கலை என்றுமே வகைதொகை உணரா
இன்னமுந் தமிழின் இலக்கணந் தெரியா
இதுவரை எதுவுமே நலத்தினைப் புரியா
யாவுமே அறியா இளையோன் என்பால்
மேவிடுங் கலையா மனந்தனை வழங்கி
தன்னை உணர்த்தி தமிழும் உணர்த்தி
என்னில் முழுதுற எண்ணம் ஆகியே
  40
அன்னை அந்தாதி ஆக்கிடப் பணிக்க
பிள்ளைத் தமிழால் பேசிடத் துணிந்து
குருவருள் கனிய உளமுற வணங்கி
பரமனின் அடிமலர் பாதம் பணிந்தே
பக்தியில் மலரைப் பிணைந்து தொடுக்க
முத்தமிழ் அன்னை முனைந்து கொடுக்க
உத்தம புத்திரன் உரைப்பதும் ஈங்கே
சத்திய மொழியால் அன்னை அந்தாதி!
48
மறைபொருள் இஃதை மனனம் செய்தே
மனத்தால் உணர்ந்து தியானம் புரிகின்
இறைநலங் கனியும் இனிமை பெருகும்
குறைகள் அகலும் தடைகள் விலகும்!
புரியாப் பொருளும் புலப்படக் கூடும்!
தெரியாத் திறமும் வெளிவரக் கூடும்!
நிறைகள் நிறைத்து வளம்பல சேரும்
இறையின் அருளே! இறைவா அருளே!
56
வையகம் உய்க! வாழ்க்கை உய்க!
தாயகம் உய்க! தமிழும் உய்க!
கேண்மீர் உய்க! கேண்மை உய்க!
அண்டம் எங்கும் அன்பே உய்க!
பசுபதி ஆகினன் பாதம் போற்றி!
பாகம் பிரியாப் பகவதி போற்றி!
தம்முள் விரியும் தமிழே போற்றி!
எம்முள் நிறைகும் மும்மகள்
அம்மையரே போற்றி! போற்றி! போற்றியே!
64
*** பாயிர அகவல் முற்றும் ***
காணிக்கை: (சமர்ப்பணம்)
தமக்கைக்கு தாரத்திற்கு தாயாருக்கு சீர்முறையிலும்
சமர்த்துப் புத்திரனுக்கு முழுமையிலும் - தமக்குள்
அரும்பிய அருட்பாவை அன்னையர் அந்தாதியாய்
விரும்பிப் படைத்தோம் விருந்து!
அர்ப்பணம்:
ஆச்சி கலைவாணிக்கு கலைமகள் அந்தாதியும் - மனையாள்
ஆச்சி உண்ணாமலைக்கு அலைமகள் அந்தாதியும் - அன்னை
ஆச்சி மீனாட்சிக்கு மலைமகள் அந்தாதியும் - எங்களாருயிர்
அன்புப் புத்திரன் ஹரிராகவனிற்கு அனைத்துமாயும் ஆகுமே
அன்னையர் அந்தாதி அர்ப்பணம்.
அன்னையர் அந்தாதி
நூல்:
இறை வணக்கம்:
சென்னியுட் செறிந்து சிந்தையுட் சொரியும்
அன்னையர் மும்மகள் அந்தாதி நன்னெறி
விரிவருட் பொருளாய் விளைந்திடப் பணிவாம்
கரிமுகன் பதமலர்த் தாழ்!
என்றும் மும்மகளே துணை!
1. கலைமகள் அந்தாதி:
http://thamilkavithaikal.blogspot.com/2011/05/2.html
2. திருமகள் அந்தாதி (அலைமகள் அந்தாதி): 
http://thamilkavithaikal.blogspot.in/2011/06/3.html
3. அம்பிகை அந்தாதி (மலைமகள் அந்தாதி) : 
http://thamilkavithaikal.blogspot.in/2014/02/4.html
அன்னையர் அந்தாதி விளக்கம்: (பொழிப்புரை) Album
https://www.facebook.com/media/set/?set= a.1400954103470841.1
*** அன்னையர் அந்தாதி முற்றும் ***

11 comments:

 1. நான் உங்க கிட்டே தமிழ் படிக்க வரட்டுமா?

  ReplyDelete
 2. அவசரமாக ஆர்வத்தில் படிக்கும் பாடல்கள் அல்ல
  அமைதியாக அமர்ந்து மனதில் ஆழ பதியவைக்கும்
  பாடல்கள் விரைவில் புத்தகமாக காண ஆவல்

  ReplyDelete
 3. @V. Rajalakshmi

  தங்களின் வருகைக்கும் பதிவிற்கும் நன்றிகள் தோழி. மேலேயே சொல்லியிருக்கேனே ”இன்னமுந் தமிழைச் சரிவரத் தெரியா” என்று. அடியேன் இலக்கணம் அறிந்தோ, புலவர் பட்டமோ பெற்றவன் இல்லை. எழுதும் கொஞ்சம் தமிழ் ஏதோ விருப்பத்தால் வருகிறது. எல்லாம் இறை அருள்.

  இங்கே எழுதிய தமிழைப் படிக்கத்தானே? தாராளாமாக அடிக்கடி வாருங்கள். :)

  நன்றி.

  ReplyDelete
 4. @krshi

  //அவசரமாக ஆர்வத்தில் படிக்கும் பாடல்கள் அல்ல
  அமைதியாக அமர்ந்து மனதில் ஆழ பதியவைக்கும்
  பாடல்கள் விரைவில் புத்தகமாக காண ஆவல் ///

  உண்மை. அன்னையர் அந்தாதியை முழுமை செய்தபின் புத்தகமாக பதிப்பிக்க முயற்சிக்கிறேன். இதுதவிர மேலும் நண்பர்கள் சொன்னது போல் இந்த ப்ளாக்கிலுள்ள எல்லாக் கவிதைகளையும் பதிப்பிக்கவும் அவ்வமயம் முயற்சிக்கிறேன்.

  நல்ல பதிப்பாளர்களை அணுக வேண்டும். பார்ப்போம்.

  உங்களைப் போன்றோர்களின் நல்வரவும் ஆதரவும் புத்தகத்திற்கு மிக மிகத் தேவை.

  நன்றி.

  ReplyDelete
 5. //இங்கே எழுதிய தமிழைப் படிக்கத்தானே? தாராளாமாக அடிக்கடி வாருங்கள். :)//
  பயம் வேண்டாம் நேரில் வரமாட்டேன்!

  ReplyDelete
 6. //அடியேன் இலக்கணம் அறிந்தோ, புலவர் பட்டமோ பெற்றவன் இல்லை. //
  ரசிகர்கள் கொடுக்கும் பட்டம்தான் ஒருவரை உயர்த்துகிறது இது என் கருத்து எனக்கு நீங்க புலவராக தெரிகிறது அவ்வளவுதான்

  ReplyDelete
 7. ///பயம் வேண்டாம் நேரில் வரமாட்டேன்!

  பயமெல்லாம் இல்லை. தமிழ் படிப்பது என்பதுதான் பிரச்சினை; தமிழ் பேசலாம் வாருங்கள்!

  You are most welcome. விருந்தோம்பல் தமிழனின் சிறந்த பண்பாடு.

  ReplyDelete
 8. இந்த இலக்கிய தமிழைதான் சொன்னேன்
  தமிழ் பேச என்ன? வாயாடவே தெரியும்
  உங்க இலக்கிய தமிழை சொன்னேன்
  இருந்தாலும் கற்று கொண்டேன் கொஞ்சம் கொஞ்சம் உங்க கவிதைகளில்! நன்றி!

  ReplyDelete
 9. ///உங்க இலக்கிய தமிழை சொன்னேன்
  இருந்தாலும் கற்று கொண்டேன் கொஞ்சம் கொஞ்சம் உங்க கவிதைகளில்! ///

  நன்றி.

  ReplyDelete
 10. மிக்க அருமை. வெகு நாளைக்குப் பின் அழகிய எளிய தமிழ்த்தேன் உண்ட களிப்பு. வாழிய நீடு. இறையருள் எல்லா நலன்களையும் சேர்க்கட்டும்.

  ReplyDelete
 11. @Dr.G. SANAKARANARAYANAN

  தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றிகள் நண்பரே. இறையருளால் அனைவருக்கும் வளமும் நலமும் பெருகட்டும்.

  ReplyDelete