அன்னையர் அந்தாதி
(பகுதி: 4)
|
---|
3.
அம்பிகை அந்தாதி
|
இறை வணக்கம்:
ஆதிஅந்தமில் அத்தனொடு அங்கமாகி அண்டமெலாம் சோதிப்பரமாய் சேர்ந்திலங்கும் அம்மை - ஆதிபராசக்தியே நல்லவை யாவுமாகி நலத்தொடு யாதும்வெல்லும் வல்லமை ஈவாய் வலிந்து. |
அந்தாதிக் கட்டளை: அருவுருவாய் அணுவுயிராய் அண்டமெலாம் ஆனதொன்றாய் கருவறையாய் விரிவுரையாய் கண்துஞ்சாப் பெருவெளியாய் கருமவினைப் பராபரையாய் கடவுளுறைக் கருப்பொருளாய் திருவருளாய் பரம்பொருளாய் திறமருளும் மலைமகளே! பொன்னொளி பாய்ச்சியிருட் பொய்மையைப் போக்குவித்து மின்னலிடை வளர்மதியாய் மெய்யுணர்த்தி வளம்பெருக்கி இன்னலழித்து இன்பமளித்து இயல்புநிலை இயக்குவித்து அன்புமிகுத்து அமுதளித்து அருள்நல்கும் அன்னையே! |
அந்தாதி:
1. அணுவாகி அண்டமாகி அகிலமாளும் அன்னையள்!
அருவுருவாய் அவனவளாகி அதுவுமிதுவும்
யாதுமாகி அரனுறைத் திருவுருவாய் திருவிடத்துத் திருநிறைத் திருமதியாய் திருவுளமாய் பெருவுருவாய் பெம்மானாய் பெருவெளிப் பெருக்கத்துப் பேரழகாய் அருளுருவாய் அம்மையாய் அண்டமொடு ஆற்றலுமாகும் அணுவுயிரே!
2. அந்தமாதி அலகிலாது ஆடிநிற்கும் அம்மையள்!
அணுவுயிராய் ஆக்கியும் அடக்கியும் அகன்றும் அகிலத்துக் கணுவுயிராய் கரும்பிடைக் கருவாய் கால்வழி காணக்கரந்து நுணுகுயிராய் நுழைந்தும் நுதற்றியும் நுதுத்தும் நுவலொணா அணுகுயிராய் அன்புசால் அனைத்தாய் ஆடுகிறாய் அண்டமெலாமே!
3. ஆலமுண்ட கண்டனின் அகத்துறை மாதவள்!
அண்டமெலாம் அந்தரமாய் அணுநிறைப் பிண்டமாய் அகிலமொடு பண்டமெலாம் துகளதுவாய் பிணைப்பாய் வெற்றாய் பரமனொடு கண்டமெலாம் விடத்திருட் கருமையாய் உறைந்தும் கண்ணுறங்கா சண்டமெலாம் இடமிருந்து வலம்வரும் செய்நெறியாய் ஆனதொன்றே!
4. ஆற்றலாகி நம்பகத்தின் ஊற்றுமாகும் தேவியள்!
ஆனதொன்றாய் பலவாறாய் அண்டமொடு அருங்கோளாய் ஐம்பூதத் தானதொன்றாய் ஒளியிருளாய் தற்சுழலாய் சூழ்சுற்றாய் வியாபித்த வானமொன்றாய் வல்லூழியாய் வாயுவாய் மாவலியாய் வரம்பிலா ஞானமொன்றாய் இயற்கை நயந்துரைக்கும் நம்பிக்கைக் கருவறையே!
5. இயங்குநிலை மெய்ப்பொருளின் இகபரத்துச் சக்தியள்!
கருவறையாய் கருவுயிராய் காரியத்துக் காரணியாய் காணரியாத் திருமறையாய் தோற்றுவாய் தூண்டலாய் செயலுமாய் திறமுமாய் பெருநிதியாய் வளமதுவாய் பெரும்பேறாய் சித்தியாய் பெருஈடாய் வருநிறையாய் விழுச்செல்வ வளர்மதியாய் மாற்றாகும் விரிவுரையே!
6. இயற்கையாகி உய்வைத்தரும் இன்பநிலை முக்தியள்!
விரிவுரையாய் விளக்கொளிராய் விளக்கியும் விளங்கா வினைமதியார் பரிபுரையாய் பன்மாணாய்ப் பையப்பையப் பட்டுணரப் புரிந்தருளும் திரிபுரையாய் தெரிபொருள் தெய்வமுறு தெரிநிலையாய் தெள்ளமுதக் கரிமுகனாய் கடுவினை களைந்தறக் காத்திருப்பாய் கண்துஞ்சாயே!
7. ஈஸ்வரியாய் பரம்பொருளாய் இலங்குமுயர் தாயவள்!
கண்துஞ்சா(ப்) பெற்றியளாய் கனிந்துருகும் கருணையும் கவனமும்நடு வண்துஞ்சா நன்னெஞ்சும் வகைவகுத்த நன்னெறியொடு மனத்துரமும் எண்ணஞ்சா நினைவகமும் ஈந்துவக்கும் இனிமையும் எழில்வடிவும் பெண்ணஞ்சா(ப்) பொறுமையும் பணிவன்பும் பொழிந்தருளும் பெருவெளியே!
8. ஈன்றவற்றில் கருப்பொருளாய் துலங்குமெழில் தூயவள்!
பெருவெளியாய் சூலாகிவேலாகும் பெருவிதியாய் பரமான்மப் பெருஞ்சுடர்த் திருவொளியாய் திறந்தவெளி திகழெழிலாய் தூவெளிக்கும் மனவெளிக்கும் அருளொளியாய் அன்னையர்க்கும் அன்னையாய் அப்பருக்கும் அம்மையாய் கருவொளியாய் கணமுமாற்றல் கலையாதொளிரும் கருப்பொருள் கருமவினையே!
9. உயிருடலாய் உளமதியாய் உலவிநிற்கும் உமையவள்!
கருமவினைப் பலன்முதலாய் காலமீறாய்க் கலந்தாடுங் காரிகையாய் தருமவினைப் பயன்மெய்யாய் தாய்மைக்கு நாயகியாய் தவத்தொடராய் சருவவினைப் பெருகிவகுத்து சமைத்திசை கூடிக்கழித்து சக்திசிவமாய் பருவவினைப் பண்ணெழுதி பல்லுயிரைப் பயிர்செய்கும் பராபரையே!
10. உணர்வகமாய் பலநலமாய் உறுதிநிற்கும் இமையவள்!
பராபரையாய் பகுத்தளித்த பராசக்தியைப் பரிந்துவக்கப் பகிருதலும் பராமரித்துப் பிறர்களிக்கப் பண்ணுதலும் பரானுபவப் பரமானந்தத் தராதரமாய் துய்ப்பதிலும் துன்பமதைத் துடைப்பதிலும் ஐம்புலத்துச் சராசரமாய் உள்ளமதாய்ச் சலனிப்பதும் சுவாசிப்பதுவும் கடவுளுறையே!
11. ஊழியாட்டம் நர்த்தனமாய் உலகையாட்டும் வல்லியள்!
கடவுளுறைக் காதலியாய்க் காமமுங்கூடிக் கலந்தாடிக் கண்டவிடத்து இடரொடுக்கி இன்பங்கூட்டி இகபரத்தொடு இயக்கமுமாய் இருவினைத் தொடருக்குங் காரணியாய் தொடர்பற்றுத் துறப்பிற்கும் பூரணியாய் கடவுமுறை படைத்துமுறு கடமையொடு நடவுசெய்யுங் கருப்பொருளே!
12. ஊக்கமொடு ஊட்டமுமாய் உவகையூட்டும் மெல்லியள்!
கருப்பொருளாய் கருமவினைக் காதைமுதல் காயமதின் கடைவிதித்தும் உருப்பொருளாய் உயிர்மெய் உய்த்தெழ யாங்கணமும் வளர்சமைத்தும் எருப்பொருளாய் தேவையாயும் இயக்கும்பல் ஆசையாயும் இலங்கியும்நற் திருப்பொருளாய் வளமமைத்துத் தேடலஃதில் வாகையாகும் திருவருளே!
13. எந்தையுமாய் அன்னையுமாய் எழுந்தருளும் இறையவள்!
திருவருளாய் ஒன்றுதலை சிரத்ததுவாய் இருத்தலை தாய்தந்தை குருவருளாய் மூன்றுதலை குளிர்மதியை நாட்டலை கூரறிவால் அருவிதியாய் அஞ்சுதலை அகற்றுதலை ஆறுதலை அளித்தலை இருநிதியாய் எழுதலை எட்டுதலை இயலுவாய் பரம்பொருளே!
14. எண்ணமுமாய் திண்ணமுமாய் இதயமாகும் நிறையவள்!
பரம்பொருளாய் நவத்தலை பற்றுதலை நலமாக்கும் பதியறிவாய் உரப்பொருளாய் உவத்தலை உயர்தலை பலமாக்கும் உளமதுவாய் வரப்பொருளாய் வாழுதலை வாழ்த்தலை வளமாக்கும் திடமதுவாய் தரப்பொருளாய் துணிதலை சிறத்தலை செயலாக்கும் திறமருளே!
15. ஏற்றமுமாய் மாற்றமுமாய் இயக்கமாகும் மென்மையள்!
திறமருளும் ஆக்கமுமாய் திரவியத்து ஊக்கமுமாய் தேற்றமுமாய் அறமருளும் தாக்கமுமாய் அன்புமிகு காக்கலுமாய் ஆற்றலுமாய் புறமருளும் தூக்கமுமாய் புன்மையிலா நோக்கமுமாய் போற்றலுமாய் மறமருளும் ஏற்றமுமாய் மாற்றமுமாய் வாழ்வாகும் மலைமகளே!
16. ஏதிலார்க்கும் வாழ்வியலாய் இன்பமாகும் தன்மையள்!
மலைமகளே! மாண்புதரும் வலிமையிலும் மகிழ்வுதரும் எளிமையிலும் தலைமகளே! அன்புநிறைத் தியாகத்திலும் அறிவுவளர் தியானத்திலும் நிலைமகளே! பண்புஉறை நெஞ்சினிலும் பாசந்தரும் நினைவினிலும் சிலைமகளே! சிங்கத்துறு ஊர்தியிலும் சிரித்தருளும் பொன்னொளியே!
17. ஐக்கியமாய் பாலிணையாய் அறங்காட்டும் பரமவள்!
பொன்னொளி பொருந்து புவனத்துப் பொறிநுகர்ப் பொழிலாய் முன்னராய் பகுத்தவிரு மோகனப் பாலொப்பாய் முனைந்துயர இன்னுயிர் துணையாய் இணையாய் பிணையாய் இயலதுவாய் பின்னமும் இன்பமது பின்னலாய்ப் பெருகிவரப் பாய்ச்சியருளே!
18. ஐங்கரனின் தாயமுதாய்த் திறங்கூட்டும் உரமவள்!
பாய்ச்சியிருட் கருவறையுள் பந்தமொடு பாசமதுவுந் தொடக்கியிடர் மாய்ச்சியருங் கவிதையென வந்துதிக்கக் காத்திருந்து வாடாதுடற் காய்ச்சியருட் கருவுயிரைக் கொடியிடைக் கண்மலர ஆர்த்தபெரும் ஆய்ச்சியருட் கனிந்திடுவள் அகற்றுவள் அகத்திருட் பொய்மையையே!
19. ஒப்பிலியாய் அன்பழகாய் உயர்வுகாட்டுந் தலைமகள்!
பொய்மையைப் புரட்டை பொறாமை பிழையை பழியஞ்சாச் செய்மையைப் பலியை சிந்தனைச் செருக்கை சேரழுக்கை மெய்மையைப் புரியாமும் மலத்தை மனமாசை மயக்கை வெய்மையைப் பிணியை வெறுப்பை வெல்லுவள் போக்குவித்தே!
20. ஒற்றுமைதன் திடவளமாய் வெற்றிதீட்டும் மலைமகள்!
போக்குவித்து மடிமையை பொல்லாமை பேதைமையை புறந்தள்ள நோக்குவித்து பொறுப்பொடு நல்வாழ்வை முன்னெடுக்க நம்பிக்கை தூக்குவித்து ஒற்றுமையை தூண்டுவித்து தொய்விலா முயற்சியை ஊக்குவித்து உழைப்பதால் ஒளிருவள் வெற்றிகளால் மின்னலிடையே!
21. ஓங்காரம் உடுக்கையிடி ஒலியிலங்கும் மாயவள்!
மின்னலிடை ஒளிகசிய மேகத்திடை ஒலிமுழங்க மென்னகைத்து அன்புநிறை ஆற்றலஃது அகிலத்திடை அலைகடலாய் ஆர்ப்பரிக்க பொன்புனை மாயையென புவிவான் சுழலுங்கால் புனலனலாய் இன்னமுது ஞானமொடு எழிலொழுக இலங்குமுயிர் வளர்மதியே!
22. ஓம்புமுயிர் மேம்படவே ஒளிதுலங்கும் தூயவள்!
வளர்மதியாய் அகத்தான்மா வாழ்வெலாம் நன்னெறியில் உய்த்துணர இளங்கதிராய் அகந்தையவா ஐயந்திரிபொடு அச்சமயர்வு இடரகற்றி களஞ்சியமாய் அகத்துறைக் கருணையொடு அன்புமிகக் கனிந்தருள வளந்தருவாய் அகத்தொளி மேன்மையுற பொய்யகல மெய்யுணர்த்தியே!
23. ஔடதமாய் விடத்தையும் அமுதமாக்கும் அன்னையள்!
மெய்யுணர்த்தி ஒன்றுளொன்றாய் உள்வெளியாய் ஒன்றுபலவாய் விலக்கீர்ப்பாய் செய்யுணர்த்தி தீதினுள்நன்றாய் செப்பஞ்செய்யும் தெளிதேர்வாய் தீர்வாய்தலைப் பெய்யுணர்த்தி பிரிவொன்றாய் பெற்றிமைஉயிர் பெறுவுழற்சிப் பரிமாற்றாய் வெய்யுணர்த்தி நிழலுணர்த்தி விடமுறுக்கி விளைகுவாய் வளம்பெருக்கியே!
24. ஔவியத்து முடத்தையும் அழித்தருளும் சென்னியள்!
வளம்பெருக்கி வினைவகை வகைவகுத்து விளைவித்து வாழும்வகைக் களம்பெருக்கி விதிவிதித்தும் கருதுவகைக் களிமிகுத்து ஆடும்வகைத் தளம்பெருக்கி தரணியதைச் சமப்படுத்திச் சீரமைப்பாய் உவந்திடுவாய் உளம்பெருக்கி ஊனமொடு உளம்புமதி உளக்கோட்டம் இன்னலழித்தே!
25. கருப்பொருளில் உயிர்மெய்யாய் கலந்திலங்கும் தாயவள்!
இன்னலழித்து எஞ்ஞான்றும் இனிமைதரும் இயல்பினளாய் ஏதின்மைதம் தின்னலழித்து சந்ததமும் தெளிவுநிறைப் பெருவுளத்தாய் சேய்மைவடுக் கன்னலழித்து காயமாற்றினும் கனிவுபொழி கருப்பொருளாய் கெடுந்துளிர் உன்னலழித்து உளத்துடிப்பாய் உயிர்மெய்யாய் உறைவாயே இன்பமளித்தே!
26. கருணையுளோர் அன்னையராய்க் கனிந்திலங்கும் தூயவள்!
இன்பமளித்து இருமையும் இருபாலரும் இசைந்தொழுக இயங்குதற்பால் அன்புமளித்து அருளொடும் அருங்கதியும் அரவணைப்பும் அரும்புதற்பால் நன்புமளித்து நற்கருவியாய் நடுவுரையும் நன்பொருளாய் உதிரத்திசுவொடு என்புமளித்து இன்னுயிரை ஈன்றுமுயர்த் தாய்மையாகும் இயல்புநிலையே!
27. சங்கரியாய் கொற்றவையாய் சங்கரிக்கும் நெருப்பவள்!
இயல்புநிலை இசையற்று இயலிரிந்தார் இடுமிட்டீறு இடும்பைமிகு செயல்விளை தற்பமற்பம் செறுந்திறல் சிரமொழிக்க தழல்வெற்பு புயல்பொழி பேரிடர்மாரி பிரளயமொடு புவியண்டம் புரளப்புதுக்கி துயர்வினை துடைத்தறத் தூவினை தொடர்வாய் இயக்குவித்தே!
28. சங்கரனார் அங்கவையாய் சஞ்சரிக்கும் பொருப்பவள்!
இயக்குவித்து இடையறா இயங்கியலாய் இனிமையிலும் இளமையிலும் மயக்குவித்து முழுவுரிமை மையயீர்ப்பென மண்ணிகத்துள் மதிநலத்துள் பயக்குவித்து பருவகாலம் பகலிரவுமென பண்படத்தேற்றி பயிற்றுவித்து அயக்குவித்து அரணுவித்து அடைக்கலமும் அருளுகிறாய் அன்புமிகுத்தே!
29. தருமத்தின் துணைக்கோடாய்த் தரணியாளும் துர்க்கையள்!
அன்புமிகுத்து அகிலத்துயிர் அனைத்தும் அண்டிநின்று அமைதியேக இன்புமிகுத்து இயற்கைநல இசைபேணும் இதயமுளார் இறும்பூதெய்த நன்புமிகுத்து நன்றிமிகுத்த நல்லார்க்கும் நடுவுநடுவார்க்கும் நல்குவாய் வன்புமிகுத்து வாய்மைக்கும் வண்மைக்கும் முக்திநல அமுதளித்தே!
30. தருணத்தில் இணைவாழ்வாய்த் திறமருளும் இயற்கையள்!
அமுதளித்து அறிவொடுநல் அனுபவமும் அனைத்தும் பகிர்ந்துயிர் சுமுகமாய் சங்கமிக்கும் சுந்தரியாய் சுகித்துச்சகிக்கும் சகியவளாய் சமுத்திரச் சக்தியளாய் சால்பூட்டும் சாதனைச்சார்பில் துணைவியாய் அமுதசுரபி அன்னையாய் அன்புகாட்டும் அருமகளாய் அருள்நல்கே!
31. பசுபதியாய்ப் பாசமாகிப் பரமுமாகும் அன்னையள்!
அருள்நல்கும் ஆனந்தவாரி அம்பிகையாய் ஆற்றலொடு ஆழ்ந்துணரத் தெருள்நல்கும் தெளிஞானத் தேவதையாய் தேற்றமொடு திண்மையாய் மருள்நல்கும் மறுமையாய் மதிவெல்கும் மரணமிலா மாற்றுமாய்முப் பொருள்நல்கும் பற்றுமகற்றி பொருண்மை பரகதிநல்கும் அன்னையே! 32. பசுங்கிளியாய் நேசமாகும் பராசக்திஓம் அம்மையள்! அன்னையே! அருள்ஞான அமுதூட்டும் அகிலாண்ட அம்மையே! தன்னையே அறிந்தார்க்கு தந்தையும் தம்மையும் தெரிக்காட்டும் முன்னையே! முக்திதரும் முழுமுதற் மெய்மையே! மும்மையே! நின்னையே சரணானோம் நின்மலி! நிறைவுதருவாய் அருவுருவே! |
* அம்பிகை அந்தாதி முற்றும் *
|
அம்பிகை அகவல்: (தலைப்புக் கவிதை) |
அணுவாகி அண்டமாகி அகிலமாளும் அன்னையள்! அந்தமாதி அலகிலாது ஆடிநிற்கும் அம்மையள்! ஆலமுண்ட கண்டனின் அகத்துறை மாதவள்! ஆற்றலாகி நம்பகத்தின் ஊற்றுமாகும் தேவியள்! இயங்குநிலை மெய்ப்பொருளின் இகபரத்துச் சக்தியள்! இயற்கையாகி உய்வைத்தரும் இன்பநிலை முக்தியள்! ஈஸ்வரியாய் பரம்பொருளாய் இலங்குமுயர் தாயவள்! ஈன்றவற்றில் கருப்பொருளாய் துலங்குமெழில் தூயவள்! உயிருடலாய் உளமதியாய் உலவிநிற்கும் உமையவள்! உணர்வகமாய் பலநலமாய் உறுதிநிற்கும் இமையவள்! ஊழியாட்டம் நர்த்தனமாய் உலகையாட்டும் வல்லியள்! ஊக்கமொடு ஊட்டமுமாய் உவகையூட்டும் மெல்லியள்! எந்தையுமாய் அன்னையுமாய் எழுந்தருளும் இறையவள்! எண்ணமுமாய் திண்ணமுமாய் இதயமாகும் நிறையவள்! ஏற்றமுமாய் மாற்றமுமாய் இயக்கமாகும் மென்மையள்! ஏதிலார்க்கும் வாழ்வியலாய் இன்பமாகும் தன்மையள்! ஐக்கியமாய் பாலிணையாய் அறங்காட்டும் பரமவள்! ஐங்கரனின் தாயமுதாய்த் திறங்கூட்டும் உரமவள்! ஒப்பிலியாய் அன்பழகாய் உயர்வுகாட்டுந் தலைமகள்! ஒற்றுமைதன் திடவளமாய் வெற்றிதீட்டும் மலைமகள்! ஓங்காரம் உடுக்கையிடி ஒலியிலங்கும் மாயவள்! ஓம்புமுயிர் மேம்படவே ஒளிதுலங்கும் தூயவள்! ஔடதமாய் விடத்தையும் அமுதமாக்கும் அன்னையள்! ஔவியத்து முடத்தையும் அழித்தருளும் சென்னியள்! கருப்பொருளில் உயிர்மெய்யாய் கலந்திலங்கும் தாயவள்! கருணையுளோர் அன்னையராய்க் கனிந்திலங்கும் தூயவள்! சங்கரியாய் கொற்றவையாய் சங்கரிக்கும் நெருப்பவள்! சங்கரனார் அங்கவையாய் சஞ்சரிக்கும் பொருப்பவள்! தருமத்தின் துணைக்கோடாய்த் தரணியாளும் துர்க்கையள்! தருணத்தில் இணைவாழ்வாய்த் திறமருளும் இயற்கையள்! பசுபதியாய்ப் பாசமாகிப் பரமுமாகும் அன்னையள்! பசுங்கிளியாய் நேசமாகும் பராசக்திஓம் அம்மையள்! அம்பிகை போற்றி போற்றி போற்றியே! |
*** அம்பிகை அகவல் முற்றும் ***
|
***
|
Saturday, February 8, 2014
அன்னையர் அந்தாதி (பகுதி: 4)
Subscribe to:
Posts (Atom)