Showing posts with label ஆசை. Show all posts
Showing posts with label ஆசை. Show all posts

Monday, December 21, 2009

ஆசை

ஆசை


வெயிலின் அருமை நிழலில் தெரியும்
         வீணரே ஏன் வாதம்?
விதியின் வழிதான் பயணம் தொடரும்
         மனிதரே ஏன் கோபம்?

அண்ணன் தம்பி அனைத்தும் வேடம்
         அளவு மீறிப் பழகாதே...
அடிப்பார் நெஞ்சில் துடிப்பாய் நொடியில்
         அன்பு மனது கேளாதே...
கொண்ட மனைவி கொடுத்த பிள்ளை
         கூட வருவோர் யாருமில்லை...
பந்த பாசம் அறுத்து நின்றாலே
         பாவி மனதில் துயரமில்லை...
                                                                               (வெயிலின்...)
கூட்டம் போடும் உறவுகள் எல்லாம்
         இருக்கிற வரைதான் சொந்தமடா...
குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை
         கோபம் கொள்ளுதல் பாவமடா...
இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது
         கண்களில் தெரிகிற மாயமடா...
இரவும் பகலும் மாறும் என்பது
         இயற்கை தருகிற பாடமடா...
                                                                               (வெயிலின்...)
சுவரே இல்லாச் சிறைதான் ’உலகம்’
         சூட்சும உண்மை தெரிகிறதா?
சுற்றம்; சூழல்; வாழும் காலம்;
         பெற்ற தண்டனை புரிகிறதா?
போன வினைக்குக் கிடைக்கும் பலனை
         புரியாது இங்கே மயங்குகிறாய்...
புதிய வினையால் தொடரும் விளைவைப்
         புரிந்து கொள்ளத் தயங்குகிறாய்...
                                                                               (வெயிலின்...)
இருப்பினில் வந்ததும் எடுத்துச் செல்வதும்
         பாவ புண்ணியச் சுமைதானே...
இன்பம் துன்பம் என்பது எல்லாம்
         வினையால் வருகிற நிலைதானே...
பாழும் உலகில் மோகம் கொண்டு
         காதல்; ஆசை; வளர்க்காதே
பழைய பாக்கியைத் தீர்க்கவே வந்தோம்
         புதிய பாவத்தைச் சேர்க்காதே...
                                                                               (வெயிலின்...)
ஆசை என்பது ஆட்டம் தொடர
         ஆண்டவன் வைத்த தூண்டிலடா...
அனுபவம் என்பது நிகழ்கிற வரையில்
         அடுத்தும் பிறவிகள் தோன்றுமடா...
கொடுத்த வாழ்வை வாழ்ந்து முடித்தால்
         கடக்கும் தூரம் குறையுமடா...
குறுக்கு வழியில் பறக்க நினைத்தால்
         மீண்டும் குருவி பிறக்குமடா...
                                                                               (வெயிலின்...)
எதிரே வருகிற இன்னலைக் கண்டு
         அழுது துடிப்பது மடமையடா...
எதையும் தாங்கும் இதயம் கொண்டு
         வாழ்ந்து முடிப்பது கடமையடா...
இல்லை என்றே அறிந்த பிறகும்
         ஏங்கித் தவிப்பது துன்பமடா...
இருப்பதைப் பகிர்ந்து அன்பினில் திளைத்தால்
         எல்லா நாளும் இன்பமடா...
                                                                               (வெயிலின்...)
தேவையைச் சுருக்கி ஆசையை விடுத்தால்
         பின்வினைப் பாவம் ஓடுமடா...
புலன்களை அடக்கி இறைவனைத் தொழுதால்
         புத்தியில் ஞானம் கூடுமடா...
பெற்றதைக் கொண்டே வென்றிட வேண்டும்
         வாழ்வின் நோக்கம் முக்தியடா...
பிறவிச் சுழற்சி மறுமை அறுத்தால்
         பெறுவோம் மோட்சச் சித்தியடா...
                                                                               (வெயிலின்...)











***