Monday, December 21, 2009

ஆசை

ஆசை


வெயிலின் அருமை நிழலில் தெரியும்
         வீணரே ஏன் வாதம்?
விதியின் வழிதான் பயணம் தொடரும்
         மனிதரே ஏன் கோபம்?

அண்ணன் தம்பி அனைத்தும் வேடம்
         அளவு மீறிப் பழகாதே...
அடிப்பார் நெஞ்சில் துடிப்பாய் நொடியில்
         அன்பு மனது கேளாதே...
கொண்ட மனைவி கொடுத்த பிள்ளை
         கூட வருவோர் யாருமில்லை...
பந்த பாசம் அறுத்து நின்றாலே
         பாவி மனதில் துயரமில்லை...
                                                                               (வெயிலின்...)
கூட்டம் போடும் உறவுகள் எல்லாம்
         இருக்கிற வரைதான் சொந்தமடா...
குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை
         கோபம் கொள்ளுதல் பாவமடா...
இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது
         கண்களில் தெரிகிற மாயமடா...
இரவும் பகலும் மாறும் என்பது
         இயற்கை தருகிற பாடமடா...
                                                                               (வெயிலின்...)
சுவரே இல்லாச் சிறைதான் ’உலகம்’
         சூட்சும உண்மை தெரிகிறதா?
சுற்றம்; சூழல்; வாழும் காலம்;
         பெற்ற தண்டனை புரிகிறதா?
போன வினைக்குக் கிடைக்கும் பலனை
         புரியாது இங்கே மயங்குகிறாய்...
புதிய வினையால் தொடரும் விளைவைப்
         புரிந்து கொள்ளத் தயங்குகிறாய்...
                                                                               (வெயிலின்...)
இருப்பினில் வந்ததும் எடுத்துச் செல்வதும்
         பாவ புண்ணியச் சுமைதானே...
இன்பம் துன்பம் என்பது எல்லாம்
         வினையால் வருகிற நிலைதானே...
பாழும் உலகில் மோகம் கொண்டு
         காதல்; ஆசை; வளர்க்காதே
பழைய பாக்கியைத் தீர்க்கவே வந்தோம்
         புதிய பாவத்தைச் சேர்க்காதே...
                                                                               (வெயிலின்...)
ஆசை என்பது ஆட்டம் தொடர
         ஆண்டவன் வைத்த தூண்டிலடா...
அனுபவம் என்பது நிகழ்கிற வரையில்
         அடுத்தும் பிறவிகள் தோன்றுமடா...
கொடுத்த வாழ்வை வாழ்ந்து முடித்தால்
         கடக்கும் தூரம் குறையுமடா...
குறுக்கு வழியில் பறக்க நினைத்தால்
         மீண்டும் குருவி பிறக்குமடா...
                                                                               (வெயிலின்...)
எதிரே வருகிற இன்னலைக் கண்டு
         அழுது துடிப்பது மடமையடா...
எதையும் தாங்கும் இதயம் கொண்டு
         வாழ்ந்து முடிப்பது கடமையடா...
இல்லை என்றே அறிந்த பிறகும்
         ஏங்கித் தவிப்பது துன்பமடா...
இருப்பதைப் பகிர்ந்து அன்பினில் திளைத்தால்
         எல்லா நாளும் இன்பமடா...
                                                                               (வெயிலின்...)
தேவையைச் சுருக்கி ஆசையை விடுத்தால்
         பின்வினைப் பாவம் ஓடுமடா...
புலன்களை அடக்கி இறைவனைத் தொழுதால்
         புத்தியில் ஞானம் கூடுமடா...
பெற்றதைக் கொண்டே வென்றிட வேண்டும்
         வாழ்வின் நோக்கம் முக்தியடா...
பிறவிச் சுழற்சி மறுமை அறுத்தால்
         பெறுவோம் மோட்சச் சித்தியடா...
                                                                               (வெயிலின்...)











***

4 comments:

  1. // பந்த பாசம் அறுத்து நின்றாலே
    பாவி மனதில் துயரமில்லை... //
    புரிகின்றது ஆனால் முடியவில்லை. இந்த சிலந்தி வலையில் தானே வாழ்க்கை பின்னப்பட்டுள்ளது.

    // பழைய கணக்கை தீர்க்கவே வந்தோம்
    புதிய பாவம் சேர்க்காதே... //
    மாயையில் ஆட்பட்டு பொழுதும் சுகம் காணும் நாம் தெரிந்தும் செய்யும் தவறுகள் ஆயிரம். கலியில் கூட்டத்தான் முடியும் குறைப்பது கடினம்.
    // இருப்பதைப் பகிர்ந்து அன்பினில் திளைத்தால்
    எல்லாம் இங்கே இன்பமடா... //
    நல்ல வரிகள், ஆனால் மூன்று தலைமுறை போய் முப்பது தலைமுறைக்கு சொத்து சேர்க்கும் மனிதன் மாறுவது எங்கனம்.

    // பேரின்பம் என்கிற ஞானமடா...
    ஒருமுகப் படுத்தி இறைவனைத் தொழுதால்
    உனக்குள் ஞானம் ஊறுமடா...
    தேவைகள் சுருக்கி ஆசையை விடுத்தால்
    இருவினைப் பாவம் தீருமடா... //
    நல்ல பாடல். நல்ல அனுபவ வரிகள். மிக்க நன்றி.

    ReplyDelete
  2. தங்களின் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நண்பர் பித்தன் அவர்களே...

    உங்களின் கருத்துக்களை மிகவும் வரவேற்கிறேன். தாமரை இலைத் தண்ணீராய், பற்றற்ற தன்மையில் வாழ முயற்சிக்கவும், ஆசைகளை விடுத்து வாழ்வின் நோக்கத்தை நினைவுறுத்தவுமே இங்கே முயற்சித்துள்ளேன்.

    பேராசைகளால் வாரிசுகளுக்குச் சொத்து சேர்ப்போரெல்லாம் முக்தி பெறும் வாய்ப்பை இழந்து விடுகின்றார்கள் என்பதே உண்மை. பண்ணிய பாவம் சும்மா விடுமா?

    நன்றி.

    ReplyDelete
  3. //சுவரே இல்லாச் சிறைதான் ’உலகம்’
    சூட்சும உண்மை தெரிகிறதா?//
    //ஆசை என்பது ஆட்டம் தொடர
    ஆண்டவன் வைத்த தூண்டிலடா...//--அருமை தோழரே! வாழ்ககையின் தத்துவத்தை இந்த 4 வரிகளுக்குள்ளே என்ன ஆயாசமாக புகுத்திவிட்டீர்...
    ஆம்....இப்படி சொன்ன நீர் இந்த இடத்தில்
    முரண்பட்டதேன்?(ஒரு வேளை என் புரிதல் தவறா?) விளக்கம் தேவை...
    //அனுபவம் என்பது நிகழ்கிற வரையில்
    அடுத்தும் பிறவிகள் தோன்றுமடா..//.
    ஆசையின் விளைவால் செயல்கள் தோற்றுவிக்கப்பட்டு அதன் பொருட்டு தோன்றுவதே அனுபவம் எனக்கொள்வோம். இப்படி இருக்க அனுபவம் நிகழ்கிற வரையின் என்று கூறியது....எப்ப்டி? அனுபத்தை உணரும் வரையிலா?....விளக்கம் தாருங்கள்.

    ReplyDelete
  4. //அனுபவம் என்பது நிகழ்கிற வரையில்
    அடுத்தும் பிறவிகள் தோன்றுமடா...
    ஆசை என்பது அனுபவமாகிப் பூர்த்தியாகத வரையில் மீண்டும் மீண்டும் பிறவிகள் தோன்றிக் கொண்டே இருக்கும் என்பது கருத்து.

    அதற்காகத்தான் “ஆசை அறுமின்; ஆசை அறுமின்; ஈசனோடாயினும் ஆசை அறுமின்” என்றார்கள்.

    தீராத ஆசைகளே மறுபிறவிக்குக் காரணம்.

    ReplyDelete