Monday, September 27, 2010

சங்கு கொண்டே இங்கு ஊதுவோமே...

சங்கு கொண்டே இங்கு ஊதுவோமே...


கவிதைப் பின்புலம்:

ஆர்குட் தமிழ் குடும்பத்தில் திரு.சசி கலா என்பவர் “முதல்வன் - கருணாநிதி” என்ற கீழ்க்கண்ட கவிதையை பதிவு செய்திருந்தார். அதற்கு
எதிர்வினையாக இயற்றியது இது.

அவரது கவிதை:

ஆயிரம் பேரொளி அபிநயம் !!
அரும்தமிழ் காவலன் கண்டான்.!
'தஞ்சை பெருங்கோவில்" ஆயிரம் ஆண்டு காப்பியம் ஆனது !!!
காவியம் ஆனது! கவிகள் உள்ளவரை "கலைஞர்" உண்டு!!
இல்லை! இல்லை !! தமிழ் உள்ளவரை "தலைமகன்' உண்டு!
அகிலம் புகழ "ஆயுள் முதல்வன்" வாழ்வான் !!வாழ்வான் !!
எங்கள் "முதல்வன்" என்றும் வாழ்க!!
நடக்கும் நாயகன் நலமுடன் வாழ்க!!
முத்தான மு. க. சத்தான காவியம்!!
மக்கள் மனதில் நீங்கா ஓவியம்!!
ஆயிரம் தலைமுறை வாழ்த்தும்!!! வணங்கும் !!
கருணாநிதி!! இல்லை இல்லை !! " கருணா நதி !!
கங்கை என வற்றாது....அவன் புகழே!!


முச்சங்காய் இக்கவிதை மூன்று பகுதிகளாக இங்கே பரிணமித்ததன் காரணம்:

முதற்சங்கம் அமுதூட்டும்; மொய்க்குழலார் ஆசை
நடுச்சங்கம் நல்விலங்கு பூட்டும்; கடைச்சங்கம்
ஆம்போ ததுஊதும்; அம்மட்டோ? இம்மட்டோ?
நாம்பூமி வாழ்ந்த நலம்!

- பட்டினத்தார்

நன்றி: எழுதத் தூண்டிய திரு.சசி கலா அவர்களுக்கும், ஆர்குட் தமிழ் குழுமத்திற்கும்
http://www.orkut.co.in/Main#CommMsgs?cmm=8383044&tid=5521034039879975108


***


தங்கத் தமிழ் மன்னவனை
     தரணி போற்றும் மும்முடியை
தஞ்சையிலே கோயில் செய்த
     சிங்கமந்த ராஜ ராஜனை
மங்கு புகழ் செய்ய
     மானிலத்தில் யாரும் உண்டோ?
ஆயிரம் ஆண்டு கண்டால்
      யாருந்தான் விழா எடுப்பார்!

பொங்கு தமிழ் மக்களிடம்
     பொய் வேடம் போட்டாலும்
அந்த அந்த வேளையிலே
     அரசாங்கம் விழா எடுக்கும்!
எங்கும் நடப்பது தான்
      இதிலென்ன பெருஞ் சிறப்பு?
எந்த அரசாய் இருந்தாலும்
      இந்த விழா எடுக்காதா?

சிங்களம் வென்று நின்ற
     செந்தமிழர் நம் மண்டலம்
இன்று கண்ணீரைச் சிந்த
     இறையாண்மை பேசி விட்டு
தம்புகழ் தேடி நின்றால்
     மங்களம் தான் பாடோமா?
பங்கம் இங்குச் செய்தாரை
      சங்கு கொண்டே ஊதோமா?


வாயுரை வாழ்த்த வந்த
      வள்ளலார் கவிமார் எல்லாம்
தாயினை வாழ்த்தி நிற்பார்
      தமிழினை வாழ்த்தி நிற்பார்
ஆவுடை கோயில் கண்ட
      அரசனை வாழ்த்தி நிற்பார்
நாவுடைக் கயவர் தானே
      நச்சினைப் பேணி நிற்பார்!!!

ஆயிரம் ஆண்டு கண்டது
      ஆவுடையார் கோயில் ஐயா
பாயிரம் யாருக்கு இங்கே?
      பஜனைகள் யாருக்கு இங்கே?
தாயகம் வாழ வைத்த
      தஞ்சை மன்னன் எங்கே?
நோயிலும் தற்புகழ் தேடும்
      தன்னல நெஞ்சம் எங்கே?

ஆயிரமாம் வருட விழா
      ஆனந்தமாய்ப் பங்கு கொள்ள
வாய்த்ததே வாய்ப்பு என்று
      வணங்குதல் பணிவின் மாண்பு!
வாய்ப்பிலே வந்ததற்கு எல்லாம்
      வாழ்த்துரை தேடித் தேடி
பாயினைப் பிராண்டி நின்றால்
      பாடாரோ கடைசிச் சங்கு?


ஆருரார் இசைச் சங்கமமாய்
      ஆடல் வல்லானுக்கும் இங்கே
ஆயிரம் நாட்டியக் கலைஞர்
      ஆடியமை வாழ்த்தவே வேண்டும்!
சாதனை செய்த புதல்வி
      சத்தியமாய் பத்மா இங்கே!
ஆவன செய்தல் வேண்டும்
      அவருக்கும் கல்லில் எழுத்து!

தேவனைப் பாடிப் பாடிப்
      திசையெலாம் இறை முழக்கம்
பாவனை காட்டிக் காட்டிப்
      பாவையர் செய்த நடனம்
சாவதே இல்லை தமிழில்
      சங்கங்கள் என்றுமே உண்டு
ஆவுடையான் அருளே எங்கும்
      அருந்தமிழருக்கு நிற்க என்றும்!

ஆலயச் சங்கமம் என்றும்
      அருளினை வளர்த்தல் வேண்டும்
ஆணவம் அழிந்து ஒழிந்து
      அடக்கந்தான் மலர வேண்டும்
மானுடம் பெருகி நின்று
      மனிதர்கள் சிறக்க வேண்டும்
தானெனும் அகந்தை அழியச்
      சங்கொலியே முழங்க வேண்டும்!!!

***

4 comments:

  1. நன்றி பிரியமுடன் பிரபு.

    ReplyDelete
  2. @K.D.K.
    தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் நண்பரே.

    ReplyDelete