| வாழ்க்கை ஏதுக்கடா? | |
|---|---|
| 1 | நல்லதை நினைக்காமல் - உனக்கு |
| 2 | அன்பினை வழங்காமல் - உனக்கு அண்டமும் ஏதுக்கடா? - மனிதா அறத்தினை ஒழுகாமல் - உனக்கு ஆக்கங்கள் ஏதுக்கடா?
|
| 3 | பண்பினை வளர்க்காமல் - உனக்கு பாசங்கள் ஏதுக்கடா? - மனிதா பகைமை களையாமல் - உனக்கு படிப்பினை ஏதுக்கடா?
|
| 4 | நேர்மை நில்லாமல் - உனக்கு நெஞ்சம் ஏதுக்கடா? - மனிதா கூர்மை இல்லாமல் - உனக்கு குழப்பம் ஏதுக்கடா?
|
| 5 | தாய்மை போற்றாமல் - உனக்கு தாயகம் ஏதுக்கடா? - மனிதா வாய்மை காக்காமல் - உனக்கு வாய்ப்பும் ஏதுக்கடா?
|
| 6 | பாதியில் பெண்ணின்றேல் - உனக்கு பயணம் ஏதுக்கடா? - மனிதா நீதியில் கண்ணின்றேல் - உனக்கு ஞானம் ஏதுக்கடா?
|
| 7 | களவுகள் எளிதாயின் - உனக்கு காவலன் ஏதுக்கடா? - மனிதா இலவசம் வலிதாயின் - உனக்கு யாதுமே ஏதுக்கடா?
|
| 8 | கடமையும் இலதாயின் - உனக்கு கவலை ஏதுக்கடா? - மனிதா குடிசையும் இலதாயின் - உனக்கு குடும்பம் ஏதுக்கடா?
|
| 9 | சாதிகள் ஏதுக்கடா? - உனக்கு சண்டைகள் ஏதுக்கடா? - மனிதா சமரசம் காணாமல் - உனக்கு சமயங்கள் ஏதுக்கடா?
|
| 10 | பேதங்கள் ஏதுக்கடா? - உனக்கு பேதமை ஏதுக்கடா? - மனிதா வாதங்கள் ஏதுக்கடா? - உனக்கு வன்மங்கள் ஏதுக்கடா?
|
| 11 | மோதல்கள் ஏதுக்கடா? - உனக்கு மோகங்கள் ஏதுக்கடா? - மனிதா காதலே இல்லாமல் - உனக்கு காமம் ஏதுக்கடா?
|
| 12 | சோதனை செய்யாமல் - உனக்கு சோகங்கள் ஏதுக்கடா? - மனிதா சாதனை இல்லாமல் - உனக்கு சரித்திரம் ஏதுக்கடா?
|
| 13 | வல்லினம் ஏதுக்கடா? - உனக்கு மெல்லினம் ஏதுக்கடா? - மனிதா இடையினம் நாடாமல் - உனக்கு இன்பம் ஏதுக்கடா?
|
| 14 | வம்புகள் ஏதுக்கடா? - உனக்கு வன்முறை ஏதுக்கடா? - மனிதா இன்பத்தை நாடாமல் - உனக்கு துன்பங்கள் ஏதுக்கடா?
|
| 15 | மதவெறி ஏதுக்கடா? - உனக்கு மொழிவெறி ஏதுக்கடா? - மனிதா இனவெறி ஏதுக்கடா? - உனக்கு பணவெறி ஏதுக்கடா?
|
| 16 | ஆதியை அறியாமல் - உனக்கு ஆன்மா ஏதுக்கடா? - மனிதா சோதியைக் காணாமல் - உனக்கு சுயமும் ஏதுக்கடா?
|
| 17 | தேடலும் இல்லாமல் - உனக்கு தெய்வம் ஏதுக்கடா? - மனிதா தேம்பலும் நில்லாமல் - உனக்கு தேசம் ஏதுக்கடா?
|
| 18 | தீமைகள் விலகாமல் - உனக்கு தேர்ச்சியும் ஏதுக்கடா? - மனிதா தீட்டுகள் அகலாமல் - உனக்கு தேசியம் ஏதுக்கடா?
|
| 19 | பொருளே அறியாமல் - உனக்கு போதனை ஏதுக்கடா? - மனிதா இருளே அகலமால் - உனக்கு இதயம் ஏதுக்கடா?
|
| 20 | பொன்னகை ஏதுக்கடா? - உனக்கு பொய்மை ஏதுக்கடா? - மனிதா புன்னகை புரியாமல் - உனக்கு புதுமையும் ஏதுக்கடா?
|
| 21 | எளிமை கொள்ளாமல் - உனக்கு ஏளனம் ஏதுக்கடா? - மனிதா ஏழ்மை கொல்லாமல் - உனக்கு ஏற்றம் ஏதுக்கடா?
|
| 22 | அச்சம் ஏதுக்கடா? - உனக்கு ஆண்மை ஏதுக்கடா? - மனிதா பிச்சைப் பொருளாலே - உனக்கு பிழைப்பும் ஏதுக்கடா?
|
| 23 | உழைப்பே இல்லாமல் - உனக்கு உணவும் ஏதுக்கடா? - மனிதா பிழைப்பே இல்லாமல் - உனக்கு பேச்சும் ஏதுக்கடா?
|
| 24 | புனிதம் ஏதுக்கடா? - உனக்கு புத்தியும் ஏதுக்கடா? - மனிதா மனிதம் மதிக்காமல் - உனக்கு மாண்பும் ஏதுக்கடா?
|
| 25 | மயக்கம் ஏதுக்கடா? - உனக்கு மவுனம் ஏதுக்கடா? - மனிதா தயக்கம் ஏதுக்கடா - உனக்கு தைரியம் ஏதுக்கடா?
|
| 26 | உயிரினை மதிக்காமல் - உனக்கு உணர்வுகள் ஏதுக்கடா? - மனிதா உரிமையை மதிக்காமல் - உனக்கு விடுதலை* ஏதுக்கடா? * சுதந்திரம்
|
| 27 | பெருமையை துதிக்காமல் - உனக்கு பிறப்பும் ஏதுக்கடா? - மனிதா உறவினை மதிக்காமல் - உனக்கு சிறப்பும் ஏதுக்கடா?
|
| 28 | பிரிவுகள் ஏதுக்கடா? - உனக்கு பிளவுகள் ஏதுக்கடா? - மனிதா விருப்புகள் குறையாமல் - உனக்கு வெறுப்புகள் ஏதுக்கடா?
|
| 29 | சிறகுகள் இல்லாமல் - உனக்கு சிறைகள் ஏதுக்கடா? - மனிதா வரையறை இல்லாமல் - உனக்கு வேட்கை ஏதுக்கடா?
|
| 30 | உதவிகள் செய்யாமல் - உனக்கு உடலும் ஏதுக்கடா? - மனிதா உயர்வினை அடையாமல் - உனக்கு உளமும் ஏதுக்கடா?
|
| 31 | சீர்மை படையாமல் - உனக்குச் சிந்தனை ஏதுக்கடா? - மனிதா மூர்க்கம் உடையாமல் - உனக்கு வந்தனை ஏதுக்கடா?
|
| 32 | மேன்மை அடையாமல் - உனக்கு மெத்தனம் ஏதுக்கடா? - மனிதா மேதமை அடையாமல் - உனக்கு தத்துவம் ஏதுக்கடா?
|
| 33 | கேண்மை பிடிக்காமல் - உனக்கு கேள்வி ஏதுக்கடா? - மனிதா கீழ்மை தடுக்காமல் - உனக்கு கேளிக்கை ஏதுக்கடா?
|
| 34 | ஆட்டம் ஏதுக்கடா? - உனக்கு அகந்தை ஏதுக்கடா? - மனிதா பாட்டம் ஏதுக்கடா? - உனக்கு பற்றும் ஏதுக்கடா?
|
| 35 | வாக்கே தெளியாமல் - உனக்கு வாட்டம் ஏதுக்கடா? - மனிதா வஞ்சகம் ஒழியாமல் - உனக்கு ஓட்டும் ஏதுக்கடா?
|
| 36 | ஆக்கம் புரியாமல் - உனக்கு ஆத்திரம் ஏதுக்கடா? - மனிதா நோக்கே தெரியாமல் - உனக்கு வாழ்க்கை ஏதுக்கடா? |
| *** | |
Monday, February 14, 2011
வாழ்க்கை ஏதுக்கடா?
Saturday, February 12, 2011
காதலர் தினம்!
| காதலர் தினம்! |
| அன்பே என்றும் அவனியிலே அடிப்படை என்றே ஆதரித்தே நாளும் மகிழ்ந்து கொண்டாடி நலத்தொடு சிறப்புற வாழ்ந்திடவே வாழ்வின் வசந்தக் கணங்களுக்கு வந்திடும் நேசத் திருநாளில் காதல் மிளிரும் இதயங்களே காதலர் தினத்து வாழ்த்துக்களே! நினைவோ கனவோ நிஜமோ நெஞ்சில் காதல் நிறைந்திடவும் மகிழ்பவர் கண்டு மனமாற மகிழ்வே கொண்டு சிறப்புறவும் பாசக் கிளிகள் என்னாளும் பாரில் காதல்பண் பாடிடவும் வாசமலராய் மனங்கள் எல்லாம் நேசம் பேசுமோர் நினைவுநாளே! அன்பை உளங்கள் பகிர்ந்திடவும் அன்பை உதடுகள் பகர்ந்திடவும் பிளவுகள் விலகி வாழ்ந்திடவும் பிரிவினை அகலச் சேர்ந்திடவும் பேதங்கள் துறந்து பேசிடவும் வாதங்கள் மறந்து கூடிடவும் மனங்கள் ஒன்றி மகிழ்ந்திடவும் மனிதம் போற்றும் நன்னாளே... காதலைச் சொல்லும் தருணமோ? கருணையும் கனிவும் பொழியுமோ? கோபமும் மோதலும் ஊடலும் கொள்ளை போகாத் திருநாளாம் வாய்ப்பினை நல்கும் நன்நாளே வளரட்டும் காதலும் என்னாளும் வாழ்த்தியே மகிழ்வோம் பொன்னாளை வாழிய காதலர் நன்னாளே! |
| *** |
Monday, December 20, 2010
தமிழர் உலகம்!
| தமிழர் உலகம்! |
| கிளைகளில் கூடு கட்டினால் வேரிலே தீ; கிளையில் இலை துளிர்த்தால் வேரிலே வென்னீர் கிளைகளிலும் பல வேளைகளில் இலைகள் உதிரும் வெட்கத்தைத் தொலைத்த வேர்களில் சாதனை மவுனம் மகரந்தச் சேர்கைக்காக அலைகிறது மன்மத அம்புகள் நகல்களின் புதுப்பிப்பில் நக்கலாய் நோபல் கனவுகள் உறக்க உல்லாசத்தில் விழிக்க மறுக்கும் மாக்கள் எச்சில் சுகத்தில் குரைக்கும் சில்லறை ஜால்ராக்கள் சுரண்டலின் மிச்சத்தில் எலும்பாய் சோம்பல் சாலைகள் சுய முன்னேற்றங்கள் இடைத் தரகர் பேரத்தில் இலவச முதலீட்டில் கொழித்துச் செழிக்கிறது கொள்ளை மறக்காமல் தமிழுக்கும் அவ்வப்போது இலஞ்ச அர்ச்சனை இணையமா? உலகமா? இசையா. இணையா இதயங்கள் போட்டியால் அல்ல பொறாமையால் புகையும் எரிச்சல்கள் திருட்டையும் ரசிக்கும் மாந்தரின் இளித்தவாய் வேடிக்கை நண்டுக் குணத்தால் என்றுமே நொண்டும் குதிரை சண்டிமாடாய் தனித்தீவாய் முன்னேற மறுக்கும் சமூகம் அறிவிலிகள் தேசத்தில் என்றும் அறிவாளிகள் சிறுபான்மை வீரியம் கொண்ட வித்துகள் மாத்திரம் காற்றில் நம்பிக்கை ”யாதும் ஊரே யாவரும் கேளிர்”! வசந்தம் என்பதும் சுழற்சியில் நிச்சயிக்கப்பட்ட விதியே! |
| *** |
Thursday, October 28, 2010
குலம்!
| குலம்! | ||||||||||||||||||||
| எனது சில எண்ணங்களைக் குறள்களாக, ஐயன் திருவள்ளுவரின் திருக்குறளின் நீட்சியாக ”குறள் ++” என்னும் அடைப்பின் கீழ் கொண்டுவர நினைக்கிறேன். இஃது கைப்பேசி2 என்பதும் போலும் இன்னொரு முயற்சி. உங்களின் கருத்துக்கள் எனது எண்ணங்களைச் செழுமைப் படுத்தலாம். பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.
| ||||||||||||||||||||
|
| ||||||||||||||||||||
| குறள் : | ||||||||||||||||||||
| ||||||||||||||||||||
|
| ||||||||||||||||||||
| விளக்கவுரை: | ||||||||||||||||||||
| 1. பிறப்பொக்கும் இயற்கை பெறுங்குடிப் பேணுவதேன் பொருளுரை: குலப்பேதம் மறைந்து அழியக் குடிமக்கட்கு ஒரே வழி, அதனை அதன் அடிப்படை மூலத்திலேயே விலக்கி வைத்தலும் மேலும் முழுவதுமாக மறந்து விட்டு விடுதலும் தான். பொருளுரை: சமூதாயத்தின் சீர்கேடான, குடிமக்களின் இழுக்கான சாதிப் பிரிவு என்பது, சாதிக்கான ஒதுக்கல் எனும் சலுகைத் திட்டம் என்கின்ற பிடிப்பு மிக்க தொடர்ச்சி இருக்கும் வரையிலும் எவ்வாறு சாகும்? பொருளுரை: தகுதிகளை உடைய தக்கவரைச் சேரும் தலைமைகளால் நல்லது விளையும். தரப்படும் சலுகைகள் என்பவை பொருள் மிகுந்தவரைச் சாரின் அதனால் விளையும் அதன் உண்மைப் பயன் துயரமே. (மிடி = துன்பம்). இன்னொரு வகையில்; தகுதியுடைய தக்காரைச் சேரும் சலுகையால தலைமை நலம் தரும், அதுவே பொருள் மிக்காரைச் சாரின் துயரத்தையே தரும் எனவும் பொருள் கொள்ளலாம். (தரும் என்பதைத் நலம் தரும் எனவும்; தரும் சலுகை எனவும் பொதுவாக்கிக் கொள்ளலாம்.) | ||||||||||||||||||||
|
| ||||||||||||||||||||
| *** |
Wednesday, October 27, 2010
கண்மணி அன்போடு...
| கண்மணி அன்போடு... |
| என் சிந்தனைக்குள் நீயும் இருப்பாய் நம்பிக்கையோடு! என் சிந்தனை முழுவதும் இருக்க வேண்டுமென எண்ணாதே.... அன்பே உலகில் உன்னைத்தவிர என்னையும் உன்னைப் போலவே பலர் நேசிக்கவும் நேசிக்கப் படவும் விரும்புகிறார்கள் பல மனிதர்களின் புரிதலுக்கு நான் வேண்டுமாம் சாதனைகள் செய்ய மனம் தேவை பயணம் செய்ய கவனம் தேவை கோளத்தின் அட்சய தீர்க்க ரேகைகளின் இடைவிட்ட சந்திப்புக் கணங்களில் மாத்திரம் நீயும் நானும் ஊடாடலாம்... நீ நீயாகவும் நான் நானாகவும் நாம் நாமாகவும் இவ் உலகில் பல சமயங்களில் செயல்பட ஏன் வாழவும் வேண்டியவர்கள் எப்போதும் பதிலுக்குப் பதில் பேசிக் கொண்டும் ஆற்றும் பணியைப் பார்த்துப் பார்த்து பங்கெடுக்க அடம்பிடித்து அடிப்படை தெரியாமல் பலமுறை விழிப்பாய் ஏன் சொல்லிக் கொடுக்க மாட்டீர் என்று வம்பிழுத்து நான் கற்றுக் கொண்டால் வெற்றி பெற்றுவிடுவேன் என்றுதான் சொல்லித்தர மாட்டீர்கள் என்று கோபப்பட்டு... அழுது... சே சே... சரியான இம்சை நீ! என் சிந்தனையைச் சிதற வைத்து என்ன சுகம் காணுகின்றாய் என் இனியவளே? வளர்ந்தாலும் நீ இன்னும் சிறுபிள்ளை தான்... என்றால் நீங்களும் தான் என்பாய்!!! ஐயோ நான் என்ன செய்ய? |
|
|
| *** |
Sunday, October 24, 2010
தமிழ் மொழி!
| தமிழ் மொழி! |
| எடுப்பு: |
| தமிழே! தமிழே! தமிழே! - இந்தத் தரணியின் உயரிய தவத்திரு மொழியே! அருளே! தமிழே! அமுதே! - இந்த அவனியின் இருளறும் அருட்பெரு மொளியே! |
|
|
| தொடுப்பு: |
| தமிழே! தமிழே! தமிழே! - இந்த தரையினில் கடலெனத் தவழ்ந்திடும் எழிலே! வளமே! கதிரே! தமிழே! - இந்த வையகத் தொளிரும் வரம்பிலாப் பொருளே! (தமிழே...) |
|
|
| நடப்பு: |
| 1. இறை மொழி: |
| பரமனின் பனிமொழி தமிழே! - அந்தக் குருபரன் அருளிய உறுமொழி தமிழே! அரனுரைத் திருமொழி தமிழே! - அழகு அறுமுக இளையனின் அருள்மொழி தமிழே! திரிபுரை உரைமொழி தமிழே! - தெய்வக் கரிமுக முதல்வனின் கனியுரை தமிழே! திருமறை உறைமொழி தமிழே! - செல்வத் தரணியின் நிறைமொழி முதன்மொழி தமிழே! (தமிழே...) |
|
|
| 2. மறை மொழி: |
| அமரனின் திருமுறை தமிழே! - ஆன்ற அறிவுடை முனிகளின் மனமொழி தமிழே! குமரனின் குருமொழி தமிழே! - அவன் குறிப்பிடும் பரம்பொருள் ஓமொலி தமிழே! ’வாசிவாசி’ என்னுவது தமிழே! - சிவ வாக்கிய மறைமொழி உன்னுவது தமிழே! ஆதிசிவம் ஆனபொருள் தமிழே! - கூடி ’அன்பே சிவம்’ ஆகும்பொருள் தமிழே! (தமிழே...) |
|
|
| 3. நிறை மொழி: |
| அருமறை உரைவதும் தமிழே! - அதில் உறைபெறு திருமுறை வழிமொழி தமிழே! கருவுடைத் திருமொழி தமிழே! - எங்கும் கருத்தொடு உயிரென விரிந்ததும் தமிழே! உருவுடை உணர்வும் தமிழே! - உலகில் உருமாறிப் பலவாகி உதித்ததும் தமிழே! திருவுடைத் திரவியம் தமிழே! - நல் திருவிடக் குலத்துயர் முதலதும் தமிழே! (தமிழே...) |
|
|
| 4. நிலை மொழி: |
| முச்சங்கம் யாத்ததும் தமிழே! - மூல முதல்வனும் முருகனும் காப்பதும் தமிழே! முச்சுவை வார்த்ததும் தமிழே! - முதல் மூவேந்தர் கூத்தாடிக் காத்ததும் தமிழே! முப்பாலைத் ஆர்த்ததும் தமிழே! - புவி மூத்தகுடி சாற்றிவரும் மூத்தமொழி தமிழே! தப்பாமல் வாழ்வதும் தமிழே! - இந்தத் தரணியில் இளமை எப்போதும் தமிழே! (தமிழே...) |
|
|
| 5. மூல மொழி: |
| அகத்தியோன் வகுத்தவகை தமிழே! - நல் அகத்தையும் புறத்தையும் தொகுத்ததும் தமிழே! சிலம்புமொழி செப்புவதும் தமிழே! - செங் காப்பியத்துள் தொன்மைதனைச் சாற்றுவதும் தமிழே! மூதுரையுங் கூறுமொழி தமிழே! - திரு மூலனுரை மூவாயிரம் முகிழ்த்ததும் தமிழே! ஞானியரின் போதமொழி தமிழே! - அவர் நாதவொலி வேதமொழி என்பதுவும் தமிழே! (தமிழே...) |
|
|
| 6. கலை மொழி |
| சித்தர்களின் சிந்தைமொழி தமிழே! - அவர் சிந்தைவழி செய்தபணி செப்புமொழி தமிழே! கவிஞர்களின் சந்தமொழி தமிழே! - அவர் கலைபொழிய நெஞ்சுருகி சிந்துமொழி தமிழே! இசைவேளர் மரபுமொழி தமிழே! - அவர் இசையோடு பண்பாட வந்தமொழி தமிழே! கலைவாணர் பேசுமொழி தமிழே! - அவர் கலையாடிக் கவிபாடிக் கொஞ்சுமொழி தமிழே! (தமிழே...) |
|
|
| 7. வண் மொழி |
| பழையதும் நிலையதும் தமிழே! - பண்டு வளமையும் எளிமையும் வலிமையும் தமிழே! அழகியல் நளினமும் தமிழே! - என்றும் இளமையில் செழுமையில் விளைவதும் தமிழே! இலக்கியத் தரமெனில் தமிழே! - மொழி இனிமையும் திறமையும் ஆழமும் தமிழே! கலையதன் மேன்மை தமிழே! - நற் கவிப்பொருள் செறிவும் நிறைவும் தமிழே! (தமிழே...) |
|
|
| 8. இயல் மொழி: |
| இயற்கையின் முதன்மொழி தமிழே! - என்றும் இயலிசை நாடகம் என்பதும் தமிழே! நயத்துரை கனிமொழி தமிழே! - என்றும் நலத்தொடு களிப்பினை நல்குதும் தமிழே! வையத்து எழில்மொழி தமிழே! - என்றும் வனப்பொடு வளத்தினை வழங்குதும் தமிழே! உயர்வொடு திகழ்வதும் தமிழே! - என்றும் உதிரத்தில் உணர்வினில் உய்வதும் தமிழே! (தமிழே...) |
|
|
| 9. சுவை மொழி: |
| எல்லை இல்லாதது தமிழே! - எங்கும் ஏகியே பரவிடும் இன்பமும் தமிழே! இல்லை என்னாதது தமிழே! - எங்கும் இயங்கிடும் நிலையிலும் ஏற்றமும் தமிழே! சொல்லில் சிறந்தது தமிழே! - எங்கும் சுயத்தொடு நயப்பதும் சுவைப்பதும் தமிழே! வல்லமை நிறைந்தது தமிழே! - சட்ட வரைமுறைத் தெளிவையும் வகுத்திடும் தமிழே! (தமிழே...) |
|
|
| 10. தண் மொழி: |
| வண்மையும் மென்மையும் தமிழே! - நல் வண்ணமும் பண்ணும் முழக்கிடும் தமிழே! திண்மையும் தெளிவும் தமிழே! - நல் கண்ணியம் புண்ணியம் துலக்கிடும் தமிழே! அண்மையும் தண்மையும் தமிழே! - நல் உண்மையும் அன்பையும் புகல்வதும் தமிழே! பண்பையும் பகிர்வதும் தமிழே! - நல் நுண்கலை நுட்பம் நுவல்வதும் தமிழே! (தமிழே...) |
|
|
| 11. பொன் மொழி: |
| கடலினை முனைந்ததும் தமிழே! - முதலில் கடலொடு முகிழ்த்ததும் முகிழ்ந்ததும் தமிழே! கடலினைக் கடைந்ததும் தமிழே! - முதலில் கடலினைக் கடந்து களித்ததும் தமிழே! நலத்தினை வளர்த்ததும் தமிழே! - முதலில் நன்னெறி ஒழுக்கம் நவின்றதும் தமிழே! அகத்தினில் செழித்ததும் தமிழே! - முதலில் அறநெறிப் பொதுமறை அளித்ததும் தமிழே! (தமிழே...) |
|
|
| 12. நன் மொழி: |
| பொறுப்புரை பொழிவதும் தமிழே! - முதல் புரிதலை அறிதலைப் படைத்ததும் தமிழே! நறுக்குரை நயமெனில் தமிழே! - முதல் நல்லவை அல்லவை நயத்ததும் தமிழே! முறுக்குரை மொழிவதும் தமிழே! - முதல் மொழியெனத் தடத்தினைப் பதித்ததும் தமிழே! சிறப்புரை ’முத்தெனில்’ தமிழே! - முதல் சிந்தனைச் சொத்தெனில் சிறப்பதும் தமிழே! (தமிழே...) |
|
|
| முடிப்பு: |
| தமிழே! தமிழே! தமிழே! - இந்தத் தரணியின் முதன் மொழி தமிழே! அருளே! தமிழே! அமுதே! - இந்த அவனியின் முதல் நிலை அழகே! தமிழே! தமிழே! தமிழே! - இங்கு உயிரும் மெய்யாய் உறைந்திடும் தாயே! தமிழே! தமிழே! தமிழே! - இங்கு உளத்துள் உணர்வாய் நிறைந்ததும் நீயே! |
|
|
| *** |
Tuesday, October 19, 2010
கைபேசி (பகுதி: 2)
| கைபேசி! (பகுதி: 2) | ||||||||||||||||||||
| கைபேசிக் கவிதையின் நீட்சியாக, குறள் வகையில் சில கருத்துக்களைச் சொல்ல விளைந்தேன். உண்மையில் முன்னர் எழுதிய குறளைத் திருத்தவே முயன்றேன். அஃது ஒரு அத்தியாயமாகவே நீண்டு விட்டது. கைபேசி நாகரீகத்தை நெறிப்படுத்தக் குறளால்தான் முடியுமோ? நீங்களே சொல்லுங்களேன்.
| ||||||||||||||||||||
|
| ||||||||||||||||||||
| குறள் : | ||||||||||||||||||||
| ||||||||||||||||||||
|
| ||||||||||||||||||||
| விளக்கவுரை: | ||||||||||||||||||||
| 1: நோக்கக் குழையா நுண்ணலைக் கைப்பேசி கேட்கக் குழையுந் தரும். நோக்கக் குழையா நுண் அலைக் கைப்பேசி கேட்கக் குழையும் தரும். பொருளுரை: நோக்கினாலும் குழைந்து இளகா நுண்ணலைக் கைபேசி, ஒலி கேட்கக் குழைவினைத் தரும். அதாவது நம் மனதை இளகச் செய்யும். மேலும் நாம் ஒலிப்பதைக் கேட்கத் தன் காதினைத் தரும் என்றும் பொருள் படும். (குழை - காது) 2: காணாது மறையும் கைபேசி கண்டாலும் நாணாது நன்றே நகும். காணாது மறையும் கைபேசி; கண்டாலும் நாணாது நன்றே நகும். பொருளுரை: எங்கோ தொலைந்து காணாது போகும் கைபேசி கண்ணுக்கு மீண்டும் கிட்டினாலும் நாணாதே நன்றாகத் தன் இயல்போடு ஒலிக்கும். உம் எனும் உகாரத்தால் கண்டாலும் காணாவிட்டாலும் அதாவது எப்போதுமே நாணாது நன்றாக நகும் என்பதும் பொருளாகும். கண்ணில் காணாது மறைந்து விட்டாலும் அஃது எழுப்பும் ஒலியால் அதன் இருப்பிடத்தைக் காணலாம் என்பது உட்பொருள். 3: இயைந்தே கைபேசி இயம்பினும் நெடண்மை முயங்கிச் சிதைக்கும் செவி. இயைந்தே கைபேசி இயம்பினும், நெடு அண்மை முயங்கிச் சிதைக்கும் செவி. பொருளுரை: எத்தனை தான் ஒப்பும்படியான இனிய மொழியினைக் கொடுப்பினும் கைபேசியைக் காதிற்கு அண்மையில் நெடு நேரம் கொண்டு கேட்டால், அஃது முயன்று விரைவில் செவியின் செயல்பாட்டைச் சிதைத்துவிடும். எனவே காது கெட்டுவிடும் ஆதலின் குறைவான பயன் பாட்டிற்கு மட்டும் கைப்பேசியைப் பயன படுத்துதல் நல்லது என்பது பொருள். 4: இம்மியே இயக்கினும் இணைக் கைப்பேசி விம்மியே பயக்குந் துயர். இம்மியே இயக்கினும், இணைக் கைப்பேசி விம்மியே பயக்கும் துயர். பொருளுரை: [வாகனத்தை அல்லது வேறு ஒன்றை இயக்கிக் கொண்டிருக்கையில்] இம்மி அளவு நேரமே எனினும் இணையாக இயக்கும் கைபேசி, [கவனத்தைச் சிதற வைப்பதால் பயன் படுத்துவருக்கு மாத்திரம் அன்றி அஃது அனைவருக்கும் இன்னலை] பெருந் துன்பத்தை நல்கி விடும். ஆதலின் வேறொன்றை இயக்கும் சமயத்தில் கைபேசியையும் கூடவே இணையாகப் பயன் படுத்துதல்; ஏன் முயற்சித்தலே கூடத் தவறு என்பது ஈண்டு பெறத் தக்கது. 5: தெவிட்டு மொலி தெறின் கைப்பேசி செவிட்டு வழிக்கே செயும். தெவிட்டு மொலி தெறின், கைப்பேசி செவிட்டு வழிக்கே செயும். பொருளுரை: துள்ளும் கைபேசி ஒலியை தெவிட்டும் அளவிற்கு அதிகமாகக் கொள்ளுதல் நிச்சயம் செவிட்டுக்கே வழி செய்து உடல் நலத்தையும், உள நலத்தையும் பாதித்து விடும். ஆதலின் உயரிய ஒலியளவைத் தவிர்த்து மென்மையாகவும் குறைவாகவும் கொள்ளுதல் நலம் என்பதாம். அளவிற்கு மீறிய அமிர்தமும் விடம்தானே? பொருளுரை: சந்தையை, சந்தைப் படுத்தும் கூப்பாட்டை; விளம்பரத்தை, அறைகூவலை கைபேசியின் கண் கிடைக்கும் வாய்ப்புக்களிலெல்லாம் முன்னோக்கிப் பரப்புதல் பயனர் நிந்தையையே பதிலாக விளைவிக்கும். பயனாளிகளுக்குக் கைபேசி வழி சந்தைப் படுத்துதல் உண்மையில் எரிச்சலூட்டும் அணுகுமுறை. | ||||||||||||||||||||
|
| ||||||||||||||||||||
| *** |