Monday, December 20, 2010

தமிழர் உலகம்!

தமிழர் உலகம்!

கிளைகளில் கூடு கட்டினால்
வேரிலே தீ;
கிளையில் இலை துளிர்த்தால்
வேரிலே வென்னீர்
கிளைகளிலும் பல வேளைகளில்
இலைகள் உதிரும்
வெட்கத்தைத் தொலைத்த வேர்களில்
சாதனை மவுனம்

மகரந்தச் சேர்கைக்காக அலைகிறது
மன்மத அம்புகள்
நகல்களின் புதுப்பிப்பில் நக்கலாய்
நோபல் கனவுகள்
உறக்க உல்லாசத்தில் விழிக்க
மறுக்கும் மாக்கள்
எச்சில் சுகத்தில் குரைக்கும்
சில்லறை ஜால்ராக்கள்

சுரண்டலின் மிச்சத்தில் எலும்பாய்
சோம்பல் சாலைகள்
சுய முன்னேற்றங்கள் இடைத்
தரகர் பேரத்தில்
இலவச முதலீட்டில் கொழித்துச்
செழிக்கிறது கொள்ளை
மறக்காமல் தமிழுக்கும் அவ்வப்போது
இலஞ்ச அர்ச்சனை

இணையமா? உலகமா? இசையா.
இணையா இதயங்கள்
போட்டியால் அல்ல பொறாமையால்
புகையும் எரிச்சல்கள்
திருட்டையும் ரசிக்கும் மாந்தரின்
இளித்தவாய் வேடிக்கை
நண்டுக் குணத்தால் என்றுமே
நொண்டும் குதிரை
சண்டிமாடாய் தனித்தீவாய் முன்னேற
மறுக்கும் சமூகம்

அறிவிலிகள் தேசத்தில் என்றும்
அறிவாளிகள் சிறுபான்மை
வீரியம் கொண்ட வித்துகள்
மாத்திரம் காற்றில்
நம்பிக்கை ”யாதும் ஊரே
யாவரும் கேளிர்”!
வசந்தம் என்பதும் சுழற்சியில்
நிச்சயிக்கப்பட்ட விதியே!

***

Thursday, October 28, 2010

குலம்!

குலம்!

எனது சில எண்ணங்களைக் குறள்களாக, ஐயன் திருவள்ளுவரின் திருக்குறளின் நீட்சியாக ”குறள் ++” என்னும் அடைப்பின் கீழ் கொண்டுவர நினைக்கிறேன். இஃது கைப்பேசி2 என்பதும் போலும் இன்னொரு முயற்சி.

உங்களின் கருத்துக்கள் எனது எண்ணங்களைச் செழுமைப் படுத்தலாம். பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.

குறள் :
1. பிறப்பொக்கும் இயற்கை பெறுங்குடிப் பேணுவதேன்
திறப்பொக்குஞ் செயற்கை முரண்?
2. உயர்தாட்சி வெறுக்கை ஒழுகும் மாக்களே
துயர்கூட்டி ஒறுக்கத்தக் கவர்.
3. குலப்பேதம் ஒழிந்தழியக் குடிகட்கு மூலத்தே
விலக்கலும் மறக்கலுமே வழி.
4. சாதியெனுங் குடியிழுக்குச் சாகுமோ சாதிக்கு
ஒதுக்கலெனும் பிடியுள்ள வரை?
5. சாதியும் வருணமுஞ் சதிசெய்த சாத்திரர்
நீதியும் நேர்மையுமற் றவர்.
6. வலிந்து அழிக்கின் வருணமுஞ் சாதியுமீங்கு
நலிந்தே ஒழிந்து கெடும்.
7. ஒதுக்குந் தொகுப்பும் ஒழிக்காது சாதிமற்றுப்
புதுக்குந் தழைக்கும் பொலிந்து.
8. ஒழித்தலால் அன்றிச்சாதி ஒதுக்கலால் பிரித்தின்னும்
பழித்தலால் தோன்றாது பயன்.
9. தக்காரைச் சேரின் தலைமைநலந் தருஞ்சலுகை
மிக்காரைச் சாரின் மிடி.
10. குலமெனும் குழுமம் குடிகட்கு வேண்டின்
நலமெனும் குணமல்ல பிற.

விளக்கவுரை:

1. பிறப்பொக்கும் இயற்கை பெறுங்குடிப் பேணுவதேன்
    திறப்பொக்குஞ் செயற்கை முரண்?


    பிறப்பு ஒக்கும் இயற்கை பெறும் குடி, பேணுவது ஏன்
    திறப்பு ஒக்கும் செயற்கை முரண்?


பொருளுரை: பிறப்பிலிருந்து இயற்கையடையும் வரையிலும்; அல்லது பிறப்பினால் வாழ்க்கை முழுவதும் ஒத்த தன்மைகளை இயற்கையாகப் பெறுகின்ற குடிமக்கள், பிளவினைத் தோற்றும், தேவையற்ற குலம் போலும் பிரிவினையை ஒருவருக்கு ஒருவர் தங்களுக்கு இயல்பாய் இல்லாத செயற்கை முரண்பாடுகளால் பேணி வாழுவதும் ஏனோ? (திறப்பு = பிளவு)

When human beings are getting naturally equality by births until death, why should they adopt discriminations among people to divide them which are completely unnatural and disgraceful?


2. உயர்தாட்சி வெறுக்கை ஒழுகும் மாக்களே
    துயர்கூட்டி ஒறுக்கத்தக் கவர்.


    உயர் தாட்சி வெறுக்கை ஒழுகும் மாக்களே
    துயர் கூட்டி ஒறுக்கத் தக்கவர்.


பொருளுரை: உயர்வு தாட்சி என்று மனிதர்களிடம் பாகுபாட்டையும் மற்றும் பிறர் மீது வெறுப்பை உமிழும் பகுத்தறிவற்ற மாக்களாகிய மூட மனிதர்களே. அதிகத் துன்பம் பெறும் வகையில் தண்டிக்கப் பட வேண்டியவர்கள் என்பதாம்.

Any kind of discrimination among the people such as superior or inferior and hatred’s are severely punishable at the highest infliction possible.


3. குலப்பேதம் ஒழிந்தழியக் குடிகட்கு மூலத்தே
    விலக்கலும் மறக்கலுமே வழி.


    குலப் பேதம் ஒழிந்து அழியக் குடிகட்கு மூலத்தே
   
விலக்கலும் மறக்கலுமே வழி.

பொருளுரை: குலப்பேதம் மறைந்து அழியக் குடிமக்கட்கு ஒரே வழி, அதனை அதன் அடிப்படை மூலத்திலேயே விலக்கி வைத்தலும் மேலும் முழுவதுமாக மறந்து விட்டு விடுதலும் தான்.

ஒன்றை உண்மையாகவே விட்டு விட வேண்டுமானால் அதை மறக்க வேண்டும். மறக்க வேண்டுவதை எந்த வழியிலும் மனத்தால் நினைவு செய்யக் கூடாது என்பது அடிப்படைப் பாடம். அவ்வாறு நினைவைத் தரும் வகையிலுள்ள தேவையற்றவற்றைக் கண்ணிலும் எண்ணத்திலும் படாதவாறு அழித்து ஒழித்து விடுவதே நல்லது.

Only way to abolish or remove casteism in its entirety is to de-root at its very base initiation point by ignoring and also by forgetting it from there once for all.

Forgetting is the best way to ignore one thing for ever. For that one should never remember the things which need to be forgotten. This is the basic principle. Therefore it is absolutely better to remove the ones whichever reminds us of unwanted things from our visibility and memory.



4
. சாதியெனுங் குடியிழுக்குச் சாகுமோ சாதிக்கு
    ஒதுக்கலெனும் பிடியுள்ள வரை?


    சாதி எனும் குடியிழுக்குச் சாகுமோ, சாதிக்கு
    ஒதுக்கல் எனும் பிடி உள்ள வரை?

பொருளுரை: சமூதாயத்தின் சீர்கேடான, குடிமக்களின் இழுக்கான சாதிப் பிரிவு என்பது, சாதிக்கான ஒதுக்கல் எனும் சலுகைத் திட்டம் என்கின்ற பிடிப்பு மிக்க தொடர்ச்சி இருக்கும் வரையிலும் எவ்வாறு சாகும்?

அதாவது சாதியை ஒழித்து விடுவோம் என்று சொல்லிக் கொண்டே அதைப் பேணும் வகையில் சலுகை என்னும் நீர் ஊற்றிக் கொண்டிருந்தால் அஃது எவ்வாறு அழியும்?

As long as grooming the casteism through reservation persists, there is no way to eradicate it at all. How can casteism die when it is well nurtured through undying reservations?


5. சாதியும் வருணமுஞ் சதிசெய்த சாத்திரர்
    நீதியும் நேர்மையுமற் றவர்.


    சாதியும் வருணமும் சதிசெய்த சாத்திரர்
    நீதியும் நேர்மையும் அற்றவர்.


பொருளுரை: சாதி என்றும், அதற்குத் தலையாய் வருணம் என்றும் நாட்டின் சமுதாய மக்களுள் பிரிவினைச் சதி செய்த சாத்திரக்காரர்கள் நீதியும் நேர்மையும் இல்லாதவர்கள்.

தங்களது சுய இலாபங்களுக்காகவும், சுய விருப்பு வெறுப்புக்களுக்காகவும் அத்தகையப் பிரிவினை செய்து சமுதாயத்தைப் பாழ்படுத்தித் தாங்கள் சுக போகங்களை அனுபவித்த அநீதி மான்கள் மற்றும் குற்றவாளிகள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆதலின் அத்தகைய இழுக்கான பாகுபாட்டைச் சொல்லும் சாத்திரங்களை அன்றில் அச் சாத்திரங்களின் அபத்தப் பக்கங்களைத் தீக்கிரையிட்டு அழித்தலே நல்லது.

இதை இங்குச் சொல்ல வேண்டிய அவசியம்; இது வரையில் கீழ் சாதியினருக்குக் கொடுக்கப்பட்டு வந்த சலுகைகளும், அவர்களின் மேம்பாட்டிற்கு இருந்துவரும் ஒதுக்கலும் தவறானவை அல்ல மாறாக நடந்த கெடுதல்களுக்குச் சீர் செய்ய எடுக்கப்பட்ட நல்ல நடவடிக்கைகளே அவை என்பதிலும் ஐயம் இல்லை என்பதை வலியுறுத்தவே. தவறு இழைத்தோருக்குத் தண்டனையாக சலுகைகள் வழங்கப்படவில்லை என்று கொள்ளலாம். ஆயினும் இப்பிரச்சினைக்கு இஃது ஒரு தற்காலிக ஆறுதல் மருந்தே அன்றி அதை முழுமையாகக் குணப்படுத்தும் தீர்வல்ல. இந்தச் சாதி எனும் குல வழக்கத்தை, சமூக அசிங்கத்தை முழுமையாக மண்ணிலிருந்து ஒழிப்பதே அதற்கு நிரந்தரமான தீர்வாகும்.

Those are the unjust who wrote the scriptures and created the casteism and the higher classifications called 'Varuna' categorization among the people.

There is no doubt that they are the primary criminals who made the division among the people only for their own benefits and personal desires to discriminate the others and to gain the superiority for themselves in their life and life style. Therefore it is necessary to burn and destroy those scriptures or the pages of those scriptures which call for the discrimination among the people in the first place.

It became necessary to point the above to justify the act of reservations and uplifts for the marginalized and discriminated low caste and the untouchables. Also it justifies that it was the right or appropriate way or action taken to punish those responsible in the form of not providing the same reservation and so denying the benefits to them. However those measures are only temporarily made for the affected ones as temporary relief and not as the permanent cure or solution for chronic problem of casteism. Only solution for the nasty and disgraceful casteism in the society is to abolish and destroy it completey from this earth which only could be the permanent and final one and will last forever.



6. வலிந்து அழிக்கின் வருணமுஞ் சாதியுமீங்கு
    நலிந்தே ஒழிந்து கெடும்.


    வலிந்து அழிக்கின் வருணமும் சாதியும் ஈங்கு
    நலிந்தே ஒழிந்து கெடும்.


பொருளுரை: சாதியின் பிறப்பிலிருந்து அஃது தோன்றும் அனைத்து இடங்களிலும் அதை முயன்று அழித்து விடின், அதாவது அதைப் பயன்படுத்தாது செய்து விடின், வருணம் என்னும் பிரிவுகளும், சாதி என்னும் குலப் பிரிவும், இங்கே தானாகவே நலிந்தும் அழிந்தும் கெட்டுவிடும் என்பதாம்.

அதாவது சாதியைப் பிறப்புச் சான்றிதழில், பள்ளியில், மணத்தில், மரணத்தில், வேலையில், ஓட்டுப் பதிவுச் சீட்டில், கணக்கெடுப்பில் பதிப்பது என்பவை கண்டிப்பாக அகற்றப் படவேண்டும். எந்த வகையிலும் மனிதரின் மேல் குத்தப்படும் வருணம், மற்றும் சாதி முத்திரைகள் அழிக்கப் படவேண்டும் மேலும் மறக்கப் பட வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே அவை மீண்டும் ஒருபோதும் தலை எடுக்காது.

If the casteism is tried and destroyed from its inception through all its stages, i.e. if we ignore it without using it anywhere, the Varuna division and casteism will automatically fade away and get destroyed.

It means specifying the caste in birth certificates, schools, marriage, death, work, in electoral vote list, in the census should all be completely stopped. In no way one must be identified with Varuna or by caste stamps; and such that it must be destroyed and forgotten. Only by then such evil will not show up again.


7. ஒதுக்குந் தொகுப்பும் ஒழிக்காது சாதிமற்றுப்
    புதுக்குந் தழைக்கும் பொலிந்து.


    ஒதுக்கும் தொகுப்பும் ஒழிக்காது சாதி; மற்றுப்
    புதுக்கும் தழைக்கும் பொலிந்து.


பொருளுரை: ஒதுக்கீடும், தொகுத்தலும் சாதியை ஒழிக்காது; மாறாக அதை மேலும் புதுப்பித்துப் பொலுவுடன் செழிக்க வைக்கவே செய்யும்.

ஒதுக்கீடு என்னும் தற்காலிக நலத்திற்காக அதைப் பெறுவோறும், அதைப் பெறுவோரின் நன்மதிப்பிற்காகவும், அதனால் பெறும் வாக்கிற்காகவும் அரசியல் வாதிகள், அவர்களது பிழைப்பிற்காக எடுக்கும் நடவடிக்கையான சாதிவாரி மக்கள் கணக்கெடுப்புத் தொகுத்தல் என்பதாலும் சாதியை மேலும் தழைக்கவே செய்வார்கள். அவர்களது நோக்கம் சாதியை ஒழிப்பதாக ஒருநாளும் இருக்க முடியாது. ஆதலின் இவர்களின் பிடியையும் மீறி சாதி என்னும் தீமையை, தீச்செடியை அழிக்க அதை வேரோடு அழித்தலே நல்லது.

Reservations, census based on casteism and such all will only make castes to flourish and stand afresh well.

The benefactors of the reservations for its temporal benefits and especially the politicians who gain the benefiters confidence and encash their vote in turn will never allow to kill the casteism at any cost. Therefore their aim will certainly not be to eradicate the casteism at all but only to gain the benefits out of it by retaining it. Therefore It is wise and better only to thwart casteism entirely by de-rooting from its initiation by itself so that to get away from such ill practice forever.


8. ஒழித்தலால் அன்றிச்சாதி ஒதுக்கலால் பிரித்தின்னும்
    பழித்தலால் தோன்றாது பயன்.


    ஒழித்தலால் அன்றிச் சாதி ஒதுக்கலால் பிரித்து இன்னும்
    பழித்தலால் தோன்றாது பயன்.


பொருளுரை: அடிப்படையில் சாதியை அதன் எல்லா நிலைகளிலிருந்தும் ஒழிக்காது, அதற்கு ஒதுக்கல் வழங்குவதும் அதன்பால் இன்னும் மக்களைப் பிரித்து வைப்பதும், மேலும் ஒதுக்கல் வழங்காது மற்றோரைப் பழி வாங்குதலாலும் எந்த வித நலனோ பயனோ விளையாது. எந்தக் காலத்திலும் ஒன்றைப் பழிவாங்கி எந்த நல்லதையும் செய்து விட முடியாது.

நிச்சயமாக ஒரு தவறை இன்னொரு தவறால் சரி செய்ய முடியாது.

Without destroying the casteism from its root, from its all forms, by providing reservation and thus continuing the division among the people further will never do any good. By not providing the reservations and evading by avenge to the other afflicted section no good is going to happen ever either. By revengeful acts no any good can happen to anyone anytime.

One thing is for sure is that no mistake can ever be corrected through another mistake.


9. தக்காரைச் சேரின் தலைமைநலந் தருஞ்சலுகை
    மிக்காரைச் சாரின் மிடி.


    தக்காரைச் சேரின் தலைமை நலம்; தரும் சலுகை
    மிக்காரைச் சாரின் மிடி.

பொருளுரை: தகுதிகளை உடைய தக்கவரைச் சேரும் தலைமைகளால் நல்லது விளையும். தரப்படும் சலுகைகள் என்பவை பொருள் மிகுந்தவரைச் சாரின் அதனால் விளையும் அதன் உண்மைப் பயன் துயரமே. (மிடி = துன்பம்). இன்னொரு வகையில்; தகுதியுடைய தக்காரைச் சேரும் சலுகையால தலைமை நலம் தரும், அதுவே பொருள் மிக்காரைச் சாரின் துயரத்தையே தரும் எனவும் பொருள் கொள்ளலாம். (தரும் என்பதைத் நலம் தரும் எனவும்; தரும் சலுகை எனவும் பொதுவாக்கிக் கொள்ளலாம்.)

ஒரு நாடு, சமுதாயம் முன்னேற வேண்டுமானால் தகுதி உடையோர், திறமை உடையோர் அவருக்குரிய சிறந்த பணியினைப் பெற வேண்டும்; அதில் அவர் நன்கு பணி ஆற்றுதல் வேண்டும். ஆனால் ஒதுக்கீடு என்னும் தாற்காலிகச் சலுகையால் தகுதி அற்றவர்கள் பதவிகளைப் பெறுவதும், தகுதி உடையோர் பணி இன்றி இருப்பதாலும் நாட்டிற்கோ, சமுதாயத்திற்கு அன்றில் உலகத்திற்கோ என்ன நன்மை பயக்க முடியும்? அதைப் போன்றே சலுகை என்பது பொருள் வசதிகளால் மிக்கவரைச் சார்வதால், தகுதி உடைய, பொருள் வசதிகளில் நலிவடைந்த ஒருவர் அவருக்குரிய பங்கினைப் பெற இயலாமல் போகின்றார். அத்துடன் அத்தகைய சலுகையும் தேவையற்றோரைச் சார்ந்து விளைவிக்கின்ற பயன் ஒன்றுமே இல்லை மாறாகக் தேவையுற்றோருக்குக் கிட்டாததால் கெடுதல் எனும் துயரம் தான் விளையும்.

அதேபோல் உலகத்தினரோடு போட்டியிட்டு நாட்டிற்குப் பெருமை சேர்க்கக் கூடிய உயர் கல்வி வாய்ப்புக்கள் தகுதியின் அடிப்படையிலேயே சிறந்த மாணவர்களுக்குக் கொடுக்கப் படவேண்டுமே தவிர சாதி அடிப்படை ஒதுக்கீடுகளாலோ வேறு காரணங்களுக்காகவோ தகுதியற்றவர்களுக்கல்ல. உடல் ஊனமுற்றோருக்கு யாருமே இரங்கலாம், அவருக்குப் பல சலுகைகளையும் அரசும், சமூகமும் வழங்குதல் அவசியமே. ஆயின் அவரையும் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள ஒதுக்கீட்டின் அடிப்படையில் அனுமதிக்க வேண்டும் என்பது பைத்தியக்காரத்தனமான விதண்டா வாதம். அப்படி வழங்கப்படும் சலுகையால் விளைவது நாட்டிற்கோ அன்றில் சமுதாயத்திற்கோ அன்றில் அந்த தனி நபருக்கோ பெருமையா என்பதை மனிதர்கள் யோசிக்க வேண்டும். ஆதலின் சலுகைகள் தேவை; அதுவும் தேவையானவற்றிற்குப் பொருத்தத்தோடு மாத்திரமே. அந்தச் சலுகைகளும் சாதிகளின் அடிப்படையால் அல்ல; அவை பொருளாதார வசதி மற்றும் குடும்ப அடிப்படையில் மட்டுமே இருத்தல் அவசியம். கீழ்சாதியுலுள்ளோர் இன்னும் பொருளாதார வசதிகள் பெறாதவர்களாக இருப்பதால் அவர்கள் சலுகைகளைத் தொடர்ந்து பெறுவார்கள், கூடவே பொருளாதார வசதியுலுள்ள தேவைப்பட்டோரும் பயன் பெறுவார்கள். ஆனால் இவற்றால் கண்டிப்பாக சாதி என்னும் தீய நோயை நாம் அழித்து சமதருமச் சமுதாயத்தோடு கூடிய நலமும், வளமும் நிறைந்த நாட்டை முன்னேற்றப் பாதையில் நிச்சயம் பார்க்க முடியும்.

All good will happen when the qualified and eligible get the appropriate recognition and the job to do the good. On the other hand extending the reservation to the already wealthy is immense waste and will lead only to affliction. Also it can be defined as if the reservations or such benefits are offered to the deserved ones it would bring the best results where as if they reach the already richer will only end in sufferings.

If a country and society should flourish, all its people with real talent filtered through merit should get the appropriate jobs. In that they should of course work sincerely. But through the temporal benefiting reservations, all the not qualified getting the jobs and unfitting posts; and the qualified remain jobless; how can it do any good to the society or the nation or the world at large. Similarly the reservations going to the already rich actually spoil in double fold because it denies the truly required one from his rights and does nothing good to by the untalented or unneeded rich. Therefore it can only bring bad to the society and not any good.

Similarly the competitive courses which competes with rest of the world for the talent should be offered only to the talented and qualified in the merit basis but not to the unqualified through reservations of any sort, to bring the laurels and also to gain benefits for the nation. Everyone has kind heart towards the physically challenged. It is also necessary that all kind of concessions and considerations be provided to such. However, it would be foolish to argue to give reservations for such to participate in the Olympics to represent the country. All the concerned should think, will such act bring any glory to the country or to the individual in such case? Therefore reservations are required per say. But it is only to those really necessary and for appropriate vacancies, however, only to those economically backward and certainly not again through caste basis. In fact, the low caste people still remain economically backward. Therefore they will continue to get the reservations along with others of similar status. However we can see the day with no ill casteism at all in the society and treating equally one and all along with the prospering society and advancing nation.



10. குலமெனும் குழுமம் குடிகட்கு வேண்டின்
      நலமெனும் குணமல்ல பிற.


      குலமெனும் குழுமம் குடிகட்கு வேண்டின்
   
  நலமெனும் குணம்; அல்ல பிற.

பொருளுரை: குழும மனப்பாங்கு கொண்ட மனிதருக்குக் குலமெனும் அமைப்புத் தேவைப்பட்டாலும் கூட, அஃது மனிதர்களின் குணத்தால் பகுக்கப்படுமாயின் நலமாகும்.

அதாவது அவரவர் குணங்களுக்கேற்ப, பண்பு நலனிற்கேற்ப குழுமத்தை அமைத்துக் கொள்ளலாம். ஆனால் குலமென்னும் குழுமமானது வழித்தோன்றல் குழுமமோ அன்றில் பிற குழுமக் காரணங்களுக்காகவோ அல்ல என்பதாம். ஆதலின் இதிலிருந்து குலம் என்னும் சாதிப் பகுப்பு ஒழிதல் அவசியமாக இருப்பினும் கூட குழுமங்கள் தேவைப்படின் அவை அவரவர் குண நலனுக்கு உரித்த குழுமத்தைத் தேர்ந்து கொள்ளலாம் என்பது தெளிவு. ஆதலின் தற்போதுள்ள அமைப்பிலுள்ள குலமென்னும் சாதிக் குழுமத்தை வேறு காரணங்களுக்காக் கூட்டினால் அஃது சட்டப்படி குற்றம் என்றும் செய்வதே நல்லது.

If groups are necessary in the social life for some sake for the people , it is good to make based on their characteristics of quality and not by any other criteria.

The grouping of casteism by any other means is bad is the imbibed meaning here. Therefore it would be only wiser to treat any such grouping for any other reasons especially in the name of existing casteism as illegal.



***

Wednesday, October 27, 2010

கண்மணி அன்போடு...

கண்மணி அன்போடு...

என் சிந்தனைக்குள்
நீயும் இருப்பாய்
நம்பிக்கையோடு!

என் சிந்தனை
முழுவதும்
இருக்க வேண்டுமென
எண்ணாதே....

அன்பே
உலகில் உன்னைத்தவிர
என்னையும்
உன்னைப் போலவே
பலர்
நேசிக்கவும்
நேசிக்கப் படவும்
விரும்புகிறார்கள்

பல மனிதர்களின்
புரிதலுக்கு நான்
வேண்டுமாம்

சாதனைகள் செய்ய
மனம் தேவை

பயணம் செய்ய
கவனம் தேவை

கோளத்தின்
அட்சய தீர்க்க
ரேகைகளின்
இடைவிட்ட
சந்திப்புக்
கணங்களில்
மாத்திரம்
நீயும் நானும்
ஊடாடலாம்...

நீ நீயாகவும்
நான் நானாகவும்
நாம் நாமாகவும்
இவ் உலகில்
பல சமயங்களில்
செயல்பட
ஏன்
வாழவும்
வேண்டியவர்கள்

எப்போதும்
பதிலுக்குப் பதில்
பேசிக் கொண்டும்
ஆற்றும் பணியைப்
பார்த்துப் பார்த்து
பங்கெடுக்க அடம்பிடித்து
அடிப்படை தெரியாமல்
பலமுறை விழிப்பாய்

ஏன் சொல்லிக்
கொடுக்க மாட்டீர்
என்று வம்பிழுத்து
நான் கற்றுக் கொண்டால்
வெற்றி பெற்றுவிடுவேன்
என்றுதான் சொல்லித்தர
மாட்டீர்கள் என்று
கோபப்பட்டு...
அழுது...
சே சே...
சரியான
இம்சை நீ!

என் சிந்தனையைச்
சிதற வைத்து
என்ன சுகம்
காணுகின்றாய்
என் இனியவளே?

வளர்ந்தாலும் நீ
இன்னும்
சிறுபிள்ளை தான்...
என்றால்
நீங்களும் தான்
என்பாய்!!!
ஐயோ
நான் என்ன செய்ய?

***

Sunday, October 24, 2010

தமிழ் மொழி!

தமிழ் மொழி!

எடுப்பு:
தமிழே! தமிழே! தமிழே! - இந்தத்
      தரணியின் உயரிய தவத்திரு மொழியே!
அருளே! தமிழே! அமுதே! - இந்த
      அவனியின் இருளறும் அருட்பெரு மொளியே!

தொடுப்பு:
தமிழே! தமிழே! தமிழே! - இந்த
      தரையினில் கடலெனத் தவழ்ந்திடும் எழிலே!
வளமே! கதிரே! தமிழே! - இந்த
      வையகத் தொளிரும் வரம்பிலாப் பொருளே!
                                                                                    (தமிழே...)

நடப்பு:
1. இறை மொழி:
பரமனின் பனிமொழி தமிழே! - அந்தக்
      குருபரன் அருளிய உறுமொழி தமிழே!
அரனுரைத் திருமொழி தமிழே! - அழகு
      அறுமுக இளையனின் அருள்மொழி தமிழே!
திரிபுரை உரைமொழி தமிழே! - தெய்வக்
      கரிமுக முதல்வனின் கனியுரை தமிழே!
திருமறை உறைமொழி தமிழே! - செல்வத்
      தரணியின் நிறைமொழி முதன்மொழி தமிழே!
                                                                                    (தமிழே...)

2. மறை மொழி:
அமரனின் திருமுறை தமிழே! - ஆன்ற
      அறிவுடை முனிகளின் மனமொழி தமிழே!
குமரனின் குருமொழி தமிழே! - அவன்
      குறிப்பிடும் பரம்பொருள் ஓமொலி தமிழே!
’வாசிவாசி’ என்னுவது தமிழே! - சிவ
      வாக்கிய மறைமொழி உன்னுவது தமிழே!
ஆதிசிவம் ஆனபொருள் தமிழே! - கூடி
      ’அன்பே சிவம்’ ஆகும்பொருள் தமிழே!
                                                                                    (தமிழே...)

3. நிறை மொழி:
அருமறை உரைவதும் தமிழே! - அதில்
      உறைபெறு திருமுறை வழிமொழி தமிழே!
கருவுடைத் திருமொழி தமிழே! - எங்கும்
      கருத்தொடு உயிரென விரிந்ததும் தமிழே!
உருவுடை உணர்வும் தமிழே! - உலகில்
      உருமாறிப் பலவாகி உதித்ததும் தமிழே!
திருவுடைத் திரவியம் தமிழே! - நல்
      திருவிடக் குலத்துயர் முதலதும் தமிழே!
                                                                                    (தமிழே...)

4. நிலை மொழி:
முச்சங்கம் யாத்ததும் தமிழே! - மூல
      முதல்வனும் முருகனும் காப்பதும் தமிழே!
முச்சுவை வார்த்ததும் தமிழே! - முதல்
      மூவேந்தர் கூத்தாடிக் காத்ததும் தமிழே!
முப்பாலைத் ஆர்த்ததும் தமிழே! - புவி
      மூத்தகுடி சாற்றிவரும் மூத்தமொழி தமிழே!
தப்பாமல் வாழ்வதும் தமிழே! - இந்தத்
      தரணியில் இளமை எப்போதும் தமிழே!
                                                                                    (தமிழே...)

5. மூல மொழி:
அகத்தியோன் வகுத்தவகை தமிழே! - நல்
      அகத்தையும் புறத்தையும் தொகுத்ததும் தமிழே!
சிலம்புமொழி செப்புவதும் தமிழே! - செங்
      காப்பியத்துள் தொன்மைதனைச் சாற்றுவதும் தமிழே!
மூதுரையுங் கூறுமொழி தமிழே! - திரு
      மூலனுரை மூவாயிரம் முகிழ்த்ததும் தமிழே!
ஞானியரின் போதமொழி தமிழே! - அவர்
      நாதவொலி வேதமொழி என்பதுவும் தமிழே!
                                                                                    (தமிழே...)

6. கலை மொழி
சித்தர்களின் சிந்தைமொழி தமிழே! - அவர்
      சிந்தைவழி செய்தபணி செப்புமொழி தமிழே!
கவிஞர்களின் சந்தமொழி தமிழே! - அவர்
      கலைபொழிய நெஞ்சுருகி சிந்துமொழி தமிழே!
இசைவேளர் மரபுமொழி தமிழே! - அவர்
      இசையோடு பண்பாட வந்தமொழி தமிழே!
கலைவாணர் பேசுமொழி தமிழே! - அவர்
      கலையாடிக் கவிபாடிக் கொஞ்சுமொழி தமிழே!
                                                                                    (தமிழே...)

7. வண் மொழி
பழையதும் நிலையதும் தமிழே! - பண்டு
      வளமையும் எளிமையும் வலிமையும் தமிழே!
அழகியல் நளினமும் தமிழே! - என்றும்
      இளமையில் செழுமையில் விளைவதும் தமிழே!
இலக்கியத் தரமெனில் தமிழே! - மொழி
      இனிமையும் திறமையும் ஆழமும் தமிழே!
கலையதன் மேன்மை தமிழே! - நற்
      கவிப்பொருள் செறிவும் நிறைவும் தமிழே!
                                                                                    (தமிழே...)

8. இயல் மொழி:
இயற்கையின் முதன்மொழி தமிழே! - என்றும்
      இயலிசை நாடகம் என்பதும் தமிழே!
நயத்துரை கனிமொழி தமிழே! - என்றும்
      நலத்தொடு களிப்பினை நல்குதும் தமிழே!
வையத்து எழில்மொழி தமிழே! - என்றும்
      வனப்பொடு வளத்தினை வழங்குதும் தமிழே!
உயர்வொடு திகழ்வதும் தமிழே! - என்றும்
      உதிரத்தில் உணர்வினில் உய்வதும் தமிழே!
                                                                                    (தமிழே...)

9. சுவை மொழி:
எல்லை இல்லாதது தமிழே! - எங்கும்
      ஏகியே பரவிடும் இன்பமும் தமிழே!
இல்லை என்னாதது தமிழே! - எங்கும்
      இயங்கிடும் நிலையிலும் ஏற்றமும் தமிழே!
சொல்லில் சிறந்தது தமிழே! - எங்கும்
      சுயத்தொடு நயப்பதும் சுவைப்பதும் தமிழே!
வல்லமை நிறைந்தது தமிழே! - சட்ட
      வரைமுறைத் தெளிவையும் வகுத்திடும் தமிழே!
                                                                                    (தமிழே...)

10. தண் மொழி:
வண்மையும் மென்மையும் தமிழே! - நல்
      வண்ணமும் பண்ணும் முழக்கிடும் தமிழே!
திண்மையும் தெளிவும் தமிழே! - நல்
      கண்ணியம் புண்ணியம் துலக்கிடும் தமிழே!
அண்மையும் தண்மையும் தமிழே! - நல்
      உண்மையும் அன்பையும் புகல்வதும் தமிழே!
பண்பையும் பகிர்வதும் தமிழே! - நல்
      நுண்கலை நுட்பம் நுவல்வதும் தமிழே!
                                                                                    (தமிழே...)

11. பொன் மொழி:
கடலினை முனைந்ததும் தமிழே! - முதலில்
      கடலொடு முகிழ்த்ததும் முகிழ்ந்ததும் தமிழே!
கடலினைக் கடைந்ததும் தமிழே! - முதலில்
      கடலினைக் கடந்து களித்ததும் தமிழே!
நலத்தினை வளர்த்ததும் தமிழே! - முதலில்
      நன்னெறி ஒழுக்கம் நவின்றதும் தமிழே!
அகத்தினில் செழித்ததும் தமிழே! - முதலில்
      அறநெறிப் பொதுமறை அளித்ததும் தமிழே!
                                                                                    (தமிழே...)

12. நன் மொழி:
பொறுப்புரை பொழிவதும் தமிழே! - முதல்
      புரிதலை அறிதலைப் படைத்ததும் தமிழே!
நறுக்குரை நயமெனில் தமிழே! - முதல்
      நல்லவை அல்லவை நயத்ததும் தமிழே!
முறுக்குரை மொழிவதும் தமிழே! - முதல்
      மொழியெனத் தடத்தினைப் பதித்ததும் தமிழே!
சிறப்புரை ’முத்தெனில்’ தமிழே! - முதல்
      சிந்தனைச் சொத்தெனில் சிறப்பதும் தமிழே!
                                                                                    (தமிழே...)

முடிப்பு:
தமிழே! தமிழே! தமிழே! - இந்தத்
      தரணியின் முதன் மொழி தமிழே!
அருளே! தமிழே! அமுதே! - இந்த
      அவனியின் முதல் நிலை அழகே!
தமிழே! தமிழே! தமிழே! - இங்கு
      உயிரும் மெய்யாய் உறைந்திடும் தாயே!
தமிழே! தமிழே! தமிழே! - இங்கு
      உளத்துள் உணர்வாய் நிறைந்ததும் நீயே!

***

Tuesday, October 19, 2010

கைபேசி (பகுதி: 2)

கைபேசி! (பகுதி: 2)

கைபேசிக் கவிதையின் நீட்சியாக, குறள் வகையில் சில கருத்துக்களைச் சொல்ல விளைந்தேன். உண்மையில் முன்னர் எழுதிய குறளைத் திருத்தவே முயன்றேன். அஃது ஒரு அத்தியாயமாகவே நீண்டு விட்டது.

கைபேசி நாகரீகத்தை நெறிப்படுத்தக் குறளால்தான் முடியுமோ? நீங்களே சொல்லுங்களேன்.

குறள் :
1. நோக்கக் குழையா நுண்ணலைக் கைப்பேசி
கேட்கக் குழையுந் தரும்.
2. காணாது மறையும் கைபேசி கண்டாலும்
நாணாது நன்றே நகும்.
3. இயைந்தே கைபேசி இயம்பினும் நெடண்மை
முயங்கிச் சிதைக்கும் செவி.
4. இம்மியே இயக்கினும் இணைக் கைப்பேசி
விம்மியே பயக்குந் துயர்.
5. தெவிட்டு மொலி தெறின் கைப்பேசி
செவிட்டு வழிக்கே செயும்.
6. வாட்டும் வருத்தம் வகையறியான் வல்லானோ
காட்டும் கைபேசிச் சினம்?
7. இறையில்லத் துவிசை இறுத்தாக் கைப்பேசி
நிறையல்ல வசைமேவுங் குறை.
8. சபையிடைச் சலனச் சதுராடும் கைப்பேசி
மிகையல்ல மேன்மைக் கிழுக்கு.
9. சங்கத்தே சமனித்துச் சாற்றாதே கைபேசியுள்
பங்கத்தே இரைத்தலா பண்பு?
10. சந்தை கூவலை சந்தெலாமுந்திப் பரவல்
நிந்தை கைபேசியின் கண்.

விளக்கவுரை:
1:
நோக்கக் குழையா நுண்ணலைக் கைப்பேசி
கேட்கக் குழையுந் தரும்.


நோக்கக் குழையா நுண் அலைக் கைப்பேசி
கேட்கக் குழையும் தரும்.


பொருளுரை:
நோக்கினாலும் குழைந்து இளகா நுண்ணலைக் கைபேசி, ஒலி கேட்கக் குழைவினைத் தரும். அதாவது நம் மனதை இளகச் செய்யும். மேலும் நாம் ஒலிப்பதைக் கேட்கத் தன் காதினைத் தரும் என்றும் பொருள் படும். (குழை - காது)


2:
காணாது மறையும் கைபேசி கண்டாலும்
நாணாது நன்றே நகும்.


காணாது மறையும் கைபேசி; கண்டாலும்
நாணாது நன்றே நகும்.


பொருளுரை: எங்கோ தொலைந்து காணாது போகும் கைபேசி கண்ணுக்கு மீண்டும் கிட்டினாலும் நாணாதே நன்றாகத் தன் இயல்போடு ஒலிக்கும். உம் எனும் உகாரத்தால் கண்டாலும் காணாவிட்டாலும் அதாவது எப்போதுமே நாணாது நன்றாக நகும் என்பதும் பொருளாகும். கண்ணில் காணாது மறைந்து விட்டாலும் அஃது எழுப்பும் ஒலியால் அதன் இருப்பிடத்தைக் காணலாம் என்பது உட்பொருள்.


3:
இயைந்தே கைபேசி இயம்பினும் நெடண்மை
முயங்கிச் சிதைக்கும் செவி.


இயைந்தே கைபேசி இயம்பினும், நெடு அண்மை
முயங்கிச் சிதைக்கும் செவி.


பொருளுரை: எத்தனை தான் ஒப்பும்படியான இனிய மொழியினைக் கொடுப்பினும் கைபேசியைக் காதிற்கு அண்மையில் நெடு நேரம் கொண்டு கேட்டால், அஃது முயன்று விரைவில் செவியின் செயல்பாட்டைச் சிதைத்துவிடும். எனவே காது கெட்டுவிடும் ஆதலின் குறைவான பயன் பாட்டிற்கு மட்டும் கைப்பேசியைப் பயன படுத்துதல் நல்லது என்பது பொருள்.


4:
இம்மியே இயக்கினும் இணைக் கைப்பேசி
விம்மியே பயக்குந் துயர்.


இம்மியே இயக்கினும், இணைக் கைப்பேசி
விம்மியே பயக்கும் துயர்.


பொருளுரை: [வாகனத்தை அல்லது வேறு ஒன்றை இயக்கிக் கொண்டிருக்கையில்] இம்மி அளவு நேரமே எனினும் இணையாக இயக்கும் கைபேசி, [கவனத்தைச் சிதற வைப்பதால் பயன் படுத்துவருக்கு மாத்திரம் அன்றி அஃது அனைவருக்கும் இன்னலை] பெருந் துன்பத்தை நல்கி விடும். ஆதலின் வேறொன்றை இயக்கும் சமயத்தில் கைபேசியையும் கூடவே இணையாகப் பயன் படுத்துதல்; ஏன் முயற்சித்தலே கூடத் தவறு என்பது ஈண்டு பெறத் தக்கது.

5:
தெவிட்டு மொலி தெறின் கைப்பேசி
செவிட்டு வழிக்கே செயும்.


தெவிட்டு மொலி தெறின், கைப்பேசி
செவிட்டு வழிக்கே செயும்.

பொருளுரை: துள்ளும் கைபேசி ஒலியை தெவிட்டும் அளவிற்கு அதிகமாகக் கொள்ளுதல் நிச்சயம் செவிட்டுக்கே வழி செய்து உடல் நலத்தையும், உள நலத்தையும் பாதித்து விடும். ஆதலின் உயரிய ஒலியளவைத் தவிர்த்து மென்மையாகவும் குறைவாகவும் கொள்ளுதல் நலம் என்பதாம். அளவிற்கு மீறிய அமிர்தமும் விடம்தானே?


6:
வாட்டும் வருத்தம் வகையறியான் வல்லானோ
காட்டும் கைபேசிச் சினம்?


வாட்டும் வருத்தம் வகை அறியான்; வல்லானோ
காட்டும் கைபேசிச் சினம்?


பொருளுரை: வாட்டுகின்ற உரையின் வருத்தத்தின் வகையை; காரணத்தை அறியாதவன், கைபேசியின் மேல் காட்டும் சினத்தால் ஏதும் வல்லவன் ஆவானோ? சினத்தால் அவன் இழப்பது கைபேசியையும், நலத்தையும் தானே அன்றிப் பெறுவது எந்த வல்லமையையோ, திறமையையோ, நன்மையையோ அல்ல என்பது தெளிவு.


7:
இறையில்லத் துவிசை இறுத்தாக் கைப்பேசி
நிறையல்ல வசைமேவுங் குறை.


இறை இல்லத்து விசை இறுத்தாக் கைப்பேசி
நிறை அல்ல; வசை மேவும் குறை.


பொருளுரை: இறை இல்லமாகிய கோயிலில்; ஆலயத்தில் நிறுத்தி வைக்கப் படாத கைபேசியால் ஒருவருக்கு எந்த நிறையும் வரப்போவதில்லை; உண்மையில் அஃது பிறரின் வசையைத்தான் மிகுந்து வலியப் பெறும் குறைபாடான செயல் ஆகும். (இறுத்து - முடி, நிறுத்து). ஆதலின் கோயில்களில் கைப்பேசியை நிறுத்தி விடுதல் உத்தமம்.


8:
சபையிடைச் சலனச் சதுராடும் கைப்பேசி
மிகையல்ல மேன்மைக் கிழுக்கு.


சபையிடைச் சலன(ம்) சதுராடும் கைப்பேசி
மிகை அல்ல; மேன்மைக்கு இழுக்கு.


பொருளுரை: பலர் கூடியிருக்கும் முக்கியச் சபையினில் சலனப்படுத்திச் சதுராடும் கைபேசி குழுமியவரின் முன்னே மேன்மையல்ல; உண்மையில் அஃது ஒருவரின் மேன்மைக்கு இழுக்கு என்றால் அஃது மிகையல்ல. அஃது குழுமிய நேரத்தில் பிறருக்குத் தொந்தரவாக இருப்பதுடன் குழுமிய காரணத்திற்கும் இடைமறிக்கும் இடைஞ்சலாகவும் இழுக்காகவும் கூட அமைந்துவிடும். ஆதலின் குழுமக் கூட்டங்களுக்குச் செல்லும்போது திசைதிருப்பத்தைத் தவிர்க்க கைப்பேசியை நிறுத்தி விடுதல் அன்றில் சப்த்தமின்றிச் செயல்பட வைத்தல் நலம்.


9:
சங்கத்தே சமனித்துச் சாற்றாதே கைபேசியுள்
பங்கத்தே இரைத்தலா பண்பு?


சங்கத்தே சமனித்துச் சாற்றாதே; கைபேசியுள்
பங்கத்தே இரைத்தலா பண்பு?


பொருளுரை: கைபேசியில் அமைதியாகப் பேசாமல் பங்கம் விளைவிக்கும் வகையில் இரைந்து கத்திப் பேசுவதா பண்பு? அவ்வாறு காட்டுக் கத்தாய் கூச்சலிட்டுப் பேசுவது சமூக நாகரீகம் ஆகுமா? அல்ல என்பது தெளிவு. ஆதலின் கைபேசியில் அமைதியாகப் பேசுதலே சமூகத்தில் உயரிய சிறந்த பண்பு.


10:
சந்தை கூவலை சந்தெலாமுந்திப் பரவல்
நிந்தை கைபேசியின் கண்.


சந்தை(க்) கூவலை சந்தெலாம் உந்திப் பரவல்
நிந்தை; கைபேசியின் கண்.

பொருளுரை: சந்தையை, சந்தைப் படுத்தும் கூப்பாட்டை; விளம்பரத்தை, அறைகூவலை கைபேசியின் கண் கிடைக்கும் வாய்ப்புக்களிலெல்லாம் முன்னோக்கிப் பரப்புதல் பயனர் நிந்தையையே பதிலாக விளைவிக்கும். பயனாளிகளுக்குக் கைபேசி வழி சந்தைப் படுத்துதல் உண்மையில் எரிச்சலூட்டும் அணுகுமுறை.

***

Monday, October 11, 2010

மரண சாசனம்...

மரண சாசனம்...

கவிதைப் பின்புலம்:
'இன்பம் 50’ கவிதையில்

“இறுதியில்
இரணமே இல்லாத மரணமே இன்பம்;
உறுதியாய்
மரணம் ஒன்றே மாறாப் பேரின்பம்;”


என்று முடித்திருந்தேன். இதற்கு கீழ்க்கண்ட பின்னூட்டங்கள் வந்தன:

நண்பர் krshi:
மரணம் ஒன்றே மாறாப் பேரின்பம்;???????????????
மரித்தபிறகு என்னவென்று அறிய முடியா ஒரு நிலை,
அது இன்பம் எப்படியாகும்? உறுதியில்லா வாய்மொழி!


எனது பதில்:
@krshi
அதாவது முதல் வரி, ரணமே இல்லாத மரணமே இன்பம்; ஆதலினால் இரண்டாவது அல்லது இறுதி வரி: அத்தகைய மரணத்தால் வரும் இறுதி இன்பமே மாறாப் பேரின்பம். ஏன்
என்றால் அதுவே இறுதி என்பதால் மாறாது என்பதில் உறுதி! வேறொன்றும் இல்லை. இப்போது உறுதியான மொழி என்று நம்புவீர்கள் தானே! நன்றி.

மேலும்
தோழி V.Rajalakshmi:
மன்னிக்கவும்!நண்பரே ! மீண்டும் ஏற்றுகொள்ள முடியவில்லை, இரணமே இல்லாத மரணம் இன்பம் ! உண்மை! இது ஒருவிதத்தில் சரி! [*ஒருவிதம் மட்டும்*]

நீங்கள் முடிவில் கூறியுள்ள "மரணம் ஒன்றே மாறப் பேரின்பம்" என சொல்லி இருக்கீங்க,
இதுதான் நான் குறிப்பிட்டது! உறுதி இல்லாத வாய்மொழி இது,இன்பம்,துன்பம் என்பது ஒரு உணர்வுதானே!இன்பம் என்பது மனிதர்கள் விரும்புவது,ரசிப்பது அப்படி இருக்க
மரணத்தை இன்பத்துடன் சேர்ப்பது புரியாத புதிர்! கடவுள் நமக்கு கொடுத்த உயிரை இல்லாமல் செய்வது எப்படி இன்பமாகும்?
மரணம் என்பது இறுதி, மாறாத உறுதி! ஒற்றுகொள்கிறேன்!அனால் அதை உணர மரித்த மனிதனுக்கு [அறிய]வாய்ப்பில்லையே!
எனக்கு அத்தனை உள்ளறிவு இல்லை அதனால் இந்த குழப்பம் [மீண்டும் மன்னிக்கவும்]

என்று பதிந்திருக்கிறார்.

இவர்களுக்காக இந்தக் கவிதையால் பதில் சொல்ல முனைந்திருக்கிறேன். கேள்வி கேட்டவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. உங்களது கேள்விகளால் இக்கவிதைக்கு உந்தப்பட்டேன் அதற்காக மீண்டும் நன்றி.

தேவைப்படின் வாதங்கள் தொடரட்டும்; வரவேற்கிறேன். முடிந்தவரை விளக்குகிறேன். நன்றி.

***

மரணம் என்றெனும் தெரியா நிலையே
     மனிதரின் நிலையா வாழ்வினை உரைக்கும்;
மரணம் என்னும் மாறா இறுதியை
     மனதொடு உணர்ந்தால் மானுடம் சிறக்கும்;
தெரியும் தேடலில் கருணையும் நிறையும்;
     தெளிந்த உளத்திடை தெய்வமும் உறையும்;
புரிதலின் விளைவால் வெறுப்புகள் ஒழியும்;
     புத்தியில் பேதங்கள் தயக்கங்கள் அழியும்;
1

பற்றுகள் மறையும்; பக்குவம் விளையும்;
     பதவிச் சுகத்தின் பாசம் அழியும்;
சுற்றம் சொந்தம் பந்தம் விலகும்;
     சோகம் மோகம் யாவும் அகலும்;
அற்ற குளத்து ஆம்பலைப் போலும்
     அன்புடை வாழ்வே நெஞ்சிடை நிலவும்;
உற்ற தெய்வத்து உள்ளொளி நாடி
     உடலும் உளமும் நலத்தொடு உலவும்;
2

பக்தியும் மலரும்; பண்புகள் புலரும்;
     பருவ நாடக மயக்கம் தெளியும்;
சக்தியும் தெரியும்; சகலமும் புரியும்;
     சாந்த நிலைதனில் சலனமும் விலகும்;
அச்சம் மரணம் துச்சம் ஆகும்;
     அழுகை, துயரம் யாவும் தொலையும்;
முக்தி என்னும் முதன்மை இலக்கில்
     முனையும் வாழ்வில் மேன்மையே நல்கும்;
3

பிறந்ததும் அழுதோம்; பேதை நெஞ்சில்;
     இறப்போம் என்பதை எண்ணி நினைந்தா?
பிறப்பின் நோக்கம் இறப்போ என்று
     பிள்ளை மனத்தால் அறிந்தா? உணர்ந்தா?
பிறப்பின் முடிவே இறப்பே என்றால்
     பெற்றயிவ் வாழ்வும் எதற்கே என்றா?
இறப்பினை நோக்கி வளர்வதா என்றா?
     இருப்பின் கணங்கள் குறையுதே என்றா?
4

பிறந்ததும் அழுதால் பெற்றவர் இன்பம்;
     இறந்ததும் அழுதால் இருப்பவர் துன்பம்;
பிறந்ததும் அழுதோம்; பசிக்கா? ருசிக்கா?
     இருந்தும் அழுதோம்; குறையா? பிழையா?
இறந்ததும் அழுதோம் இழப்பா? பிழைப்பா?
     இரக்கம் கருணை எதற்கும் அழுதோம்.;
துறந்ததும் அழுதோம்; தொலைந்ததில் அழுதோம்;
     துரோகம் ரோகம் அனைத்திலும் அழுதோம்;
5

வரவுகள் இழந்து வருந்தும் துயரில்
     வாழ்வில் நழுவும் வளமையில்; வலியில்
உறவுகள் மறைவில் உணர்ச்சிப் பிரிவில்
     உயர்வில் தாழ்வில் ஊமை நட்பில்
குறைகள் அறிந்து குமையும் பொழுதில்
     குன்றிய பெருமையில்; குறையும் அருமையில்
மறைவில் மனதுள் மயங்கியே அழுதோம்;
     மனித வாழ்வில் வேறென்ன கண்டோம்?
6

கண்டவை எல்லாம் மறையும் இன்பம்;
     கருத்திடைக் கனன்ற மாயப் பிம்பம்;
உண்டவை உடுத்தவை உடலொடு முயன்றவை
     வென்றவை சென்றவை விரிந்தவை புரிந்தவை
மண்டல மண்ணிடை மலர்ந்தவை நிகழ்ந்தவை
     மானில மேதினில் வளர்த்தவை சிலிர்த்தவை
அண்டிக் களித்தவை அனைத்தும் அகத்தே
     ஐயம் திரிபிலாச் சிற்றின்பச் சருக்கம்!
7

சலனச் சிறையில் சருக்கும் நினைவில்
     சருகாய் அருகும் அகவை முதிர்வில்
நலத்து நலிவில் நடையின் தளர்வில்
      நல்லவை அல்லவை அறியும் நிலையில்
உலகியல் நடப்பினை ஒதுக்கும் பொழுதில்
     உளத்தே இறப்பை உணரும் நொடியில்
மலங்களைத் துறந்து மயங்கும் தருணம்
     மரணம் வருகையில் வருந்துதல் முறையோ?
8

மறையும் போழ்தும் அழியாத் துடிப்பா?
     மரணப் பிடியிலும் மறையாப் பிடிப்பா?
இறைவன் அழைப்பை மறுக்கும் நடிப்பா?
     இருப்பைப் பெருக்க மறுகும் படிப்பா?
பிறந்தன இறக்கும்; தோன்றின மறையும்;
     பிழையாச் சுழற்சியில் எதுதான் நிலைக்கும்?
அறிந்தன அனைத்தும் அழிதலே உண்மை;
     அழுதால் மட்டும் வாழ்வா பிழைக்கும்?
9

ஆடிய ஆட்டம் போதும் என்றே
     ஆண்டவன் அழைக்கும் வேளை அன்றோ?
தேடலில் உயிரும் தேர்ந்த நிலையில்
     திரும்பா இறுதிப் பயணம் அன்றோ?
படைத்தோன் வகுத்த விதிப்படி முடியும்
     பயிலா நாடக இறுதித் தருணம்;
கடவுளின் மடியில் மீளாத் துயிலாம்;
     கரும்பாய் இனிக்கும் மரணம் அஃதே;
10

உடலும் உயிரும் உறவறு நேரம்
     உதறாப் பற்றால் பயன் என்ன?
விடுதலை உற்று ஏகும் போதும்
     வேதனை கொள்வதில் நலம் என்ன?
நடப்பவை யாவும் நலமென நினைந்தால்
     நாளும் மனதிடைச் சுகம் தானே!
கடப்பவை எல்லாம் கடமையே என்றால்
     கருத்திலும் வருத்தம் இலை தானே!
11

உடலை உயிரும் களையும் நொடியில்
     உணர்வு மறைதல் என்ன நிபந்தனையா?
உலகை விட்டுப் பிரிவது என்பது
     உயிருக்கு வருகிற உயர் தண்டனையா?
மறையும் இறுதித் துளியினில் கூட
     இறையைத் தொழுதால் பலன் தானே;
பிறப்பும் இறப்பும் இல்லா முக்தி
     பெறுவோம் என்றால் சுகம் தானே?
12

ஒருமுறை தானே வருகிற மரணம்
     உளத்தால் நொந்து மடிவதும் ஏன்?
ஒவ்வொரு நாளும் மரண பயத்தால்
     உள்ளே வருந்தித் துடிப்பதும் ஏன்?
இறக்கும் நொடியும் இன்பம் என்றே
     இருந்து விட்டாலே குறை என்ன?
இரணமே இல்லா மரணம் அல்லால்
     இறுதியில் பேரின்பம் வேறு என்ன?
13

தரணியில் இயற்கை மரணம் என்பது
     தானாய் வருகிற இறுதி ஒன்றே;
தருமம் கருமம் என்பது எல்லாம்
     தவமாய் வாழ்ந்து முடிந்த பின்னே;
மறுமைச் சுழற்சி வெல்லும் முக்தி
     மண்ணில் முழுதும் வாழ்ந்த பின்னே;
மரணம் என்பதும் இன்பம் தானே
     மனதுள் தெரியும் உறுதி முன்னே!!!
14

கூட்டினைக் குருவி துறந்திடுங் காலை
     கூறிடும் வாய்பை இழப்ப தினாலே
நாட்டிடை கிடந்து நாறா மெய்யை
     பாடையில் இட்டுப் பயணம் சுமக்கும்
கூட்டினும் பெருக்கினும் வருகிற நாலை
     கூடிக் களித்த கூட்டம் முதலாய்
காட்டிடை எரிக்கும் மானுடம் வரைக்கும்
     கழல்வோம் இன்றே கடைசி நன்றி!!!
15

நன்றி! நன்றி! நன்றி!

***

Monday, October 4, 2010

எதுவும் எதுவுமாகலாம்...

எதுவும் எதுவுமாகலாம்...

தெய்வங்கள் மனிதராகலாம்:
அவதாரங்கள்

மனிதரும் தெய்வமாகலாம்:
புத்தன்
ஏசு
காந்தி

நடிகனும் தெய்வமாகலாம்:
எம்.கே.டி.
எம்.ஜி.ஆர்
என்.டி.ஆர்.

என்ன செய்வது
சில நேரங்களில்
சில அவதாரங்கள்...
நடிகரும் ஆகலாம்:
டி.ஆர்.
சாம் ஆண்டர்சன். :)

***

Friday, October 1, 2010

அண்ணல் மகாத்மா நினைவஞ்சலி...

குறிப்பு:
மகாத்மாவின் சீடர்கள் லால் பகதூர் சாஸ்திரி அவர்களுக்கும், கர்ம வீரர் காமாராஜ் அவர்களுக்கும் கூட இன்று நினைவு நாள்.

லால் பகதூர் சாஸ்திரி அவர்களுக்கும் பிறந்த நாள். தமிழகம் கண்ட கர்ம வீரர் காமராஜருக்கு மறைந்த நாள்.

மகாத்மாவுடன் இரண்டறக் கலந்த இந்த நல்ல ஆத்மாக்களையும் இன்றைய நன்னாளில் நினைவு கூறுவதுடன் வாழ்த்துவோம்.

நன்றி.

அண்ணல் மகாத்மா நினைவஞ்சலி...

தந்தையா, தாத்தாவா, அண்ணலா, ஆத்மாவா?
      தனிமனிதச் சுதந்திரத்தின் மனமெனும் அங்கமா?
அத்தனையும் ஒன்றான அற்புத மானுடம்
      அகிம்சையே காட்டிய ஆற்றலின் மகிமை
மொத்த அகிலத்தின் முதன்மேன்மைச் சிந்தனை
      முயற்சிக்கே பரிணமித்த முழுமையின் எளிமை
இத்தனை பெருமையும் இலங்கிடும் இமயமே
      இந்தியத் தந்தையெம் காந்தி மகாத்மா!

சத்தியமே சோதித்த சோதனைச் சத்தியம்
      சமத்துவம் நடாத்திய சமதரும உத்தமம்
கத்தியும் ரத்தமும் காணாத போர்க்களம்
      கருணையும் உரிமையும் வற்றாத நிலைக்களம்
பித்தமும் போக்கிடும் அறிவில் நிறைகுடம்
      பெண்மையைப் போற்றிடும் அன்பின் உறைவிடம்
இத்தனை பெருமையும் இலங்கிடும் இமயமே
      இந்தியத் தந்தையெம் காந்தி மகாத்மா!

சுத்தமும் சுகமும் அகமும் புறமுமாம்
      சுதந்திரம் என்பதே பிறரையே மதிப்பதாம்
எத்தனை புகழிலும் வழுவாத ஒழுக்கமாம்
      எண்ணம் யாவிலும் நேர்வழி யோகமாம்
புத்தனைப் போலவே வாழ்ந்ததும் உதாரணம்
      புரிந்துகொள்ள ஏதுவாய்ப் புனிதமான மானுடம்
இத்தனை பெருமையும் இலங்கிடும் இமயமே
      இந்தியத் தந்தையெம் காந்தி மகாத்மா!

சித்தராய் வாழ்விலே இயற்கையின் வைத்தியம்
      சிந்தனை செயலிலே நேர்மையில் பைத்தியம்
உத்தமராய் உண்ணலில்; ஊட்டலில் அகிம்சையாம்
      உலகமதம் யாவையும் ஒன்றுகண்ட ஞானியாம்
சத்தியமாய்ச் சுயநலத்தைக் காணாநல் யோகியாம்
      சக்தியொடு நல்லறத்தைக் காத்தமா மானுடம்
இத்தனை பெருமையும் இலங்கிடும் இமயமே
      இந்தியத் தந்தையெம் காந்தி மகாத்மா!

அகிலத்திற்கே அருமைப் புதல்வனை; அண்ணல்காந்தியை;
      அன்னைபாரதம் அளித்தபெரும் பொன்நாள்; இன்னாள்;
சகிப்பையும் அன்பையும் சமதருமச் சிந்தனையும்
      சமுதாயம் நினைவுகொள்ளும் சத்தியத் திருநாள்
அண்ணல்தம் பிறந்தநாள் ஆனந்த நினைவுநாள்
      ஆன்மச் சோதனைக்கு ஆண்டில்வரும் நன்நாள்
அன்புடையோர் மேன்மைக்கு அடிவைக்கும் பெருநாள்
      அறம்போற்றும் அறிவுடையோர் கொண்டாடும் திருநாள்!

      அண்ணலே வாழி!!! எமது அன்பு நெஞ்சமே வாழி!!!

***

கைபேசி! (பகுதி: 1)

கைபேசி! (பகுதி: 1)

புதுக்கவிதை:
அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்
அவள்
அப்பனும் நோக்கினான்
அட
அனைவருந்தான் நோக்கினர்
”பெரிதாய்” ஒன்றுமில்லை...
நோக்கியாக் கடை
ஷோக்கேசில்
புத்தம் புதுவரவு
புதியவகைப் புதுவடிவு
கையடக்கக் கவர்ச்சி
நோக்கியாக் கைபேசி!!!

எண் சீர் விருத்தம்:
நோக்கரிய நோக்காய் நுணுக்கரிய நுண்ணுர்வாய்
      நோக்கியரே நோக்கினரே நோக்கா நோக்கியாம்
நோக்கியா அங்காடிக் நோக்கப் பேழையிலே
      நோக்கக் கவர்ச்சியாம் நோகாத வளர்ச்சியாம்
போக்கும் வரவும் போற்றிடுந் தெளிவாம்
      நேர்த்தியாம் தோற்றமாம் நெடுங்காலத் தேற்றமாம்
நோக்கும் வாக்கும் நுவலும்புலச் சித்திரமாம்
      நோக்கியாப் புதுவரவாம்; நுண்பதுமைக் கைப்பேசி!!!

இன்னிசை வெண்பா:
நோக்கியாப் புதுவரத் துக்கருவி நோக்கின்
வாக்கில் வல்லொலி திரையில் தெள்ளொளி
தாக்கும் மென்கிருமிக் காப்பு; தகதகத்து
நோக்கக் கவர்ச்சிக் கைப்பேசி யுமஃதே!

அகவல்:
கையகப் படுத்திய வையகச் சுருக்கம்;
காதினுள் அடங்கும் காதலின் நெருக்கம்;
வானொலி பொழியும் தேனொலி இன்பம்;
வண்ணொளி மொழியும் கண்ணொளி பிம்பம்;
வரம்புகள் இல்லா வானலைப் பிணையம்;
நரம்புகள் இல்லா நனவலை இணையம்;

தகுதியைக் கூட்டும் கௌரவத் துண்டு;
தரத்தினைக் காட்டும் யௌவனப் பெண்டு;
பணியோ இலையோ பதவிசுப் பேழை;
பணிவோ நிலையோ உணரா ஏழை;
பொய்யோ மெய்யோ புலம்பிடும் கருவி;
புரிந்தால் இசையாய் உருகிடும் அருவி;

அவசர கால அடிப்படை மருந்து;
அடிக்கடி படைக்கும் அழையா விருந்து;
உறவுகள் பெருக்கும் உணர்விலாச் செல்லம்;
உயிரினைச் சொடுக்கும் உரைதனில் வெல்லம்;
அரற்றும் மொழிக்கே கட்டண எச்சம்;
அனைத்து வரத்தும் இலவச மிச்சம்;

அறிந்தவர் தெரிந்தவர் கூப்பிடு தூரம்;
அழைப்பும் மறுப்பும் கூடுதல் பேரம்;
தொலைவைச் சுருக்கிய ஓயாத் தொல்லை;
செலவைப் பெருக்கிடும் மாளாக் கிள்ளை;
தனிமை கெடுக்கும் தடங்கல் வில்லை;
தவறியும் பிழைக்கும் வளர்ப்புப் பிள்ளை;

உரையினைப் பரிமாறும் இடைமுகத் தகடு;
உளங்களை இடம்மாற்றும் மறைமுகச் சுவடு;
தடைகளைத் தாண்டிடும் படையெறி அம்பு;
கடமைகள் வேண்டிடும் கைப்பொறி வம்பு;
இருப்பினை இழக்கா இயந்திர உலவி;
இரக்கைகள் இல்லா இராட்சதக் குருவி;

கணத்திடை கடத்தும் காற்றலைப் பூவை;
கடமையைத் துலக்கும் எந்திரப் பாவை;
குறுகியத் தகவலின் விரைவியத் தூது;
கொஞ்சிடும் சேவையில் விஞ்சுவது யாது?
நன்மைகள் சேர்க்கும் நாவலந் தீவு;
நம்பிக்கை காக்கும் நயம்படு மாது;

தரவினைப் பேணும் குறுந்திரள் உருட்டி;
வர-வினை செல-வினை வைகுந் திரட்டி;
நினைவினைத் தூண்டும் குறிப்புரை ஊட்டி;
நனவினைப் பகரும் ஆண்டுநாட் காட்டி;
சலிப்பினைத் தெரியாச் சமர்த்துக் குட்டி;
சஞ்சலம் அறியாச் சந்தனக் கட்டி;

தற்புகழ் தேடா ஊழியப் பிறவி;
தன்லயந் தவறா தனிபெருந் துறவி;;
நினைவகச் சுமையைக் குறைக்கும் நட்பு;
நெருங்கிய அண்மையில் துடிக்கும் உயிர்ப்பு;
வையகம் இங்கே வாழ்கிற வரைக்கும்
மெய்யுறை அங்கமே இக்கை யலைபேசி!

இதயத்து நெருக்கம் மார்பக வலியாம்;
காதொடு பெருக்கம்; கபாலப் புற்றாம்;
காந்தக் களத்திடைக் கனன்றிடும் வாழ்வே;
கவனம் வைத்திடில் வருமோ தாழ்வே?
அறிவொடு நுகர்வின் அனைத்தும் நலமே;
அளவினை மிஞ்சின் அமிர்தமும் விடமே!!!

***

Monday, September 27, 2010

சங்கு கொண்டே இங்கு ஊதுவோமே...

சங்கு கொண்டே இங்கு ஊதுவோமே...


கவிதைப் பின்புலம்:

ஆர்குட் தமிழ் குடும்பத்தில் திரு.சசி கலா என்பவர் “முதல்வன் - கருணாநிதி” என்ற கீழ்க்கண்ட கவிதையை பதிவு செய்திருந்தார். அதற்கு
எதிர்வினையாக இயற்றியது இது.

அவரது கவிதை:

ஆயிரம் பேரொளி அபிநயம் !!
அரும்தமிழ் காவலன் கண்டான்.!
'தஞ்சை பெருங்கோவில்" ஆயிரம் ஆண்டு காப்பியம் ஆனது !!!
காவியம் ஆனது! கவிகள் உள்ளவரை "கலைஞர்" உண்டு!!
இல்லை! இல்லை !! தமிழ் உள்ளவரை "தலைமகன்' உண்டு!
அகிலம் புகழ "ஆயுள் முதல்வன்" வாழ்வான் !!வாழ்வான் !!
எங்கள் "முதல்வன்" என்றும் வாழ்க!!
நடக்கும் நாயகன் நலமுடன் வாழ்க!!
முத்தான மு. க. சத்தான காவியம்!!
மக்கள் மனதில் நீங்கா ஓவியம்!!
ஆயிரம் தலைமுறை வாழ்த்தும்!!! வணங்கும் !!
கருணாநிதி!! இல்லை இல்லை !! " கருணா நதி !!
கங்கை என வற்றாது....அவன் புகழே!!


முச்சங்காய் இக்கவிதை மூன்று பகுதிகளாக இங்கே பரிணமித்ததன் காரணம்:

முதற்சங்கம் அமுதூட்டும்; மொய்க்குழலார் ஆசை
நடுச்சங்கம் நல்விலங்கு பூட்டும்; கடைச்சங்கம்
ஆம்போ ததுஊதும்; அம்மட்டோ? இம்மட்டோ?
நாம்பூமி வாழ்ந்த நலம்!

- பட்டினத்தார்

நன்றி: எழுதத் தூண்டிய திரு.சசி கலா அவர்களுக்கும், ஆர்குட் தமிழ் குழுமத்திற்கும்
http://www.orkut.co.in/Main#CommMsgs?cmm=8383044&tid=5521034039879975108


***


தங்கத் தமிழ் மன்னவனை
     தரணி போற்றும் மும்முடியை
தஞ்சையிலே கோயில் செய்த
     சிங்கமந்த ராஜ ராஜனை
மங்கு புகழ் செய்ய
     மானிலத்தில் யாரும் உண்டோ?
ஆயிரம் ஆண்டு கண்டால்
      யாருந்தான் விழா எடுப்பார்!

பொங்கு தமிழ் மக்களிடம்
     பொய் வேடம் போட்டாலும்
அந்த அந்த வேளையிலே
     அரசாங்கம் விழா எடுக்கும்!
எங்கும் நடப்பது தான்
      இதிலென்ன பெருஞ் சிறப்பு?
எந்த அரசாய் இருந்தாலும்
      இந்த விழா எடுக்காதா?

சிங்களம் வென்று நின்ற
     செந்தமிழர் நம் மண்டலம்
இன்று கண்ணீரைச் சிந்த
     இறையாண்மை பேசி விட்டு
தம்புகழ் தேடி நின்றால்
     மங்களம் தான் பாடோமா?
பங்கம் இங்குச் செய்தாரை
      சங்கு கொண்டே ஊதோமா?


வாயுரை வாழ்த்த வந்த
      வள்ளலார் கவிமார் எல்லாம்
தாயினை வாழ்த்தி நிற்பார்
      தமிழினை வாழ்த்தி நிற்பார்
ஆவுடை கோயில் கண்ட
      அரசனை வாழ்த்தி நிற்பார்
நாவுடைக் கயவர் தானே
      நச்சினைப் பேணி நிற்பார்!!!

ஆயிரம் ஆண்டு கண்டது
      ஆவுடையார் கோயில் ஐயா
பாயிரம் யாருக்கு இங்கே?
      பஜனைகள் யாருக்கு இங்கே?
தாயகம் வாழ வைத்த
      தஞ்சை மன்னன் எங்கே?
நோயிலும் தற்புகழ் தேடும்
      தன்னல நெஞ்சம் எங்கே?

ஆயிரமாம் வருட விழா
      ஆனந்தமாய்ப் பங்கு கொள்ள
வாய்த்ததே வாய்ப்பு என்று
      வணங்குதல் பணிவின் மாண்பு!
வாய்ப்பிலே வந்ததற்கு எல்லாம்
      வாழ்த்துரை தேடித் தேடி
பாயினைப் பிராண்டி நின்றால்
      பாடாரோ கடைசிச் சங்கு?


ஆருரார் இசைச் சங்கமமாய்
      ஆடல் வல்லானுக்கும் இங்கே
ஆயிரம் நாட்டியக் கலைஞர்
      ஆடியமை வாழ்த்தவே வேண்டும்!
சாதனை செய்த புதல்வி
      சத்தியமாய் பத்மா இங்கே!
ஆவன செய்தல் வேண்டும்
      அவருக்கும் கல்லில் எழுத்து!

தேவனைப் பாடிப் பாடிப்
      திசையெலாம் இறை முழக்கம்
பாவனை காட்டிக் காட்டிப்
      பாவையர் செய்த நடனம்
சாவதே இல்லை தமிழில்
      சங்கங்கள் என்றுமே உண்டு
ஆவுடையான் அருளே எங்கும்
      அருந்தமிழருக்கு நிற்க என்றும்!

ஆலயச் சங்கமம் என்றும்
      அருளினை வளர்த்தல் வேண்டும்
ஆணவம் அழிந்து ஒழிந்து
      அடக்கந்தான் மலர வேண்டும்
மானுடம் பெருகி நின்று
      மனிதர்கள் சிறக்க வேண்டும்
தானெனும் அகந்தை அழியச்
      சங்கொலியே முழங்க வேண்டும்!!!

***

Friday, September 24, 2010

உயர்வுள்ளல்...

உயர்வுள்ளல்...


கவிதைப் பின்புலம்:

மூலிகை பெட்ரோல் புகழ் ராமர் பிள்ளை, இந்த முறை கடல் நீரை பெட்ரோலாக்கி காட்டப் போவதாக சவால் விட்டுள்ளார். அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியன்று சென்னையில் 1 லட்சம் லிட்டர் கடல் நீரை எரிபொருளாக்கிக் காட்டப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

உண்மையில் கடல் நீரால் பெட்ரோல் செய்து காட்டி விட்டால் மாபெரும் மேதை என ஒத்துக் கொண்டு நாமும் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம் தானே. என்ன சொல்கிறீர்கள்?
.

நன்றிகள்: http://narumugai.com/?p=13088

***


கடல் நீரில் குடி நீர்
கண்டு விட்டது உலகம்;..
கடல் நீரில் எரி பொருளா?
கதையா? நிஜமா?
இராமர் பிள்ளை
நம்பிக்கை இராமரா?
கொறிக்கும் அணிலா?
பொறுத்திருந்து பார்ப்போம்?

வெற்றி பெற்றுவிட்டால்...
தமிழகத்தில் ஒவ்வொரு
நகர ஊருக்கும்
தினம் தினம்
விமானச் சேவை
ஓட்டலாம் தான்....

வண்டி மாடுகளுக்கு
கண்டிப்பாய் விடுதலை...
இழுப்பு உழவென
பெட்ரோலிலே விவசாயம்...
சென்னைத் துறைமுகமே
எண்ணைத் துறைமுகமாய்...

அமெரிக்கர்களுக்கு தமிழகத்தில்
அளிப்போம் வேலைவாய்ப்பு...
இந்தியன் விசாவிலை
அயல்நாடுகளில் அதிகரிப்பு!
கருநாடகா காவேரி
கூவத்திலே கூட்டணி!!!
அடடா அடடா
கற்பனைக்கேது எல்லை?

உள்ளுவதெல்லாம் உயர்
உள்ளல் வேறல்ல!
நடப்பவை எல்லாம்
நல்லதாக நடக்கட்டும்!!
நல்லதே நடக்கட்டும்!
ஆல் தி பெஸ்ட்
இராமர் பிள்ளை!

***

சரியான மூக்குடைப்பு?

சரியான மூக்குடைப்பு?


கவிதைப் பின்புலம்:

இன்றையச் செய்தி: மகாபலிபுரத்தில் மாமல்லன் சிலை உடைப்பு
மகாபலிபுரம்: மகாபலிபுரத்தில் மாமல்லன் சிலை உடைக்கப்பட்டதைக் கண்டித்து எம்எல்ஏ தலைமையில் பாமககவினர் போராட்டம் நடத்தினர். திருக்கழுக்குன்றத்தில் பஸ்கள் மீது கல்வீச்சும் நடந்தது. மகாபலிபுரம் பைபாஸ் ரோட்டில் மாமல்லன் சிலை உள்ளது. இந்த சிலையை யாரோ உடைத்துள்ளனர்.
மேலும் வன்னியர் சங்க கல்வெட்டு மற்றும் பாமக கொடிக் கம்பத்தையும் சேதப்படுத்தியுள்ளனர்.
இதையடுத்து இன்று காலை செங்கல்பட்டு எம்.எல்.ஏ. திருக்கச்சூர் ஆறுமுகம் தலைமையில் பாமகவினர் மகாபலிபுரத்தில் குவிந்தனர்.
ஆர்ப்பாட்டம் நடத்திய அவர்கள் பின்னர் மறியலிலும் ஈடுபட்டனர். சிலையை உடைத்தவர்களை கைது செய்யக் கோரி கோஷமிட்டனர்.
இந்தப் போராட்டத்தால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியதால் போலீசார் குவிக்கப்பட்டனர்.
சிலை உடைப்பைக் கண்டித்து திருக்கழுக்குன்றத்தில் 2 பஸ்கள் கல்வீசி உடைக்கப்பட்டன. இதையடுத்து அங்கு கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

http://thatstamil.oneindia.in/news/2010/09/22/mamallan-statue-damaged-mahabalipuram.html

***


சிலை உடைப்பைக் கண்டித்து பேருந்து உடைப்பா?
பேருந்து உடைப்பைக் கண்டித்து எதை உடைக்கலாம்?
உடைப்போர் மண்டைகளையா? கைகளையா? முதுகெலும்பையா?
உடைக்க வேண்டிய வருணமும், ஜாதியும், மதமும்
உடைபட்ட சிலைகளின் இடை வெளிகளிலும் கூட
எகத்தாளமாய்த்தான் இன்னமும் கை கொட்டிச் சிரிக்கிறது!!!
உணர்வற்ற உள்ளங்களினால் உடைபட்டுக் கிடக்கிறது உலகம்....
மமதையுற்ற நெஞ்சுக்களில் மங்கிக் கிடக்கிறது ஒளி...
உண்மையான விடிவு எற்றைக்கு எம் மனிதர்காள்?

***

Saturday, September 11, 2010

மாகவி பாரதி நினைவஞ்சலி

மாகவி பாரதி நினைவஞ்சலி

கவிதைப் பின்புலம்:

மகாகவிக்கு இன்று நினைவு நாள். இதற்கு இன்று ஆர்குட் தமிழ் குடும்பம் என்னும் குழுவில் வெளிவந்த 1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் "என் கணவர்" என்ற தலைப்பில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரையின் ஒரு பகுதி:

ஊருக்குப் பெருமை என் வாழ்வு. வையகத்தார் கொண்டாட வாழவேண்டும் என்ற என் கனவு ஓரளவு பலித்ததென்னவோ உண்மைதான். இன்று என் கணவரின் புகழ் விண்முட்டிச் செல்கிறது. இன்று மகாகவியின் மனைவியாகப் போற்றப்படும் நான் அன்று பைத்தியக்காரன் மனைவியென்று பலராலும் ஏசப்பட்டேன்... விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம். உலகத்தோடொட்டி வாழ வகை அறியாத கணவருடன் அமர வாழ்வு வாழ்ந்தேன் என்றால் உங்களுக்குச் சிரிப்பாகத்தான் இருக்கும். யாருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் வாய்க்கலாம். ஆனால் கவிஞன் மனைவியாயிருப்பது கஷ்டம்.

கவிஞர்கள் போக்கே ஒரு தனி. உண்பதிலும் உறங்குவதிலும் கூட சாதாரண மனிதரைப்போல் அவர்கள் இருப்பதில்லை. கற்பனைச் சிறகு விரித்துக் கவிதை வானில் வட்டமிடும் பறவை, பூலோகத்திலே இருண்ட வீட்டிலே மனைவிக்கும் மற்றவருக்கும் சம்பாத்தியம் செய்துபோட்டு, சாதாரண வாழ்க்கை வாழ முடியுமா?
வறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை; ஆனால் வயிற்றுக்குணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டி வருகிறது. காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவேயின்றிக் காலம் கழித்தானேயானால், என்ன செய்ய முடியும்?

கவிஞன் விசித்திரமான தன்மை நிறைந்தவன்; அவனுக்கு எதுவும் பெரிதில்லை. ஆனால் கவலை நிறைந்த வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்று எந்தப் பெண்தான் நினைக்க முடியும்? சிறு வயதில் ஆசாபாசங்களும் அபிலாஷைகளும் ஒவ்வொரு பெண்ணின் மனத்திலும் நிறைந்திருப்பது இயற்கைதானே? சுகமாக வாழுவதற்கு சொர்க்கலோகம் சென்றால்தான் முடியும் என்ற நிலை கவிஞன் மனைவிக்கு ஏற்பட்டு விடுகிறது. அந்த நாளிளிருந்த சத்திமுத்தப் புலவரின் மனைவியிடமிருந்து இன்று என்வரை சுகவாழ்வு ஒரே விதமாகத்தான் அமைந்திருக்கிறது. ஏகாந்தத்தில் அமர்ந்துவிட்டால் முனிவரும்கூட அவரிடம் பிச்சைதான் வாங்கவேண்டும். ஆனால் மனைத் தலைவியாகிய நான் அவ்வாறு நிஷ்டையிடமிருக்க முடியுமா?

செல்லம்மாள் பாரதியின் உரையினை அங்கு வழங்கியமைக்கு மிக்க நன்றி. நடைமுறை வாழ்க்கையில் அவர் கூற்றின் ஒவ்வொரு வார்த்தையும் மாற்ற முடியாத உண்மையென்பதால் மிகவும் வலிக்கிறது. இருப்பினும் இவையெல்லாம் மாகவியை உண்டாக்கவே ஏற்பட்ட இயற்கையின் விதியெனக் கொள்வோம்.

இதைப் படித்தவுடனே என்னிடம் ஏற்பட்ட உணர்வையே, செல்லம்மாவிற்குப் பதிலாய், பாரதிக்கு அஞ்சலியாக இங்கே சமர்ப்பிக்கின்றேன்.

திருமதி. செல்லம்மாள் பாரதியின் உரையினை ஆர்குட் தமிழ்க் குடும்பம் குழுமத்தில் பதிப்பித்த திரு. சிவா ரஞ்சன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

மாகவி பாரதி நினைவஞ்சலி

மா கவியாய்ப் பிறந்திடவே
     மாதவம் செய்திடல் வேண்டுமம்மா...
மாண்பொடு வாழ்வினைக் கவிபடைக்க
     மனைவியும் பிள்ளையும் வேண்டுமம்மா...
இல்லறம் என்பதை அறியாதே
     ஏட்டிலே கவிதை தேறாதே!
ஊழ்வினை என்பது வலிதானோ
     உலகம் புகழும் இன்னாளும்?

நடைமுறைச் சந்தையில் உழல்வதற்கே
     நல்லதோர் கணவரும் வேண்டுமென்றால்....
தலைமுறை தாண்டி நிற்பதற்கோர்
     தன்னிலை மறத்தல் நியாயமம்மா!
அற்புதக் கவிதைகள் பிறந்திடவே
     அடிமைத் தளைகள் எரிந்திடவே
அக்கினிக் குஞ்சொன்று பிறந்ததம்மா
     அனைத்தையும் தாண்டி நிறைந்ததம்மா!

இல்லாளின் இல்லாமை அறியாதே
     இடர்படும் இல்லாருக்கு அழுததம்மா...
நல்லதோர் வீணையாய் நலத்துடனே
     நாளும் புழுதியில் உழன்றதம்மா...
புத்தியில் சுடரென உய்வதற்க்கே
     பித்தனைப் போலவும் திகழ்ந்ததம்மா...
எத்தனை கோடி இன்பமென்றே
     இலக்கிய உலகினில் மிதந்ததம்மா....

செல்லம்மாள் நின்றன் துணையாலே
     சிந்தனை வெளிதனில் பறந்ததம்மா
கண்ணம்மா என்றொரு கனவுலகில்
     கவிதை கொஞ்சிக் களித்ததம்மா...
அன்னைத் தமிழின் அருள்முன்னே
     ஆசை, அபிலாசை சரியாமோ?
செல்வம் என்பது பொருளாமோ?
     இன்பம் என்பது இருளாமோ?

பசியிலும் கவிதை தந்தானே....
     பழையன கழித்து நின்றானே...
பொய்யினைச் சாடி உடைத்தானே...
     புதியன தேடிப் படைத்தானே...
செந்தமிழ் நாடெனக் கண்டானே...
     தேன்சுவைப் பாடலைச் சொன்னானே....
வானகம் ஏகி மறைந்தாலும்...
     வையகம் போற்றிட நின்றானே....

பாரதி என்றும் வாழுகின்றான்...
     பாரினில் ஒளியாய் வாழுகின்றான்...
தமிழர் நெஞ்சில் வாழுகின்றான்...
     தாரணி எங்கும் வாழுகின்றான்...
அன்புத் தமிழால் வாழுகின்றான்....
     அழியாப் புகழால் வாழுகின்றான்....
இன்பச் சுவையாய் வாழுகின்றான்...
     இசையாய்ப் பொருளாய் வாழுகின்றான்...!

வாழட்டும் பாரதி என்றென்றும் ...
     வளரட்டும் அவன்புகழ் எங்கெங்கும்!!!!

***