துன்பம் - ஐம்பது | | 1. அன்பின்மை துன்பம்: அன்பிலா மாந்தர் மண்ணில் துன்பம்; அவர்தம் கையால் உண்பதும் துன்பம்; தெம்பிலா நெஞ்சால் தெளிவதும் துன்பம்; திடமிலா உடலால் விளைவதும் துன்பம்; இன்பிலா வாழ்வும் வளமும் துன்பம்; இசைவிலாத் துணையும் மொழியும் துன்பம்; முன்செலாத் தொழிலும் உழைப்பும் துன்பம்; முனைப்பிலா மனமும் தினமும் துன்பம்; 2. பொறாமை துன்பம்: நம்பிக்கை சிதைக்கும் நண்பரும் துன்பம்; நன்றியை மறக்கும் அன்பரும் துன்பம்; வம்பினை வளர்க்கும் வஞ்சகர் துன்பம்; வளத்தினைப் பொருமும் நெஞ்சகர் துன்பம்; வெம்பியே கருக்கும் சொந்தம் துன்பம்; வேதனை பெருக்கும் பந்தம் துன்பம்; தும்பினை விளைக்கும் போதனை துன்பம்; துடிப்பினைக் குலைக்கும் சோதனை துன்பம்; (தும்பு = கறை, குற்றம்) 3. குறைகள் துன்பம்: இங்கிதம் இல்லா மனிதரும் துன்பம்; இளமையில் வறுமை என்பதும் துன்பம்; சங்கடப் படுத்தும் நிந்தனை துன்பம்; சஞ்சலப் படுத்தும் சிந்தனை துன்பம்; பங்கிடை வைக்கும் பேதம் துன்பம்; பழமையை வைய்யும் வாதம் துன்பம்; எங்கும் நிறைக்கும் மாசும் துன்பம்; எதிலும் தொலையாத் தூசும் துன்பம்; 4. விரிசல்கள் துன்பம்: இம்சித்துத் தள்ளும் இல்லம் துன்பம்; இணக்கம் இல்லாச் சொல்லும் துன்பம்; சம்மதம் இன்றிப் புணர்தலும் துன்பம்; சண்டை நிறைந்த இல்லறம் துன்பம்; மமதை பெறுக்கும் மனையும் துன்பம்; மதிக்க மறுக்கும் துணையும் துன்பம்; வமிசம் இல்லா வாழ்க்கை துன்பம்; வஞ்சகம் கொள்ளும் சேர்க்கை துன்பம்; 5. அழிவுகள் துன்பம்: வழியினை அழித்து வாழுதல் துன்பம்; விழியினை இழந்து வீழுதல் துன்பம்; இழிவினைக் கண்டு சகித்தல் துன்பம்; இழவினைக் கொண்டு சுகித்தல் துன்பம்; அழிவினை பெருக்கும் யுத்தம் துன்பம்; அறவினை சருக்கும் சட்டம் துன்பம்; மொழியினைப் பழிக்கும் மூடரும் துன்பம்; செழுவினை அழிக்கும் சீடரும் துன்பம்; 6. குழப்பம் துன்பம்: அலையாய்ப் பரவும் அவலம் துன்பம்; மலையாய்த் தெரியும் கவலை துன்பம்; தலையாய்க் கலங்கும் பிரிவும் துன்பம்; தொலையாய் மலங்கும் உறவும் துன்பம்; கலையாய்த் திறம்பும் உளவும் துன்பம்; கருவாய் அரும்பும் களவும் துன்பம்; நிலையாய் விளங்கும் களங்கம் துன்பம்; நிழலாய்த் தொடரும் கலக்கம் துன்பம்; (திறம்பு=பிறழ், மாறுபடு) 7. வறட்சி துன்பம்: மழையிலா மண்ணில் வாழ்பவை துன்பம்; கலையிலாக் கண்ணில் காண்பவை துன்பம்; மொழியிலா ஊமையின் அழுகை துன்பம்; நிலையிலா வேலையில் உழல்கை துன்பம்; அழிவிலாத் தீமையை உள்ளுதல் துன்பம்; தலையிலாச் சேனையைக் கொள்ளுதல் துன்பம்; விழியிலாக் கண்ணில் அழகெலாம் துன்பம்; விலையிலா வாழ்வில் இழிவதே துன்பம்; 8. வினைகள் துன்பம்: அச்சம் துன்பம்; அறிவால் கிட்டா உச்சம் துன்பம்; அடிமை கொள்ளும் இச்சம் துன்பம்; அறிவை இழந்த குச்சம் துன்பம்; அணையா நெருப்பில் மிச்சம் துன்பம்; அழியாக் கடனுள் சொச்சம் துன்பம்; அறிந்தும் மதியா துச்சம் துன்பம்; அகந்தை மிகுத்த எச்சம் துன்பம்; ஒச்சம் துன்பம்; (இச்சம் = விருப்பம்;, குச்சம் = புறங்கூறல், துச்சம் = சிறுமை, எச்சம் - வாரிசு, ஒச்சம் - பழுது) 9. விரோதம் துன்பம்: அட்டம் துன்பம்; அடிமைப் படுத்தும் சட்டம் துன்பம்; அழிவைக் கொடுக்கும் திட்டம் துன்பம்; அறவழி கெடுக்கும் நுட்பம் துன்பம்; அகந்தையில் ஆடும் கொட்டம் துன்பம்; அற்ப எண்ணத்துத் திட்பம் துன்பம்; அறிவிலி மாந்தரின் வட்டம் துன்பம்; ஆணவ மனிதரின் ஆட்டம் துன்பம்; நாட்டம் துன்பம்; (அட்டம் = பகைமை, விரோதம்) 10. தொல்லை துன்பம்: குடித்தல் துன்பம்; குழந்தையை மனைவியை அடித்தல் துன்பம்; கொடிய புகையினைப் பிடித்தல் துன்பம்; குலைக்கும் பிணியால் துடித்தல் துன்பம்; குறைகள் நிறைந்து நடித்தல் துன்பம்; பேணிய சொத்தைக் கெடுத்தல் துன்பம்; போலிக் கண்ணீர் வடித்தல் துன்பம்; உரிமையை மறுத்தல் தடுத்தல் துன்பம்; படுத்தல் துன்பம்; 11. வஞ்சனை துன்பம்: பழித்தல் துன்பம்; பகையோர் எனினும் இழித்தல் துன்பம்; பண்பைக் கொன்று விழித்தல் துன்பம்; பாதையை அழித்து ஒழித்தல் துன்பம்; பதவியில் ஒதுக்கிச் செழித்தல் துன்பம்; பாமர மக்களை மழித்தல் துன்பம்; பாவக் கணக்கில் கொழித்தல் துன்பம்; பணியில் வீணாய்க் கழித்தல் துன்பம்; கிழித்தல் துன்பம்; (இழித்தல் = இறக்குதல், கீழ்ப்படுத்துதல், விழித்தல் = அழைத்தல், மழித்தல் = மொட்டையாக்கல்) 12. வருத்துதல் துன்பம்: பதைத்தல் துன்பம்; பதைக்கும் உயிரினை வதைத்தல் துன்பம்; பணியா மகவை உதைத்தல் துன்பம்; படைத்த சிலைகளைச் சிதைத்தல் துன்பம்; பழியை முனைந்து விதைத்தல் துன்பம்; பொருந்தார் புகழினைப் புதைத்தல் துன்பம்; புன்மை வளர்த்துக் கதைத்தல் துன்பம்; புகையும் பகையினில் கொதித்தல் துன்பம்; மிதித்தல் துன்பம்; 13. அறியாமை துன்பம்: வாடுதல் துன்பம்; வலி அறியாது நாடுதல் துன்பம்; திறமைகள் இன்றித் தேடுதல் துன்பம்; தெய்வம் இகழ்ந்து சாடுதல் துன்பம்; திசை தெரியாது ஓடுதல் துன்பம்; தெளிவே இலாது ஓதுதல் துன்பம்; விளையும் காதலை மூடுதல் துன்பம்; பிழையாய்ப் பாடல் பாடுதல் துன்பம், ஆடுதல் துன்பம்; 14. சுகவீனம் துன்பம்: சோகம் துன்பம்; சுவை இழிந்த மோகம் துன்பம்; சுதந்திரம் அழிந்த போகம் துன்பம்; சுளுவில் ஒழியா ரோகம் துன்பம்; சுருதி குலைந்த ராகம் துன்பம்; சுகித்தும் அழியாத் தாகம் துன்பம்; சுகத்தை இழந்த வேகம் துன்பம்; சுபத்தை நல்கா ஊகம் துன்பம்; பாகம் துன்பம்; 15. ஒழுங்கீனம் துன்பம்: மோதல் துன்பம்; முனைந்து அறியா ஓதல் துன்பம்; இணைந்து புரியாக் காதல் துன்பம்; வாழத் தெரியாச் சாதல் துன்பம்; வகையும் அறியா ஈதல் துன்பம்; வருத்திக் குலைக்கும் கூதல் துன்பம்; வாடைக் காற்றில் ஊதல் துன்பம்; வளமை கெடுக்கும் வாதும் துன்பம்; சூதும் துன்பம்; 16. துர்பார்வை துன்பம்: கோபம் துன்பம்; குறுகிய எண்ணக் கோடல் துன்பம்; குரவர் இட்ட சாபம் துன்பம்; குட்டன் தவறைச் சாடல் துன்பம்; குன்றி மறையாத் தாபம் துன்பம்; குறிக்கோள் அற்ற தேடல் துன்பம்; குற்றம் உற்ற லாபம் துன்பம்; குறுகிக் குமுறும் வாடல் துன்பம்; மூடல் துன்பம்; 17. பழுதுகள் துன்பம்: ஆசை துன்பம்; அற்ப குணத்தோர் நேசம் துன்பம்; அலறிக் கதறும் ஓசை துன்பம்; அழிவை நல்கும் பாசம் துன்பம்; அகிம்சை அல்லாப் பூசை துன்பம்; அறவழி பிறழ்ந்த காசும் துன்பம்; அழகு மடந்தை மீசை துன்பம்; அழுக்கு நிறைந்த தேசம் துன்பம்; சேதம் துன்பம்; 18. தீயெண்ணம் துன்பம்: வினைத்தல் துன்பம்; கண்களில் நீரினைப் பனித்தல் துன்பம்; கருத்தினைப் பிறர்பால் திணித்தல் துன்பம்; கவனம் இல்லாக் கணித்தல் துன்பம்; கைகளைப் புறத்தே பிணித்தல் துன்பம்; கௌரவம் அஞ்சாத் துணித்தல் துன்பம்; களங்கம் உற்றதை நினைத்தல் துன்பம்; பொருத்தம் அற்றதைப் பிணைத்தல் துன்பம்; இணைத்தல் துன்பம்; 19. உழற்சி துன்பம்: சிக்கல் துன்பம்; சிக்கா நீரால் விக்கல் துன்பம்; விலகா வலியால் முக்கல் துன்பம்; முனைந்து தொடரா மக்கள் துன்பம்; விரைந்து உதவாச் சுற்றம் துன்பம்; படுத்தும் சொத்தைப் பற்கள் துன்பம்; பயன்கள் அற்ற சொற்கள் துன்பம்; பாதை முடக்கும் கற்கள் துன்பம்; முட்கள் துன்பம்; 20. ஏழ்மை துன்பம்: உண்மை இல்லாத ஊரும் துன்பம்; உயர்வு இல்லாத பேரும் துன்பம்; தண்மை இல்லாத தரையும் துன்பம்; தடுப்பாய் இல்லாத கரையும் துன்பம்; திண்மை இல்லாத ஆண்மை துன்பம்; திடமாய் இல்லாத வண்மை துன்பம்; மென்மை இல்லாத பெண்மை துன்பம்; மேன்மை இல்லாத எண்ணம் துன்பம்; 21. தீமைகள் துன்பம்: இன்மையைப் பழிக்கும் இகழ்ச்சி துன்பம்; இயற்கையை அழிக்கும் முயற்சி துன்பம்; நன்மையைக் கலைக்கும் வழக்கம் துன்பம்; நயத்தினைக் குலைக்கும் பழக்கம் துன்பம்; தொன்மையை மறக்கும் நிலையும் துன்பம்; துயரினைப் பெருக்கும் கலையும் துன்பம்; வன்மையை இழைக்கும் இயற்கை துன்பம்; வயத்தினை இழக்கும் செயற்கை துன்பம்; 22. பொய்கள் துன்பம்: தாய்மை இழந்த சேய்மை துன்பம்; தலைமை இழந்த கைம்மை துன்பம்; வாய்மை வழுக்கும் வாழ்த்தும் துன்பம்; வஞ்சிக் கொழுக்கும் வாழ்வும் துன்பம்; பொய்மை செழிக்கும் நகலும் துன்பம்; போதை இழைக்கும் புகழும் துன்பம்; தூய்மை தொலைக்கும் நியாயம் துன்பம்; துயரம் விளைக்கும் நேர்மை துன்பம்; 23. காலிகள் துன்பம்: உரிமை மறுக்கும் ஆட்சி துன்பம்; உயர்வை அறுக்கும் வீழ்ச்சி துன்பம்; கருணை தொலைக்கும் காட்சி துன்பம்; கருவைக் கலைக்கும் மாட்சி துன்பம்; பொறுமை இழக்கும் மனமும் துன்பம்; புரிதல் இல்லாத் துணையும் துன்பம்; சிறுமை புரியும் வீணர் துன்பம்; சிரிக்க மறந்த மாக்கள் துன்பம்; 24. மயக்கம் துன்பம்: புகழ்ச்சிக்கு மயங்கும் மேதமை துன்பம்; இகழ்சிக்கு வருந்தும் பேதமை துன்பம்; அளவுக்கு மிஞ்சிய அமிர்தமும் துன்பம்; வரவுக்கு மிஞ்சிய செலவும் துன்பம்; விழலுக்கு இறைத்த வெள்ளமும் துன்பம்; வேதனை நிறைத்த உள்ளமும் துன்பம்; ஒழுக்கம் வழுவிய நடத்தையும் துன்பம்; உண்மை நழுவிய இடத்தேயும் துன்பம்; 25. குற்றங்கள் துன்பம்: வீட்டை அழிக்கும் வேட்கை துன்பம்; நாட்டைப் பழிக்கும் நாக்கும் துன்பம்; காட்டை ஒடுக்கும் வினையும் துன்பம்; காட்டிக் கொடுக்கும் கயமை துன்பம்; சேட்டை படைக்கும் பகைமை துன்பம்; பூட்டை உடைக்கும் தகைமை துன்பம்; மூட்டை கடிக்கும் அவையும் துன்பம்; மாட்டை அடிக்கும் சுவையும் துன்பம்; 26. அழுக்குகள் துன்பம்: பொறாமை உறையும் மனசும் துன்பம்; புத்தியில் நிறையும் மாசும் துன்பம்; வறுமையில் உழலும் வீடும் துன்பம்; வறட்சியில் எரியும் காடும் துன்பம்; மாறும் உலகை மறுப்பதும் துன்பம்; மாநிலம் உழவை மறப்பதும் துன்பம்; நாறும் சூழலில் வாழ்வதும் துன்பம்; நடை பாதையில் உமிழ்வதும் துன்பம்; 27. ஒவ்வாமை துன்பம்: ஊளை இடுகிற நாய்கள் துன்பம்; ஓலம் இடுகிற கோட்டான் துன்பம்; வேளை கெட்ட உணவும் துன்பம்; விபரம் கெட்ட துணையும் துன்பம்; மூளை இல்லா ஆக்கம் துன்பம்; ;முயற்சியே இல்லாப் போக்கும் துன்பம்; சாலை இல்லாப் பயணம் துன்பம்; சம்மதம் இல்லாக் குழுமம் துன்பம்; 28. உலோபம் துன்பம்: ஈகை மறுக்கும் இதயம் துன்பம்; இன்மை விளைக்கும் உதயம் துன்பம்; பகை வளர்க்கும் மனமும் துன்பம்; பண்பை இழக்கும் தினமும் துன்பம்; சூது நிறைக்கும் எண்ணம் துன்பம்; சோர்வைப் பெருக்கும் உள்ளம் துன்பம்; நீதி மறைக்கும் நெஞ்சம் துன்பம்; நேர்மை குலைக்கும் வஞ்சம் துன்பம்; 29. சகிப்பின்மை துன்பம்: இன்னல் மன்னும் இல்லம் துன்பம்; இருமனம் ஒன்றாத் திருமணம் துன்பம்; கன்னல் கசக்கும் சொல்லும் துன்பம்; கருவம் மிதக்கும் உள்ளம் துன்பம்; முன்னர் பின்னர் முரணும் துன்பம்; மூடி மறைக்கும் குறையும் துன்பம்; சன்னல் இல்லா அறையும் துன்பம்; சகிப்பைக் கொள்ளா உலகும் துன்பம்; 30. கழிவிரக்கம் துன்பம்: வதுவையின் போது மடமை துன்பம்; முதுமையின் போது தனிமை துன்பம்; கைதியின் தலையில் சிறைதான் துன்பம்; கையறு நிலையில் வையமும் துன்பம்; கதைத்தவை எண்ணில் கசப்பின் துன்பம்; கடந்தவை மண்ணில் நிலைப்பின் துன்பம்; உதவிகள் இல்லா உயிரும் துன்பம்; உறவுகள் இல்லா உலகும் துன்பம்; 31. பேராசை துன்பம்: போலிகள் துன்பம்; காலிகள் துன்பம்; பொலிவை இழந்த மேனியும் துன்பம்; வேலியே பயிரினை மேய்வதும் துன்பம்; வேதனை தருகிற சொத்தும் துன்பம்; காளையர் ஆடும் ஆட்டம் துன்பம்; கடனில் மூழ்கும் ஓட்டம் துன்பம்; தேவைகள் இன்றிக் கொள்வதும் துன்பம்; தேவைக்கு வாராத வசதியும் துன்பம்; 32. கொடுங்கோன்மை துன்பம்: உருட்டலும் துன்பம்; கொள்ளை அடித்துச் சுருட்டலும் துன்பம்; கள்ளச் சந்தையில் வெருட்டலும் துன்பம்; குதிரை பேரத்தில் விரட்டலும் துன்பம்; அவதூறு சொல்லி அரட்டலும் துன்பம்; பணத்தால் ஆதரவு திரட்டலும் துன்பம்; கயமை வழிகளில் புரட்டலும் துன்பம்; கால்களை வாரி மிரட்டலும் துன்பம்; மருட்டலும் துன்பம்; 33. கொடியரசு துன்பம்: இரக்கம் இல்லா அரசும் துன்பம்; இரங்கல் பாடும் தலைமையும் துன்பம்; வரிகளைப் பெருக்கும் அரசும் துன்பம்; வாரிசு அரசியல் தலைமையும் துன்பம்; நரித்தனம் செய்யும் அரசும் துன்பம்; நாடகம் ஆடும் தலைமையும் துன்பம்; பிரிவினை வளர்க்கும் அரசும் துன்பம்; பேச்சால் மழுப்பும் தலைமையும் துன்பம்; 34. தறுதலை துன்பம்: கறுப்புப் பணத்துத் தலைமை துன்பம்; கருத்தைத் திருப்பும் கயமை துன்பம்; பொறுப்பு இல்லாத் தலைமை துன்பம்; பொய்யில் வெல்லும் முறைமை துன்பம்; தறுக்கிக் திகழும் தலையும் துன்பம்; தனக்கெனக் கொழுகும் சிலையும் துன்பம்; பொறுக்கிப் பிழைக்கும் தலையும் துன்பம்; பொருண்மை இல்லா உரையும் துன்பம்; 35. பகைமை துன்பம்: அண்டை நாட்டில் இராணுவம் துன்பம்; அடிப்படைப் பிழையால் தொடரும் துன்பம்; சண்டையில் குளிரும் தந்திரம் துன்பம்; சந்தினில் முந்தலும் சிந்தலும் துன்பம்; கொண்டையில் ஈரும் பேனும் துன்பம்; குடும்பத்துள் நாறும் போரும் துன்பம்; பண்டையில் இருந்தே பகைதான் துன்பம்; பங்கெனில் ஊரும் நீரும் துன்பம்; 36. திறமையின்மை துன்பம்: முன்னேற்றம் இல்லா அரசால் துன்பம்; மூடும் தொழில்வள ஆட்சியும் துன்பம்; தன்னிறை அடையா நாடும் துன்பம்; தரத்தினில் முடைப்படும் வீடும் துன்பம்; கற்பினைப் போற்றா மானுடம் துன்பம்; கல்வியை உயர்த்தா மாநிலம் துன்பம்; வெளிப்படை இல்லா ஆட்சியும் துன்பம்; வெறுமையில் களிக்கும் சூட்சியும் துன்பம்; 37. பித்தர்கள் துன்பம்: முழுவதும் அறியா மடமை துன்பம்; முனைப்பாய் ஒழுகாக் கடமை துன்பம்; அழுவதும் குறையா நிலைமை துன்பம்; அணைத்துச் செல்லாத் தலைமை துன்பம்; அழிவால் நிறையும் வெறுமை துன்பம்; அறிவால் பெருக்காத் திறமை துன்பம்; பழியால் தொடரும் இடர்கள் துன்பம்; பலியால் அடையும் பயன்கள் துன்பம்; 38. எத்தர்கள் துன்பம்: தானெனும் அகந்தை என்றுமே துன்பம்; தம்பியின் பணத்தில் தானம் துன்பம்; பொதுநலம் கெடுக்கும் கொள்கை துன்பம்; சுயநலம் பெருக்கும் தன்மை துன்பம்; ஒதுக்கலில் பதுக்கலில் என்றுமே துன்பம்; உறவுக்கே சலுகை என்பதும் துன்பம்; பிதற்றலைக் காவியம் என்பது துன்பம்; கிறுக்கலை ஓவியம் என்பது துன்பம்; 39. நேர்மையின்மை துன்பம்: சோற்றுக்குப் பாடும் புலமை துன்பம்; சுகத்துக்கு ஆடும் கயமை துன்பம்; வேற்றுமை போற்றும் மனமும் துன்பம்; விவரத்தை மறைக்கும் குணமும் துன்பம்; நாற்றுக்குச் செயற்கை உரமும் துன்பம்; நல்லதைக் கெடுக்கும் கரமும் துன்பம்; தோற்றத்தைத் தருகிற பொய்மை துன்பம்; துரோகித்துப் பெறுகிற வளமை துன்பம்; 40. தகுதியின்மை துன்பம்: குறைகளைக் களையும் குற்றம் துன்பம்; குதிருக்குள் மறையும் புதிர்களும் துன்பம்; சிறைகளை நிறைக்கும் சீற்றம் துன்பம்; செய்ததை மறைக்கும் பேச்சும் துன்பம்; நிறையினை மறுக்கும் போக்கும் துன்பம்; நிச்சயம் இல்லாத வாக்கும் துன்பம்; வறுமையைக் களையாத வாழ்க்கை துன்பம்; வரன் அமையாத மாந்தரும் துன்பம்; 41. தரமின்மை துன்பம்: திருத்தம் இல்லாச் செய்வினை துன்பம்; திரித்துப் பரப்பும் செய்திகள் துன்பம்; பொருத்தம் இல்லாப் பெருமை துன்பம்; புரவல் நாடகச் சிறுமை துன்பம்; கருத்தும் இல்லாக் கவிதை துன்பம்; கருணை இல்லா இதயம் துன்பம்; கரித்தும் பழிக்கும் உரைகள் துன்பம்; கண்ணியம் இல்லா முறைகள் துன்பம்; 42. இழப்புகள் துன்பம்: இலக்கை இழந்த இயக்கம் துன்பம்; இதயம் இழந்த காதல் துன்பம்; இருக்கை இழந்த அலுவல் துன்பம்; இரவில் இழந்த தூக்கம் துன்பம்; உடுக்கை இழந்த மேடை துன்பம்; உதவி இழந்த குழுமம் துன்பம்; வாய்ப்பை இழந்த வாழ்க்கை துன்பம்; வருகை இழந்த சந்தை துன்பம்; 43. பித்தலாட்டம் துன்பம்: அறமற்றுத் திரிபுகளை ஏற்றுதல் துன்பம்; அறிவற்று ஆண்டுகளை மாற்றுதல் துன்பம்; முறையற்ற திட்டங்களைப் புகுத்துதல் துன்பம்; முடிவற்ற கடன்களைப் பெருக்குதல் துன்பம்; திறனற்று உரிமைகளைச் சொதப்புதல் துன்பம்; திடமற்று வீரங்களை முழக்குதல் துன்பம்; குறையுற்று இருளினில் புதைத்தல் துன்பம்; குளிரற்றுச் சிறுமையில் வதைத்தல் துன்பம்; 44. இயலாமை துன்பம்: அல்லாமை, அறியாமை, அடங்காமை துன்பம்; ஆற்றாமை, தேற்றாமை, ஊற்றாமை துன்பம்; இல்லாமை, பொல்லாமை, நில்லாமை துன்பம்; இயலாமை, முயலாமை, தள்ளாமை துன்பம்; உள்ளாமை, உறங்காமை, உதவாமை துன்பம்; உன்னாமை, உண்ணாமை, உயராமை துன்பம்; கல்லாமை, கொள்ளாமை, ஈயாமை துன்பம்; கனியாமை, இனியாமை, கதையாமை துன்பம்; 45. பொல்லாமை துன்பம்: எண்ணாமை, எழுகாமை, எழுதாமை துன்பம்; திண்ணாமை, தெரியாமை, தொடராமை துன்பம்; வல்லாமை, வளராமை, வறியாமை துன்பம்; வள்ளாமை, வருகாமை, புலராமை துன்பம்; பொல்லாமை, பொறாமை, புரியாமை துன்பம்; பற்றாமை, படராமை, பெருகாமை துன்பம்; துள்ளாமை, துடிக்காமை, பிடிக்காமை துன்பம்; படிக்காமை, நடக்காமை, நடவாமை துன்பம்; 46. கேடுகள் துன்பம்: கொலையும் களவும் புலையும் துன்பம்; குறையும் தனமும் அழகும் துன்பம்; அலையும் மனமும் தினமும் துன்பம்; அலறும் பதறும் குணமும் துன்பம்; அழுகும் காயும் கனியும் துன்பம்; அழியும் கலையும் சிலையும் துன்பம்; உலரும் கருகும் மலரும் துன்பம்; உதிரும் சருகும் கனவும் துன்பம்; 47. புகைச்சல் துன்பம்: சினமும் செருக்கும் பகையும் துன்பம்; சிகையும் சடையும் புகையும் துன்பம்; எரியும் வனமும் பிணமும் துன்பம்; எகிரும் பணமும் குணமும் துன்பம்; பிளிறும் களிரும் விடையும் துன்பம்; பிடியும் தளரும் நடையும் துன்பம்; அகமும் புறமும் அழுக்கே துன்பம்; அறிவில் நிறையும் பழுதே துன்பம்; 48. சுமைகள் துன்பம்: எண்ணில் எதிர் பார்ப்பும் துன்பம்; ஏலாச் சுமை சேர்ப்பும் துன்பம்; பொன்னும் பெண்ணும் மண்ணும் துன்பம்; பொருளும் அறியா வாழ்வும் துன்பம்; இன்மை விலகாத் தன்மையும் துன்பம்; இன்னா செய்யும் எண்ணமும் துன்பம்; நன்மை அறியாப் பார்வையும் துன்பம்; நல்லவை புரியா வாழ்க்கையும் துன்பம்; 49. தெளிவின்மை துன்பம்: துணிவு இல்லா முயற்சியே துன்பம்; பணிவு இல்லாப் பயிற்சியே துன்பம்; கனிவு இல்லாச் சொல்லே துன்பம்; இனிமை இல்லா வாழ்வே துன்பம்; தெளிவு இல்லா அறிவே துன்பம்; திறமை இல்லாக் குறையே துன்பம்; முழுமை இல்லா எதுவுமே துன்பம்; முறைமை இல்லா மனமே துன்பம்; 50. விடையின்மை துன்பம்: படிதல் இல்லா மகவே துன்பம்; பக்குவம் இல்லா மூப்பே துன்பம்; பிடிதல் இல்லா விடுப்பே துன்பம்; விடுதல் இல்லாப் பிடிப்பே துன்பம்; விடிவும் இல்லா வினையே துன்பம்; விடையும் இல்லா வினாவே துன்பம்; முடிவும் இல்லாக் காதையே துன்பம்; முக்தியும் இல்லாப் பாதையே துன்பம்; | | *** | |